1 மக்கபேயர்
முன்னுரை:
மத்தத்தியாவின் மூன்றாம் மகன் யூதா, கிரேக்கமயமாக்கல் மூலம் யூதர்களைப் பலவாறு துன்புறுத்தி வந்த செலுhக்கிய ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு யூதர்களை வழி நடத்தியதால், மக்கபே என்று அழைக்கப் பெற்றார் (,மக்கபே, என்னும் சொல்லுக்குச் ,சம்மட்டி, எனச் சிலர் பொருள் கொள்வர்). காலப்போக்கில் அவருடைய சகோதரர்கள், ஆதரவாளர்கள், பிற யூதத் தலைவர்கள் ஆகிய அனைவருமே , மக்கபேயர், என்று குறிப்பிடப் பெற்றனர்.
அந்தியோக்கு எப்பிபானின் ஆட்சி தொடங்கி யோவான் இர்க்கான் ஆட்சிப் பொறுப்பு ஏற்றது வரை (கி.மு. 175-134) யூத வரலாற்றில் இடம் பெற்ற குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகளை இந்நூல் விளக்குகிறது. ஏறத்தாழ கி.மு. 100-இல் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த யூதர் ஒருவரால் இந்நூல் எபிரேயத்தில் எழுதப் பெற்றிருக்க வேண்டும். அது தொலைந்து விட, அதன் கிரேக்க மொழி பெயர்ப்பு இன்று மூலபாடமாக விளக்குகிறது.
இஸ்ரயேலைக் காப்பதற்காகக் கடவுள் மக்கபேயரைத் தேர்ந்தெடுத்து வரலாற்றில் அவர்களோடு இருந்து செயல்படுகிறார், அவர் மீது பற்றுறுதி கொள்வோருக்கு வெற்றி அருள்கிறார் என்னும் செய்தியை இந்நூல் வலியுறுத்துகிறது.
1 மக்கபேயர் நூலின் பிரிவுகள்
1) முகவுரை 1:1 - 9
2) யூதர்களின் துன்பமும் மக்கபேயரின் கிளர்ச்சியும் 1:10 - 2:70
3) யூதா மக்கபேயின் தலைமை 3:1 - 9:22
4) யோனத்தானின் தலைமை 9:23 - 12:53
5) சீமோனின் தலைமை 13:1 - 16:24
------------------------------------------------
1 மக்கபேயர் அதிகாரம் 1
1 மாசிடோனியராகிய பிலிப்புமகன் அலக்சாண்டர் முதலில் கிரேக்க நாட்டை ஆண்டுவந்தார்; பின்னர் கித்திம் நாட்டினின்று புறப்பட்டுப் பாரசீகருடையவும் மேதியருடையவும் மன்னரான தாரியுவை வென்று அவருக்குப் பதிலாக ஆட்சிபுரிந்தார்.
2 அவர் போர்கள் பல புரிந்து, கோட்டைகள் பல பிடித்து, மண்ணுலகின் மன்னர்களைக் கொலைசெய்தார்.
3 மண்ணுலகின் கடையெல்லைவரை முன்னேறிச் சென்று பல நாடுகளைக் கொள்ளையடித்தார்; மண்ணுலகு முழுவதும் அவரது ஆட்சியில் அமைதியாக இருந்தபோது அவர் தம்மையே உயர்வாகக் கருதினார்; அவரது உள்ளம் செருக்குற்றது.
4 ஆகவே அவர் வலிமைமிக்க படையைத் திரட்டிப் பல மாநிலங்கள், நாடுகள், மன்னர்கள்மீது ஆட்சிசெலுத்திவந்தார். அவர்களும் அவருக்குத் திறை செலுத்தி வந்தார்கள்.
5 அதன்பிறகு அவர் கடின நோயுற்றுத் தாம் சாகவிருப்பதை உணர்ந்தார்.
6 ஆதலால் இளமைமுதல் தம்முடன் வளர்க்கப்பெற்றவர்களும் மதிப்புக்குரியவர்களுமான அலுவலர்களை அழைத்து, தாம் உயிரோடு இருந்தபோதே தம் பேரரசை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார்.
7 அலக்சாண்டர் பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சிசெய்த பின் இறந்தார்.
8 அலக்சாண்டருடைய அலுவலர்கள் தங்களுக்குரிய இடங்களில் ஆட்சி செலுத்தத் தொடங்கினார்கள்.
9 அவர் இறந்தபின் அவர்கள் எல்லாரும் முடி சூடிக்கொண்டார்கள். அவர்களுக்குப்பின் அவர்களின் மைந்தர்களும் பல ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். அவர்களால் மண்ணுலகெங்கும் தீமைகள் பெருகின.
10 அவர்கள் நடுவிலிருந்து பொல்லாத வழிமரபினன் ஒருவன் தோன்றினான்; அவன் மன்னர் அந்தியோக்கின் மகன் அந்தியோக்கு எப்பிபான் ஆவான்; முன்பு உரோமையில் பிணைக் கைதியாக இருந்த அவன் கிரேக்கப் பேரரசின் நூற்று முப்பத்தேழாம் ஆண்டு ஆட்சி செய்யத் தொடங்கினான்.
11 அக்காலத்தில் இஸ்ரயேலில் தீநெறியாளர் சிலர் தோன்றி, "வாருங்கள், நம்மைச் சுற்றிலும் இருக்கும் வேற்றினத்தாரோடு நாம் உடன்படிக்கை செய்துகொள்வோம்; ஏனெனில் நாம் அவர்களைவிட்டுப் பிரிந்ததிலிருந்து நமக்குப் பல வகைக் கேடுகள் நேர்ந்துள்ளன" என்று கூறி, மக்கள் அனைவரையும் தவறான வழியில் செல்லத் தூண்டினார்.
12 இது அவர்களுக்கு ஏற்படையதாய் இருந்தது.
13 உடனே மக்களுள் சிலர் ஆர்வத்தோடு மன்னனிடம் சென்றனர். அவர்கள் கேட்டதற்கு இணங்க, வேற்றினத்தாரின் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு அவன் அவர்களுக்கு உரிமை அளித்தான்.
14 வேற்றினத்தாருடைய பழக்கவழக்கத்திற்கு ஏற்ப அவர்கள் எருசலேமில் உடற்பயிற்சிக்கூடம் ஒன்று ஏற்படுத்தினார்கள்;
15 விருத்தசேதனத்தின் அடையாளத்தை மறைத்து, தூய உடன்படிக்கையை விட்டுவிட்டு, வேற்றினத்தாரோடு கலந்து, எல்லாவகைத் தீமைகளையும் செய்தார்கள்.
16 அந்தியோக்கு தன் சொந்த நாட்டில் ஆட்சியை நிலைநாட்டிய பின், இரு நாடுகளுக்கு மன்னனாகும் எண்ணத்துடன் எகிப்திலும் ஆட்சிபுரிய விரும்பினான்;
17 ஆதலால் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, பெரும் கப்பற்படை அடங்கிய வலிமைமிக்க படைத்திரளோடு எகிப்து நாட்டில் புகுந்தான்.
18 எகிப்து மன்னனான தாலமியோடு அவன் போர் தொடுக்கவே, தாலமி அவனுக்கு அஞ்சிப் புறமுதுகு காட்டி ஓடினான்; அவனுடைய வீரர்களுள் பலர் வெட்டுண்டு மடிந்தனர்.
19 எகிப்து நாட்டின் அரண்சூழ் நகர்கள் பல பிடிபட்டன. அந்தியோக்கு எகிப்திலிருந்து கொள்ளைப் பொருள்களை எடுத்துச் சென்றான்.
20 நூற்று நாற்பத்து மூன்றாம் ஆண்டில் அந்தியோக்கு எகிப்தை வென்று திரும்புகையில் வலிமைமிக்க படையோடு இஸ்ரயேலைத் தாக்கி எருசலேமை அடைந்தான்;
21 அகந்தையோடு திருஉறைவிடத்திற்குள் புகுந்து, பொற்பீடம், விளக்குத்தண்டு, அதோடு இணைந்தவை,
22 காணிக்கை அப்பமேசை, நீர்மப் படையலுக்கான குவளைகள், கிண்ணங்கள், பொன் தூபக் கிண்ணங்கள், திரை, பொன் முடிகள், கோவில் முகப்பில் இருந்த பொன் அணிகலன்கள் ஆகிய அனைத்தையும் சூறையாடினான்;
23 வெள்ளியையும் பொன்னையும் விலையுயர்ந்த கலன்களையும் கைப்பற்றினான்; ஒளித்து வைத்திருந்த செல்வங்களையும் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டான்;
24 இஸ்ரயேலில் பலரைக் கொன்று குவித்தபின், கொள்ளைப் பொருள்களோடு தன் நாடு திரும்பினான்; தன் செயல்கள்பற்றிப் பெருமையாகப் பேசிவந்தான்.
25 இஸ்ரயேல் மக்கள் தாங்கள் வாழ்ந்த எல்லா இடங்களிலும் இஸ்ரயேலைக் குறித்து அழுது புலம்பினார்கள்.
26 தலைவர்களும் மூப்பர்களும் அழுது அரற்றினார்கள்; கன்னிப்பெண்களும் இளைஞர்களும் நலிவுற்றார்கள்; பெண்கள் அழகுப்பொலிவினை இழந்தார்கள்.
27 மணமகன் ஒவ்வொருவனும் புலம்பி அழுதான்; மணவறையில் இருந்த மணமகள் ஒவ்வொருத்தியும் வருந்தி அழுதாள்.
28 தன் குடிமக்கள் பொருட்டு நாடே நடுநடுங்கியது; யாக்கோபின் வீடே வெட்கித் தலைகுனிந்தது.
29 இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மன்னன் வரி தண்டுவதற்காக ஒருவனை யூதேயாவின் நகரங்களுக்கு அனுப்பி வைத்தான். அவன் பெரும் படையோடு எருசலேம் சேர்ந்தான்.
30 அமைதிச் செய்தியுடன் தான் வந்திருப்பதாக அவன் எருசலேம் மக்களிடம் நயவஞ்சகமாகக் கூறி, அவர்களது நம்பிக்கையைப் பெற்றான். ஆனால் அவன் திடீரென்று நகர்மீது பாய்ந்து கடுமையாகத் தாக்கி, அவர்களுள் பலரைக் கொன்றான்;
31 நகரைக் கொள்ளையடித்துத் தீக்கரையாக்கி, வீடுகளையும் சுற்று மதில்களையும் தகர்த்தெறிந்தான்.
32 அவனும் அவனுடைய வீரர்களும் பெண்களையும் பிள்ளைகளையும் நாடு கடத்திக் கால் நடைகளைத் தங்கள் உடைமையாக்கிக் கொண்டார்கள்;
33 தாவீதின் நகரில் உயர்ந்த, உறுதியான மதில்களையும் வலுவான காவல்மாடங்களையும் கட்டியெழுப்பி, அதைத் தங்கள் கோட்டையாக்கிக் கொண்டார்கள்;
34 தீநெறியாளர்களான பொல்லாத மக்களினத்தை அங்குக் குடியேற்றினார்கள்; இவ்வாறு தங்கள் நிலையை வலுப்படுத்தினார்கள்;
35 படைக்கலன்களையும் உணவுப்பொருள்களையும் அங்குச் சேர்த்து வைத்தார்கள்; எருசலேமில் கொள்ளையடித்த பொருள்களை ஒன்று திரட்டி வைத்தார்கள்; இதனால் இஸ்ரயேலருக்குப் பேரச்சம் விளைவித்து வந்தார்கள்.
36 அந்தக்கோட்டை, திருஉறைவிடத்தைத் தாக்குவதற்கு ஏற்ற பதுங்கிடமாக அமைந்தது; இஸ்ரயேலுக்குக் கொடிய எதிரியாகத் தொடர்ந்து இருந்தது.
37 அவர்கள் திருஉறைவிடத்தைச் சுற்றிலும் மாசற்ற குருதியைச் சிந்தினார்கள்; திருஉறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.
38 அவர்களை முன்னிட்டு எருசலேமின் குடிகள் அதைவிட்டு ஓடிவிட்டார்கள். எருசலேம் அன்னியரின் குடியிருப்பு ஆயிற்று; தன் குடிகளுக்கோ அன்னியமானது. அதன் மக்கள் அதனைக் கைவிட்டார்கள்.
39 அதன் திருஉறைவிடம் பாழடைந்து பாலைநிலம்போல் ஆயிற்று; திருநாள்கள் துயர நாள்களாக மாறின; ஓய்வுநாள்கள் பழிச்சொல்லுக்கு உள்ளாயின; அதன் பெருமை இகழ்ச்சிக்கு உட்பட்டது.
40 அதன் மாட்சியின் அளவுக்கு மானக்கேடும் மிகுந்தது; அதன் பெருமை புலம்பலாக மாறியது.
41 எல்லாரும் ஒரே மக்களினமாய் இருக்கவேண்டும் என்றும், தனிப்பட்ட பழக்கவழக்கங்களைக் கைவிடவேண்டும் என்றும்
42 அந்தியோக்கு மன்னன் தன் பேரரசு முழுவதிலும் ஆணை பிறப்பித்தேன். மன்னனின் கட்டளைப்படி நடக்கப் பிற இனத்தார் அனைவரும் இசைந்தனர்.
43 இஸ்ரயேலருள் பலர் மன்னனுடைய வழிபாட்டுமுறைகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டனர்; சிலைகளுக்குப் பலியிட்டனர்; ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தினர்.
44 மன்னன் தன் தூதர்கள் வழியாக எருசலேமுக்கும் யூதாவின் நகரங்களுக்கும் மடல்களை அனுப்பி வைத்தான்; யூதர்கள் தங்கள் நாட்டு மரபுக்குப் புறம்பான பழக்கவழக்கங்களைப் பின்பற்றவேண்டும்;
45 எரிபலிகளோ மற்றப் பலிகளோ நீர்மப் படையல்களோ திருஉறைவிடத்தில் நிகழ்வதைத் தடுக்க வேண்டும்; ஓய்வுநாள்களையும் திருவிழாக்களையும் தீட்டுப்படுத்த வேண்டும்;
46 திருஉறைவிடத்தையும் அதைச் சேர்ந்த தூய பொருள்களையும் கறைப்படுத்த வேண்டும்;
47 பிற இனத்தாரின் பலிபீடங்கள், கோவில்கள், சிலைவழிபாட்டுக்குரிய இடங்கள் ஆகியவற்றைக் கட்டியெழுப்ப வேண்டும்; பன்றிகளையும் தீட்டுப்பட்ட விலங்ககளையும் பலியிடவேண்டும்;
48 அவர்கள் தங்கள் திருச்சட்டத்தை மறந்து, தங்கள் விதிமுறைகளையும் மாற்றிக்கொள்ளும் பொருட்டு, தங்கள் மைந்தர்களுக்கு விருத்தசேதனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்;
49 தங்களை எல்லாவகை மாசுகளாலும் தீட்டுகளாலும் அருவருப்புக்குரியோர் ஆக்கிக்கொள்ள வேண்டும்.
50 மன்னனின் கட்டளைப்படி நடவாதவர்கள் சாவார்கள்.
51 மன்னன் இந்த கட்டளைகளையெல்லாம் எழுதித் தன் பேரரசு முழுவதற்கும் அனுப்பி வைத்தான்; இவற்றை மக்கள் எல்லாரும் செயல்படுத்த மேற்பார்வையாளரை ஏற்படுத்தினான்; யூதாவின் நகரங்கள் ஒவ்வொன்றும் பலியிடவேண்டும் என்று கட்டளையிட்டான்.
52 மக்களுள் பலர், அதாவது திருச்சட்டத்தைப் புறக்கணித்தோர் அனைவரும் அந்த மேற்பார்வையாளர்களோடு சேர்ந்துகொண்டனர்; நாட்டில் தீமைகள் செய்தனர்;
53 இஸ்ரயேலர் தங்களுக்கு இருந்த எல்லாப் புகலிடங்களையும் நோக்கி ஓடி ஒளிந்து கொள்ளக் கட்டாயப்படுத்தினர்.
54 நூற்று நாற்பத்தைந்தாம் ஆண்டு கிஸ்லேவு மாதம் பதினைந்தாம் நாள் அந்தியோக்கும் அவனுடைய ஆள்களும் பலிபீடத்தின் மேல் நடுங்க வைக்கும் தீட்டை நிறுவினார்கள்; யூதேயாவின் நகரங்களெங்கும் சிலை வழிபாட்டுக்கான பீடங்களைக் கட்டினார்கள்;
55 வீட்டுக் கதவுகளுக்கு முன்பும் வீதிகளிலும் தூபம் காட்டினார்கள்;
56 தங்கள் கண்ணில் பட்ட திருச்சட்ட நூல் ஒவ்வொன்றையும் கிழித்து நெருப்பிலிட்டு எரித்தார்கள்.
57 எவரிடம் உடன்படிக்கை நூல் காணப்பட்டதோ, யார் திருச்சட்டத்தின்படி நடந்துவந்தார்களோ அவர்கள் அனைவரும் கொல்லப்படவேண்டும் என்பது மன்னனது கட்டளை.
58 இவ்வாறு ஒவ்வொரு மாதமும் நகரங்களில் காணப்பட்ட இஸ்ரயேலருக்கு எதிராக அவர்கள் வன்முறையைப் பயன்படுத்தினார்கள்;
59 எரிபலிபீடத்தின்மேல் அமைக்கப்பட்டிருந்த சிலைவழிபாட்டுப் பீடத்தின்மீது ஒவ்வொரு மாதமும் இருபத்தைந்தாம் நாள் பலியிடுவார்கள்;
60 தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்வித்த பெண்களை மன்னனின் கட்டளைப்படி கொன்றார்கள்.
61 பிள்ளைகளை அவர்களுடைய அன்னையரது கழுத்தில் கட்டித் தொங்க விட்டார்கள்; அவர்களின் குடும்பத்தினரையும் அவர்களுக்கு விருத்தசேதனம் செய்தவர்களையும் கொலைசெய்தார்கள்.
62 எனினும் இஸ்ரயேலருள் பலர் உறுதியாய் இருந்தனர்; தூய்மையற்ற உணவுப்பொருள்களை உண்பதில்லை என்று தங்களுக்குள் முடிவு செய்து கொண்டனர்;
63 உணவுப்பொருள்களால் தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்வதைவிட, தூய உடன்படிக்கையை மாசுபடுத்துவதைவிடச்சாவதே சிறந்தது என்று கருதினர்; அவ்வாறே இறந்தனர்.
64 இவ்வாறு இஸ்ரயேல் மீது பேரிடர் வந்துற்றது.
1 மக்கபேயர் அதிகாரம் 2
1 அக்காலத்தில் யோவாபின் குடும்பத்தைச் சேர்ந்த குருவான சிமியோனின் பேரனும் யோவானின் மகனுமான மத்தத்தியா எருசலேமைவிட்டுப் புறப்பட்டு மோதயினில் குடியேறினார்.
2 அவருக்கு ஐந்து மைந்தர்கள் இருந்தார்கள்; அவர்கள் காத்தி என்ற யோவானும்,
3 தாசீ என்ற சீமோனும்,
4 மக்கபே என்ற யூதாவும்,
5 அவரான் என்ற எலயாசரும், அப்பு என்ற யோனத்தானும் ஆவார்கள்.
6 யூதேயாவிலும் எருசலேமிலும் மக்கள் இறைவனைப் பழிப்பதைக் கண்ட மத்தத்தியா,
7 "ஐயோ, எனக்கு கேடு! என் மக்களின் இழிவையும் திருநகரின் அழிவையும் பார்க்கவோ நான் பிறந்தேன்! பகைவரின் பிடியில் நகர் சிக்கியிருக்க திருஉறைவிடம் அயல் நாட்டவர் கையில் அகப்பட்டியிருக்க, நான் இங்குக் குடியிருக்கலாமோ!
8 அதன் கோவில் மாண்பு இழந்த மனிதனைப்போல் ஆனது.
9 அதன் மாட்சிக்குரிய கலன்கள் கொள்ளைப்பொருள்களாய்க் கொண்டு செல்லப்பட்டன; அதன் குழந்தைகள் தெருக்களில் கொலையுண்டார்கள்; அதன் இளைஞர்கள் பகைவரின் வாளுக்கு இரையானார்கள்.
10 அதன் அரசை உரிமையாக்கிக் கொள்ளாத இனத்தார் யார்? அதன் கொள்ளைப்பொருள்களைக் கைப்பற்றாதார் யார்?
11 அதன் அணிகலன்களெல்லாம் பறியோயின; உரிமை நிலையிலிருந்து அது அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டது.
12 நம் தூய இடமும் நம் அழகும் மாட்சியும் பாழடைந்தன; அவற்றை வேற்றினத்தார் தீட்டுப்படுத்தினர்.
13 இனியும் நாம் ஏன் வாழவேண்டும்?" என்று புலம்பினார்.
14 மத்தத்தியாவும் அவருடைய மைந்தர்களும் தங்கள் ஆடைகளைக் கிழித்து, சாக்கு உடை உடுத்திக் கொண்டு மிகவும் புலம்பினார்கள்.
15 இதற்கிடையில் கடவுளைப் புறக்கணிக்குமாறு யூதர்களைக் கட்டாயப்படுத்துவதற்காக மன்னன் ஏற்படுத்திய அலுவலர்கள், மக்களைப் பலிசெலுத்த வைக்கும்படி மோதயின் நகருக்குச் சென்றார்கள்.
16 இஸ்ரயேல் மக்களுள் பலர் அவர்களிடம் போய்ச் சேர்ந்தனர். மத்தத்தியாவும் அவருடைய மைந்தர்களும் தனியே கூடிவந்தார்கள்.
17 மன்னனின் அலுவலர்கள் மத்தத்தியாவை நோக்கி, "நீர் இந்த நகரத்தில் மதிப்பிற்குரிய பெருந்தலைவர். உம் மைந்தர்கள், சகோதரர்களுடைய ஆதரவு உமக்கு உண்டு.
18 ஆதலால் இப்பொழுது நீர் முன்வாரும்; பிற இனத்தார், யூதேயா நாட்டு மக்கள், எருசலேமில் எஞ்சியிருப்போர் ஆகிய அனைவரும் செய்தவண்ணம் நீரும் மன்னரின் கட்டளையை நிறைவேற்றும். அப்படியானால் நீரும் உம் மைந்தர்களும் மன்னரின் நண்பர்கள் ஆவீர்கள்; பொன், வெள்ளி மற்றும் பல்வேறு பரிசுகளால் சிறப்பிக்கப் பெறுவீர்கள்" என்று கூறினார்கள்.
19 அதற்கு மறுமொழியாக மத்தத்தியா உரத்த குரலில், "மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லா மக்களினத்தாரும் அவருக்குக் கீழ்ப்படிந்து, தங்கள் மூதாதையரின் வழிபாட்டு முறைகளைக் கைவிட்டு, அவருடைய கட்டளைகளை நிறைவேற்ற இசைந்தாலும்,
20 நானும் என் மைந்தர்களும் சகோதரர்களும் எங்கள் மூதாதையரின் உடன்படிக்கையின்படியே நடப்போம்.
21 திருச்சட்டத்தையும் அதன் விதிமுறைகளையும் நாங்கள் கைவிட்டு விடுவதைக் கடவுள் தடுத்தருள்வாராக!
22 மன்னரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியமாட்டோம்; எங்கள் வழிபாட்டு முறைகளினின்று சிறிதும் பிறழமாட்டோம்" என்று கூறினார்.
23 மத்தத்தியா இச்சொற்களைக் கூறி முடித்ததும், மன்னரின் கட்டளைப்படி மோதயின் நகரத்துப் பீடத்தின் மேல் பலியிட யூதன் ஒருவன் எல்லாருக்கும் முன்பாக வந்தான்.
24 மத்தத்தியா அதைப் பார்த்ததும் திருச்சட்டத்தின்பால் கொண்ட பேரார்வத்தால் உள்ளம் கொதித்தெழுந்தார்; முறையாக சினத்தை வெளிக்காட்டி அவன்மீது பாய்ந்து பலிபீடத்தின்மீதே அவனைக் கொன்றார்.
25 அதே நேரத்தில், பலியிடும்படி மக்களை வற்புறுத்திய மன்னனின் அலுவலனைக் கொன்று பலிபீடத்தையும் இடித்துத் தள்ளினார்.
26 இவ்வாறு சாலூவின் மகன் சிம்ரிக்குப் பினகாசு செய்ததுபோல, திருச்சட்டத்தின்பால் தாம் கொண்டிருந்த பேரார்வத்தை மத்தத்தியா வெளிப்படுத்தினார்.
27 பின்னர் மத்தத்தியா நகரெங்கும் சென்று, "திருச்சட்டத்தின்பால் பேரார்வமும் உடன்படிக்கைமீது பற்றுதியும் கொண்ட எல்லாரும் என் பின்னால் வரட்டும்" என்று உரத்த குரலில் கத்தினார்.
28 அவரும் அவருடைய மைந்தர்களும் நகரில் இருந்த தங்கள் உடைமைகளையெல்லாம் விட்டுவிட்டு மலைகளுக்குத் தப்பியோடினார்கள்.
29 அப்போது நீதி நேர்மையைத் தேடிய பலர் பாலைநிலத்தில் தங்கிவாழச் சென்றனர்.
30 அவர்களும் அவர்களுடைய மைந்தர்களும் மனைவியரும் கால்நடைகளோடு அங்குத் தங்கினார்கள்; ஏனெனில் கடுந்துயரங்கள் அவர்களை வருத்தின.
31 மன்னனின் கட்டளையை அவமதித்தோர் பாலைநிலத்து மறைவிடங்களுக்குப் போய்விட்டனர் என்று தாவீதின் நகராகிய எருசலேமில் இருந்த அரச அலுவலர்களுக்கும் படைவீரர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
32 உடனே படை வீரர்கள் பலர் அவர்களைத் துரத்திச் சென்று, அவர்கள் தங்கியிருந்த இடத்தை அடைந்து, அதற்கு எதிராகப் பாசறை அமைத்து, ஓய்வுநாளில் அவர்கள்மீது போர்தொடுக்க ஏற்பாடு செய்தனர்.
33 அவர்கள் இஸ்ரயேலரை நோக்கி, "போதும் இந்தப் போராட்டம். வெளியே வாருங்கள்; மன்னரின் கட்டளைப்படி செயல்படுங்கள்; நீங்கள் பிழைப்பீர்கள்" என்றார்கள்.
34 அதற்கு அவர்கள், "ஓய்வுநாள் தீட்டுப்படாதவாறு நாங்கள் வெளியே வரவும் மாட்டோம்; மன்னரின் சொற்படி நடக்கவும் மாட்டோம்" என்று பதிலளித்தார்கள்.
35 உடனே பகைவர்கள் அவர்களோடு போர்புரிய விரைந்தார்கள்.
36 ஆனால் இஸ்ரயேலர் அவர்களை எதிர்க்கவுமில்லை; அவர்கள்மேல் கற்களை எறியவுமில்லை; தாங்கள் ஒளிந்திருந்த இடங்களை அடைத்துக்கொள்ளவுமில்லை.
37 மாறாக, "எங்கள் மாசின்மையில் நாங்கள் எல்லாரும் மடிவோம். நீங்கள் எங்களை அநியாயமாகக் கொலை செய்கிறீர்கள் என்பதற்கு வானமும் வையகமும் சான்றாக இருக்கும்" என்றார்கள்.
38 ஆகவே பகைவர்கள் ஓய்வு நாளில் அவர்களைத் தாக்க, அவர்களுள் ஆயிரம் பேர் இறந்தனர்; அவர்களுடைய மனைவி மக்களும் கால்நடைகளும் மாண்டார்கள்.
39 இதை அறிந்த மத்தத்தியாவும் அவருடைய நண்பர்களும் அவர்களுக்காகப் பெரிதும் அழுது புலம்பினார்கள்.
40 அப்பொழுது அவர்கள் ஒருவர் ஒருவரைநோக்கி, "நம் சகோதரர்கள் செய்ததுபோல நாம் அனைவரும் செய்து நம் உயிரையும் விதிமுறைகளையும் காப்பாற்றும்பொருட்டு வேற்றினத்தாரோடு போரிட மறுத்தால், பகைவர்கள் விரைவில் நம்மையும் மண்ணுலகினின்று அழித்தொழித்து விடுவார்கள்" என்று சொல்லிக்கொண்டார்கள்.
41 அன்று அவர்கள், "ஓய்வுநாளில் யார் நம்மைத் தாக்கினாலும், அவர்களை எதிர்த்து நாமும் போர்புரிவோம்; நம் சகோதரர்கள் தாங்கள் ஒளிந்திருந்த இடங்களில் மடிந்ததுபோல நாமும் மடிய மாட்டோம்" என்னும் முடிவுக்கு வந்தார்கள்.
42 இஸ்ரயேலருள் வலிமையும் துணிவும் கொண்ட கசிதேயர் குழுவினர் அவர்களோடு சேர்ந்துகொண்டனர். இவர்கள் எல்லாரும் திருச்சட்டத்தைக் காப்பாற்ற மனமுவந்து முன்வந்தனர்.
43 கடுந்துயருக்குத் தப்பியோடியவர்கள் அனைவரும் அவர்களோடு சேர்ந்து கொண்டதால் அவர்கள் கூடுதல் வலிமை பெற்றார்கள்.
44 அவர்கள் எல்லாரும் படையாகத் திரண்டு, பொல்லாதவர்களைச் சினங்கொண்டு தாக்கினார்கள்; நெறிகெட்டவர்களைச் சீற்றங்கொண்டு தாக்கினார்கள். தாக்கப்பட்டோருள் உயிர் தப்பியவர்கள் பாதுகாப்புக்காகப் பிற இனத்தாரிடம் ஓடிவிட்டார்கள்.
45 மத்தத்தியாவும் அவருடைய நண்பர்களும் எங்கும் சென்று சிலைவழிபாட்டுக்கான பீடங்களை இடித்துத் தள்ளினார்கள்;
46 இஸ்ரயேலின் எல்லைக்குள் விருத்தசேதனமின்றி வாழ்ந்துவந்த சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக விருத்தசேதனம் செய்தார்கள்;
47 செருக்குற்ற மக்களை விரட்டியடித்தார்கள். அவர்களின் முயற்சி அன்றாடம் வெற்றிகண்டது.
48 வேற்றினத்தாரிடமிருந்தும் மன்னர்களிடமிருந்தும் அவர்கள் திருச்சட்டத்தை விடுவித்தார்கள்; பொல்லாதவனான அந்தியோக்கு வெற்றிகொள்ள விடவில்லை.
49 இறக்கும் காலம் நெருங்கியபோது மத்தத்தியா தம் மைந்தர்களை நோக்கி, ";இப்போது இறுமாப்பும் ஏளனமும் மேலோங்கிவிட்டன; பேரழிவுக்கும் கடுங் சீற்றத்துக்கும் உரிய காலம் இது.
50 ஆதலால், என் மக்களே, இப்போது திருச்சட்டத்தின்பால் பற்றார்வம் கொண்டிருங்கள்; நம் மூதாதையரின் உடன்படிக்கைக்காக உங்கள் உயிரைக் கொடுங்கள்.
51 நம் மூதாதையர் தங்கள் காலத்தில் செய்த செயல்களை நினைவுகூருங்கள்; இதனால் பெரும் மாட்சியும் நிலைத்த பெயரும் பெறுவீர்கள்.
52 ஆபிரகாம் சோதிக்கப்பட்ட வேளையிலும் பற்றுறுதி உள்ளவராய்க் காணப்படவில்லையா? அதனால் இறைவனுக்கு ஏற்புடையவர் என்று மதிக்கப்படவில்லையா?
53 யோசேப்பு தமக்கு இடர்பாடு நேரிட்ட காலத்தில் கட்டளையைக்கடைப்பிடித்தார்; எகிப்தின் ஆளுநர் ஆனார்.
54 நம் மூதாதையான பினகாசு பற்றார்வம் மிக்கவராய் இருந்ததால் என்றுமுள குருத்துவத்தின் உடன்படிக்கையைப் பெற்றுக்கொண்டார்.
55 யோசுவா கட்டளையை நிறைவேற்றியதால் இஸ்ரயேலின் நீதித்தலைவர் ஆனார்.
56 காலேபு சபைமுன் சான்று பகர்ந்ததால் நாட்டை உரிமைச்சொத்தாக அடைந்தார்.
57 முடிவில்லாத அரசின் அரியணையைத் தாவீது தம் இரக்கத்தால் உரிமையாக்கிக் கொண்டார்.
58 எலியா திருச்சட்டத்தின்பால் பற்றார்வம் கொண்டிருந்ததால் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பெற்றார்.
59 அனனியா, அசரியா, மிசாவேல் ஆகியோர் தங்கள் பற்றுறுதியால் தீயினின்று காப்பாற்றப்பெற்றார்கள்.
60 தானியேல் தமது மாசின்மையால் சிங்கத்தின் பிடியினின்று விடுவிக்கப்பெற்றார்.
61 இவ்வாறே, கடவுளை நம்பினோர் ஆற்றலில் சிறந்தோங்குவர் என்பதை ஒவ்வொரு தலைமுறையிலிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.
62 தீவினை புரியும் மனிதனின் சொல்லுக்கு அஞ்சாதீர்கள்; ஏனெனில் அவனது பெருமை கழிவுப்பொருளாக மாறும்; புழுவுக்கு இரையாகும்.
63 அவன் இன்று உயர்த்தப்படுவான்; நாளை அடையாளமின்றிப் போய்விடுவான்; ஏனெனில் தான் உண்டான புழுதிக்கே திரும்பிவிடுவான்; அவனுடைய திட்டங்கள் ஒழிந்துபோகும்.
64 என் மக்களே, நீங்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் மனஉறுதியும் வலிமையும் கொண்டிருங்கள்; ஏனெனில் அதனால் மாட்சி அடைவீர்கள்.
65 "உங்கள் சகோதரனாகிய சிமியோன் அறிவுக்கூர்மை படைத்தவன் என்பதை நான் அறிவேன். அவனுக்கு எப்பொழுதும் செவிசாயுங்கள். அவன் உங்களுக்கு தந்தையாக இருப்பான்.
66 இளமைமுதல் வலிமையும் துணிவும் கொண்டவனாகிய யூதா மக்கபே உங்களுக்குப் படைத்தலைவனாய் இருந்து பகைவர்களை எதிர்த்துப் போர்புரிவான்.
67 திருச்சட்டத்தின்படி நடக்கிறவர்கள் எல்லாரையும் உங்களோடு ஒன்று சேர்த்து உங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காகப் பகைவர்களைப் பழிவாங்குங்கள்;
68 வேற்றினத்தார் உங்களுக்குச் செய்ததை அவர்களுக்குத் திருப்பிச் செய்யுங்கள்; திருச்சட்டத்தின் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள்" என்று அறிவுரை கூறினார்.
69 இவ்வாறு சொல்லி மத்தத்தியா அவர்களுக்கு ஆசி வழங்கியபின் தம் மூதாதையரோடு துயில்கொண்டார்.
70 அவர் நூற்று நாற்பத்தாறாம் ஆண்டு இறந்தார்; மோதயின் நகரில் இருந்த தம் மூதாதையரின் கல்லறையில் அடக்கம் செய்யப்பெற்றார். இஸ்ரயேலர் அனைவரும் அவருக்காகப் பெரிதும் துயரம் கொண்டாடினர்.
1 மக்கபேயர் அதிகாரம் 3
1 மத்தத்தியாவுக்குப்பின் அவருடைய மகன் மக்கபே என்று அழைக்கப்பெற்ற யூதா தலைமை ஏற்றார்.
2 அவருடைய சகோதரர்களும் அவருடைய தந்தையோடு சேர்ந்திருந்த எல்லாரும் அவருக்குத் துணை நின்று இஸ்ரயேலுக்காக மகிழ்ச்சியோடு போர் புரிந்தார்கள்.
3 அவர் தம் மக்களின் பெருமையைப் பரவச் செய்தார்; அரக்கனைப்போல மார்புக்கவசம் அணிந்தார்; படைக்கலங்கள் தாங்கிப் போர்கள் புரிந்தார்; தம் வாளால் பாசறையைப் பாதுகாத்தார்.
4 அவர் தம் செயல்களில் சிங்கத்திற்கு ஒப்பானார்; இரைக்காக முழங்கும் சிங்கக்குட்டி போலானார்;
5 அவர் நெறிகெட்டவர்களைத் தேடித் துரத்தினார்; தம் மக்களை வதைத்தவர்களைத் தீக்கிரையாக்கினார்.
6 நெறிகெட்டோர் அவருக்கு அஞ்சிப் பின்வாங்கினர்; தீவினை புரிவோர் அனைவரும் குழப்பம் அடைந்தனர்; அவரது கைவன்மையால் மக்களுக்கு விடுதலை கிட்டியது.
7 அவர் பல மன்னர்களுக்கு இன்னல் வருவித்தார்; யாக்கோபுக்கு இன்பம் அளித்தார்; அவரது நினைவு என்றும் வாழ்த்தப்பெறும்.
8 யூதேயாவின் நகரங்களுக்குச் சென்று இறைப்பற்றில்லாதோரை அழித்தொழித்தார்; இஸ்ரயேல்மீது வந்துற்ற பேரிடரை அகற்றினார்.
9 நிலத்தின் கடையெல்லைவரை அவருடைய பெயர் விளங்கிற்று; அழிந்துகொண்டிருந்தவர்களை ஒன்றுசேர்த்தார்.
10 அப்போது அப்பொல்லோன் இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிடுவதற்காக வேற்றினத்தாரையும் சமாரியாவிலிருந்து பெரும் படையையும் ஒன்று திரட்டினான்.
11 அதை அறிந்த யூதா போர்முனையில் அவனைச் சந்திக்கச் சென்றார்; அவனை முறியடித்துக் கொன்றார்; பலர் வெட்டுண்டு வீழ்ந்தனர்; எஞ்சியோர் தப்பியோடினர்.
12 யூதாவும் அவருடைய ஆள்களும் கொள்ளைப்பொருள்களைக் கைப்பற்றினார்கள். அப்பொல்லோனின் வாளை யூதா எடுத்துக்கொண்டார்; அதைக்கொண்டே தம் வாழ் நாளெல்லாம் போர் புரிந்தார்.
13 யூதா தம்மோடு ஒரு பெரும் கூட்டத்தைத் திரட்டியிருந்தார் என்றும், அவரோடு சேர்ந்து போர்புரிந்து வந்த பற்றுறுதியாளர் கூட்டம் ஒன்று அவரோடு இருந்தது என்றும் சிரியாவின் படைத்தலைவனான சேரோன் கேள்வியுற்றான்.
14 அவன், "மன்னரின் கட்டளையை இகழ்ந்த யூதாவையும் அவனுடைய ஆள்களையும் எதிர்த்துப் போரிடுவதன்மூலம் எனக்கென்று பெயர் தேடிக்கொள்வேன்; பேரரசில் பெருமை பெறுவேன்" என்று சொல்லிக் கொண்டான்;
15 இஸ்ரயேல் மக்களைப் பழிவாங்குவதற்குத் தனக்குத் துணை செய்யும்பொருட்டு வலிமையுள்ள இறைப்பற்றில்லாதோர் படையைத் திரட்டிச்சென்றான்.
16 அவன் பெத்கோரோனுக்கு ஏறிச்செல்லும் வழியை நெருங்கியபொழுது யூதா சிறு கூட்டத்தோடு அவனைப் போர்முனையில் சந்திக்கச் சென்றார்.
17 படை ஒன்று தங்களை எதிர்த்து வருவதைக் கண்டபோது யூதாவின் ஆள்கள், "சிலராய் இருக்கும் நாம் இவ்வளவு வலிமைமிக்க, திரளான கூட்டத்தை எவ்வாறு எதிர்த்துப் போரிடக்கூடும்? மேலும், இன்று நாம் ஒன்றும் உண்ணாததால் சோர்ந்திருக்கிறோமே!" என்று அவரிடம் கூறினர்.
18 அதற்கு யூதா, "சிலர் கையில் பலர் அகப்பட்டுக்கொள்வது எளிது. பலரால் காப்பாற்றப்படுவதற்கும் சிலரால் காப்பாற்றப்படுவதற்கும் விண்ணக இறைவன் முன்னிலையில் எத்தகைய வேறுபாடும் இல்லை;
19 ஏனெனில் போரில் வெற்றி என்பது படையின் எண்ணிக்கையைச் சார்ந்தது அல்ல; விண்ணக இறைவனிடமிருந்து வரும் வலிமையைச் சார்ந்ததே.
20 இறுமாப்பையும் நெறிகேட்டையும் கொண்டே நம் எதிரிகள் நம்மையும் நம் மனைவி மக்களையும் அழிக்கவும் நம்மைக் கொள்ளையடிக்கவும் வருகிறார்கள்.
21 நாமோ நம் உயிருக்காகவும் சட்டங்களுக்காகவும் போராடுகிறோம்.
22 நம் கண்முன்னால் கடவுளே அவர்களை நசுக்குவார். எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்" என்று சொல்லில் ஊக்கமளித்தார்.
23 யூதா பேசி முடித்ததும் சேரோன் மீதும் அவனுடைய படைகள்மீதும் திடீரெனப் பாய்ந்து தாக்கி அவர்களை அழித்தார்.
24 பெத்கோரோனிலிருந்து இறங்கிச் செல்லும் வழியில் சமவெளி வரை யூதா அவர்களைத் துரத்திச் செல்ல, அவர்களுள் எண்ணூறு பேர் மடிந்தனர்; எஞ்சியோர் பெலிஸ்தியரின் நாட்டுக்குத் தப்பியோடினர்.
25 யூதாவுக்கும் அவருடைய சகோதரர்களுக்கும் பகைவர் அஞ்சினர்; சுற்றிலும் இருந்த பிற இனத்தார் நடுநடுங்கினர்.
26 யூதாவின் புகழ் மன்னனுக்கு எட்டியது. பிற இனத்தார் அனைவரும் அவருடைய போர்களைப்பற்றிப் பேசிவந்தனர்.
27 அந்தியோக்கு மன்னன் இவற்றைக் கேள்வியுற்றபோது கடுஞ் சீற்றமுற்றான்; ஆளனுப்பித் தன் பேரரசில் இருந்த வீரர்கள் அனைவரையும் ஒன்று சேர்ந்து வலிமைமிக்க படை ஒன்றைத் திரட்டினான்;
28 தன் கருவூலத்தைத் திறந்து தன் படைவீரர்களுக்கு ஓராண்டு ஊதியத்தை அளித்து, எதற்கும் ஆயத்தமாக இருக்கும்படி கட்டளையிட்டான்.
29 இதனால் தன் கருவூலத்தில் இருந்த நிதியெல்லாம் செலவழிந்துவிடக் கண்டான். மேலும் நாட்டிலிருந்து வரவேண்டிய வருமானம் குறைந்து போயிற்று; ஏனெனில் பண்டு தொட்டு நிலவிவந்த பழக்கவழக்கங்களை மாற்றியிருந்ததால், நாட்டில் பிளவும் பெருந்துயரமும் நிலவின.
30 முன்பு சிலவேளைகளில் நடந்ததுபோலத் தன் சொந்தச் செலவுகளுக்கும், தனக்கு முன்பு இருந்த மன்னர்களைவிடத் தாராளமாகத் தான் கொடுத்துவந்த நன்கொடைகளுக்கும் போதுமான நிதி இல்லாமல் போகலாம் என்று அவன் அஞ்சினான்.
31 அவன் பெரிதும் கலக்கமுற்றான்; ஆகவே பாரசீக நாட்டிற்குச் சென்று மாநிலங்கள் செலுத்த வேண்டிய வரியைத் தண்டவும் திரளான பணம் திரட்டவும் திட்டமிட்டான்;
32 யூப்பிரத்தீசு பேராறு தொடங்கி எகிப்து எல்லைவரையுள்ள பகுதியில் அரச அலுவல்களை மேற்பார்வையிடும் பொறுப்பினை உயர்குடி மகனும் அரச குலத்தோன்றலுமான லீசியாவுக்கு வழங்கினான்;
33 தான் திரும்பும் வரை தன் மகன் அந்தியோக்கைப் பேணி வளர்க்க அவனுக்குக் கட்டளையிட்டான்;
34 தன் படைகளுள் பாதியையும் யானைகளையும் அவனிடம் ஒப்படைத்தான்; தான் திட்டமிட்டிருந்த அனைத்தையும், குறிப்பாக யூதேயா, எருசலேம் குடிகள்பற்றிய தனது திட்டத்தையும் செயல்படுத்த அவனுக்கு ஆணையிட்டான்.
35 இஸ்ரயேலின் வலிமையையும் எருசலேமில் எஞ்சியிருந்தவர்களையும் அழித்தொழிக்கவும், அவர்களது நினைவை அவ்விடத்திலிருந்து துடைத்துவிடவும், படைகளை அவர்களுக்கு எதிராய் அனுப்புமாறு அவனைப் பணித்தான்;
36 அவர்களுடைய நாடெங்கும் அயல்நாட்டாரைக் குடியேற்றி, அவர்களுக்கு நிலத்தைப் பங்கிட்டுக் கொடுக்கவும் அவனுக்கு ஆணை பிறப்பித்தான்.
37 எஞ்சியிருந்த பாதிப் படையை மன்னன் நடத்திக் கொண்டு தன்; தலைநகரான அந்தியோக்கியைவிட்டு நூற்று நாற்பத்தேழாம் ஆண்டு புறப்பட்டான்; யூப்பிரத்தீசு பேராற்றைக் கடந்து மலைப்பகுதிகள் வழியாகச் சென்றான்.
38 மன்னனுடைய நண்பர்களுள் வலிமை வாய்ந்தவர்களான தொரிமேனின் மகன் தாலமியையும் நிக்கானோரையும் கோர்கியாவையும் லீசியா தேர்ந்துகொண்டான்.
39 நாற்பதாயிரம் காலாட்படையினரையும் ஏழாயிரம் குதிரைப்படையினரையும் அவர்கள் பொறுப்பில் ஒப்படைத்தான். யூதேயா நாட்டிற்குள் சென்று, மன்னனின் கட்டளைப்படி அதை அழித்தொழிக்குமாறு அவர்களை அனுப்பி வைத்தான்.
40 அவ்வாறே அவர்களும் தங்கள் முழுப் படையோடும் புறப்பட்டுச் சென்று எம்மாவுக்கு அருகே இருந்த சமவெளியை அடைந்து அங்குப் பாசறை அமைத்தார்கள்.
41 சிரியா, பெலிஸ்தியா நாட்டுப் படைகளும் அவர்களோடு சேர்ந்துகொண்டனர். அப்பகுதி வியாபாரிகள் அவர்களது புகழைப்பற்றிக் கேள்விப்பட்டு, இஸ்ரயேல் மக்களை அடிமைகளாய் வாங்குவதற்குத்; திரளான வெள்ளியையும் பொன்னையும் சங்கிலிகளையும் எடுத்துக் கொண்டு பாசறைக்கு வந்தார்கள்.
42 இடர்ப்பாடுகள் பெருகுவதையும் எதிரிப் படைகள் தங்கள் நாட்டின் எல்லையில் பாசறை அமைத்திருப்பதையும் யூதாவும் அவருடைய சகோதரர்களும் கண்டார்கள். மக்களை அடியோடு அழித்தொழிக்க மன்னன் கொடுத்திருந்த கட்டளையை அறிய வந்தார்கள்.
43 அவர்கள் ஒருவர் மற்றவரை நோக்கி, "நம் மக்களின் அழிவு நிலையை நீக்கி முன்னைய நிலைக்கு அவர்களை உயர்த்துவோம்; நம் மக்களுக்காகவும் திருஉறைவிடத்துக்காகவும் போர்புரிவோம்" என்று சொல்லிக் கொண்டார்கள்.
44 அப்போது போருக்கான ஏற்பாடுகளைச் செய்யவும் கடவுளை வேண்டவும் அவருடைய இரக்கத்தையும் பரிவையும் காட்டுமாறு மன்றாடவும் அவர்கள் கூட்டமாய் ஒன்றுசேர்ந்தார்கள்.
45 எருசலேம் குடியிருப்பாரற்றுப் பாலைநிலம்போல மாறினது; அதன் பிள்ளைகளுள் ஒருவரும் உள்ளே போகவோ, வெளியே வரவோ இல்லை; திருஉறைவிடம் காலால் மிதிக்கப்பட்டது. அயல்நாட்டார் கோட்டையைக் கைப்பற்றியிருந்தனர். அது வேற்றினத்தாரின் உறைவிடமானது; யாக்கோபின் மகிழ்ச்சி பறிக்கப்பட்டது; அங்குக் குழலும் யாழும் ஒலிக்கவில்லை.
46 இஸ்ரயேலர் எல்லாரும் சேர்ந்து எருசலேமுக்கு எதிரில் இருந்த மிஸ்பாவுக்குச் சென்றார்கள்; ஏனெனில், அவர்களுக்கு முற்காலத்தில் வேண்டுதல் செய்யும் இடம் ஒன்று அங்கு இருந்தது.
47 அன்று அவர்கள் நோன்பிலிருந்து சாக்கு உடை உடுத்தித் தலைமீது சாம்பலைத் தூவி, தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டார்கள்.
48 வேற்றினத்தார் தங்கள் தெய்வச் சிலைகளிடமிருந்து இறைத் திட்டத்தை அறிந்து கொள்ள முயல்வர்; ஆனால் இஸ்ரயேலர் திருச்சட்ட நூலிலிருந்து அதை அறிந்து கொள்வர்.
49 குருக்களின் உடைகள், முதற் பலன்கள், பத்திலொரு பங்கு ஆகியவற்றை இஸ்ரயேலர் கொண்டுவந்தனர்; தங்கள் நேர்ச்சைக் காலத்தை முடித்து விட்ட நாசீர்களை அழைத்து வந்தனர்.
50 விண்ணக இறைவனை நோக்கி உரத்த குரல் எழுப்பி, "இவர்களை வைத்து என்ன செய்வோம்? இவர்களை எவ்விடம் கூட்டிச் செல்வோம்?
51 உமது திருஉறைவிடம் மிதிக்கப்பட்டுத் தீட்டுப்பட்டது. உம் குருக்கள் துயரத்தில் மூழ்கிச் சிறுமை அடைந்துள்ளார்கள்.
52 பிற இனத்தார் எங்களை அழித்தொழிக்க எங்களுக்கு எதிராக இப்போது கூடிவந்துள்ளனர். அவர்கள் எங்களுக்கு எதிராகச் செய்துள்ள சூழ்ச்சிகளை நீர் அறிவீர்.
53 நீர் எங்களுக்கு உதவிபுரியாவிடில் நாங்கள் அவர்களை எவ்வாறு எதிர்த்து நிற்கமுடியும்?" என்று மன்றாடினர்;
54 பின்னர் எக்காளம் முழங்கி உரத்த குரல் எழுப்பினர்.
55 அதன்பின் மக்களை வழிநடத்த தலைவர்கள், நூற்றுவர் தலைவர்கள், ஐம்பதின்மர் தலைவர்கள், பதின்மர் தலைவர்கள் ஆகியோரை யூதா ஏற்படுத்தினார்;
56 வீடு கட்டுவோர், மணம்புரிவோர், திராட்சை பயிரிடுவோர், கோழைகள் ஆகியோர் திருச்சட்டத்தின்படி அவரவர்தம் வீடுகளுக்குத் திரும்பவேண்டும் என்று கட்டளையிட்டார்.
57 பிறகு அவர்கள் இடம் பெயர்ந்து எம்மாவுக்குத் தென்புறத்தில் பாசறை அமைத்தார்கள்.
58 அப்போது யூதா, "படைக்கலம் ஏந்துங்கள்; துணிவு கொள்ளுங்கள்; நம்மையும் நமது திருஉறைவிடத்தையும் அழிப்பதற்காக நம்மை எதிர்க்கத் திரண்டுவந்துள்ள இந்தப் பிற இனத்தாரோடு போர்புரிய நாளை காலையில் ஆயத்தமாய் இருங்கள்.
59 ஏனெனில் நம் மக்களுக்கும் நமது திரு உறைவிடத்துக்கும் நேர்ந்துள்ள கேடுகளைக் காண்பதைவிட நாம் போரில் மடிவதே நலம்.
60 ஆனால் விண்ணக இறைவனின் திருவுளம் எதுவோ அதுவே நிறைவேறட்டும்" என்றார்.
1 மக்கபேயர் அதிகாரம் 4
1 கோர்கியா ஐயாயிரம் காலாட்படையினரையும் தேர்ந்தெடுத்த ஆயிரம் குதிரைப்படையினரையும் கூட்டிச்சேர்த்தான். அப்படை இரவில் புறப்பட்டு,
2 யூதர்களுடைய பாசறை மீது பாய்ந்து திடீரென்று அதைத் தாக்கச் சென்றது. கோட்டையில் இருந்தவர்கள் கோர்கியாவுக்கு வழிகாட்டினார்கள்.
3 இதைக் கேள்வியுற்ற யூதா, தம் படைவீரர்களோடு எம்மாவுவில் இருந்த மன்னனின் படையைத் தாக்கச் சென்றார்.
4 அப்போது அப்படை பாசறைக்கு வெளியே சிதறியிருந்தது.
5 கோர்கியா இரவில் யூதாவின் பாசறைக்கு வந்து ஒருவரையும் காணாமல் அவர்களை மலையில் தேடினான்; "இவர்கள் நம்மைக் கண்டு ஓடிவிட்டார்கள்" என்று சொன்னான்.
6 பொழுது விடிந்தபோது மூவாயிரம் ஆள்களோடு யூதா சமவெளியில் காணப்பட்டார். அவர்கள் விரும்பிய போர்க்கவசமும் இல்லை, வாளும் இல்லை.
7 பிற இனத்தார் தங்களது பாசறையை அரண்செய்து வலிமைப்படுத்தியிருந்தனர் என்றும், போருக்குப் பயிற்சி பெற்ற குதிரைவீரர்கள் அதைச் சுற்றிக் காவல் புரிந்தார்கள் என்றும் யூதா கண்டார்.
8 யூதா தம்மோடு இருந்தவர்களை நோக்கி, "அவர்களின் எண்ணிக்கையைக் கண்டு அஞ்சாதீர்கள்; அவர்கள் தாக்குவதைக் கண்டு கலங்காதீர்கள்.
9 பார்வோன் தன் படையோடு நம் மூதாதையரைத் துரத்திவந்த போது, அவர்கள் எவ்வாறு செங்கடலில் காப்பாற்றப்பட்டார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.
10 இப்போது விண்ணக இறைவனைத் துணைக்கு அழைப்போம்; ஆண்டவர் நம்மீது அன்பு செலுத்தி, நம் மூதாதையரோடு செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, இந்தப் படையை நம் கண்முன் இன்று முறியடிப்பாரா எனப் பார்ப்போம்.
11 இஸ்ரயேலை மீட்டுக் காப்பாற்றுகிறவர் ஒருவர் இருக்கிறார் எனப் பிற இனத்தார் அனைவரும் அப்போது அறிந்து கொள்வர்" என்றார்.
12 அயல்நாட்டார் தலை நிமிர்ந்து பார்த்தபோது யூதர்கள் தங்களை எதிர்த்துவரக் கண்டனர்.
13 உடனே போர்தொடுக்கத் தங்கள் பாசறையினின்று புறப்பட்டனர். யூதாவோடு இருந்தவர்களும் எக்காளம் முழக்கி,
14 போர் தொடுத்தார்கள். பிற இனத்தார் முறியடிக்கப்பட்டுச் சமவெளிக்குத் தப்பியோடினர்.
15 பின்னணிப் படையினர் எல்லாரும் வாளுக்கு இரையாயினர். மற்றவர்களைக் கசாரோ வரையிலும், இதுமேயாவின் சமவெளிகள் வரையிலும் ஆசோத்து யாம்னியா வரையிலும் துரத்திச் சென்றார்கள். அவர்களுள் மூவாயிரம் பேர் மடிந்தனர்.
16 அவர்களைத் துரத்துவதை நிறுத்திவிட்டு யூதாவும் அவருடைய படைவீரர்களும் திரும்பிவந்தார்கள்.
17 அவர் மக்களைநோக்கி, "கொள்ளைப் பொருள்கள்மீது பேராவல் கொள்ள வேண்டாம். போர் இன்னும் முடியவில்லை.
18 கோர்கியாவும் அவனுடைய படைகளும் நமக்கு அருகிலேயே மலையில் இருக்கிறார்கள். இப்போது நம் பகைவர்களை எதிர்த்து நின்று போர்செய்யுங்கள்; பிறகு துணிவோடு கொள்ளைப் பொருள்களை எடுத்துச் செல்லலாம்" என்றார்.
19 யூதா பேசிக்கொண்டிருந்தபோதே பிற இனத்தாரின் படையில் ஒரு பகுதியினர் கீழ் நோக்கிப் பார்த்த வண்ணம் மலைமீது காணப்பட்டனர்.
20 அவர்கள் தங்களின் படைகள் துரத்தியடிக்கப்பட்டதையும் தங்களின் பாசறை தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பதையும் கண்டார்கள்; அங்குக் காணப்பட்ட புகையால் நடந்ததை உணர்ந்து கொண்டார்கள்.
21 அவர்கள் இதைப் பார்த்தபொழுது பெரிதும் அஞ்சினார்கள்; சமவெளியில் யூதாவின் படை போருக்கு அணிவகுத்து நின்றதையும் கண்டபோது,
22 அவர்கள் எல்;லாரும் பெலிஸ்தியரின் நாட்டுக்கு ஓடிப்போனார்கள்.
23 யூதா அவர்களின் பாசறையைக் கொள்ளையிடுவதற்குத் திரும்பி வந்தார். அவருடைய வீரர்கள் மிகுதியான பொன், வெள்ளி, நீல, கருஞ் சிவப்பு நிறமுடைய ஆடைகள், பெரும் செல்வம் ஆகியவற்றைக் கைப்பற்றினார்கள்;
24 "ஆண்டவர் நல்லவர்; அவரது இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது" என்று பாடி விண்ணக இறைவனைப் போற்றிய வண்ணம் தங்களது பாசறைக்குத் திரும்பினார்கள்.
25 இவ்வாறு அன்று இஸ்ரயேலுக்குப் பெரும் மீட்புக் கிடைத்தது.
26 அயல்நாட்டவருள் தப்பியவர்கள் வந்து, நடந்த யாவற்றையும் லீசியாவிடம் அறிவித்தார்கள்.
27 அவன் அவற்றைக் கேள்வியுற்று மனம் குழம்பி ஊக்கம் இழந்தான்; ஏனெனில் தான் எண்ணியவாறு இஸ்ரயேலுக்கு நடவாமலும், மன்னன் தனக்குக் கட்டளையிட்டவாறு நிறைவேறாமலும் போயிற்று.
28 அடுத்த ஆண்டு லீசியா அவர்களை முறியடிக்க அறுபதாயிரம் தேர்ந்தெடுத்த காலாட்படையினரையும் ஐயாயிரம் குதிரைப்படையினரையும் திரட்டினான்.
29 அவர்கள் இதுமெயா நாட்டுக்கு வந்து பெத்சூரில் பாசறை அமைக்கவே, யூதாவும் பத்தாயிரம் வீரர்களோடு அவர்களை எதிர்த்துவந்தார்.
30 பகைவருடைய படை வலிமைமிக்கதாய் இருக்கக் கண்ட யூதா கடவுளை நோக்கி, "இஸ்ரயேலின் மீட்பரே, போற்றி! உம் அடியாராகிய தாவீதின் கைவன்மையால் வலியோனுடைய தாக்குதலை நீர் அடக்கினீர்; சவுலின் மகன் யோனத்தானும் அவருடைய படைக்கலம் சுமப்போரும் பெலிஸ்தியருடைய படைகளை முறியடிக்கச் செய்வீர்.
31 அதேபோல் இந்தப் பகைவரின் படையை உம் மக்களாகிய இஸ்ரயேலின் கையில் சிக்கவைத்திடும்; தங்கள் படை, குதிரைவீரர்கள் பொருட்டு அவர்கள் நாணம் அடையச்செய்திடும்.
32 அவர்களிடத்தில் கோழைத்தனத்தை ஊட்டி, அவர்களின் வலிமைத் திமிரை அடக்கிடும்; தங்களது அழிவு கண்டு அவர்களை அஞ்சி நடுங்கச் செய்திடும்.
33 உம்மீது அன்பு செலுத்துகிறவர்களுடைய வாளால் அவர்களை அழித்திடும்; உமது பெயரை அறியும் யாவரும் புகழ்ப்பாக்களால் உம்மைப் போற்றச் செய்திடும்" என்று மன்றாடினார்.
34 இரு படைகளும் போரிட்டுக் கொண்டன. நேருக்கு நேர் போரிட்டதில் லீசியாவின் படையில் ஐயாயிரம் பேர் மடிந்தனர்.
35 தன் படையினர் நிலைகுலைந்து ஓடினதையும், யூதாவோடு இருந்தவர்கள் துணிவு கொண்டிருந்ததையும், அவர்கள் வாழவோ புகழோடு மாளவோ ஆயத்தமாய் இருந்ததையும் கண்ட லீசியா, அந்தியோக்கி நகரக்குச் சென்று, முன்னிலும் திரளான படையோடு யூதேயாவை மீண்டும் தாக்கக் கூலிப்படையினரைச் சேர்த்தான்.
36 யூதாவும் அவருடைய சகோதரர்களும், "நம் பகைவர்கள் முறியடிக்கப்பட்டார்கள். இப்போது நாம் புறப்பட்டுப் போய்த் திருஉறைவிடத்தைத் தூய்மைப்படுத்தி மீண்டும் கடவுளுக்கு உரித்தாக்குவோம்" என்றார்கள்.
37 எனவே படைவீரர்கள் எல்லாரும் சேர்ந்து சீயோன் மலைக்கு ஏறிச்சென்றார்கள்.
38 திருஉறைவிடம் பாழடைந்திருந்ததையம், பலிபீடம் தீட்டுப்பட்டுக் கிடந்ததையும், கதவுகள் தீக்கிரையானதையும், காட்டிலும் மலையிலும் இருப்பதுபோல முற்றங்களில் முட்சேடிகள் அடர்ந்திருந்ததையும், குருக்களுடைய அறைகள் இடிபட்டுக் கிடந்ததையும் அவர்கள் கண்டார்கள்;
39 தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு பெரிதும் அழுது புலம்பி, தங்கள்மீது சாம்பலைத் தூவிக் கொண்டார்கள்;
40 நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தார்கள்; எக்காளத்தால் அடையாள ஒலி எழும்பியதும் விண்ணக இறைவனை நோக்கி மன்றாடினார்கள்.
41 தாம் தூய இடத்தைத் தூய்மைப்படுத்தும்வரை கோட்டையில் இருந்தவர்களோடு போர்புரியும்படி யூதா சிலரை ஒதுக்கிவைத்தார்;
42 திருச்சட்டத்தின்மீது பற்றுக்கொண்டிருந்த குற்றமற்ற குருக்களைத் தேடிக்கொண்டார்.
43 அவர்கள் திருஉறைவிடத்தைத் தூய்மைப்படுத்தி, தீட்டுப்பட்ட கற்களை அழுக்கடைந்த இடத்தில் எறிந்துவிட்டார்கள்;
44 தீட்டுப்பட்ட எரிபலிப் பீடத்தை என்ன செய்வது என்று அவர்கள் கலந்து ஆலோசித்தார்கள்;
45 அதை வேற்றினத்தார் தீட்டுப்படுத்தியிருந்ததால், தங்களுக்குத் தொடர்ந்து இகழ்ச்சியாய் இராதவாறுஅதை இடித்துவிட வேண்டும் என்ற நல்ல முடிவுக்கு வந்தார்கள்; அவ்வாறே அதனை இடித்துவிட்டார்கள்.
46 அக்கற்களை என்ன செய்வது என்று அறிவிக்க ஓர் இறைவாக்கினர் தோன்றும்வரை, அவற்றைக் கோவில் மலையில் தகுந்ததோர் இடத்தில் குவித்து வைத்தார்கள்;
47 திருச்சட்டப்படி முழுக்கற்களைக்கொண்டு முன்பு இருந்த வண்ணம் புதிய பலிபீடத்தைக் கட்டினார்கள்;
48 தூயகத்தையும் கோவிலின் உட்பகுதிகளையும் பழுதுபார்த்தார்கள்; முற்றங்களையும் தூய்மைப்படுத்தினார்கள்;
49 தூய கலன்களைப் புதிதாகச் செய்தார்கள்; விளக்குத் தண்டையும் தூபபீடத்தையும் காணிக்கை அப்ப மேசையையும் கோவிலுக்குள் கொண்டுவந்தார்கள்;
50 பீடத்தின் மீது சாம்பிராணியைப் புகைத்துத் தண்டின்மீது இருந்த விளக்குகளை ஏற்றியதும் கோவில் ஒளிர்ந்தது;
51 மேசைமீது அப்பங்களை வைத்துத் திரைகளைத் தொங்கவிட்டார்கள்; இவ்வாறு தாங்கள் மேற்கொண்ட வேலைகளையெல்லாம் செய்து முடித்தார்கள்.
52 நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு கிஸ்லேவு மாதமாகிய ஒன்பதாம் மாதம் இருபத்தைந்தாம் நாள் விடியற்காலையில் அவர்கள் எழுந்திருந்து,
53 தாங்கள் எழுப்பியிருந்த புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள்.
54 வேற்றினத்தார் பலிபீடத்தைத் தீட்டுப்படுத்தியிருந்த அதே காலத்தில் அதே நாளில் அது மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டது. அப்பொழுது பாடல்களும் நரம்பிசைக் கருவிகளும் யாழ்களும் கைத்தாளங்களும் முழங்கின.
55 எல்லா மக்களும் குப்புற விழுந்து தங்களுக்கு வெற்றி அளித்த விண்ணக இறைவனை வழிபட்டு வாழ்த்தினார்கள்;
56 பலிபீட அர்ப்பணிப்பு விழாவை எட்டு நாள் கொண்டாடி மகிழ்ச்சியோடு எரிபலிகளைச் செலுத்தினார்கள்; நல்லுறவுப் பலியும் நன்றிப் படையலும் ஒப்புக்கொடுத்தார்கள்;
57 பொன் முடிகளாலும் குமிழ்களாலும் கோவிலின் முகப்பை அணிசெய்து, வாயில்களையும் அறைகளையும் புதுப்பித்துக் கதவுகளை மாட்டினார்கள்.
58 மக்கள் நடுவே மிகுந்த அக்களிப்பு நிலவியது; வேற்றினத்தாரின் பழிச்சொல் நீங்கியது.
59 ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், அதாவது கிஸ்லேவு மாதம் இருபத்தைந்தாம் நாள்முதல் எட்டு நாள்வரை அக்களிப்போடும் அகமகிழ்வோடும் பலிபீட அர்ப்பணிப்பு விழாவைக் கொண்டாட யூதாவும் அவருடைய சகோதரர்களும் இஸ்ரயேல் சபையார் அனைவரும் முடிவு செய்தார்கள்.
60 முன்புபோல வேற்றினத்தார் உள்ளே சென்று தீட்டுப்படுத்தாதவாறு அவர்கள் சீயோன் மலையைச் சுற்றிலும் உயர்ந்த மதில்களையும் உறுதியான காவல்மாடங்களையும் அப்போது எழுப்பினார்கள்.
61 மேலும் காவற்படை ஒன்றை யூதா அங்கு நிறுத்தினார்; இது மேயாவுக்கு எதிரே இஸ்ரயேல் மக்களுக்குக் கோட்டையாக விளங்கும்படி பெத்சூரையும் வலுப்படுத்தினார்.
1 மக்கபேயர் அதிகாரம் 5
1 பலிபீடம் மீண்டும் எழுப்பப்பட்டது என்றும், திருஉறைவிடம் முன்பு இருந்ததுபோல் அர்ப்பணிக்கப்பட்டது என்றும், சுற்றிலும் இருந்த வேற்றினத்தார் கேள்விப்பட்டு மிகவும் சினங்கொண்டனர்;
2 எனவே தங்கள் நடுவெ வாழ்ந்த யாக்கோபின் வழிமரபினரை அழித்தொழிக்கத் திட்டமிட்டனர்; அவ்வாறே அவர்களைக் கொன்றொழிக்கத் தொடங்கினர்.
3 இதுமேயாவில் இருந்த அக்கிரபத்தேனில் ஏசாவின் மக்கள் இஸ்ரயேலரை முற்றுகையிட்டிருந்ததால், யூதா அவர்களைக் கடுமையாகத் தாக்கி வீழ்ச்சியுறச் செய்து கொள்ளைப் பொருள்களையும் எடுத்துவந்தார்;
4 சாலைகளில் பதுங்கியிருந்த தம் மக்களுக்குக் கண்ணிபோலும் சூழ்ச்சிப்பொறிபோலும் இருந்த பேயான் மக்களுடைய கொடுமைகளையும் நினைவுகூர்ந்தார்;
5 ஆகவே அவர்களைக் கோட்டைகளில் அடைத்து அவர்கள் வெளியே வராமல் தடுத்து முற்றிலும் அழித்தார்; கோட்டைகளையும் அவற்றுள் இருந்த அனைவரையும் தீக்கிரையாக்கினார்.
6 பிறகு அவர் அம்மோனியரைத் தாக்கச் சென்றபோது, வலிமைமிக்க படையையும் திரளான மக்களையும் அவர்களின் தலைவரான திமொத்தேயுவையும் கண்டார்.
7 அவர்களோடு போர்கள் பல புரிந்து, அவர்களை நிலைகுலையச் செய்து அழித்தார்.
8 யாசேர் நகரையும் அதைச் சேர்ந்த ஊர்களையும் கைப்பற்றியபின் யூதேயா திரும்பினார்.
9 தங்கள் நாட்டில் வாழ்ந்துவந்த இஸ்ரயேலரை அழிப்பதற்காகக் கிலயாதில் இருந்த பிற இனத்தார் அவர்களுக்கு எதிராக அணிதிரண்டனர். எனவே இஸ்ரயேலர் தாதமா கோட்டைக்குத் தப்பியோடினர்.
10 அவர்கள் யூதாவுக்கும் அவருடைய சகோதரர்களுக்கும் எழுதி அனுப்பிய மடல் வருமாறு; "எங்களைச் சுற்றியுள்ள பிற இனத்தார் எங்களை ஒழித்துவிட எங்களுக்கு எதிராகத் திரண்டுவந்துள்ளனர்.
11 அவர்கள் வந்து, நாங்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் இந்தக் கோட்டையைப் பிடிக்க முன்னேற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். திமொத்தேயு அவர்களின் படைத்தலைவன்.
12 எங்களுள் பலர் ஏற்கெனவே மடிந்துவிட்டதால் இப்போது நீர் வந்து அவர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றும்.
13 தோபு நாட்டிலுள்ள நம் சகோதரர்கள் அனைவரையும் பகைவர்கள் கொன்றுவிட்டார்கள்; அவர்களின் மனைவி மக்களைச் சிறைப்படுத்தியதோடு உடமைகளையும் கொள்ளையடித்து விட்டார்கள்; ஏறக்குறைய ஆயிரம் பேரை அங்குக் கொலை செய்து விட்டார்கள். "
14 யூதாவும் அவருடைய சகோதரர்களும் அம்மடலைப் படித்துக் கொண்டிருக்கும்போதே, கிழிந்த ஆடைகளோடு சில தூதர்கள் கலிலேயா நாட்டிலிருந்து இதுபோன்ற செய்தி ஒன்றைக் கொண்டுவந்தார்கள்.
15 தாலமாய், தீர், சீதோன் நகரத்தாரும் பிற இனத்தார் வாழும் கலிலேயா நாட்டு மக்கள் அனைவரும் தங்களுக்கு எதிராய் எழுந்து தங்களை அழித்தொழிக்கக் கூடியிருப்பதாகத் தெரிவித்தார்கள்.
16 யூதாவும் மக்களும் இச்செய்தியைக் கேட்டு, கடுந்துயருக்கும் பகைவர்களின் தாக்குதலுக்கும் உள்ளாகியிருந்த தங்கள் உறவின்முறையினருக்குத் தாங்கள் செய்யவேண்டியதைப் பற்றி முடிவுசெய்யப் பெரும் கூட்டமாகக் கூடினார்கள்.
17 யூதா தம் சகோதரரான சீமோனை நோக்கி, "நீர் வீரர்களைத் தேர்ந்துகொண்டு கலிலேயா நாட்டிலுள்ள உம் உறவின்முறையினரை விடுவிக்கப் புறப்படும். நானும் என் சகோதரனான யோனத்தானும் கிலயாதுக்குப் போவோம்" என்றார்.
18 யூதேயாவைக் காப்பதற்காகச் செக்கரியாவின் மகனான யோசேப்பையும் மக்கள் தலைவர்களுள் ஒருவரான அசரியாவையும் எஞ்சிய படையோடு விட்டுச்சென்றார்;
19 "இம்மக்களுக்குப் பொறுப்பாய் இருங்கள்; நாங்கள் திரும்பிவரும்வரை பிற இனத்தாரோடு போர் செய்யாதீர்கள்" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
20 கலிலேயாவுக்குச் செல்வதற்காகச் சீமோனுக்கு மூவாயிரம் வீரர்களும், கிலயாதுக்குச் செல்வதற்காக யூதாவுக்கு எண்ணாயிரம் வீரர்களும் குறிக்கப்பட்டார்கள்.
21 சீமோன் கலிலேயாவுக்குச் சென்று பிற இனத்தாரோடு போர்கள் பல செய்து அவர்களை அழித்தார்.
22 அவர் தாலமாய் நகரின் வாயில்வரை அவர்களைத் துரத்திச் சென்றார்; அவர்களுள் ஏறக்குறைய மூவாயிரம் பேர் மாண்டனர். அவர் அவர்களுடைய பொருள்களைக் கொள்ளையடித்தார்;
23 கலிலேயாவிலும் அர்பத்தாவிலும் இருந்த யூதர்களை அவர்களுடைய மனைவி மக்களோடும் அவர்களுக்குச் சொந்தமான பொருள்கள் அனைத்தோடும் கூட்டிக்கொண்டு பெரும் மகிழ்ச்சியோடு யூதேயா நாட்டுக்கு வந்தார்.
24 யூதா மக்கபேயும் அவருடைய சகோதரனான யோனத்தானும் யோர்த்தான் ஆற்றைக் கடந்து பாலைநிலத்தில் மூன்று நாள் பயணம் செய்தார்கள்;
25 அவர்கள் நபத்தேயரைச் சந்தித்தார்கள். நபத்தேயர் அவர்களை இனிதே வரவேற்றுக் கிலயாது நாட்டில் வாழ்ந்துவந்த யூதர்களுக்கு நேர்ந்த யாவற்றையும் தெரிவித்தார்கள்;
26 "போஸ்ரா, போசோர், அலேமா, காஸ்போ, மாக்கேது, கர்னாயிம் என்னும் வலிமைமிக்க மாநகர்களில் யூதர்கள் பலர் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர்;
27 மற்றும் சிலர் கிலயாதின் பிற நகரங்களில் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர்; பகைவர்கள் நாளையே அவர்களின் கோட்டைகளைத் தாக்கிக் கைப்பற்றி, மக்கள் எல்லாரையும் ஒரே நாளில் அழித்தொழிக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள்" என்று சொன்னார்கள்.
28 ஆதலால் யூதாவும் அவருடைய படைவீரர்களும் உடனே திரும்பிப் பாலைநில வழியாய்ப் போஸ்ராவுக்குச் சென்று அதைக் கைப்பற்றினார்கள்; ஆடவர் எல்லாரையும் வாளுக்கு இரையாக்கி நகரைக் கொள்ளையடித்துக் கொளுத்திவிட்டார்கள்.
29 பிறகு அவர்கள் இரவில் அங்கிருந்து புறப்பட்டுத் தாதமா கோட்டைக்குச் சென்றார்கள்.
30 பொழுது விடியம் வேளையில் அவர்கள் தலைநிமிர்ந்து பார்த்தபோது கோட்டையைப் பிடிப்பதற்கும் அதில் இருந்த யூதர்களைத் தாக்குவதற்கும் ஏணிகளோடும் படைப்பொறிகளோடும் வந்த எண்ணிலடங்காத மக்கள் திரளைக் கண்டார்கள்.
31 போர் தொடங்கிவிட்டது என்று யூதா கண்டார். நகரிலிருந்து எழுந்த கூக்குரல் எக்காள ஒலியோடும் பேரிரைச்சலோடும் சேர்ந்து வானத்தை எட்டியது.
32 ஆதலால் அவர் தம் படைவீரர்களை நோக்கி, "இன்று நம் உறவின் முறையினருக்காகப் போரிடுங்கள்" என்றார்.
33 யூதா தம் படையை மூன்றாகப் பிரிக்கவே, அவர்கள் எக்காளங்களை முழங்கிக்கொண்டும்; உரத்த குரலில் வேண்டிக்கொண்டும் பகைவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.
34 மக்கபேயுதாம் வருகிறார் என்று திமோத்தேயுவின் படைவீரர்கள் அறிந்தவுடவே அவர் முன்னிருந்து தப்பியோடினார்கள். அவர் அவர்களை அடித்து நொறுக்கவே, அன்று அவர்களுள் ஏறத்தாழ எண்ணாயிரம் பேர் கொலையுண்டனர்.
35 பின்னர் அலேமாவை நோக்கி யூதா சென்று அதை எதிர்த்துப் போரிட்டுக் கைப்பற்றினார். அங்கு இருந்த ஆடவர் எல்லாரையும் கொன்றபின் அதைக் கொள்ளையடித்துக் கொளுத்திவிட்டார்.
36 அவ்விடமிருந்து புறப்பட்டுக் காஸ்போவையும் மாக்கேதையும் போசோரையும் கிலயாது நாட்டின் மற்ற நகர்களையும் பிடித்தார்.
37 இவற்றுக்குப்பின் திமோத்தேயு வேறொரு படையைத் திரட்டி நீரோடையின் அக்கரையில் இராபோன் நகருக்கு எதிரில் பாசறை அமைத்தான்.
38 பகைவர்களின் படையை உளவுபார்க்க யூதா ஆள்களை அனுப்ப, அவர்கள் திரும்பிவந்து, "நம்மைச் சுற்றிலும் இருக்கும் பிற இனத்தார் எல்லாரும் அவனோடு சேர்ந்து கொண்டனர். அது மிகப் பெரும் படை.
39 தங்களுக்கு உதவியாக அரேபியரையும் அவர்கள் கூலிக்கு அமர்த்தியுள்ளார்கள்; உம்மோடு போர் செய்ய ஆயத்தமாகி நீரோடையின் அக்கரையில் பாசறை அமைத்திருக்கிறார்கள்" என்று சொன்னார்கள். எனவே யூதா அவர்களைப் போர்முனையில் சந்திக்கச் சென்றார்.
40 யூதாவும் அவரது படையும் நீரோடைக்கு அருகே வந்ததும் திமோத்தேயு தன் படைத்தலைவர்களை நோக்கி, "அவன் முதலில் நீரோடையைக் கடந்து நம்மிடம் வந்தால் நாம் அவனை எதிர்க்க முடியாது; அவன் அவனை எதிர்க்கமுடியாது; அவன் நம்மைத் தோற்கடிப்பது உறுதி.
41 ஆனால் அவன் அச்சம்கொண்டு அக்கரையிலேயே பாசறை அமைப்பானாகில், நாம் நீரோடையைக் கடந்து சென்று அவனை முறியடிப்போம்" என்று கூறினான்.
42 யூதா நீரோடையை நெருங்கி வந்தபோது அலுவலர்களை அதன் அருகே நிறுத்தி, "ஒருவனையும் பாசறை அமைக்க விடாதீர்கள்; எல்லாரும் போர்புரியச் செய்யுங்கள்" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
43 தம் எதிரிகளைத் தாக்க யூதாவே முதன்முதல் நீரோடையைக் கடந்தார். மக்கள் எல்லாரும் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அவரால் முறியடிக்கப்பட்ட பிற இனத்தார் அனைவரும் தங்கள் படைக்கலங்களை எறிந்து விட்டு கர்னாயிமில் இருந்த கோவிலுக்குத் தப்பியோடினார்கள்.
44 ஆனால் யூதாவும் அவருடைய ஆள்களும் அந்த நகரைப் பிடித்துக் கோவிலையும் அதில் இருந்த அனைவரையும் தீக்கிரையாக்கினார்கள். இவ்வாறு கர்னாயிம் நகர் முறியடிக்கப்பட்டது; யூதாவை எதிர்க்கப் பிற இனத்தாரால் முடியாமல் போயிற்று.
45 கிலயாதில் இருந்த சிறுவர் முதல் பெரியோர்வரை எல்லா இஸ்ரயேலரும் அவர்களின் மனைவி மக்களும், பொருள்களும் மிகப் பெரும் படையாக யூதேயா நாடு செல்வதற்கு அவர்களை யூதா ஒன்றுதிரட்டினார்.
46 அவர்கள் எபிரோனை அடைந்தார்கள். வழியில் இருந்த அந்நகர் பெரியதும் காவலரண் செய்து வலுப்படுத்தப்பட்டதுமாய் இருந்தது. அதைச் சுற்றி வலப்பக்கமோ இடப்பக்கமோ போக இயலவில்லை; நகரில் வழியாகத்தான் அவர்கள் போக வேண்டியிருந்தது.
47 ஆனால் அவர்கள் உள்ளே நுழையாதவாறு நகரில் இருந்தவர்கள் தடுத்து வாயில்களைக் கற்களால் அடைத்தார்கள்.
48 யூதா அவர்களிடம், "நாங்கள் உங்கள் நாட்டின் வழியாக எங்களுடைய நாடு போய்ச்சேர வழிவிடுங்கள். நாங்கள் யாரும் உங்களுக்குத் தீங்கு செய்யமாட்டோம்; நாங்கள் நடந்தே செல்வோம்" என்று அமைதியை நாடும் முறையில் சொல்லி அனுப்பினார். இருப்பினும் நகர வாயில்களை அவருக்கு திறந்துவிட அவர்கள் விரும்பவில்லை.
49 ஆதலால் படைவீரர்களுள் ஒவ்வொருவரும் தாம் இருந்த இடத்திலேயே பாசறை அமைக்கவேண்டும் என்று அறிக்கையிடும்படி யூதா கட்டளையிட்டார்.
50 அவ்வாறே வீரர்களும் பாசறை அமைத்தார்கள். யூதா அன்று பகலும் இரவுமாக அந்த நகரத்தோடு போர் புரிந்து அதைக் கைப்பற்றினார்;
51 ஆடவர் எல்லாரையும் வாளால் கொன்றொழித்தார்; நகரைக் கொள்ளையடித்தபின் தரைமாட்டமாக்கினார்; கொலையுண்டவர்களைத் தாண்டி நகரைக் கடந்து சென்றார்.
52 பின்னர் அவர்கள் யோர்தானைக் கடந்து பெத்சான் நகருக்கு எதிரில் இருந்த பெரிய சமவெளியில் சென்று கொண்டிருந்தார்கள்.
53 தம் மக்களுள் சோர்ந்து பின்னடைந்தவர்களை யூதா ஒன்றுசேர்ந்து வழி முழுவதும் யூதேயா நாடு சேருமட்டும் அவர்களுக்கு ஊக்கமூட்டிக்கொண்டு சென்றார்.
54 அவர்கள் அக்களிப்போடும் அகமகிழ்வோடும் சீயோன் மலைக்கு ஏறிச்சென்று தங்களுள் யாரும் அழிவுறாமல் பாதுகாப்புடன் திரும்பி வந்ததற்காக எரிபலிகளை ஒப்புக்கொடுத்தார்கள்.
55 யூதாவும் யோனத்தானும் கிலயாது நாட்டில் இருந்த காலத்தில், அவர்களுடைய சகோதரனான சீமோன் கலிலேயாவில் தாலமாயை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த காலத்தில்,
56 அவர்கள் புரிந்த போர்களைப்பற்றியும் தீரச்செயல்களைப்பற்றியும் படைத்தலைவர்களான செக்கரியா மகன் யோசேப்பும் அசரியாவும் கேள்விப்பட்டார்கள்;
57 "நாமும் நமக்கு நல்ல பெயரைத் தேடிக்கொள்வோம்; நாம் சென்று நம்மைச் சுற்றிலும் இருக்கும் பிற இனத்தாரை எதிர்த்துப் போர்செய்வோம்" என்று சொல்லி,
58 தங்களோடு இருந்த படைவீரர்களுக்கு ஆணையிட, அவர்கள் யாம்னியாவை நோக்கி அணிவகுத்துச் சென்றார்கள்.
59 ஆனால் அவர்களைப் போர் முனையில் சந்திக்குமாறு கோர்கியாவும் அவனுடைய படைவீரர்களும் நகருக்கு வெளியே வந்தார்கள்.
60 யோசேப்பும் அசரியாவும் முறியடிக்கப்பட்டு யூதாவின் எல்லைவரை துரத்தியடிக்கப்பட்டார்கள். அன்று இஸ்ரயேல் மக்களுள் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் மாண்டனர்.
61 தீரச்செயல்புரிய எண்ணிய மக்கள், யூதாவும் அவருடைய சகோதரரும் சொன்னதைக் கேளாததால் இவ்வாறு பெரும் தோல்வி அடைந்தார்கள்.
62 ஆனால் யார் வழியாக இஸ்ரயேலுக்கு மீட்பு வழங்கப்பட்டதோ அவர்களது வழிமரபைச் சேர்ந்தவர்கள் அல்லர் இம்மனிதர்கள்.
63 ஆண்மை படைத்த யூதாவும் அவருடைய சகோதரர்களும் இஸ்ரயேலர் அனைவர்முன்னும் பிற இனத்தார் அனைவர்முன்னும் அவர்களின் பெயர் தெரியவந்த இடமெல்லாம் மிகவும் பெருமைப்படுத்தப்பட்டார்கள்.
64 மக்கள் திரண்டு வந்து அவர்களைப் பாராட்டினார்கள்.
65 பின்னர் யூதா தம் சகோதரர்களோடு புறப்பட்டுத் தென்னாட்டில் இருந்த ஏசாவின் வழிமரபினரை எதிர்த்துப் போர் செய்தார்; எபிரோன் நகரையும் அதைச் சேர்ந்த ஊர்களையும் அழித்தார். அதன் கோட்டைகளைத் தரைமட்டமாக்கி அதைச் சுற்றி இருந்த காவல்மாடங்களைத் தீக்கரையாக்கினார்;
66 அங்கிருந்து பெரிஸ்தியரின் நாட்டுக்குப் புறப்பட்டு மாரிசா வழியாகச் சென்றார்.
67 தீரச்செயல் புரிய விரும்பிய குருக்கள் சிலர் முன்மதியின்றிப் போருக்குச் சென்றிருந்ததால் அன்று போரில் மாண்டனர்.
68 பெலிஸ்தியரின் நாட்டில் அசோத்து நகரை யூதா அடைந்து அதன் பலிபீடங்களைத் தலைமட்டமாக்கி அவர்களுடைய தெய்வங்களின் சிலைகளைத் தீயிலிட்டு எரித்தார்; நகரங்களைக் கொள்ளையடித்த பின் யூதேயா நாடு திரும்பினார்.
1 மக்கபேயர் அதிகாரம் 6
1 அந்தியோக்கு மன்னன் மேற்கு மாநிலங்கள் வழியாகச் சென்றபோது, பாரசீக நாட்டு எலிமாய் நகர் பொன், வெள்ளி ஆகியவற்றுக்குப் புகழ்பெற்றது என்று கேள்விப்பட்டான்.
2 அதன் கோவிலில் மிகுந்த செல்வம் இருந்தது என்றும் கிரேக்க நாட்டை முதன்முதல் ஆண்ட மாசிடோனிய மன்னரான பிலிப்பின் மகன் அலெக்சாண்டர் அங்கே விட்டுச் சென்றிருந்த பொற்கேடயங்களும் மார்புக்கவசங்களும் படைக்கலங்களும் அங்கு இருந்தன என்றும் அறிய வந்தான்.
3 எனவே அந்தியோக்கு புறப்பட்டு நகரைக் கைப்பற்றிக் கொள்ளையடிக்க முயன்றான்; ஆனால், முடியவில்லை; ஏனெனில் அந்த நகர மக்கள் அவனது திட்டத்தை அறிந்திருந்தார்கள்.
4 அவர்கள் அவனை எதிர்த்துப் போரிட்டார்கள். ஆகவே அவன் பின் வாங்கி, பெரும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து பாபிலோனுக்குத் தப்பிச் சென்றான்.
5 யூதேயா நாட்டை எதிர்த்துச் சென்றிருந்த அவனுடைய படைகள் முறியடிக்கப்பட்ட செய்தியை அவன்; பாரசீகத்தில் இருந்தபோது தூதர் ஒருவர் அவனுக்கு அறிவித்தார்;
6 "லீசியா வலிமை வாய்ந்த படையோடு முதலில் சென்று யூதர்கள்முன் புறமுதுகு காட்டி ஓடிவிட்டான்; முறியடிக்கப்பட்ட படைகளிடமிருந்து யூதர்கள் கொள்ளையடித்த படைக்கலன்கள், மிகுதியான பொருள்கள் ஆகியவற்றால் அவர்கள் வலிமை மிக்கவர்கள் ஆனார்கள்;
7 எருசலேமில் இருந்த பலிபீடத்தின்மேல் அந்தியோக்கு செய்து வைத்திருந்த நடுங்க வைக்கும் தீட்டை அவர்கள் தகர்த்தெறிந்தார்கள்; திருஉறைவிடத்தைச் சுற்றிலும் முன்புபோல் உயர்ந்த மதில்கள் எழுப்பியுள்ளார்கள்; அவனுடைய நகராகிய பெத்சூரைச் சுற்றிலும் அவ்வாறே செய்திருக்கிறார்கள்" என்றும் எடுத்துரைத்தார்.
8 இச்செய்தியைக் கேட்ட மன்னன் அதிர்ச்சியடைந்து மிகவும் நடுங்கினான்; தான் திட்டமிட்டவண்ணம் நடவாததால் துயரம் தாங்காது நோயுற்றுப் படுத்த படுக்கையானான்;
9 கடுந்துயரம் அவனை ஆட்கொண்டதால் அங்குப் பல நாள் கிடந்தான்; தான் விரைவில் சாகவிருந்ததை உணர்ந்தான்.
10 ஆகவே அவன் தன் நண்பர் எல்லாரையும் அழைத்து, "என் கண்களினின்று தூக்கம் அகன்றுவிட்டது; கவலையினால் என் உள்ளம் உடைந்து விட்டது.
11 'எவ்வளவு துயரத்திற்கு ஆனானேன்! இப்போது எத்துணைப் பெரும் துயரக்கடலில் அமிழ்ந்துள்ளேன்! நான் ஆட்சியில் இருந்தபோது அன்பு செலுத்தி, அன்பு பெற்றேனே' என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
12 ஆனால் எருசலேமில் நான் புரிந்த தீமைகளை இப்போது நினைவுகூர்கிறேன்; அங்கு இருந்த பொன், வெள்ளிக் கலன்கள் அனைத்தையும் கவர்ந்து சென்றேன்; யூதாவில் குடியிருந்தவர்களைக் காரணமின்றி அழித்தொழிக்கும்படி கட்டளையிட்டான்.
13 இதனால்தான் இந்தக்கேடுகள் எனக்கு வந்துற்றன என நான் அறிவேன். இப்போது அயல்நாட்டில் துயர மிகுதியால் அழிந்துகொண்டிருக்கிறேன்" என்று கூறினான்.
14 அவன் தன் நண்பர்களுள் ஒருவனான பிலிப்பை அழைத்துத் தன் பேரரசு முழுவதற்கும் அவனைப் பொறுப்பாளியாக ஏற்படுத்தினான்;
15 தன் மகன் அந்தியோக்கை வளர்த்து ஆளாக்கி அரசனாக்கும்படி தன் அரச முடியையும் ஆடையையும் கணையாழியையும் அவனுக்கு அளித்தான்.
16 நூற்று நாற்பத்தொன்பதாம் ஆண்டு பாரசீகத்திலேயே அந்தியோக்கு மன்னன் இறந்தான்.
17 மன்னன் இறந்துவிட்டான் என்று லீசியா அறிந்ததும், அவனுடைய மகன் அந்தியோக்கை அவனுடைய தந்தைக்கு பதிலாக மன்னனாக ஏற்படுத்தினான்; யூப்பாத்தோர் என்று அவனுக்குப் பெயரிட்டான். இந்த லீசியாதான் அவனை இளவயதிலிருந்து வளர்த்துவந்திருந்தான்.
18 இதற்கிடையில் எருசலேம் கோட்டையில் இருந்த பகைவர்கள் திருஉறைவிடத்தைச் சுற்றி இருந்த இஸ்ரயேலரை வளைத்துக்கொண்டார்கள்; அவர்களுக்குத் தொடர்ந்து கேடு விளைவித்துப் பிற இனத்தாரை வலுப்படுத்த முயன்றுவந்தார்கள்.
19 எனவே யூதா பகைவர்களை அழித்தொழிக்க முடிவுசெய்து அவர்களை முற்றுகையிட மக்கள் அனைவரையும் கூட்டுவித்தார்.
20 நூற்று ஐம்பதாம் ஆண்டு அவர்கள் எல்லாரும் ஒன்று கூடிக் கோட்டையை முற்றுகையிட்டார்கள்; முற்றுகை மேடுகளும் படைப்பொறிகளும் அமைத்தார்கள்.
21 முற்றுகைக்கு உள்ளானவர்களுள் சிலர் வெளியே தப்பிவந்தனர். இஸ்ரயேலில் இறைப்பற்றில்லாத சிலர் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர்.
22 இவர்கள் எல்லாரும் மன்னனிடம் சென்று முறையிட்டார்கள்; "எவ்வளவு காலம் எங்களுக்கு நீதி வழங்காமலும் எங்கள் உறவின் முறையினரை பழிவாங்காமலும் இருப்பீர்?
23 நாங்கள் உம்முடைய தந்தைக்குப் பணிபுரியவும், அவரது சொற்படி நடக்கவும் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் விருப்பம் கொண்டிருந்தோம்.
24 இதனால் எங்களுடைய மக்களின் மைந்தர்கள் கோட்டையை முற்றுகையிட்டார்கள்; எங்களுக்குப் பகைவர்கள் ஆனார்கள்; கண்ணில்பட்ட எம்மவர் எல்லாரையும் கொலை செய்தார்கள்; எங்கள் உரிமைச் சொத்துக்களைப் பறித்துக்கொண்டார்கள்;
25 எங்களை மட்டுமல்ல, அவர்களின் எல்லையைச் சுற்றிலும் உள்ள எல்லா நாடுகளையுமே தாக்கினார்கள்.
26 எருசலேம் கோட்டையைக் கைப்பற்ற இன்று அதை முற்றுகையிட்டிருக்கிறார்கள்; திருஉறைவிடத்தையும் பெத்சூரையும் வலுப்படுத்தியுள்ளார்கள்.
27 நீர் விரைந்து அவர்களைத் தடுக்காவிடில் இவற்றைவிடக் கொடியவற்றையும் செய்வார்கள். அவர்களை அடக்குவது உமக்கு முடியாமற்போகும்" என்று கூறினார்கள்.
28 இதைக் கேட்ட மன்னன் சினங் கொண்டான்; தன் நண்பர்கள், படைத் தலைவர்கள், குதிரைப்படைத் தலைவர்கள் அனைவரையும் ஒன்றுகூட்டினான்.
29 அயல்நாடுகளிலிருந்தும் தீவுகளிலிருந்தும் கூலிப்படைகள் அவனிடம் வந்து சேர்ந்துகொண்டன.
30 அவனுடைய படை ஓர் இலட்சம் காலாள்களையும் இருபதாயிரம் குதிரை வீரர்களையும் போருக்குப் பயிற்சி பெற்றிருந்த முப்பத்திரண்டு யானைகளையும் கொண்டிருந்தது.
31 அவர்கள் இதுமேயா வழியாகச் சென்று பெத்சூருக்கு எதிரே பாசறை அமைத்துப் பல நாள் போர்புரிந்தார்கள்; படைப் பொறிகளும் செய்துகொண்டார்கள். ஆனால், முற்றுகையிடப்பட்ட யூதர்கள் வெளியேறி படைப்பொறிகளைத் தீக்கரையாக்கி வீரத்தோடு போர்செய்தார்கள்.
32 கோட்டையிலிருந்து யூதா புறப்பட்டு மன்னனுடைய பாசறைக்கு எதிராய்ப் பெத்செக்கரியாவில் பாசறை அமைத்தார்.
33 விடியற்காலையில் மன்னன் எழுந்து பெத்செக்கரியாவுக்குப் போகும் வழியில் தன் படையை வேகமாய் நடத்திச் சென்றான். படை வீரர்கள் போருக்கு ஆயத்தமாகி எக்காளங்களை முழங்கினார்கள்.
34 யானைகளைப் போருக்குத் தூண்டியெழுப்ப அவர்கள் அவற்றுக்குத் திராட்சை மதுவையும் முசுக்கட்டைப் பழச்சாற்றையும் கொடுத்தார்கள்.
35 யானைகளைக் காலாட்படையினரிடையே பிரித்துக் கொடுத்தார்கள். ஒவ்வொரு யானையோடும் இரும்பு கவசங்களையும் வெண்கலத் தலைச்சீராக்களையும் அணிந்த ஆயிரம் வீரர்களையும் ஐந்நூறு தேர்ந்தெடுத்த குதிரைவீரர்களையும் ஒதுக்கிவைத்தார்கள்.
36 இவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே யானைகள் இருந்த இடங்களில் ஆயத்தமாய் இருந்தார்கள்; எங்கெல்லாம் அவை சென்றனவோ அங்கெல்லாம் இவர்களும் சென்றார்கள்; அவற்றைவிட்டுப் பிரியவேயில்லை.
37 ஒவ்வொரு யானைமீதும் மரத்தினால் செய்யப்பட்ட வலிமை பொருந்திய அம்பாரி ஒன்று வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது; அது யானையோடு வலுவான கயிற்றினால் பிணைக்கப்பட்டிருந்தது. ஒவ்வோர் அம்பாரியிலும் நான்கு வீரர்கள் இருந்து கொண்டு போர் செய்தார்கள். யானைப் பாகனும் யானைமீது அமர்ந்திருந்தான்.
38 எஞ்சிய குதிரை வீரர்கள் படையின் இரு பக்கமும் நிறுத்தப்பட்டார்கள்; இவர்கள் ஆங்காங்கே தாக்கி, காலாட்படைக்குப் பாதுகாப்புக் கொடுத்தார்கள்.
39 பொன், வெண்கலக் கேடயங்களின்மேல் கதிரவனின் ஒளி பட்டபோது மலைகள் அவற்றால் ஒளிர்ந்து எரியும் தீப்பந்தம்போல மிளிர்ந்தன.
40 மன்னனுடைய படையின் ஒரு பகுதி உயர்ந்த மலைகள்மீது பரவியிருந்தது; மற்றொரு பகுதி சமவெளியில் இருந்தது. படைவீரர்கள் உறுதியாகவும் ஒழுங்காகவும் முன்னேறிச் சென்றார்கள்.
41 படைத்திரளின் பேரொலியையும் அதன் அணி வகுப்பால் ஏற்பட்ட பேரிரைச்சலையும் படைக்கலங்களால் உண்டான சல சலப்பையும் கேட்டவர்கள் அனைவரும் நடுங்கினர்; ஏனென்றால் படை மிகப் பெரியதும் வலிமைமிக்கதுமாய் இருந்தது.
42 யூதாவும் அவருடைய படையும் போர் புரிய முன்னேறிச் செல்லவே மன்னனுடைய படையில் அறுநூறு பேர் மாண்டனர்.
43 மன்னனுக்குரிய படைக்கலங்களைத் தாங்கிய ஒரு யானையை அவரான் என்னும் எலயாசர் கண்டார். அது மற்றெல்லா யானைகளையும்விடப் பெரியதாய் இருந்தது. எனவே அதன்மேல் இருந்தது மன்னன்தான் என்று எலயாசர் எண்ணினார்.
44 அவர் தம் மக்களைக் காப்பதற்கும் நிலையான புகழைத் தமக்கென்று தேடிக்கொள்வதற்கும் தம் உயிரைத் தியாகம் செய்தார்.
45 காலாட்படையின் நடுவே வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இருந்தவர்களைக் கொன்றவண்ணம் துணிவோடு அந்த யானையை நோக்கி ஓடினார். அவர்கள் இரு பக்கமும் சிதறி ஓடினார்கள்.
46 அவர் அந்த யானைக்கு அடியில் புகுந்து, கீழிருந்து அதைக் குத்திக் கொன்றார். அது நிலத்தில் அவர்மேல் விழ அவர் அங்கேயே இறந்தார்.
47 மன்னனுடைய வலிமையையும் அவனுடைய படைவீரர்களின் கடும் தாக்குதலையும் கண்டு யூத மக்கள் அவர்களிடமிருந்து தப்பியோடினார்கள்.
48 மன்னனுடைய படைவீரர்கள் அவர்களைத் துரத்திக்கொண்டு எருசலேம்வரை சென்றார்கள். யூதேயாவுக்கும் சீயோன் மலைக்கும் எதிரே மன்னன் பாசறை அமைத்தான்.
49 அவன் பெத்சூரில் இருந்தவர்களோடு சாமாதானம் செய்துகொண்டான். அவர்கள் நகரைவிட்டு வெளியேறினார்கள்; ஏனெனில் முற்றுகையை எதிர்த்து நிற்க அவர்களுக்கு உணவுப் பொருள்கள் அங்குக் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் நிலத்துக்கு அது ஓய்வு ஆண்டு.
50 மன்னன் பெத்சூரைக் கைப்பற்றி அதைக் காப்பதற்குக் காவற்படை ஒன்றை நிறுவினான்.
51 பிறகு திருஉறைவிடத்தை எதிர்த்துப் பல நாள் முற்றுகையிட்டான்; முற்றகை மேடுகளையும் படைப்பொறிகளையும் நிறுவினான்; நெருப்பையும் கற்களையும் எறியவல்ல கருவிகளையும் அம்பு எய்யும் வில்களையும் கவண்களையும் செய்தான்.
52 அவற்றுக்கு ஈடு கொடுக்கும் முறையில் யூதர்களும் படைப்பொறிகளை நிறுவிப் பல நாள் அவர்களை எதிர்த்துப் போராடினார்கள்.
53 அது ஏழாவது ஆண்டாக இருந்ததால் உணவுக்கிடங்கில் உணவுப் பொருள்கள் ஒன்றும் இல்லை. பிற இனத்தாரிடமிருந்து பாதுகாப்புத் தேடி யூதேயா வந்திருந்தவர்கள் உணவுக்கிடங்கில் எஞ்சியிருந்ததை உண்டு தீர்த்து விட்டார்கள்.
54 திருஉறைவிடத்தில் சில வீரர்களே இருந்தார்கள்; பஞ்சம் கடுமையாகத் தாக்கியதால் மற்றவர்கள் அவரவர் தம் வீடுகளுக்குச் சிதறிபோய் விட்டார்கள்.
55 அந்தியோக்கு மன்னன் உயிருடன் இருந்தபோது, தன் மகன் அந்தியோக்கை ஆளாக்கி அரசனாக்கும்படி நியமித்திருந்த பிலிப்பு,
56 மன்னனோடு சென்றிருந்த படைகளுடன் பாரசீகம், மேதியா ஆகிய நாடுகளிலிருந்து திரும்பிவந்துள்ளான் என்றும், ஆட்சியைக் கைப்பற்ற முயன்று வருகிறான் என்றும் லீசியா கேள்விப்பட்டான்.
57 எனவே, அவன் உடனே பின்வாங்குவதற்குக் கட்டளை பிறப்பித்து, மன்னனிடமும் படைத்தலைவர்களிடமும் வீரர்களிடமும், "நாளுக்கு நாள் நாம் வலிமைகுன்றி வருகிறோம். உணவுப்பொருள்களும் மிகக் குறைவாகவே உள்ளன. நாம் எந்த இடத்தை எதிர்த்து முற்றுகையிட்டியிருக்கிறோமோ அந்த இடம் வலிமை வாய்ந்தது. நமது ஆட்சியின் நடவடிக்கைகளை நாம் கவனிக்க வேண்டிய உடனடித் தேவை ஏற்பட்டுள்ளது.
58 ஆதலால் இப்போது இந்த மனிதர்களோடு நல்லறவு பாராட்டுவோம்; அவர்களோடும் அவர்களுடைய இனத்தார் அனைவரோடும் சமாதானம் செய்துகொள்வோம்.
59 அவர்கள் முன்புபோலத் தங்கள் சட்டங்களின்படி நடக்க விட்டுவிடுவோம். அவர்களுடைய சட்டங்களை நாம் அழித்ததானால்தான் அவர்கள் சினங்கொண்டு இவற்றையெல்லாம் செய்தார்கள்" என்று உரைத்தான்.
60 அவனது கூற்று மன்னனுக்கும் படைத்தலைவர்களுக்கும் ஏற்புடையதாய் இருந்தது. லீசியா யூதர்களோடு சமாதானம் செய்துகொள்ள முன்வர, அவர்களும் அதற்கு இசைந்தார்கள்.
61 மேலும் மன்னனும் படைத்தலைவர்களும் ஆணையிட்டு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தினார்கள். அதன் விளைவாக யூதர்கள் கோட்டையை விட்டு வெளியேறினார்கள்.
62 ஆனால் மன்னன் சீயோன் மலைக்குச் சென்று அது எத்துணை வலிமை வாய்ந்த கோட்டை என்று கண்டபோது, தான் கொடுத்திருந்த ஆணையை மீறினான்; அதைச் சுற்றிலும் இருந்த மதில்களை அழிக்கும்படி கட்டளையிட்டான்;
63 பின்னர், அவன் அங்கிருந்து விரைந்து அந்தியோக்கி நகருக்குத் திரும்பினான்; அந்நகர் பிலிப்பின் கட்டுப்பாட்டில் இருக்கக் கண்டு, அவனோடு போரிட்டு நகரை வன்முறையில் காப்பாற்றினான்.
1 மக்கபேயர் அதிகாரம் 7
1 நூற்று ஐம்பத்தோராம் ஆண்டு செலூக்கின் மகன் தெமேத்திரி உரோமையினின்று புறப்பட்டுச் சிலரோடு கடற்கரை நகரம் ஒன்றை அடைந்து அங்கு ஆட்சிசெய்யத் தொடங்கினான்.
2 தன் மூதாதையருடைய அரண்மனையை நோக்கி அவன் சென்று கொண்டிருந்தபோது அந்தியோக்கையும் லீசியாவையும் அவனிடம் கொண்டு வருவதற்காக அவனுடைய படைவீரர்கள் அவர்களைப் பிடித்தார்கள்.
3 தெமேத்திரி இதுபற்றி அறியவந்தபோது, "அவர்களின் முகத்தில் விழிக்க நான் விரும்பவில்லை" என்றான்.
4 ஆகவே படைவீரர்கள் அவர்களைக் கொன்றுவிட்டார்கள். தெமேத்திரி அரியணையில் அமர்ந்தான்.
5 இஸ்ரயேலைச் சேர்ந்த நெறிகெட்டவர்கள், இறைப்பற்றில்லாதவர்கள் ஆகிய அனைவரும் தெமேத்திரியிடம் வந்தார்கள். தலைமைக் குருவாக விரும்பிய ஆல்கிம் இவர்களை வழிநடத்தி வந்திருந்தான்.
6 அவர்கள் இஸ்ரயேல் மக்களைப்பற்றி மன்னனிடம் குற்றம் சாட்டி, "யூதாவும் அவனுடைய சகோதரர்களும் உம்முடைய நண்பர்களும் எல்லாரையும் கொன்று எங்களையும் எங்கள் நாட்டைவிட்டுத் துரத்திவிட்டார்கள்.
7 ஆதலால் இப்போது உமக்கு நம்பிக்கையுள்ள ஒரு மனிதரை அனுப்பும். அவர் போய் எங்களுக்கும் மன்னருடைய நாட்டுக்கும் யூதா செய்துள்ள கொடுமைகள் அனைத்தையும் பார்க்கட்டும்; பின்னர் அவர்களையும் அவர்களுக்கு உதவி செய்பவர்களையும் தண்டிக்கட்டும்" என்றார்கள்.
8 மன்னன் தன் நண்பர்களுள் ஒருவனான பாக்கீதைத் தேர்ந்து கொண்டான். இவன் யூப்பிரத்தீசின் மேற்குப் பகுதியில் தலைவனாக இருந்தவன்; பேரரசில் பெரியவன்; மன்னனின் நம்பிக்கைக்கு உரியவன்.
9 மன்னன் அவனையும் அவனோடு இறைப்பற்றில்லாதவனும் தான் தலைமைக் குருவாக ஏற்படுத்தியிருந்தவனுமான ஆல்கிமையும் அனுப்பிவைத்தான்; இஸ்ரயேல் மக்களைப் பழிவாங்க அவர்களுக்குக் கட்டளையிட்டான்.
10 அவர்கள் புறப்பட்டுப் பெரும் படையுடன் யூதேயா நாட்டை அடைந்தார்கள்; யூதாவிடமும் அவருடைய சகோதரர்களிடமும் தூதர்களை அனுப்பி அமைதிச் சொற்களை வஞ்சகமாய்க் கூறினார்கள்.
11 ஆனால் அவர்கள் அச்சொற்களுக்குச் செவி சாய்க்கவில்லை; ஏனெனில் பெரும் படையோடு அவர்கள் வந்திருக்கக் கண்டார்கள்.
12 நீதி கோரி மறைநூலறிஞர் குழு ஒன்று ஆல்கிமிடமும் பாக்கீதிடமும் சென்றது.
13 இஸ்ரயேல் மக்களுள் கசிதேயரே முதன்முதலில் அவர்களோடு சமாதானம் செய்து கொள்ள முயன்றார்கள்.
14 ஏனெனில், "ஆரோன் வழிமரபைச் சேர்ந்த குரு ஒருவர் படையோடு வந்திருக்கிறார்; அவர் நமக்குத் தீங்கிழைக்கமாட்டார்" என்று அவர்கள் சொல்லிக்கொண்டார்கள்.
15 ஆல்கிம் அவர்களுக்கு அமைதிச் சொற்களைக் கூறி, "உங்களுக்கோ உங்கள் நண்பர்களுக்கோ தீங்கிழைக்க முயலமாட்டோம்" என்று ஆணையிட்டான்.
16 எனவே அவர்கள் அவனை நம்பினார்கள். ஆனால் அவன் அவர்களுள் அறுபது பேரைப் பிடித்து ஒரே நாளில் கொன்றான். மறைநூலில் எழுதியுள்ள வாக்கு இவ்வாறு நிறைவேறியது;
17 "எருசலேமைச் சுற்றிலும் உம் தூயவர்களுடைய உடலைச் சிதறடித்தார்கள்; அவர்களின் இரத்தத்தைச் சிந்தினார்கள்; அவர்களை அடக்கம்செய்ய ஒருவரும் இல்லை. "
18 அவர்களைப்பற்றிய அச்சமும் திகிலும் மக்கள் எல்லாரையும் ஆட்கொண்டன. "அவர்களிடம் உண்மையோ நீதியோ இல்லை; ஏனெனில் அவர்கள் செய்திருந்த ஒப்பந்தத்தையும் கொடுத்திருந்த உறுதிமொழியையும் மீறிவிட்டார்கள்" என்று அவர்கள் சொல்லிக் கொண்டார்கள்.
19 பாக்கீது எருசலேமைவிட்டு அகன்று பெத்சாயிதாவில் பாசறை அமைத்தான்; ஆள்களை அனுப்பித் தன்னிடம் தப்பியோடி வந்திருந்தவர்களுள் பலரையும் மக்களுள் சிலரையும் பிடித்துக்கொன்று அவர்களை ஒரு பெரும் பள்ளத்தில் எறிந்தான்.
20 பாக்கீது நாட்டை ஆல்கிமின் பொறுப்பில் ஒப்படைத்து அவனுக்கு உதவியாக ஒரு படையை விட்டுவிட்டு மன்னனிடம் திரும்பினான்.
21 ஆல்கிம் தலைமைக் குருபீடத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் பெரிதும் போராடினான்.
22 மக்களுக்குத் தொல்லை கொடுத்தவர்கள் எல்லாரும் அவனோடு சேர்ந்துகொண்டு, யூதேயா நாட்டைக் கைப்பற்றி இஸ்ரயேலில் பெரும் தீங்கு விளைவித்தனர்.
23 ஆல்கிமும் அவனுடன் இருந்தவர்களும் இஸ்ரயேல் மக்கள் நடுவே செய்திருந்த தீங்குகள் அனைத்தையும் யூதா கண்டார். பிற இனத்தார் செய்தவற்றைவிட அவை மிகக் கொடுமையாய் இருந்தன.
24 ஆகவே அவர் யூதேயா நாடெங்கும் சுற்றி வந்து தம்மைவிட்டு ஓடிப் போயிருந்தவர்களைப் பழிவாங்கினார். நகரில் இருந்தவர்களுள் எவரும் நாட்டுப்புறத்திற்குப் போகாமல் தடுத்தார்.
25 யூதாவும் அவருடன் இருந்தவர்களும் வலிமை பெற்றுவருகிறார்கள் என்று ஆல்கிம் கண்டு அவர்களை எதிர்க்கத் தன்னால் முடியாது என்று உணர்ந்து, மன்னனிடம் திரும்பிச் சென்று அவர்கள்மீது பல கொடிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தினான்.
26 மன்னன் தான் பெரிதும் மதித்து வந்த தலைவர்களுள் ஒருவனான நிக்கானோரை அனுப்பினான். அவன் இஸ்ரயேலை வெறுத்துப் பகைத்தவன். அம்மக்களை அழித்தொழிக்கும்படி மன்னன் அவனுக்குக் கட்டளையிட்டான்.
27 ஆகவே நிக்கானோர் பெரும்படையோடு எருசலேம் சென்று யூதாவுக்கும் அவருடைய சகோதரகளுக்கும் அமைதிச் சொற்களை வஞ்சகமாய்ச் சொல்லியனுப்பினான்;
28 "நமக்கிடையே போராட்டம் வேண்டாம். நட்புறவோடு உம்மைச் சந்திக்கச் சிலரோடு வருவேன்" என்றான்.
29 அவன் யூதாவிடம் சென்றதும் அவர்கள் ஒருவர் மற்றவரை நலம் பெற வாழ்த்திக்கொண்டார்கள்; ஆனால் பகைவர்கள் யூதாவைப் பிடிக்க முன்னேற்பாடாய் இருந்தார்கள்.
30 நிக்கானோர் வஞ்சக நோக்கத்துடன் தம்மிடம் வந்துள்ளான் என்பது யூதாவுக்குத் தெரியவந்தது. எனவே யூதா அச்சம் கொண்டு அவனைச் சந்திக்க விரும்பவில்லை.
31 நிக்கானோர் தன் திட்டம் வெளியாகிவிட்டதை அறிந்து, கபர்சலாமா அருகில் யூதாவைப் போரில் சந்திக்கச் சென்றான்.
32 நிக்கானோரின் படையில் ஏறக்குறைய ஐந்நூறு பேர் மாண்டனர்; மற்றவர்கள் தாவீதின் நகருக்கு ஓடிப்போனார்கள்.
33 இந்நிகழ்ச்சிகளுக்குப்பின் நிக்கானோர் சீயோன் மலைக்கு ஏறிச் சென்றான். அப்பொழுது திருஉறைவிடத்தினின்று குருக்களுள் சிலரும் மக்களுள் மூப்பர்கள் சிலரும் அவனை வாழ்த்தி வரவேற்கவும், மன்னனுக்காக நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்த எரிபலியை அவனிடம் காட்டவும் வெளியே வந்தனர்.
34 அவன் அவர்களை ஏளனம் செய்து எள்ளி நகையாடினான்; இழிவுபடுத்திச் செருக்குடன் பேசினான்.
35 சினத்தில் அவன், "யூதாவையும் அவனது படையையும் என் கையில் உடனே ஒப்படைக்காவிடில், நான் வெற்றியுடன் திரும்பி வரும்போது இத்திருஉறைவிடத்தைத் தீக்கிரையாக்குவேன்" என்று சொல்லி ஆணையிட்டுக் கடுஞ்சினத்துடன் வெளியேறினான்.
36 குருக்கள் உள்ளே சென்று பலிபீடத்துக்கும் கோவிலுக்கும் முன்பாக நின்றுகொண்டு அழுது,
37 "உமது பெயர் விளங்கவும், வேண்டுதலினுடையவும் மன்றாட்டினுடையவும் இல்லமாக உம் மக்களுக்கு இலங்கவும் நீர் இவ்விடத்தைத் தெரிந்து கொண்டீர்.
38 இந்த மனிதனையும் அவனது படையையும் பழிவாங்கும்; அவர்கள் வாளுக்கு இரையாகட்டும்; அவர்கள் செய்த இறைப்பழிப்புகளை நினைவுகூரும்; அவர்களை வாழ விட்டு விடாதேயும்" என்று மன்றாடினார்கள்.
39 நிக்கானோர் எருசலேமைவிட்டு நீங்கிப் பெத்கோரோனில் பாசறை அமைத்தான். சிரியாவின் படை அவனோடு சேர்ந்துகொண்டது.
40 யூதாவும் மூவாயிரம் பேரோடு அதசாவில் பாசறை அமைத்தார்; பின்னர் கடவுளை நோக்கி,
41 "மன்னனால் அனுப்பப்பட்டவர்கள் உம்மைப் பழித்துரைத்ததால் உம் வானதூதர் போய் அசீரியர்களுள் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேரைக் கொன்றனர்.
42 அவ்வாறே எங்களுக்கு முன்பாக இன்று இப்படையை அழித்துவிடும். இதனால் நிக்கானோர் உம் திருஉறைவிடத்துக்கு எதிராகப் பழிச்சொல் கூறியுள்ளான் என மற்றவர்கள் அறிந்து கொள்ளட்டும். அவனது தீமைக்கு ஏற்ப அவனைத் தண்டியும்" என்று வேண்டினார்.
43 அதார் மாதம் பதின்மூன்றாம் நாள் படைகள் போர் முனையில் சந்தித்துக்கொண்டன. நிக்கானோரின் படை தோல்வி அடைந்தது. போரில் முதலில் மடிந்தவன் அவனே.
44 நிக்கானோர் மடிந்ததைக் கண்ட அவனுடைய படைவீரர்கள் தங்கள் படைக்கலங்களை எரிந்துவிட்டுத் தப்பியோடினார்கள்.
45 யூதர்கள் அவர்களை அதசா முதல் கசாரா வரை அந்த நாள் முழுவதும் துரத்திச் சென்றார்கள்; அப்போது எக்காளங்களை முழங்கி மக்களைப் போருக்கு அழைத்தார்கள்.
46 சுற்றிலும் இருந்த யூதேயாவின் ஊர்கள் அனைத்திலுமிருந்து மக்கள் வெளியே வந்து பகைவர்களைப் பக்கவாட்டில் தாக்கினார்கள். பகைவர்கள் தங்களைத் துரத்தியவர்களிடம் திருப்பி விரட்டப்படவே, எல்லாரும் வாளுக்கு இலையாயினர். அவர்களுள் ஒருவன்கூட உயிர் தப்பவில்லை.
47 யூதர்கள் கொள்ளைப் பொருள்களைக் கைப்பற்றினார்கள். நிக்கானோரின் தலையைக் கொய்தார்கள்; அவன் இறுமாப்போடு நீட்டிக்காட்டிய வலக்கையைத் துண்டித்தார்கள்; அவற்றைக் கொண்டுவந்து எருசலேமுக்கு வெளியே மக்கள் காணும்படி தொங்கவிட்டார்கள்.
48 மேலும் பெரிதும் களிப்புற்ற அந்த நாளை மகிழ்ச்சிப் பெருவிழாவாகக் கொண்டாடினார்கள்.
49 அந்த விழாவை ஆண்டுதோறும் அதார் மாதம் பதின்மூன்றாம்நாளில் கொண்டாடவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
50 சிறிது காலம் யூதேயா நாட்டில் அமைதி நிலவியது.
1 மக்கபேயர் அதிகாரம் 8
1 யூதா உரோமையர்களின் புகழைப்பற்றிக் கேள்விப்பட்டார்; அவர்கள் மிக வலிமை வாய்ந்தவர்கள்; அவர்களுக்குச் சார்பாக இருப்போர் அனைவரிடமும் நல்லுறவு கொள்கிறார்கள்; அவர்களை நாடிச்செல்வோருக்கு அன்பு காட்டுகிறார்கள். அவர்கள் மிக வலிமை வாய்ந்தவர்கள்;
2 கால்லியர் நடுவே அவர்கள் போர்கள் புரிந்து, தீரச் செயல்கள் செய்தார்கள்; அவர்களை வென்று திறை செலுத்தச் செய்தார்கள்;
3 ஸ்பெயின் நாட்டில் இருந்த பொன், வெள்ளிச் சுரங்கங்களைக் கைப்பற்றினார்கள்;
4 தங்கள் திட்டத்தினாலும் விடாமுயற்சியினாலும் தங்களுக்கு மிகத் தொலையில் இருந்த இடங்கள் அனைத்தையும் வென்றார்கள்; நிலத்தின் கடையெல்லையினின்று தங்களை எதிர்த்து வந்த மன்னர்களை அடிபணியச் செய்து அழித்து, அவர்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தினார்கள்; எஞ்சிய மன்னர்கள் ஆண்டுதோறும் அவர்களுக்குத் திறை செலுத்திவந்தார்கள்;
5 பிலிப்பையும் கித்திம் அரசனான பெர்சேயுவையும் தங்களுக்கு எதிராய்ப் படையெடுத்து வந்த மற்றவர்களையும் போரில் முறியடித்து அடிபணியச் செய்தார்கள்;
6 ஆசியாவின் அரசனான மாமன்னன் அந்தியோக்கு நூற்று இருபது யானைகளோடும் குதிரைகளோடும் தேர்களோடும் பெரும் படையோடும் அவர்களை எதிர்த்துப் போரிடச் சென்றபோது அவனையும் தோற்கடித்தார்கள்.
7 அவனை உயிரோடு பிடித்து, அவனும் அவனுக்குப்பிறகு ஆண்ட மன்னர்களும் தங்களுக்கு மிகுதியான திறை செலுத்தும்படியும், பிணைக் கைதிகளைக் கொடுக்கும்படியும்,
8 அவனுடைய மிகச்சிறந்த மாநிலங்களிலிருந்து இந்தியா, மேதியா, லீதியா ஆகியவற்றை ஒப்படைக்கும்படியும் ஆணை பிறப்பித்தார்கள்; இந்நாடுகளை அந்தியோக்கிமிடமிருந்து பெற்று யூமேன் மன்னனுக்குக் கொடுத்தார்கள்.
9 கிரேக்கர்கள் வந்து அவர்களை அழித்துவிடத் திட்டமிட்டிருந்தார்கள்.
10 அவர்கள் இதை அறிந்து படைத்தலைவர் ஒருவரைக் கிரேக்கர்களுக்கு எதிராய் அனுப்பி அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள்; அவர்களுள் பலர் காயமற்று மடியவே, அவர்களின் மனைவி மக்களைச் சிறைப்படுத்திப் பொருள்களைக் கொள்ளையடித்தார்கள்; அவர்களது நாட்டின்மீது வெற்றி கொண்டு கோட்டைகளைத் தகர்த்தார்கள்; அவர்களை அந்நாள்வரை அடிமைகளாக வைத்திருந்தார்கள்.
11 தங்களை எதிர்த்து வந்த மற்ற நாடுகள், தீவுகள் அனைத்தையும் அழித்து அவற்றை அடிமைப்படுத்தினார்கள்; ஆனால் தங்களுடைய நண்பர்களோடும் தங்களை நம்பியிருந்தவர்களோடும் நல்லுறவு கொண்டிருந்தார்கள்;
12 அருகிலும் தொலையிரும் இருந்த மன்னர்களைத் தங்களுக்கு அடிபணியச் செய்தார்கள்; அவர்களின் பெயரைக் கேட்ட யாவரும் அவர்களுக்கு அஞ்சினார்கள்;
13 எவருக்கு உதவி செய்து மன்னர்களாக்க விரும்புகிறார்களோ அவர்கள் அனைவரையும் மன்னர்கள் ஆக்குகிறார்கள்; எவரை அரியணையிலிருந்து அகற்ற விரும்புகிறார்களோ அவர்களை அனைவரையும் அகற்றுகிறார்கள்; இவ்வாறு மிக உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்கள்.
14 இவ்வாறெல்லாம் இருந்தும், அவர்களுள் ஒருவரும் தம்மைப் பெருமைப்படுத்திக்கொள்ள முடி தரிக்கவுமில்லை, அரசவுடை அணிந்ததுமில்லை.
15 தங்களுக்கென்று ஓர் ஆட்சிமன்றத்தை அமைத்தார்கள். முந்நூற்று இருபது உறுப்பினர்கள் நாள்தோறும் கூடி மக்களைப்பற்றியும் அவர்களது நலனைப் பற்றியும் கலந்து ஆய்வுசெய்கிறார்கள்.
16 தங்கள்மீது ஆட்சிசெலுத்தவும் தங்கள் நாடு முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் ஆண்டுதோறும் ஒரு மனிதரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள்; எல்லாரும் அந்த ஒருவருக்கே கீழ்ப்பபடிகிறார்கள். அவர்களுக்குள் போட்டியோ பொறாமையோ இல்லை - இவையெல்லாம் யூதாவின் காதுக்கு எட்டின.
17 ஆதலால் அக்கோனின் பேரனும் யோவானின் மகனுமான யூப்பொலேமையும் எலயாசரின் மகன் யாசோனையும் யூதா தேர்ந்தெடுத்தார்; உரோமையர்களோடு நட்பும் ஒப்பந்தமும் செய்துகொள்ள அவர்களை உரோமைக்கு அனுப்பிவைத்தார்.
18 கிரேக்கர்களின் அடிமைத்தனத்தினின்று யூதர்களை விடுவித்துக் கொள்ளவே அவர் இவ்வாறு செய்தார்; ஏனெனில் கிரேக்கப் பேரரசு இஸ்ரயேலை அடிமைப்படுத்தியிருந்ததை உரோமையர்கள் கண்டார்கள்.
19 அவர்கள் நிண்ட பயணத்திற்குப்பின் உரோமையை அடைந்தார்கள். ஆட்சி மன்றத்தில் நுழைந்து,
20 "மக்கபே எனப்படும் யூதாவும் அவருடைய சகோதரர்களும் யூத மக்களும் உங்களோடு ஒப்பந்தமும் சமாதானமும் செய்து கொள்வதற்கும், எங்களை உங்கள் கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் நீங்கள் பதிவு செய்துகொள்வதற்கும் எங்களை உங்களிடம் அனுப்பியுள்ளார்கள்" என்று சொன்னார்கள்.
21 அவர்கள் சொன்னது மன்றத்தாருக்கு ஏற்புடைதாய் இருந்தது.
22 சமாதானம், ஒப்பந்தம் ஆகியவற்றின் நினைவாக எருசலேமில் யூதர்களிடம் இருக்கும்படி அங்கு அவர்கள் வெண்கலத் தகடுகளில் எழுதி அனுப்பிவைத்த மடலின் நகல் பின்வருமாறு;
23 "உரோமையருக்கும் யூத இனத்தாருக்கும் நீரிலும் நிலத்திலும் என்றும் நலம் உண்டாகுக. வாளும் பகைவரும் அவர்களைவிட்டு அகலட்டும்.
24 உரோமையர்களுக்கு எதிராக அல்லது அவர்களது ஆட்சிக்கு உட்பட்ட நட்பு நாடுகளுக்கு எதிராக முதலில் போர் மூண்டால்,
25 யூத இனத்தார் சூழ்நிலைக்கு ஏற்ப முழு மனத்துடன் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.
26 உரோமையில் முடிவுசெய்தபடி, எதிர்த்துப் போர்புரிவோருக்குத் தானியமோ படைக்கலங்களோ பணமோ கப்பல்களோ கொடுக்கக்கூடாது; எதையும் எதிர்பாராமலே அவர்கள் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.
27 இவ்வாறே முதலில் யூத இனத்தாருக்கு எதிராகப் போர் மூண்டால், உரோமையர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப முழு மனத்துடன் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
28 உரோமையில் முடிவுசெய்தபடி, அவர்களின் பகைவர்களுக்கு தானியமோ படைக்கலங்களோ பணமோ கப்பல்களோ கொடுக்கப்பட மாட்டாது. கள்ளமின்றி அவர்கள் இக்கடமையைச் செய்யவேண்டும்.
29 இத்தகைய நிபந்தனைகளோடு உரோமையர்கள் யூத மக்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
30 இந்த நிபந்தனைகளில் எதையேனும் சேர்க்கவோ நீக்கவோ இரு தரப்பினரும் இனிமேல் முடிவு செய்தால், தங்கள் விருப்பப்படி அவ்வாறு செய்யலாம்; இவ்வாறு சேர்க்கப்படுவதும் நீக்கப்படுவதும் சட்டப்படி செல்லும்.
31 மேலும் தெமேத்தரி மன்னர் யூத இனத்தாருக்கு இழைத்தவரும் கொடுமைகளைப்பற்றி நாங்கள் அவருக்கு எழுதியிருப்பது வருமாறு; 'எங்கள் நண்பர்களும் கூட்டாளிகளுமான யூதர்கள்மீது நீர் ஏன் கடினமான நுகத்தைச் சுமத்தியிருக்கிறீர்?
32 அவர்கள் எங்களிடம் உமக்கு எதிராய் மீண்டும் முறையிடுவார்களாயின் அவர்களுக்கு நீதி வழங்க நாங்கள் நீரிலும் நிலத்திலும் உம்மை எதிர்த்துப் போரிடுவோம்.' "
1 மக்கபேயர் அதிகாரம் 9
1 நிக்கானோரும் அவனது படையும் போரில் வீழ்ச்சியுற்றதைத் தெமேத்திரி கேள்வியுற்றபோது, பாக்கீதையும் ஆல்கிமையும் யூதேயா நாட்டுக்கு இரண்டாம் முறையாகத் தன் வலப்படைப் பிரிவோடு அனுப்பினான்.
2 அவர்கள் கில்காலுக்குப் போகும் வழியாய்ச் சென்று, அர்பேலாவில் இருந்த மெசலோத்தை முற்றுகையிட்டார்கள்; அதைக் கைப்பற்றி பலரைக் கொன்றார்கள்.
3 அவர்கள் நூற்று ஐம்பத்திரண்டாம் ஆண்டு முதல் மாதத்தில் எருசலேமுக்கு எதிரே பாசறை அமைத்தார்கள்.
4 அங்கிருந்து புறப்பட்டு இருபதாயிரம் காலாள்களோடும் இரண்டாயிரம் குதிரைவீரர்களோடும் பெரேயாவுக்குப் போனார்கள்.
5 எலாசாவில் யூதா பாசறை அமைத்தார். தேர்ந்தெடுத்த வீரர்கள் மூவாயிரம் பேர் அவரோடு இருந்தனர்.
6 அவர்கள், எதிரிப்படைகளின் பெரும் கூட்டத்தைக் கண்டு பெரிதும் அஞ்சினார்கள்; பலர் பாசறையினின்று ஓடிவிட்டனர்; அவர்களுள் எண்ணூறு பேரே எஞ்சியிருந்தனர்.
7 தம் படை சிதறியோடியதையும் போர் உடனடியாக நடக்கவிருந்ததையும் யூதா கண்டு, அவர்களை ஒன்றுசேர்ப்பதற்கு நேரம் இல்லாததால் மனமுடைந்துபோனார்.
8 அவர் மனம் தளர்ந்திருந்தபோதிலும் தம்முடன் எஞ்சியிருந்தவர்களை நோக்கி, "எழுவோம்; நம் பகைவரை எதிர்த்துச் செல்வோம். ஒருவேளை நம்மால் அவர்களை எதிர்த்துப் போரிட முடியும்!" என்று முழங்கினார்.
9 ஆனால் அவர்கள், "நாம் மிகச் சிலராய் இருப்பதால் இப்போது போரிட முடியாது. முதலில் நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்வோம்; பின்னர் நம் சகோதரர்களுடன் திரும்பி வந்து அவாகளோடு போரிடுவோம்" என்று சொல்லி அவரது மனத்தை மாற்ற முயன்றார்கள்.
10 அதற்கு யூதா, "அவர்களுக்குப் புறமுதுகு காட்டி ஓடுவது என்பது நாம் செய்யக்கூடாத செயல். நமது காலம் வந்திருக்குமானால் நம் உறவின் முறையினருக்காக ஆண்மையுடன் இறப்போம். நமது பெருமைக்கு இழுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்" என்றார்.
11 பாக்கீதின் படையினர் பாசறையை விட்டுப் புறப்பட்டுத் தாக்குதலுக்கு ஆயத்தமாக நின்றார்கள்; குதிரை வீரர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்தார்கள்; கவணெறிவோரும் வில்லாளரும் படைக்குமுன் சென்றார்கள்; அவ்வாறே முன்னணி வீரர்கள் எல்லாரும் சென்றார்கள். பாக்கீது வலப்படைப் பிரிவில் இருந்தான்.
12 குதிரைப்படையின் இரு பிரிவுகளுக்கு நடுவே காலாட்படை முன்னேறிச் செல்ல எக்காளங்கள் முழங்கின. யூதாவின் பக்கம் இருந்தவர்களும் தங்களின் எக்காளங்களை முழங்கினார்கள்.
13 படைகளின் இரைச்சலால் நிலம் நடுங்கியது; காலைமுதல் மாலைவரை போர் நடந்தது.
14 பாக்கீதும் அவனது வலிமை மிகு படையும் வலப்பக்கத்தில் இருக்க யூதா கண்டார். மனவுறுதி கொண்ட அனைவரும் யூதாவோடு சேர்ந்து கொண்டார்கள்.
15 வலப்படைப்பிரிவை முறியடித்து அதை அசோத்து மலைவரை துரத்திச் சென்றார்கள்.
16 வலப்படைப் பிரிவு முறியடிக்கப்பட்டதைக் கண்ட இடப்படைப் பிரிவு, திரும்பி யூதாவையும் அவருடன் இருந்தவர்களையும் நெருங்கிப் பின்தொடர்ந்து சென்றது.
17 போர் கடுமையாகவே, இரு தரப்பிலும் பலர் காயப்பட்டு மடிந்தனர்.
18 யூதாவும் மடிந்தார்; மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டார்கள்.
19 யோனத்தானும் சீமோனும் தங்கள் சகோதரரான யூதாவைத் தூக்கிக் கொண்டுபோய் மோதயின் நகரில் தங்கள் மூதாதையரின் கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.
20 அவருக்காக அழுதார்கள்; இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் அவருக்காகப் பெரிதும் துயரம் கொண்டாடினார்கள்; பல நாள் அழுது புலம்பினார்கள்;
21 "இஸ்ரயேலின் மீட்பராகிய மாவீரர் வீழ்ந்தது எவ்வாறு?" என்று ஓலமிட்டார்கள்.
22 யூதாவின் பிற செயல்கள், போர்கள், தீரச் செயல்கள், பெருமை ஆகியவை மிகப் பல. ஆகவேஅவை எழுதப்படவில்லை.
23 யூதாவின் இறப்புக்குப்பின் நெறி கெட்டவர்கள் இஸ்ரயேல் எங்கும் தலைதூக்கினார்கள்; அநீதி செய்பவர்கள் அனைவரும் நடமாடினார்கள்.
24 அக்காலத்தில் பெரியதொரு பஞ்சம் ஏற்பட்டதால் நாட்டு மக்கள் அனைவரும் அவர்கள் பக்கம் சேர்ந்து கொண்டார்கள்.
25 பாக்கீது இறைப்பற்றில்லாத மனிதர்களைத் தேர்ந்து கொண்டு அவர்களை நாட்டுக்குத் தலைவர்களாக ஏற்படுத்தினான்.
26 அவர்கள் யூதாவின் நண்பர்களைத் தேடிக்கண்டுபிடித்துப் பாக்கீதிடம் அவர்களை அழைத்துச்சென்றார்கள். அவன் அவர்களைப் பழிவாங்கி எள்ளி நகையாடினான்.
27 எனவே இஸ்ரயேலில் கடுந்துயர் ஏற்பட்டது. இறைவாக்கினர்களின் காலத்துக்குப் பின் அதுவரை அவர்களிடையே இவ்வாறு நேர்ந்ததில்லை.
28 யூதாவின் நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடி யோனத்தானிடம்,
29 "உம் சகோதரரான யூதா இறந்தது முதல் நம் எதிரிகளையும் பாக்கீதையும் நம் இனத்தாருக்குள்ளேயே நம்மைப் பகைக்கிறவர்களையும் எதிர்த்துப் போராட அவரை ஒத்தவர் ஒருவரும் இல்லை.
30 ஆதலால் நம் போர்களை நடத்திச்செல்ல அவருக்குப் பதிலாக இன்று உம்மையே எங்கள் தலைவராகவும் வழிகாட்டியாகவும் தேர்ந்து கொண்டோம்" என்றார்கள்.
31 அப்போது யோனத்தான் தம் சகோதரரான யூதாவுக்குப் பதிலாய்த் தலைமை ஏற்றார்.
32 இதை அறிந்த பாக்கீது அவரைக் கொல்லத் தேடினான்.
33 யோனத்தானும் அவருடைய சகோதரரான சீமோனும் அவரோடு இருந்தவர்களும் இதைக் கேள்வியுற்று, தெக்கோவா எனும் பாலைநிலத்திற்கு ஓடிப்போய் ஆஸ்பார் குளத்து அருகே பாசறை அமைத்தார்கள்.
34 இதை ஓய்வுநாளில் அறியவந்த பாக்கீது தன் படைகள் அனைத்துடன் யோர்தானைக் கடந்தான்.
35 மக்கள் தலைவரெனத் தம் சகோதரரைத் தம் நண்பர்களாகிய நபத்தேயரிடம் யோனத்தான் அனுப்பி, தங்களிடம் இருந்த திரளான பொருள்களை அவர்களுடைய பொருள்களோடு சேர்த்து வைக்கும்படி கேட்கச் செய்தார்.
36 அப்போது யாம்பிரியின் மக்கள் மெதாபாவினின்று புறப்பட்டு யோவானையும் அவரிடம் இருந்த அனைத்தையும் கைப்பற்றிச் சென்றார்கள்.
37 இந்நிகழ்ச்சிக்குப்பிறகு, "யாம்பிரியின் மக்கள் சிறப்பானதொரு மணவிழாவைக் கொண்டாடுகிறார்கள்; கானான் நாட்டு உயர்குடியினர் ஒருவரின் மகளை நாதபாதிலிருந்து பெரும் பாதுகாப்புடன் மணவிழாவுக்கு அழைத்துவருகிறார்கள்" என்று யோனத்தானிடமும் அவருடைய சகோதரரான சீமோனிடமும் தெரிவிக்கப்பட்டது.
38 அவர்கள் தங்கள் சகோதரரான யோவான் குருதி சிந்தி இறந்ததை நினைவுகூர்ந்து, புறப்பட்டுச் சென்று மலையின் ஒரு மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டார்கள்.
39 அவர்கள் தலை நிமிர்ந்து பார்த்தபோது கூச்சலிடும் கூட்டத்தையும் எராளமான மூட்டை முடிச்சுகளையும் கண்டார்கள். மணமகனும் அவனுடைய நண்பர்களும் உறவினர்களும் படைக்கலங்கள் தாங்கியவண்ணம் மேளதாளங்களோடும் பாடகர் குழுவினரோடும் பெண் வீட்டாரை எதிர்கொண்டு சென்றார்கள்.
40 யூதர்கள் தாங்கள் பதுங்கியிருந்த இடத்தினின்று அவர்கள்மீது பாய்ந்து அவர்களைக் கொலைசெய்தார்கள். பலர் காயமுற்று மடிந்தார்கள்; மற்றவர்கள் மலைக்கு ஓடிப்போனார்கள். அவர்களின் அனைத்துப் பொருள்களையும் யூதர்கள் எடுத்துக்கொண்டார்கள்.
41 இவ்வாறு மணவிழா மகிழ்ச்சி துயரமாய் மாறியது; இன்னிசை ஒப்பாரியாக மாறியது.
42 தங்களுடைய சகோதரர் குருதி சிந்தி இறந்ததற்காக முழுதும் பழிதீர்த்துக்கொண்டபின் அவர்கள் யோர்தானையொட்டிய சதுப்பு நிலத்திற்குத் திரும்பினார்கள்.
43 இதை அறிந்த பாக்கீதும் பெரும்படையோடு யோர்தான் நதியின் கரைகளை ஓய்வு நாளில் சென்றடைந்தான்.
44 யோனத்தான் தம்முடன் இருந்தவர்களை நோக்கி, "நாம் இப்போது எழுந்து நம்முடைய உயிருக்காகப் போராடுவோம்; ஏனெனில் முன்னைய நிலைமையைவிட இக்கட்டான நிலைமையில் இப்போது இருக்கிறோம்.
45 பாருங்கள்! நமக்கு முன்னும் பின்னும் போர் நடந்து கொண்டிருக்கிறது. யோர்தானின் நீர் இரு பக்கமும் உள்ளது; அதுபோலச் சதுப்பு நிலங்களும் காடுகளும் உள்ளன. நாம் தப்பிக்கவே வழி இல்லை.
46 நம்முடைய பகைவர்களிடமிருந்து காப்பாற்றப்பட விண்ணக இறைவனிடம் மன்றாடுங்கள்" என்றார்.
47 போர் தொடங்கியது. பாக்கீதைத் தாக்க யோனத்தான் கையை ஓங்கினார். ஆனால் அவன்; தப்பிப் பின்னடைந்தான்.
48 யோனத்தானும் அவரோடு இருந்தவர்களும் யோர்தானில் குதித்து அக்கரைக்கு நீந்திச் சென்றார்கள். ஆனால் பகைவர்கள் யோர்தானைக் கடந்து அவர்களை எதிர்த்து வரவில்லை.
49 அன்று பாக்கீதின் படையில் ஆயிரம் பேர் மடிந்தனர்.
50 பாக்கீது எருசலேம் திரும்பினான்; யூதேயாவில் அரண்சூழ் நகர்களைக் கட்டினான்; எரிகோ, எம்மாவு, பெத்கோரான், பெத்தேல், தம்னாத்தா, பாரத்தோன், தெபோன் ஆகிய நகரங்களில் கோட்டைகளைக் கட்டியெழுப்பி உயர்ந்த மதில்கள், கதவுகள், தாழ்ப்பாள்கள் கொண்டு அவற்றை வலுப்படுத்தினான்.
51 இஸ்ரயேலுக்குத் தொல்லை கொடுக்க அந்த நகரங்களில் காவற்படையை நிறுவினான்;
52 பெத்சூர், கசாரா ஆகிய நகரங்களையும் எருசலேம் கோட்டையையும் வலுப்படுத்தி, போர்வீரர்களை அங்கு நிறுத்தி உணவுப்பொருள்களைச் சேமித்துவைத்தான்;
53 நாட்டுத் தலைவர்களின் மைந்தர்களைப் பிணைக்கைதிகளாக்கி அவர்களை எருசலேம் கோட்டையில் காவலில் வைத்தான்.
54 நூற்று ஐம்பத்து மூன்றாம் ஆண்டு இரண்டாம் மாதம் ஆல்கிம் திருஉறைவிடத்தின் உள்முற்றத்து மதில்களை இடித்துத் தள்ளக் கட்டளையிட்டான்; இவ்வாறு இறைவாக்கினர்களின் வேலைப்பாடுகளைத் தகர்த்தெறியத் திட்டமிட்டான்; அவ்வாறே தகர்த்தெறியத் தொடங்கினான்.
55 தொடங்கிய அந்த நேரத்திலேயே ஆல்கிம் நோயால் தாக்கப்பட்டான். அவனுடைய வேலைகள் தடைபட்டன. அவனது வாய் அடைபட்டது; பக்கவாதத்தால் தாக்குண்டான். அவனால் ஒன்றும் பேச முடியவில்லை; தன் குடும்பக் காரியங்களைக்கூடக் கவனிக்க முடியவில்லை.
56 இச்சூழலில் ஆல்கிம் மிகுந்த துன்பத்துக்கு உள்ளாகி இறந்தான்.
57 பாக்கீது அவன் இறந்ததை அறிந்து தெமேத்திரி மன்னனிடம் திரும்பினான். யூதேயா நாட்டில் இரண்டு ஆண்டு காலம் அமைதி நிலவியது.
58 நெறிகெட்டவர்கள் அனைவரும் சூழ்ச்சி செய்து, "யோனத்தானும் அவனோடு இருக்கிறவர்களும் அமைதியோடும் பாதுகாப்போடும் வாழ்கிறார்கள். எனவே இப்போது பாக்கீதை அழைத்துவருவோம். அவர் ஒரே இரவில் அவர்கள் எல்லாரையும் சிறைப்பிடிப்பார்" என்று சொல்லிக் கொண்டார்கள்.
59 உடனே அவர்கள் பாக்கீதிடம் சென்று கலந்து ஆலோசித்தார்கள்.
60 அவன் பெரும் படையொடு புறப்பட்டான்; யோனத்தானையும் அவரோடு இருந்தவர்களையும் கைது செய்யும்படி யூதேயாவிலிருந்த தன் கூட்டாளிகள் அனைவருக்கும் இரகசியமாக மடல் அனுப்பினான். ஆனால் அவர்களால் முடியவில்லை; ஏனெனில் அவர்களின் சூழ்ச்சி வெளியாகிவிட்டது.
61 இந்தச் சூழ்ச்சிக்குக் காரணமாய் இருந்த நாட்டுத் தலைவர்களுள் ஐம்பது பேரை யோனத்தானின் ஆள்கள் பிடித்துக் கொலை செய்தார்கள்.
62 பிறகு யோனத்தானும் சீமோனும் அவர்களுடைய ஆள்களும் பாலை நிலத்தில் இருந்த பெத்பாசிக்குச் சென்று இடிபட்ட அதன் பகுதிகளைக் கட்டி நகரை வலுப்படுத்தினார்கள்.
63 பாக்கீது இதை அறிந்ததும் தன் படை முழுவதையும் கூட்டினான்; யூதேயாவில் இருந்தவர்களுக்கு இது பற்றிச் செய்தி அனுப்பினான்.
64 பிறகு புறப்பட்டுப் பெத்பாசிக்கு எதிரே பாசறை அமைத்தான்; படைப்பொறிகள் செய்தான்; பல நாள் அதை எதிர்த்துப் போர் புரிந்தான்.
65 யோனத்தான் தம் சகோதரரான சீமோனை நகரில் விட்டுவிட்டு நாட்டுக்குள் சிறிய படையோடு சென்றார்;
66 ஒதமேராவையும் அவனுடைய உறவினர்களையும் பாசிரோன் மக்களையும் அவர்களுடைய கூடாரங்களில் வெட்டிவீழ்த்தினார்; பிறகு தம் வீரர்களோடு முன்னேறிச் சென்று அவர்களைத் தாக்கத் தொடங்கினார்.
67 சீமோனும் அவரோடு இருந்தவர்களும் நகரிலிருந்து வெளியே வந்து படைக்கலங்களுக்குத் தீ வைத்தார்கள்;
68 பாக்கீரை எதிர்த்துப் போரிட்டு முறியடித்தார்கள்; அவனை மிகுந்த துன்பத்துக்கு உட்படுத்தினார்கள். இதனால் அவனுடைய சூழ்ச்சியும் படையெடுப்பும் பயனற்றுப்போயின.
69 ஆகவே அந்நாட்டுக்கு வரும்படி தனக்கு ஆலோசனை கூறியிருந்த நெறிகெட்டவர்கள்மீது பாக்கீது கடுஞ் சீற்றங் கொண்டு அவர்களுள் பலரைக் கொன்றான்; தானும் தன் நாட்டுக்குத்திரும்பிப்போக முடிவு செய்தான்.
70 இதை அறிந்த யோனத்தான், பாக்கீதுடன் சமாதானம் செய்வதற்கும், கைதிகளை அவன் தம்மிடம் ஒப்படைப்பதற்கும் தூதர்களை அனுப்பினார்.
71 பாக்கீது அதற்கு இசைந்து அவரது சொற்படியே செய்தான்; தன் வாழ்நாள் முழுவதும் அவருக்குத் தீங்கிழைக்க முயல்வதில்லை என்று ஆணையிட்டான்.
72 தான் யூதேயா நாட்டிலிருந்து முன்பு சிறைப்படுத்தியவர்களை அவர்pடம் ஒப்படைத்தான்; தன் நாட்டுக்குத் திரும்பி வந்தபின் அவர்களின் எல்லைக்குள் அவன் கால் வைக்கவே இல்லை.
73 இவ்வாறு இஸ்ரயேலில் போரின்றி அமைதி நிலவியது. யோனத்தான் மிக்மாசில் குடியேறி மக்களுக்கு நீதி வழங்கத் தொடங்கினார்; இறைப்பற்றில்லாதவர்களை இஸ்ரயேலிலிருந்து அழித்தொழித்தார்.
1 மக்கபேயர் அதிகாரம் 10
1 நூற்று அறுபதாம் ஆண்டு அந்தியோக்கின் மகன் அலக்சாண்டர் எப்பிப்பான் தாலமாய் நகரை அடைந்து அதைப் பிடித்தான். மக்கள் அவனை ஏற்றுக்கொள்ளவே அவன் அங்கு ஆட்சி செலுத்தினான்.
2 மன்னன் தெமேத்திரி இதைக் கேள்வியுற்று மாபெரும் படையைத் திரட்டிப் போர்முனையில் அவனைச் சந்திக்கப் புறப்பட்டான்.
3 யோனத்தானைப் பெருமைப்படுத்துவதற்காக தெமேத்திரி அமைதிச் சொற்கள் கொண்ட மடல் ஒன்றை அவருக்கு அனுப்பினான்.
4 அவன், "யோனத்தான் நமக்கு எதிராக அலக்சாண்டரோடு சமாதானம் செய்துகொள்வதற்கு முன்பே நாம் சமாதானம் செய்து கொள்ள முந்திக் கொள்வோம்;
5 ஏனெனில் யோனத்தானுக்கும் அவனுடைய சகோதரர்களுக்கும் அவனுடைய இனத்தாருக்கும் நாம் செய்த தீமைகள் யாவற்றையும் அவன் நினைவில் கொண்டிருப்பான்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
6 ஆதலால் தெமேத்திரி படை திரட்டவும் படைக்கலங்களைச் செய்யவும் யோனத்தானுக்கு அதிகாரம் அளித்து, அவரைத் தன் கூட்டாளியாக்கிக்கொண்டான்; கோட்டையில் இருந்த பிணைக்கைதிகளை அவரிடம் ஒப்படைக்கக் கட்டளையிட்டான்.
7 யோனத்தான் எருசலேமுக்கு வந்து எல்லா மக்களும் கோட்டைக்குள் இருந்தவர்களும் கேட்கும்படி மடலைப் படித்தார்.
8 படை திரட்ட அவருக்கு மன்னன் அதிகாரம் அளித்திருந்தான் என்று மக்கள் கேள்வியுற்றபோது அவர்களைப் பேரச்சம் ஆட்கொண்டது.
9 கோட்டையில் இருந்தவர்கள் யோனத்தானிடம் பிணைக்கைதிகளை ஒப்புவித்தார்கள். அவர் அவர்களுடைய பெற்றோர்களிடம் அவர்களை ஒப்படைத்தார்.
10 யோனத்தான் எருசலேமில் வாழ்ந்து அந்நகரைக் கட்டவும் புதுப்பிக்கவும் தொடங்கினார்;
11 மதில் எழுப்பவும் சீயோன் மலையைச் சுற்றிச் சதுரக் கற்களால் கட்டி அதை வலுப்படுத்தவும் பணியாளர்களுக்குக் கட்டளையிட்டார். அவ்வண்ணமே அவர்கள் செய்தார்கள்.
12 பாக்கீது கட்டியிருந்த கோட்டைகளுக்குள் வாழ்ந்த அயல் நாட்டினர் தப்பியோடினர்;
13 ஒவ்வொருவரும் தாம் இருந்த இடத்தைவிட்டு அகன்று தம் சொந்த நாடுபோய்ச் சேர்ந்தனர்.
14 திருச்சட்டத்தையும் கட்டளைகளையும் கைவிட்ட சிலர் பெத்சூரில் மட்டும் தங்கியிருந்தனர்; ஏனெனில் அது ஓர் அடைக்கல நகர்.
15 தெமேத்திரி யோனத்தானுக்கு கொடுத்திருந்த எல்லா உறுதிமொழிகள் பற்றியும் அலக்சாண்டர் மன்னன் கேள்விப்பட்டான். அவரும் அவருடைய சகோதரர்களும் செய்த போர்கள், புரிந்த தீரச் செயல்கள், அடைந்த தொல்லைகள்பற்றியும் அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
16 ஆகவே அவன், "இவரைப்போன்ற ஒரு மனிதரை நாம் காணக்கூடுமோ? இப்போது அவரை நாம் நம்முடைய நண்பரும் கூட்;டாளியுமாகக் கொள்வோம்" என்று சொன்னான்.
17 அவன் யோனத்தானுக்கு ஒரு மடல் எழுதியனுப்பினான். அது பின்வருமாறு;
18 "அலக்சாண்டர் மன்னர் தம் சகோதரனாகிய யோனத்தானுக்கு வாழ்த்துக் கூறி எழுதுவது;
19 நீர் சிறந்த வீரர் என்றும், எம் நண்பராய் இருக்கத் தகுதியள்ளவர் என்றும் உம்மைப்பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம்.
20 ஆதலால் இன்று உம்மை உம் இனத்தாருக்குத் தலைமைக் குருவாக ஏற்படுத்துகிறோம். நீர் மன்னருடைய நண்பர் என அழைக்கப்படுவீர். நீர் எங்கள் பக்கம் இருந்து எங்களோடு உள்ள நட்பை நிலைக்கச் செய்யவேண்டும். "அவன் மடலோடு அரசவுடையையும் பொன்முடியையம் யோனத்தானுக்கு அனுப்பிவைத்தான்.
21 நூற்று அறுபதாம் ஆண்டு ஏழாம் மாதம் கூடாரத்திருவிழாவின்போது யோனத்தான் தலைமைக்குருவுக்குரிய திருவுடைகளை அணிந்துகொண்டார்; படை திரட்டினார்; படைக்கலன்களைப் பெருமளவில் தருவித்தார்.
22 தெமேத்திரி இதைக் கேள்வியுற்றுத் துயரம் அடைந்தான்.
23 "அலக்சாண்டர் தம்மை வலுப்படுத்திக் கொள்ளும்பொருட்டு யூதர்களுடைய நட்பை அடைய முந்திக்கொண்டார். நாம் வாளாவிலிருந்து விட்டோமே!
24 நானும் அவர்களுக்கு ஊக்கமூட்டும் சொற்களை எழுதி அவர்கள் எனக்கு உதவியாக இருக்கும்படி அவர்களுக்கு உயர் பதவிகளையும் அன்பளிப்புகளையும் வழங்குவேன்" என்று சொல்லிக்கொண்டான்.
25 தெமேத்திரி யூதர்களுக்கு எழுதியனுப்பிய செய்தி வருமாறு; "தெமேத்திரி மன்னன் யூத இனத்தாருக்கு வாழ்த்துக் கூறி எழுதுவது;
26 நீங்கள் எம்மோடு செய்துகொண்ட ஒப்பந்தங்களைக் காப்பாற்றி வந்திருக்கிறீர்கள் என்றும், எங்களோடு உள்ள நட்பில் நிலைத்திருக்கிறீர்கள் என்றும், எம்முடைய பகைவர்களோடு நீங்கள் கூட்டுச்சேரவில்லை என்றும் நாம் கேள்வியுற்று மகிழ்ச்சி அடைகிறோம்.
27 தொடர்ந்து எம்மட்டில் பற்றுறுதி கொண்டிருங்கள். நீங்கள் எமக்குச் செய்துவரும் யாவற்றுக்கும் கைம்மாறாக உங்களுக்கு நன்மை செய்வோம்.
28 உங்களுக்குப் பல வரிவிலக்குகளை அளிப்போம்; நன்கொடைகள் வழங்குவோம்.
29 திறை, உப்புவரி, அரசருக்குரிய சிறப்பு வரி ஆகியவற்றினின்று இப்போது யூத மக்கள் எல்லாரையும் விடுவித்து அவர்களுக்கு விலக்குரிமை அளிக்கிறேன்.
30 உங்கள் தானியத்தில் மூன்றில் ஒரு பகுதியும் மரங்களின் கனிகளில் பாதியும் முறைப்படி எனக்குச் சேர வேண்டும். ஆனால் இன்றுமுதல் இந்த உரிமையை விட்டுக் கொடுக்கிறேன். யூதேயா நாட்டிலிருந்தும் சமாரியா, கலிலேயாவிலிருந்து பிரித்து யூதேயாவோடு இணைத்த மூன்று மாவட்டங்களிலிருந்தும் இன்றுமுதல் எக்காலமும் இவற்றைத் தண்டல் செய்யமாட்டேன்.
31 எருசலேமும் அதன் எல்லைகளும் தூய்மையானவையாய் இருக்கும்; பத்திலொரு பங்கு, சுங்கவரி ஆகியவற்றினின்று விலக்கு உடையவாகவும் இருக்கும்.
32 எருசலேமில் உள்ள கோட்டையின்மீது எனக்கு இருக்கும் அதிகாரத்தை விட்டுக்கொடுக்கிறேன்; அதைக் காப்பதற்காகத் தலைமைக் குரு தேர்ந்து கொள்ளும் மனிதரை நியமித்துக் கொள்ள அவருக்கு அதிகாரம் அளிக்கிறேன்;
33 எனது நாடெங்கும் இருக்கும் யூதேயா நாட்டுப் போர்க் கைதிகள் அனைவரையும் மீட்புப் பணமின்றி விடுவிக்கிறேன். அவர்கள் எல்லாரும் வரிகளிலிருந்து விடுதலை பெறுவார்கள்; கால்நடை வரியிலிருந்தும் விடுதலை பெறுவார்கள்.
34 எல்லாத் திருநாள்களையும் ஓய்வுநாள்களையும் அமாவாசை நாள்களையும் குறிப்பிட்ட நாள்களையும் திருவிழாவுக்கு முந்தின மூன்று நாள்களையும் பிந்தின மூன்று நாள்களையும் எனது அரசுக்கு உட்பட்ட எல்லா யூதருக்கும் விலக்குரிமை நாள்களாகவும் வரிவிலக்கு நாள்களாகவும் ஏற்படுத்துகிறேன்.
35 இந்நாள்களில் யாரையும் கட்டாயப்படுத்தி எதையும் வாங்கவோ எதை முன்னிட்டும் தொந்தரவு செய்யவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.
36 "யூதருள் முப்பதாயிரம் பேர் மன்னரின் படைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர். மன்னரின் படை வீரர்கள் எல்லாருக்கும் கொடுக்கப்படுவதுபோல் இவர்களுக்கும் ஊதியம் வழங்கப்படும்.
37 இவர்களுள் சிலர் மன்னருடைய பெரிய கோட்டைகளில் நியமிக்கப்படுவர்; வேறு சிலர் அரசின் நம்பிக்கைக்குரிய பணிகளில் அமர்த்தப்படுவர். யூதேயா நாட்டு மக்களுக்கு மன்னர் அறிவித்துள்ள சலுகைகளுக்கு ஏற்ப இவர்களின் அதிகாரிகளும் தலைவர்களும் இவர்களிடமிருந்தே எழுவார்களாக; இவர்கள் தங்கள் சட்டங்களின்படி நடப்பார்களாக. "
38 "சமாரியாவிலிருந்து பிரித்து யூதேயாவோடு இணைத்த மூன்று மாவட்டங்களும் யூதேயாவின் ஒரு பகுதியாகி ஒரே தலைவரின்கீழ் இருக்கட்டும். இவை தலைமைக்குருவுக்கே அன்றி வேறு எவருக்கும் பணிய வேண்டியதில்லை.
39 எருசலேமில் உள்ள திருஉறைவிடச்செலவுக்காகத் தாலமாய் நகரையும் அதைச் சேர்ந்த நிலத்தையும் திருஉறைவிடத்திற்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளேன்.
40 மேலும் குறிப்பிட்ட இடங்களிலிருந்து கிடைக்கும் அரச வருவாயில் நூற்று எழுபது கிலோ வெள்ளியை ஆண்டுதோறும் கொடுப்பேன்;
41 தொடக்க காலத்தில் அரசு அலுவலர்கள் கொடுத்து வந்து, பின்னர் கொடாது விட்ட கூடுதல் நிதியை இனிமேல் கோவில் திருப்பணிக்குக் கொடுக்கும்படி செய்வேன்.
42 மேலும் திருஉறைவிடத் திருப்பணி வருமானத்திலிருந்து இதுவரை என் அதிகாரிகள் ஆண்டுதோறும் பெற்றுவந்த ஏறத்தாழ அறுபது கிலோ வெள்ளியை அவர்கள் இனிப் பெறமாட்டார்கள். இத்தொகை அங்குத் திருப்பணி புரிந்துவரும் குருக்களைச் சேரும்.
43 ஒருவர் மன்னருக்காவது வேறு யாருக்காவது கடன்பட்டிருந்தால், அவர் எருசலேமில் உள்ள கோவிலிலோ அதன் எல்லைகளிலோ தஞ்சம் புகுந்தால் அவர் விடுதலை பெறுவார்; என் அரசில் அவருக்கு உள்ள உடைமை எதுவும் பறிமுதல் செய்யப்படமாட்டாது.
44 திருஉறைவிட வேலைப்பாடுகளைப் பழுது பார்த்துப் புதுப்பிப்பதற்கு ஏற்படும் செலவு அரசு வருவாயிலிருந்து கொடுக்கப்படும்.
45 அதேபோன்று எருசலேம் மதில்களைக் கட்டுவதற்கும் அதைச் சுற்றிலும் வலுப்படுத்துவதற்கும் யூதேயாவில் மதில்களை எழுப்புவதற்கும் ஆகும் செலவும் அரச வருவாயிலிருந்து கொடுக்கப்படும். "
46 யோனத்தானும் மக்களும் மேற்குறித்த சொற்களைக் கேட்டபோது அவற்றை நம்பவில்லை, ஏற்றுக்கொள்ளவுமில்லை. ஏனென்றால் தெமேத்திரி இஸ்ரயேலுக்குப் பெரும் தீங்கு செய்திருந்ததையும் அவர்கள் நினைவுகூர்ந்தார்கள்.
47 அலக்சாண்டரே முதலில் அமைதிச் சொற்களை அவர்களிடம் பேசியிருந்ததால் அவர்கள் அவன் சார்பாய் இருக்கும்படி முடிவு செய்தார்கள்; எப்போதும் அவனுடைய கூட்டாளிகளாய் இருந்தார்கள்.
48 அலக்சாண்டர் மன்னன் பெரும்படை திரட்டித் தெமேத்திரியை எதிர்த்துப் பாசறை அமைத்தான்.
49 இரண்டு மன்னர்களும் போர்தொடுத்தார்கள். தெமேத்திரியின் படை தப்பியோடியது. அலக்சாண்டர் அதைத் துரத்திச் சென்ற முறியடித்தான்;
50 கதிரவன் மறையும்வரை கடுமையாகப் போர்புரிந்தான். தெமேத்திரி அன்று மடிந்தான்.
51 அலக்சாண்டர் எகிப்தின் மன்னன் தாலமிக்குத் தூதர்கள் வழியாகச் சொல்லியனுப்பிய செய்தி பின்வருமாறு;
52 "நான் என் நாட்டுக்குத் திரும்பி விட்டேன்; என் மூதாதையரின் அரியணையில் அமர்ந்துள்ளேன்; ஆட்சியை நிலைநாட்டியுள்ளேன்; தெமேத்திரியைத் தோற்கடித்தேன்; எங்கள் நாட்டை என் உடைமையாக்கிக்கொண்டேன்.
53 அவனோடு போர்தொடுத்து அவனையும் அவனுடைய படைகளையும் முறியடித்து அவனது அரியணையில் அமர்ந்துள்ளேன்.
54 ஆதலால் இப்போது நாம் ஒருவர் மற்றவரோடு நட்புறவு உண்டாக்கிக்கொள்வோம். உம் மகளை எனக்கு மணமுடித்துக்கொடும். நான் உம் மருமகனாய் இருப்பேன். உமது தகுதிக்கு ஏற்ற அன்பளிப்புகளை உமக்கும் அவளுக்கும் வழங்குவேன். "
55 தாலமி மன்னன் அவனுக்கு மறுமொழியாக, "நீர் உம் மூதாதையரின் நாட்டுக்குத் திரும்பி வந்து அரியணை ஏறிய நாள் நன்னாள்.
56 நீர் எழுதியுள்ளபடி நான் உமக்குச் செய்வேன். நாம் ஒருவரோடு ஒருவர் பார்த்துப் பேசும்படி நீர் தாலமாய் நகருக்கு வாரும். நீர் கேட்டபடி நான் உமக்கு மாமனார் ஆவேன்" என்று சொல்லி அனுப்பினான்.
57 ஆதலால் தாலமியும் அவனுடைய மகள் கிளியோபத்ராவும் எகிப்தை விட்டுப் புறப்பட்டு, நூற்று அறுபத்திரண்டாம் ஆண்டு தாலமாய்க்குச் சென்றார்கள்.
58 அலக்சாண்டர் மன்னன் அவனைச் சந்தித்தான். தாலமி தன் மகள் கிளியோபத்ராவை அலக்சாண்டருக்கு மணமுடித்துக்கொடுத்தான்; மன்னர்களின் வழக்கப்படி தாலமாயில் அவளுடைய மணவிழாவைச் சீரும் சிறப்பமாகக் கொண்டாடினான்.
59 அலக்சாண்டர் மன்னன் தன்னைவந்து சந்திக்கும்படி யோனத்தானுக்கு எழுதினான்.
60 அவரும் சீர் சிறப்புடன் தாலமாய்க்கு வந்து இரு மன்னர்களையும் சந்தித்தார்; அவர்களுக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் பொன், வெள்ளியோடு பல அன்பளிப்புகளும் கொடுத்தார்; அவர்களது நல்லெண்ணத்தைப் பெற்றார்.
61 இஸ்ரயேலிலிருந்து வந்திருந்த நச்சுப் பேர் வழிகளும் நெறிகெட்டவர்களும் ஒன்றுசேர்ந்து யோனத்தான்மீது குற்றம் சாட்டினார்கள்; ஆனால் மன்னன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.
62 மாறாக யோனத்தானின் எளிய உடையைக் களைந்துவிட்டு அவருக்கு அரசவுடை அணிவிக்கும்படி மன்னன் கட்டளையிட்டான். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
63 மன்னன் அவரைத் தன் அருகில் அமரும்படி செய்தான்; "நீங்கள் இவருடன் நகரின் நடுவே சென்று இவர்மீது எவனும் எக்காரியத்திலும் குற்றம் சாட்டக் கூடாது என்றும், எக்காரணத்தை முன்னிட்டும் இவருக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது என்றும் அறிவியுங்கள்" என்று தன் அலுவலர்களிடம் கூறினான்.
64 அறிவித்தபடி, யோனத்தானுக்கு அரச மரியாதை அளிக்கப்பட்டதையும் அவர் அரசவுடை அணிந்திருப்பதையும் குற்றம் சாட்டியவர்கள் எல்லாரும் கண்டபோது தப்பியோடிவிட்டார்கள்.
65 இவ்வாறு மன்னன் அவரைப் பெருமைப்படுத்தித் தம் முக்கிய நண்பர்களுள் ஒருவராக ஏற்றுக்கொண்டு படைத்தளபதியாகவும் ஆளுநராகவும் ஏற்படுத்தினான்.
66 அமைதியோடும் அக்களிப்போடும் யோனத்தான் எருசலேம் திரும்பினார்.
67 தெமேத்திரியின் மகன் தெமேத்திரி நூற்று அறுபத்தைந்தாம் ஆண்டு கிரேத்து நாட்டினின்று தன் மூதாதையருடைய நாட்டிற்கு வந்தான்.
68 அலக்சாண்டர் மன்னன் இதைப்பற்றிக் கேள்விப்பட்டுப் பெரிதும் வருத்தமுற்று அந்தியோக்கி நகருக்குத் திரும்பினான்.
69 கூலேசிரியாவின் ஆளுநராக அப்பொல்லோனைத் தெமேத்திரி நியமித்தான். அவன் பெரும்படை திரட்டி யாம்னியாவுக்கு எதிரே பாசறை அமைத்தான்; பிறகு தலைமைக் குருவாகிய யோனத்தானுக்குச் சொல்லியனுப்பிய செய்தி பின்வருமாறு;
70 "நீர் மட்டுமே எங்களை எதிர்த்தெழுகிறீர். உம்மால் நான் ஏளனத்துக்கும் பழிச்சொல்லுக்கும் உள்ளாகிறேன். மலைகளில் எங்களுக்கு எதிராய் நீர் அதிகாரம் செலுத்துவது ஏன்?
71 உம் படை மீது உமக்கு நம்பிக்கை இருந்தால் எங்களிடம் சமவெளிக்கு இறங்கிவாரும். நம்மில் வலிமைமிக்கவர் யார் என அங்குத் தெரிந்து கொள்ளலாம்; ஏனெனில் நகரங்களின் படை என் பக்கம் உள்ளது.
72 நான் யார் என்றும், எங்களுடன் உதவிக்கு வந்துள்ளவர்கள் யார் என்றும் கேட்டுத் தெரிந்து கொள்ளும். எங்களை எதிர்த்து நிற்க உம்மால் முடியாது என மக்கள் சொல்வார்கள்; ஏனெனில் உம் மூதாதையர் தங்கள் சொந்த நாட்டிலேயே இருமுறை முறியடிக்கப்பட்டார்கள்.
73 ஓடி மறைந்து கொள்ளப் பாறையோ கல்லோ இடமோ இல்லாத இந்தச் சமவெளியில் என்னுடைய குதிரைப் படையையும் இத்துணைப் பெரிய காலாட்படையையும் உம்மால் எதிர்த்து நிற்க முடியாது. "
74 அப்பொல்லோனின் சொற்களைக் கேட்ட யோனத்தான் சீற்றமுற்றார்; பத்தாயிரம் பேரைத் தேர்ந்து கொண்டு எருசலேமைவிட்டுப் புறப்பட்டார். அவருடைய சகோதரரான சீமோன் அவருக்கு உதவி செய்யும் பொருட்டு அவரோடு சேர்ந்துகொண்டார்.
75 யாப்பாவுக்கு எதிரே யோனத்தான் பாசறை அமைத்தார். யாப்பாவில் அப்பொல்லோனின் காவற்படை இருந்ததால் மக்கள் யோனத்தானை நகருக்குள் விடாது அதன் வாயில்களை மூடிக் கொண்டார்கள். ஆகையால் அவர் நகரைத் தாக்கினார்.
76 நகரில் இருந்தவர்கள் அஞ்சி வாயில்களைத் திறக்கவே, யாப்பா நகரை யோனத்தான் கைப்பற்றினார்.
77 இதை அறிந்த அப்பொல்லோன் மூவாயிரம் குதிரை வீரரையும் எண்ணற்ற காலாட்படையினரையும் திரட்டி, நீண்ட பயணம் செய்யவேண்டியவன் போல் அசோத்து நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான்; அதே நேரத்தில் சமவெளியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான்; ஏனெனில் அவனிடம் பெரியதொரு குதிரைப்படை இருந்தது; அதில் அவன் முழு நம்பிக்கை கொண்டிருந்தான்.
78 யோனத்தான் அவனை அசோத்துவரை துரத்தினார். படைகள் போரில் இறங்கின.
79 ஆயிரம் குதிரைவீரர்கள் யோனத்தானின் ஆள்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்குமாறு அப்பொல்லோன் ஏற்பாடு செய்திருந்தான்.
80 பதுங்கிப் பாய்வோர் தமக்குப் பின்னால் இருக்கிறார்கள் என்று யோனத்தான் அறிந்தார்; ஏனென்றால் அவர்கள் அப்பொல்லோனின் படையைச் சுற்றி வளைத்துக் கொண்டு காலைமுதல் மாலைவரை அவருடைய ஆள்கள்மீது அம்புகள் எய்துகொண்டிருந்தார்கள்.
81 யோனத்தான் கட்டளையிட்டபடி அவருடைய ஆள்கள் உறுதியோடு நின்றார்கள். ஆனால் எதிரிகளின் குதிரைகள் சோர்ந்துபோயின.
82 குதிரைவீரர்கள் களைத்துப்போயிருந்ததால் சீமோன் தம் படையை நடத்திச்சென்று பகைவரின் காலாள்களை எதிர்த்துப் போரிட்டு முறியடிக்கவே அவர்கள் தப்பியோடினார்கள்.
83 சமவெளியெங்கும் சிதறிப்போயிருந்த குதிரை வீரர்கள் அசோத்து நகருக்குத் தப்பியோடி, தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தங்களுடைய தெய்வத்தின் சிலை இருந்த பெத்தாகோன் என்னும் கோவிலில் புகுந்துகொண்டார்கள்.
84 யோனத்தான் அசோத்தையும் அதைச் சுற்றிலும் இருந்த நகரங்களையும் சூறையாடியபின் அவற்றைத் திக்கரையாக்கினார்; தாகோன் கோவிலையும் அதில் அடைக்கலம் புகுந்திருந்தவர்களையும் நெருப்பால் அழித்தார்.
85 வாளுக்கிரையானவர்களும் தீக்கிரையானவர்களும் எண்ணாயிரம் பேர்.
86 யோனத்தான் அவ்விடமிருந்து புறப்பட்டு அஸ்கலோனுக்கு எதிரே பாசறை அமைத்தார். அந்நகர மக்கள் சீர் சிறப்புடன் அவரைச் சந்திக்க வந்தார்கள்.
87 யோனத்தான் தம்மோடு இருந்தவர்களுடன் திரளான கொள்ளைப் பொருள்களோடு எருசலேம் திரும்பினார்.
88 அலக்சாண்டர் இந்நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேள்விப்பட்டபோது யோனத்தானை மேலும் பெருமைப்படுத்தினான்.
89 மன்னர்களின் நெருங்கிய உறவினர்களுக்குக் கொடுக்கும் வழக்கப்படி, அவருக்குப் பொன் தோளணி ஒன்று அனுப்பினான். மேலும் எக்ரோனையும் அதைச் சேர்ந்த இடங்கள் எல்லாவற்றையும் அவருக்கு உரிமைச்சொத்தாக வழங்கினான்.
1 மக்கபேயர் அதிகாரம் 11
1 எகிப்து மன்னன் கடல்மணல்போலப் பெரும் படைகளையும் திரளான கப்பல்படையையும் ஒன்று கூட்டினான்; அலக்சாண்டரின் நாட்டை வஞ்சகமாய்க் கைப்பற்றித் தனது அரசோடு இணைக்க முயன்றான்;
2 அமைதியை விரும்புபவன்போலச் சிரியாவுக்குச் சென்றான். நகரங்களின் மக்கள் நகர வாயில்களைத் திறந்து அவனை வரவேற்றார்கள்; தாலமி தன் மாமனாராய் இருந்ததால் அவனை வரவேற்கும்படி அலக்சாண்டர் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான்.
3 நகரங்களில் தாலமி நுழைந்தபோது ஒவ்வொரு நகரிலும் காவற்படையை நிறுவினான்.
4 அவன் அசோத்தை நெருங்கியபோது தீக்கிரையாக்கப்பட்ட தாகோன் கோவிலையும் தலைமட்டமாக்கப்பட்ட அசோத்து நகரையும் அதன் புறநகர்ப்பகுதிகளையும் சிதறிக்கிடந்த பிணங்களையும் போரில் யோனத்தான் தீயிட்டுக் கரியாக்கிய பிணங்களையும் மக்கள் அவனுக்குக் காட்டினார்கள்; ஏனென்றால் அவன் சென்ற வழியில்தான் அவை குவிக்கப்பட்டிருந்தன.
5 யோனத்தான் மீது பழி சுமத்தும் பொருட்டு அவர் செய்திருந்ததை மக்கள் மன்னனுக்கு எடுத்துரைத்தார்கள்; ஆனால் மன்னன் பேசாதிருந்தான்.
6 மன்னனை யாப்பாவில் அரச மரியாதையுடன் யோனத்தான் சந்தித்தார். அவர்கள் ஒருவர் ஒருவரை வாழ்த்திக்கொண்டார்கள்; அன்று இரவு அங்குத் தங்கினார்கள்.
7 மன்னனோடு புறப்பட்டு எலூத்தர் ஆறுவரை யோனத்தான் சென்றார்; பிறகு எருசலேம் திரும்பினார்.
8 தாலமி மன்னன் செலூக்கியா வரை இருந்த கடலோர நகரங்களை அடிமைப்படுத்தினான்; அலக்சாண்டருக்கு எதிராகச் சூழ்ச்சிகள் செய்துவந்தான்.
9 தெமேத்திரி மன்னனிடம் தாலமி தூதர்களை அனுப்பி, "வாரும், ஒருவரோடு ஒருவர் உடன்படிக்கை செய்து கொள்வோம். அலக்சாண்டரோடு வாழும் என் மகளை உமக்குக் கொடுப்பேன். நீர் உம் மூதாதையரின் அரசின்மீது ஆட்சிசெலுத்துவீர்.
10 அலக்சாண்டருக்கு என் மகளைக் கொடுத்ததன் பொருட்டு வருந்துகிறேன்; ஏனெனில்என்னை அவன் கொல்ல வழி தேடினான்" என்று கூறினான்.
11 அலக்சாண்டரின் நாட்டைக் கைப்பற்றத் தாலமி விரும்பியமையால், இவ்வாறு அவன்மீது பழி சுமத்தினான்.
12 தன் மகளை அவனிடமிருந்து பிரித்துத் தெமேத்திரிக்குக் கொடுத்தான்; அலக்சாண்டரோடு கொண்டிருந்த நட்பை முறித்துக் கொண்டான். அவர்களின் பகை வெளிப்படையாயிற்று.
13 பிறகு தாலமி அந்தியோக்கி நகருக்குச் சென்று ஆசியாவின் மணிமுடியைச் சூடிக்கொண்டான்; இவ்வாறு எகிப்து, ஆசியா நாடுகளின் இரு மணிமுடிகளையும் தன் தலையில் அணிந்து கொண்டான்.
14 அப்பொழுது அலக்சாண்டர் மன்னன் சிலிசியாவில் இருந்தான்; ஏனென்றால் அப்பகுதி மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.
15 அலக்சாண்டர் இதைக் கேள்விப்பட்டுத் தாலமியை எதிர்த்துப் போரிடச் சென்றான். தாலமியும் அணிவகுத்துச் சென்று வலிமை வாய்ந்த படையோடு அவனை எதிர்த்து விரட்டியடித்தான்.
16 புகலிடம் தேடி அலக்சாண்டர் அரேபியாவுக்கு ஓடினான். தாலமி மன்னனின் புகழ் உயர்ந்தோங்கியது.
17 சப்தியேல் என்ற அரேபியன் அலக்சாண்டருடைய தலையைக் கொய்து தாலமிக்கு அனுப்பி வைத்தான்.
18 மூன்று நாளுக்குப் பிறகு தாலமி மன்னனும் இறந்தான். கோட்டைக்குள் இருந்த அவனுடைய வீரர்கள் கோட்டைவாழ் மக்களால் கொல்லப்பட்டார்கள்.
19 எனவே நூற்று அறுபத்தேழாம் ஆண்டு தெமேத்திரி அரியணை ஏறினான்.
20 அக்காலத்தில் யோனத்தான் எருசலேமில் இருந்த கோட்டையைத் தாக்குவதற்கு யூதேயாவில் இருந்தவர்களைத் திரட்டினார்; அதற்கு எதிராகப் பயன்படுத்தப் படைப் பொறிகளையும் செய்தார்.
21 நெறிகெட்டவர்களும் தங்கள் இனத்தாரையே பகைத்தவர்களுமான சில மனிதர்கள் தெமேத்திரி மன்னனிடம் சென்று, கோட்டையை யோனத்தான் முற்றுகையிட்டிருப்பதாக அறிவித்தார்கள்.
22 அவன் இதைக் கேட்டுச் சினங்கொண்டான். உடனே புறப்பட்டுத் தாலமாய் நகருக்குச் சென்றான்; யோனத்தான் கோட்டையைத் தொடர்ந்து முற்றுகையிடுவதை விடுத்து, விரைவில் தாலமாய்க்கு வந்து தன்னைச் சந்தித்துப் பேசும்படி அவருக்கு எழுதினான்.
23 இதை அறிந்த யோனத்தான், கோட்டையைத் தொடர்ந்து முற்றுகையிடுமாறு கட்டளையிட்டார்; இஸ்ரயேலின் மூப்பர்கள் சிலரையும் குருக்கள் சிலரையும் தேர்ந்துகொண்டார்; தம் உயிரையே பணயம் வைத்து,
24 பொன், வெள்ளி, ஆடைகள், இன்னும் பல அன்பளிப்புகளை எடுத்துக்கொண்டு தாலமாயில் இருந்த தெமேத்திரி மன்னிடம் சென்றார்; அவனது நல்லெண்ணத்தைப் பெற்றார்.
25 அவருடைய இனத்தாருள் நெறிகெட்டவர்கள் சிலர் அவர்மீது குற்றம் சாட்டிய வண்ணம் இருந்தனர்.
26 எனினும் மன்னன் தனக்கு முன்னிருந்தவர்கள் செய்தவண்ணம் யோனத்தானுக்குச் செய்து தன் நண்பர்கள் அனைவர் முன்பாகவும் அவரை மேன்மைப்படுத்தினான்.
27 தலைமைக் குருபீடத்தையும் முன்பு அவர் பெற்றிருந்த மற்றப் பெருமைகளையும் அவருக்கு உறுதிப்படுத்தி அவரைத் தன் முக்கிய நண்பர்களுள் ஒருவராகக் கொண்டான்.
28 யூதேயாவையும் சமாரியாவின் மூன்று மாநிலங்களையும் வரி செலுத்துவதினின்று விலக்கும்படி மன்னனை யோனத்தான் கேட்டுக்கொண்டார்; அதற்குப் பதிலாக பன்னிரண்டு டன் வெள்ளி கொடுப்பதாக உறுதியளித்தார்.
29 மன்னன் அதற்கு இசைந்து, அவையெல்லாவற்றையும் உறுதிப்படுத்தி யோனத்தானுக்கு எழுதிய மடல் பின்வருமாறு;
30 "தெமேத்திரி மன்னர் தம் சகோதரரான யோனத்தானுக்கும் யூத இனத்தாருக்கும் வாழ்த்துக் கூறி எழுதுவது;
31 உங்களைப்பற்றி எம் உறவினர் இலாஸ்தேனுக்கு நாம் எழுதிய மடலின் நகல் ஒன்றை உங்களுக்கு அனுப்பிவைத்தோம். இதனால் அதில் உள்ளதை நீங்களும் அறிந்து கொள்ளலாம்.
32 'தெமேத்திரி மன்னர் தம் தந்தை இலாஸ்தேனுக்கு வாழ்த்துக் கூறி எழுதுவது;
33 எம் நண்பர்களும் எம்பால் தாங்கள் கொண்டுள்ள கடமைகளை நிறைவேற்றுகிறவர்களுமான யூத இனத்தார் எம்மட்டில் நல்லெண்ணம் கொண்டுள்ளதால் அவர்களுக்கு நன்மை செய்ய நாம் முடிவு செய்துள்ளோம்.
34 ஆதலால் யூதேயா நாடு முழுவதும் சமாரியாவினின்று பிரித்து யூதேயாவில் இணைத்த அபைரமா, லிதா, இரதாமின் ஆகிய மூன்று மாநிலங்களும் அவற்றைச் சேர்ந்த அனைத்தும் அவர்களுக்குச் சொந்தம் என உறுதிப்படுத்துகிறோம். முன்பு மன்னர் ஆண்டுதோறும் தண்டிவந்த வரிகளிலிருந்து - அதாவது, நிலத்தின் விளைச்சல், மரங்களின் கனிகள் ஆகியவற்றுக்கான வரிகளிலிருந்து, எருசலேமில் பலியிடுவோருக்கு விலக்கு வழங்குகிறோம்.
35 எமக்குச் சேரவேண்டிய பத்திலொரு பங்கு, உப்புவரி, அரசருக்குரிய சிறப்பு வரி, மற்ற வரிகள் ஆகிய அனைத்திலுமிருந்தும் இதுமுதல் விலக்கு வழங்குகிறோம்.
36 வழங்கப்பட்ட வரிச் சலுகைகளில் ஒன்றுகூட இன்றுமுதல் என்றும் திரும்பப் பெறப்படமாட்டாது.
37 ஆகவே இப்போது இந்த மடலின் நகல் ஒன்றை எடுத்து யோனத்தானுக்குக் கொடுத்துத் திருமலையில் அனைவரும் காணக்கூடிய இடத்தில் அதை வைக்கச் செய்யும்.' "
38 தன் ஆட்சியில் நாடு அமைதியாக இருப்பதையும் எவரும் தன்னை எதிர்க்காதிருப்பதையும் தெமேத்திரி மன்னன் கண்டு, பிற இனத்தாரின் தீவுகளிலிருந்து தான் திரட்டியிருந்த அன்னியப் படைகளைத்தவிரத் தன் படைவீரர் அனைவரையும் அவரவர் இடத்துக்கு அனுப்பினான். இவ்வாறு செய்ததால் அவனுக்கு முன்னிருந்தவர்களுடைய படைகள் யாவும் அவனைப் பகைத்தன.
39 முன்னர் அலக்சாண்டரின் ஆதரவாளர்களுள் ஒருவனான திரிபோ, படைகள் அனைத்தும் தெமேத்திரி மீது முறையிடுவதைக் கண்டான். அலக்சாண்டரின் இளையமகன் அந்தியோக்கை வளர்த்துவந்த அரேபியனான இமால்குவிடம் சென்றான்;
40 அந்தியோக்கு தன் தந்தைக்குப் பதிலாய் ஆட்சி செய்வதற்கு அவனைத் தன்னிடம் ஒப்புவிக்கும்படி இமால்குலைத் திரிபோ வருந்திக்கேட்டுக் கொண்டான்; தெமேத்திரி செய்த யாவற்றையும் படைகள் அவன்மீது கொண்டிருந்த வெறுப்பையும் எடுத்துக்கூறினான்; பல நாள் அவ்விடத்தில் தங்கியிருந்தான்.
41 எருசலேம் கோட்டையிலும் மற்ற அரண்காப்புகளிலும் இருந்த வீரர்கள் இஸ்ரயேலுக்கு எதிராய்ப் போர் புரிந்தவண்ணம் இருந்ததால், அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளும்படி தெமேத்திரி மன்னனைக் கேட்டுக் கொள்ள யோனத்தான் ஆளனுப்பினார்.
42 தெமேத்திரி யோனத்தானுக்கு அனுப்பிவைத்த செய்த பின்வருமாறு; "உமக்கும் உம் இனத்தாருக்கும் நான் இதை மட்டும் செய்யப் போவதில்லை; வாய்ப்புக் கிடைக்கும்போது உம்மையும் உம் இனத்தாரையும் மிகவும் பெருமைப்படுத்துவேன்.
43 இப்போது என் படைகள் யாவும் கிளர்ச்சி செய்துவருவதால் எனக்காகப் போரிட ஆள்களை அனுப்புமாறு உம்மை வேண்டிக் கொள்கிறேன். "
44 ஆகவே யோனத்தான் வலிமை வாய்ந்த படைவீரர்கள் மூவாயிரம் பேரை அந்தியோக்கி நகருக்கு அனுப்பினார். அவர்கள் மன்னனிடம் சேர்த்ததும் அவர்களின் வரவால் அவன் மகிழ்ச்சி கொண்டான்.
45 ஏனெனில் நகர மக்களுள் ஓர் இலட்சத்து இருபதாயிரம் பேர் நகரின் நடுவில் ஒன்றுகூடி, மன்னனைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தனர்.
46 ஆனால் மன்னன் அரண்மனைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான். நகரில் இருந்தவர்கள் முக்கிய தெருக்களைக் கைப்பற்றிப் போர்தொடுத்தார்கள்.
47 ஆகவே மன்னன் யூதர்களைத் தன் உதவிக்கு அழைத்தான். உடனே அவர்கள் அனைவரும் அணிதிரண்டு அவனிடம் சென்றார்கள்; பிறகு நகரெங்கும் பிரிந்து சென்று அன்று ஏறத்தாழ ஓர் இலட்சம் பேரைக் கொன்றார்கள்;
48 நகரைத் தீக்கிரையாக்கி அன்று ஏராளமான கொள்ளைப் பொருள்களை எடுத்துக் கொண்டார்கள்; இவ்வாறு மன்னனைக் காப்பாற்றினார்கள்.
49 யூதர்கள் தாங்கள் திட்டமிட்டபடி நகரைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்கள் என்று நகரில் இருந்தவர்கள் கண்டார்கள்; இதனால் துணிவு இழந்து மன்னனிடம் சென்று கதறி மன்றாடினார்கள்;
50 "எங்களுக்கு அமைதி தாரும்; எங்களுக்கும் நகருக்கும் எதிராகப் போரிடும் யூதர்களைத் தடுத்து நிறுத்தும்" என்று வேண்டினார்கள்;
51 தங்கள் படைக்கலங்களை எறிந்துவிட்டுச் சமாதானம் செய்து கொண்டார்கள். இவ்வாறு யூதர்கள் மன்னன் முன்பும் அவனது நாட்டு மக்கள் அனைவர் முன்பும் பெருமை பெற்றுத் திரளான கொள்ளைப் பொருள்களோடு எருசலேம் திரும்பினார்கள்.
52 தெமேத்திரி மன்னனுடைய அரசு நிலைபெற்றது; அவனது ஆட்சியில் நாடு அமைதியாய் இருந்தது.
53 பின்னர் அவன் தன் உறுதிமொழிகளையெல்லாம் மீறி, யோனத்தானோடு கொண்டிருந்த நட்புறவை முறித்துக் கொண்டான்; அவரிடமிருந்து பெற்றிருந்த நன்மைகளுக்கு நன்றி காட்டாமல் அவருக்குப் பெரிதும் தொல்லை கொடுத்துவந்தான்.
54 இதன்பிறகு சிறுவன் அந்தியோக்குடன் திரிபோ திரும்பிவந்தான். அந்தியோக்கு முடிபுனைந்து அரசாளத் தொடங்கினான்.
55 தெமேத்திரி திருப்பி அனுப்பியிருந்த படைகளெல்லாம் அந்தியோக்குடன் சேர்ந்து கொண்டு தெமேத்திரியை எதிர்க்கவே அவன் முறியடிக்கப்பட்டு ஓடினான்.
56 திரிபோ யானைகளைப் பிடித்து அந்தியோக்கி நகரைக் கைப்பற்றினான்.
57 பின்னர் சிறுவன் அந்தியோக்கு, "நீர் தலைமைக் குருவாய்த் தொடர்ந்து இருப்பீர் என உறுதிப்படுத்துகிறேன்; நான்கு மாநிலங்களுக்கு ஆளுநராக உம்மை ஏற்படுத்துகிறேன்; மன்னரின் நண்பர்களுள் ஒருவராகவும் ஏற்றுக் கொள்கிறேன்" என்று யோனத்தானுக்கு ஏழுதியனுப்பினான்.
58 பொன் தட்டுகளையும் உணவுக்கலன்களையும் அவருக்கு அனுப்பி வைத்தான்; பொற் கிண்ணத்தில் அருந்தவும் அரச ஆடைகளுக்கு உடுத்திக் கொள்ளவும் பொன் அணியூக்கு அணிந்துகொள்ளவும் அதிகாரம் அளித்தான்;
59 அவருடைய சகோதரரான சீமோனைத் தீரின் எல்லையில் இருந்த கணவாயிலிருந்து எல்லையில் இருந்த கணவாயிலிருந்து எகிப்தின் எல்லை வரை இருந்த பகுதிக்கு ஆளுநராக ஏற்படுத்தினான்.
60 யோனத்தான் புறப்பட்டு யூப்பிரத்தீசு ஆற்றுக்கு மேற்கே இருந்த நகரங்களுக்குச் சென்றார். சிரியாவின் படைகள் யாவும் அவரோடு கூட்டுச் சேர்ந்துகொண்டன. அவர் அஸ்கலோன் நகர் சேர்ந்ததும் நகரில் இருந்தோர் பெரும் சிறப்போடு அவரை வரவேற்றனர்.
61 அவர் அவ்விடமிருந்து காசாவுக்குச் சென்றார். காசாவில் இருந்தவர்கள் வாயில்களை அடைத்து அவரை உள்ளே விடவில்லை. எனவே அவர் அதை முற்றுகையிட்டுப் புறநகர்ப் பகுதிகளைக் கொள்ளையடித்துத் தீக்கிரையாக்கினார்.
62 காசா நகரத்தார் யோனத்தானை வேண்டிக் கொள்ளவே அவரும் அவர்களோடு சமாதானம் செய்து, அவர்களுடைய தலைவர்களின் மைந்தர்களைப் பிணைக்கைதிகளாக எருசலேமுக்கு அனுப்பினார்; நாட்டின் வழியாகச் சென்று தமஸ்கு நகரை அடைந்தார்.
63 தெமேத்திரியின் படைத்தலைவர்கள் தம்மைப் பதவியிலிருந்து நீக்கத்; திட்டமிட்டுக் கலிலேயாவின் காதேசு நகருக்குப் பெரும் படையோடு வந்திருப்பதாக யோனத்தான் கேள்வியுற்றார்;
64 ஆகையால் அவர்களை எதிர்த்துச் சென்றார்; தம் உடன்பிறப்பான சீமோனை யூதேயாவிலேயே விட்டுச் சென்றார்.
65 சீமோன் பெத்சூரை முற்றுகையிட்டுப் பல நாள் அதை எதிர்த்துப் போரிட்டார்; நகரைச் சூழ்ந்து வளைத்துக்கொண்டார்.
66 அவர்கள் தங்களோடு சமாதானம் செய்து கொள்ளும்படி அவரைக் கேட்டுக்கொண்டார்கள். அதற்கு அவரும் இசைந்தார். அவர்களை அவ்விடத்திலிருந்து அகற்றி நகரையும் பிடித்து அங்கு ஒரு காவற்படையை நிறுவினார்.
67 இதற்கிடையில் யோனத்தான் தம் படைகளோடு கெனசரேத்து ஏரி அருகே பாசறை அமைத்திருந்தார். மறுநாள் பொழுது விடியுமுன் அவர்கள் காட்சோர் சமவெளிக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
68 அயல்நாட்டுப் படையினர் சமவெளியில் அவரை எதிர்கொண்டு நேருக்கு நேர் தாக்கினார்கள்; அவரைத் தாக்குவதற்காகப் பதுங்கிப் பாயும் படை ஒன்றை மலைகளில் விட்டுவைத்திருந்தார்கள்.
69 பதுங்கியிருந்தவர்கள் தங்கள் இடங்களிலிருந்து எழுந்துவந்து போரில் கலந்து கொண்டார்கள்.
70 யோனத்தானுடன் இருந்தவர்கள் எல்லாரும் ஓடிப்போனார்கள். அப்சலோமின் மகன் மத்தத்தியா, கால்பியின் மகன் யூதா ஆகிய படைத்தலைவர்களைத் தவிர வேறு ஒருவரும் அங்கு இல்லை.
71 யோனத்தான் தம் ஆடைகளைத் கிழித்துக்கொண்டு மண்ணைத் தம் தலைமேல் தூவிக்கொண்டு இறைவனை வேண்டினார்.
72 பிறகு அவர் போரிடத் திரும்பிச் சென்று எதிரிகளை முறியடித்ததும், அவர்கள் தப்பியோடினார்கள்.
73 யோனத்தானிடமிருந்து ஓடினவர்கள் இதைக் கண்டு திரும்பி வந்து அவரோடு சேர்ந்து கொண்டார்கள்; காதேசில் இருந்து எதிரிகளின் பாசறை வரை அவர்களைத் துரத்திச் சென்று அவ்விடம் பாசறை அமைத்தார்கள்.
74 அன்று அயல்நாட்டு வீரர்களுள் மூவாயிரம் பேர் மடிந்தனர். பிறகு யோனத்தான் எருசலேம் திரும்பினார்.
1 மக்கபேயர் அதிகாரம் 12
1 காலம் தமக்கு ஏற்றதாக இருந்ததைக் கண்ட யோனத்தான் சிலரைத் தேர்ந்தெடுத்து உரோமையர்களோடு தமக்குள்ள நட்புறவை உறதிப்படுத்திப் புதுப்பிக்க அவர்களை உரோமைக்கு அனுப்பினார்;
2 அதே நோக்குடன் ஸ்பார்த்தாவுக்கும் மற்ற இடங்களுக்கும் மடல்கள் விடுத்தார்.
3 அவர்கள் உரோமைக்குச் சென்று ஆட்சிமன்றத்தில் நுழைந்து, "தலைமைக் குரு யோனத்தானும் யூத இனத்தாரும் உங்களோடு முன்பு கொண்டிருந்த நட்புறவையும் ஒப்பந்தத்தையும் புதுப்பிக்க எங்களை அனுப்பியுள்ளார்கள்" என்று சொன்னார்கள்.
4 இந்தத் தூதர்கள் பாதுகாப்புடன் தங்கள் நாடு சென்றடைய உதவும்படியாக, அவர்கள் கடந்து செல்ல வேண்டிருந்த நாடுகளின் தலைவர்களுக்கு எழுதப்பட்டிருந்த மடல்களை உரோமையர்கள் அவர்களிடம் கொடுத்தார்கள்.
5 யோனத்தான் ஸ்பார்த்தர்களுக்கு எழுதிய மடலின் நகல் இதுதான்;
6 "தலைமைக் குருவான யோனத்தானும் நாட்டின் ஆட்சிக்குழுவினரும் குருக்களும் மற்ற யூத மக்களும் தங்களின் சகோதரர்களான ஸ்பார்தர்களுக்கு வாழ்த்துக் கூறி எழுதுவது;
7 உங்கள் நாட்டை ஆண்டுவந்த ஆரியு, 'நீங்கள் எங்கள் சகோதரர்கள்' என்று எங்கள் தலைமைக்குருவான ஓனியாவுக்கு முன்பு எழுதியனுப்பியிருந்தார். அதன் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
8 நீங்கள் அனுப்பிய தூதரை ஓனியா மரியாதையுடன் வரவேற்றார்; ஒப்பந்தம், நட்புறவு, ஆகியனபற்றித் தெளிவாகக் குறிப்பிட்டிருந்த மடலையும் பெற்றுக் கொண்டார்.
9 எங்களிடம் இருக்கும் திருநூல்கள் எங்களுக்கு ஊக்கம் ஊட்டுவதால் இத்தகைய ஒப்பந்தம் எதுவும் எங்களுக்குத் தேவையில்லை.
10 எனினும் உங்களோடு நாங்கள் கொண்டுள்ள சகோதர உணர்வையும் நட்புறவையும் புதுப்பிக்க உங்களுக்கு மடல் அனுப்பியுள்ளோம்; ஏனென்றால் உங்களோடு நாங்கள் கொண்டுள்ள நட்புறவை முறித்துக் கொள்ள விரும்பவில்லை. மேலும் உங்களிடமிருந்து மடல் வந்து வெகு காலம் ஆயிற்று.
11 நாங்கள் எங்கள் திரு நாள்களிலும் மற்றச் சிறப்பு நாள்களிலும் செய்யும் பலிகளிலும் வேண்டுதல்களிலும் இடைவிடாமல் உங்களை நினைவுகூர்கிறோம்; ஏனெனில் சகோதரர்களை நினைவு கூர்வது நல்லதும் பொருத்தமும் ஆகும்.
12 உங்கள் புகழ் கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
13 பல துன்பங்களும் போர்களும் எங்களைச் சூழ்ந்துகொண்டிருந்தன; சுற்றிலும் இருந்த மன்னர்கள் எங்களை எதிர்த்துப் போர் செய்தார்கள்.
14 இந்தப் போர்களில் உங்களுக்கோ மற்ற நட்பு நாடுகளுக்கோ நம் நண்பர்களுக்கோ தொந்தரவு கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.
15 விண்ணக இறைவனின் உதவி எங்களுக்கு இருந்ததால் எங்கள் பகைவர்களிடமிருந்து நாங்கள் காப்பாற்றப்பட்டோம்; எங்கள் பகைவர்கள் முறியடிக்கப்பட்டார்கள்.
16 ஆதலால் அந்தியோக்கின் மகன் நூமேனியையும் யாசோனின் மகன்அந்திப்பாத்தரையும் தேர்ந்தெடுத்து, உரோமையர்களோடு நாங்கள் முன்பு கொண்டிருந்த நட்புறவையும் ஒப்பந்தத்தையும் புதுப்பிக்க அவர்களிடம் அனுப்பியிருக்கிறோம்.
17 உங்களிடம் வந்து உங்களுக்கு எங்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறு அவர்களுக்குக் கட்டளை கொடுத்திருக்கிறோம். நமக்கிடையே உள்ள சகோதர உறவைப் பதுப்பிப்பது தொடர்பான எங்கள் மடலை அவர்கள் உங்களிடம் கொடுப்பார்கள்.
18 எங்களுடைய மடலுக்குப் பதில் எழுதும்படி இப்போது கேட்டுக்கொள்கிறோம். "
19 ஸ்பார்த்தர்கள் ஓனியாவுக்கு விடுத்த மடலின் நகல் இதுதான்;
20 "ஸ்பார்த்தர்களின் மன்னர் ஆரியு தலைமைக் குரு ஓனியாவுக்கு வாழ்த்துக்கூறி எழுதுவது;
21 ஸ்பார்த்தர்களும் யூதர்களும் சகோதரர்கள் என்பதும் ஆபிரகாமின் வழிமரபினர் என்பதும் ஆவணத்தில் காணப்படுகின்றன.
22 நாங்கள் இப்போது இதை அறியவந்திருப்பதால் உங்கள் நலனைப்பற்றி நீங்கள் எங்களுக்கு எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
23 உங்கள் கால்நடைகளும் உடைமைகளும் எங்களுக்குச் சொந்தமாகும்; எங்களுடையவை உங்களுக்குச் சொந்தமாகும் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். இதை உங்களுக்கு எடுத்துரைக்க எங்கள் தூதர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறோம். "
24 தெமேத்திரியின் படைத்தளபதிகள் முந்தியதைவிடப் பெரிய படையோடு தம்மை எதிர்த்துப் போரிடத் திரும்பிவந்திருப்பதை யோனத்தான் கேள்வியுற்றார்;
25 தம்முடைய நாட்டுக்குள் அவர்கள் நுழைவதை விரும்பாததால் எருசலேமைவிட்டுப் புறப்பட்டு ஆமாத்து நாட்டில் அவர்களை எதிர்கொண்டார்;
26 அவர்களின் பாசறைக்கு ஒற்றர்களை அனுப்பினார். அவர்கள் திரும்பி வந்து, பகைவர்கள் இரவில் யூதர்களைத் தாக்க அணிவகுத்திருப்பதாக அவருக்கு அறிவித்தார்கள்.
27 கதிரவன் மறைந்தபோது தம்முடைய ஆள்கள் போருக்கு இரவு முழுவதும் படைக்கலங்களோடு விழித்திருக்குமாறு யோனத்தான் கட்டளையிட்டார்; பாசறையைச் சுற்றிலும் காவற்படையினரை நிறுத்தினார்.
28 யோனத்தானும் அவருடைய ஆள்களும் போருக்கு முன்னேற்பாடாய் இருந்தார்கள் என்று பகைவர்கள் கேள்விப்பட்டு அஞ்சி மனக்கலக்கமுற்றார்கள். தங்களது பாசறைக்கு நடுவே தீமூட்டி விட்டு ஓடிவிட்டார்கள்.
29 யோனத்தானும் அவருடைய ஆள்களும் தீ எரிவதைக் கண்டார்கள். ஆனால் எதிரிகள் ஓடிவிட்டதைப் பொழுது விடியுமட்டும் அறியவில்லை.
30 யோனத்தான் அவர்களைத் துரத்திச் சென்றார்; ஆனால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை; ஏனெனில் எலூத்தர் ஆற்றை அவர்கள் ஏற்கனவே கடந்துவிட்டார்கள்.
31 ஆகவே சபதேயர் என்று அழைக்கப்பெற்ற அரேபியரை நோக்கி யோனத்தான் திரும்பிச் சென்று அவர்களை முறியடித்துக் கொள்ளையடித்தார்;
32 பிறகு அங்கிருந்து புறப்பட்டுத் தமஸ்கு நகருக்குச் சென்று அந்த மாநிலம் முழுவதும் சுற்றிப்பார்த்தார்.
33 சீமோனும் புறப்பட்டு அஸ்கலோனுக்கும் அதை அடுத்த கோட்டைகளுக்கும் சென்றார்; பின் யாப்பா பக்கம் திரும்பி அதைக் கைப்பற்றினார்;
34 ஏனெனில் தெமேத்திரியின் ஆள்களிடம் யாப்பாவின் மக்கள் தங்கள் கோட்டையை ஒப்படைக்கத் திட்டமிட்டிருந்தார்கள் என்று கேள்விப்பட்டிருந்தார்; அதைக் காப்பதற்குக் காவற்படை ஒன்றை நிறுவினார்.
35 யோனத்தான் திரும்பி வந்து மக்களின் மூப்பர்களை ஒன்று கூட்டினார்; யூதேயாவில் கோட்டைகளைக் கட்டவும், எருசலேமின் மதில்களை இன்னும் உயரமாக எழுப்பவும்,
36 கோட்டைக்கும் நகருக்கும் நடுவே உயர்ந்த தடுப்புச்சுவர் எழுப்பிக் காவற்படையினர் நகருக்குள் சென்று எதையும் வாங்கவோ விற்கவோ கூடாதவாறு கோட்டையை நகரினின்று துண்டித்து விடவும் அவர்களோடு சேர்ந்து திட்டமிட்டார்.
37 ஆகவே நகரை வலுப்படுத்த எல்லாரும் கூடிவந்தனர்; எனெனில் கிழக்கே பள்ளத்தாக்குக்கு மேல் இருந்த மதிலின் ஒரு பகுதி ஏற்கனவே விழுந்து விட்டது. கப்பனாத்தா என்று அழைக்கப்பெற்ற பகுதியையும் அவர் பழுது பார்த்தார்.
38 அதே போன்று செபேலா கட்டியெழுப்பிக் கதவுகளும் தாழ்ப்பாள்களும் அமைத்து அதை வலுப்படுத்தினார்.
39 அப்போது ஆசியாவின் அரசனாகி முடிபுனையவும் அந்தியோக்கு மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யவும் திரிபோ வழிதேடினான்;
40 அதற்கு யோனத்தான் தன்னை அனுமதிக்கமாட்டார் என்றும், தன்னை எதிர்த்துப் போர்செய்வார் என்றும் அஞ்சி அவரைப் பிடித்துக் கொல்ல முயற்சி செய்தான்; அங்கிருந்து புறப்பட்டுப் பெத்சானை அடைந்தான்.
41 யோனத்தான் நாற்பதாயிரம் தேர்ந்தெடுத்த படைவீரர்களொடு திரிபோவை எதிர்த்துப் பெத்சான் சென்றடைந்தார்.
42 யோனத்தான் பெரும் படையோடு வந்திருப்பதைத் திரிபோ கண்டு அவரை எதிர்த்துத் தாக்க அஞ்சினான்;
43 அதற்கு மாறாக, அவரைச் சிறப்போடு வரவேற்றுத் தன் நண்பர்கள் அனைவரிடமும் அவரை அறிமுகம் செய்துவைத்து, அவருக்கு அன்பளிப்புகள் வழங்கினான்; தனக்குக் கீழ்ப்படிவதுபோலவே அவருக்கும் கீழ்ப்படிய வேண்டும் என்று தன் நண்பர்களுக்கும் படை வீரர்களுக்கும் கட்டளையிட்டான்.
44 பின் யோனத்தானை நோக்கி, "நமக்கிடையே போரே இல்லாத சூழ்நிலையில் இவ்வீரர்கள் எல்லாருக்கும் இத்துணை தொல்லை கொடுப்பானேன்?
45 ஆதலால் இப்போது இவர்களை வீடுகளுக்கு அனுப்பிவிடும். உம்முடன் இருக்கச் சிலரை மட்டும் தேர்ந்துகொண்டு என்னோடு தாலமாய் நகருக்கு வாரும். அதையும் மற்றக் கோட்டைகளையும் எஞ்சியிருக்கும் படைகளையும் அலுவலர்கள் அனைவரையும் உம்மிடம் ஒப்படைத்துவிட்டு நான் வீடு திரும்புவேன். இதற்காகவே நான் இங்கு வந்தேன்" என்றான்.
46 யோனத்தான் அவனை நம்பி அவன் சொற்படி செய்து தம் படைகளை அனுப்பிவிட்டார். அவர்கள் யூதேயா நாட்டுக்குத் திரும்பினார்கள்.
47 ஆனால் அவர் தம்மோடு மூவாயிரம் வீரர்களை வைத்துக் கொண்டார்; இவர்களுள் இரண்டாயிரம் பேரைக் கலிலேயாவில் விட்டுச் சென்றார்; எஞ்சியிருந்த ஆயிரம் பேர் அவருடன் சென்றனர்.
48 யோனத்தான் தாலமாய் நகருக்குள் நுழைந்தபோது அந்த நகரத்தார் வாயில்களை அடைத்து அவரைப் பிடித்துக் கொண்டனர்; அவருடன் சென்றவர்கள் எல்லாரையும் வாளுக்கு இரையாக்கினர்.
49 மேலும் யோனத்தானுடைய வீரர்கள் எல்லாரையும் கொல்வதற்குக் காலாட்படையினரையும் குதிரைவீரர்களையும் கலிலேயாவுக்கும் பெரிய சமவெளிக்கும் திரிபோ அனுப்பினான்.
50 யோனத்தானுடைய ஆள்களுடன் அவரும் பிடிபட்டுக் கொல்லப்பட்டார் என்று அவருடைய மற்ற வீரர்கள் எண்ணி, ஒருவர் மற்றவருக்கு ஊக்கமூட்டிப் போருக்கு அணிவகுத்துச் சென்றார்கள்.
51 துரத்திவந்த பகைவர்கள், தங்கள் உயிருக்காக இவர்கள் போராடத் துணிந்திருந்ததைக் கண்டு திரும்பி விட்டார்கள்.
52 இவர்கள் அனைவரும் பாதுகாப்போடு யூதேயா நாட்டுக்குத் திரும்பிச் சென்ற யொனத்தானுக்காகவும் அவருடன் மடிந்தவர்களுக்காகவும் துயரம் கொண்டாடினார்கள். அவர்களைப் பேரச்சம் ஆட்கொண்டது. இஸ்ரயேல் நாடு முழுவதும் துயரில் ஆழ்ந்து புலம்பியது.
53 சுற்றியிருந்த பிற இனத்தார் அனைவரும் அவர்களை அழித்தொழிக்கத் தேடினார்கள்; ஏனெனில் அவர்கள், "இவர்களுக்குத் தலைவனோ உதவியாளனோ இல்லை. ஆதலால் இப்போது இவாகள்மீது நாம் போர்தொடுத்து, மனிதர்களிடையே இவர்களின் நினைவு அற்றுப் போகும்படி செய்வோம்" என்று சொல்லியிருந்தார்கள்.
1 மக்கபேயர் அதிகாரம் 13
1 யூதேயா நாட்டின்மீது படையெடுத்து அதை அழித்தொழிக்கும்படி திரிபோ பெரும் படை திரட்டியிருந்தான் என்று சீமோன் கேள்விப்பட்டார்;
2 மக்கள் அஞ்சி நடுங்கியிருப்பதைக் கண்டு அவர் எருசலேம் சென்று மக்களை ஒன்றுசேர்த்தார்.
3 அவர்களுக்கு அவர் ஊக்கமளித்து, "நானும் என் சகோதரர்களும் என் தந்தையின் குடும்பமும் திருச்சட்டத்துக்காகவும் திருஉறைவிடத்துக்காகவும் செய்துள்ள அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள்; நாங்கள் புரிந்துள்ள போர்களையும் எதிர்கொண்ட இடுக்கண்களையும் அறிவீர்கள்.
4 இதைமுன்னிட்டே என் சகோதரர்கள் அனைவரும் இஸ்ரயேலுக்காக மடிந்தார்கள். இப்பொது நான் மட்டுமே எஞ்சியிருக்கிறேன்.
5 எந்தத் துன்பம் நேர்ந்தாலும் என் உயிரை நான் காப்பாற்றிக்கொள்ள முனைவேன் எனச் சிறிதும் எண்ண வேண்டாம்; ஏனென்றால் என் சகோதரர்களைவிட நான் சிறந்தவன் அல்லேன்.
6 ஆதலால் என் இனத்தார், திருஉறைவிடம், உங்கள் மனைவி மக்கள் ஆகியோருக்காக வேற்றினத்தார் எல்லாரையும் பழிவாங்குவேன்; ஏனெனில் அவர்கள் நம்மீது கொண்ட பகைமையினால் நம்மை அழித்தொழிக்கக் கூடியிருக்கிறார்கள்" என்றார்.
7 இச்சொற்களைக் கேட்டதும் மக்கள் புத்துணர்வு பெற்றார்கள்;
8 எல்லோரும் உரத்த குரலில், "உம் சகோதரர்களாகிய யூதாவுக்கும் யோனத்தானுக்கும் பதிலாக நீரே எங்கள் தலைவர்.
9 நீர் எங்கள் போர்களை நடத்தும்; நீர் சொல்வதெல்லாம் நாங்கள் செய்வோம்" என்றார்கள்.
10 ஆகவே சீமோன் எல்லாப் போர்வீரர்களையும் ஒன்றுசேர்த்து எருசலேமின் மதில்களைக் கட்டி முடிக்க விரைந்தார்; சுற்றிலும் அதை வலுப்படுத்தினார்;
11 அப்சலோமின் மகன் யோனத்தானையும் அவருடன் திரளான படையையும் யாப்பாவுக்கு அனுப்பினார். யோனத்தான் அங்கு இருந்தவர்களை வெளியே துரத்திவிட்டு அவ்விடத்தில் தங்கியிருந்தார்.
12 திரிபோ தாலமாயை விட்டுப் புறப்பட்டுத் திரளான படையோடு யூதேயா நாட்டின்மீது படையெடுத்தான்; சிறைப்பட்டிருந்த யோனத்தானைத் தன்னுடன் அழைத்துச் சென்றான்.
13 சமவெளிக்கு எதிரில் அதிதாவில் சீமோன் பாசறை அமைத்தார்.
14 அவர்தம் சகோதரரான யோனத்தானுக்குப் பதிலாகத் தலைவரானார் என்றும் தன்னுடன் போர்செய்யவிருக்கிறார் என்றும் திரிபோ அறிந்தான்; ஆகவே அவரிடம் தூதர்களை அனுப்பி,
15 "உம் சகோதரரான யோனத்தான் வகித்திருந்த பொறுப்புகள் தொடர்பாக அரசு கருவூலத்துக்கு அவர் செலுத்தவேண்டிய பணத்தை முன்னிட்டு, அவரை நாங்கள் சிறைப்படுத்தியிருக்கிறோம்.
16 அவர் விடுதலை பெற்றபின் எங்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யமாட்டார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, நீர் நான்கு டன் வெள்ளியோடு அவருடைய மைந்தர்களுள் இருவரைப் பிணையாக இப்போது அனுப்பும்; நாங்கள் அவரை விடுவிக்கிறோம்" என்று சொல்லச் சொன்னான்.
17 அவர்கள் வஞ்சகமாய்ப் பேசுகிறார்கள் என்று சீமோன் அறிந்திருந்தும் இஸ்ரயேல் மக்களின் கடும் பகைக்குத் தாம் ஆளாகாதபடி பணத்தையும் பிள்ளைகளையும் கொண்டுவரக் கட்டளையிட்டார்.
18 ஏனெனில், "சீமோன் பணத்தையும் பிள்ளைகளையும் திரிபோவுக்கு அனுப்பாததால்தானே யொனத்தான் மடிந்தார்" என மக்கள் சொல்லக்கூடும் என்று அஞ்சினார்.
19 எனவே பிள்ளைகளையும் நான்கு டன் வெள்ளியையும் சீமோன் அனுப்பிவைத்தார். ஆனால் திரிபோ தான் சொன்ன சொல்லை மீறி யோனத்தானை விடுதலை செய்யவில்லை.
20 பிறகு நாட்டின்மீது திரிபோ படையெடுத்து அழிப்பதற்கு அதனுள் புகுந்தான்; அதோராவுக்குப் போகும் வழியாகச் சுற்றிச் சென்றான். அவன் சென்ற இடமெல்லாம் சீமோனும் தம் படையோடு அவனுக்கு எதிராக அணிவகுத்துச் சென்றார்.
21 எருசலேம் கோட்டைக்குள் இருந்த பகைவர்கள், பாலைநிலம் வழியாய்த் தங்களிடம் வருவதற்கும் உணவுப்பொருள்களைக் கொடுத்தனுப்புவதற்கும் திரிபோவிடம் தூதர்களை அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.
22 ஆகவே திரிபோ தன் குதிரைவீர்களை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தான்; ஆனால் அன்று இரவு பனிமிகுதியாய்ப் பெய்ததால் அவனால் போகமுடியவில்லை; எனவே அவன் புறப்பட்டுக் கிலயாதுக்குச் சென்றான்.
23 பாஸ்காமா அருகே வந்தபோது அவன் யோனத்தானைக் கொன்றான். அவ்விடத்திலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
24 பிறகு திரிபோ தன் நாட்டுக்குத் திரும்பிச் சென்றான்.
25 சீமோன் தம் சகோதரரான யோனத்தானின் எலும்புகளை எடுத்துவரச் செய்து, தம் மூதாதையரின் நகரமாகிய மோதயினில் அவற்றை அடக்கம் செய்தார்.
26 இஸ்ரயேலர் எல்லாரும் பெரிதும் துயரம் கொண்டாடினர்; அவருக்காகப் பல நாள் அழுது புலம்பினர்.
27 சீமோன் தம் தந்தையினுடையவும் சகோதரர்களுடையவும் கல்லறைக்குமேல் முன்னும் பின்னும் பளபளப்பான கற்கள் பதிக்கப்பட்ட நினைவுமண்டபம் ஒன்றை எழுப்பினார். தொலையிலிருந்து பார்க்கக்கூடிய அளவு அது உயர்ந்திருந்தது.
28 தம் தாய் தந்தைக்கும் நான்கு சகோதரர்களுக்கும் எதிர் எதிராக ஏழு கூர்ங்கோபுரங்களை அவர் எழுப்பினார்;
29 இந்தக் கூர்ங்கோபுரங்களுக்குவேலைப்பாடுகள் கொண்ட பின்னணி அமைப்பு ஒன்றை நிறுவினார்; உயர்ந்த தூண்களை எழுப்பி அவற்றின்மேல் நிலையான நினைவுச் சின்னமாக இருக்கும்படி படைக்கலங்களைப் பொறித்தார்; கடற்பயணம் செய்யும் யாவரும் காணும்படி படைக்கலங்களுக்கு அருகே கப்பல்களைச் செதுக்கிவைத்தார்.
30 அவர் மோதயின் நகரில் கட்டிய இந்தக் கல்லறை இந்நாள்வரை இருக்கிறது.
31 இளைஞனான அந்தியோக்கு மன்னனுக்கு எதிராயத் திரிபோ சூழ்ச்சி செய்து அவனைக் கொன்றான்;
32 அவனுக்குப் பதிலாக ஆசியாவின் அரசனாகி முடி புனைந்து நாட்டுக்குப் பேரிடர் விளைவித்தான்.
33 சீமோன் யூதேயாவின் கோட்டைகளைக் கட்டி, சுற்றிலும் உயர்ந்த காவல்மாடங்கள், பெரிய மதில்கள், கதவுகள், தாழ்ப்பாள்கள் ஆகியவற்றை அமைத்துக் கோட்டைகளை வலுப்படுத்தினார்; கோட்டைகளுக்குள் உணவுப் பொருள்களைச் சேர்த்துவைத்தார்.
34 பின்பு சிலரைத் தேர்ந்தெடுத்து நாட்டுக்கு வரிவிலக்குக் கோரும்படி அவர்களைத் தெமேத்திரியு மன்னனிடம் அனுப்பினார்; ஏனென்றால் திரிபோ கொள்ளையடிப்பது ஒன்றையே தன் தொழிலாகக் கொண்டிருந்தான்.
35 தெமேத்திரி மன்னன் அதற்கு இணக்கம் தெரிவித்துப் பின்வரும் மடலைச் சீமோனுக்கு எழுதி அனுப்பினான்;
36 "தலைமைக் குருவும் மன்னர்களின் நண்பருமான சீமோனுக்கும் மூப்பர்களுக்கும் யூத இனத்தாருக்கும் தெமேத்திரி மன்னர் வாழ்த்துக் கூறி எழுதுவது;
37 நீங்கள் அனுப்பிவைத்த பொன்முடியையும் பொன் குருத்தோலையையும் பெற்றுக்கொண்டோம்; உங்களுடன் நிலைத்த சமாதானம் செய்துகொள்ளவும் உங்களுக்கு வரிவிலக்கு அளிக்குமாறு எம் அலுவலர்களுக்கு எழுதவும் ஆயத்தமாய் இருக்கிறோம்.
38 நாம் உங்களோடு செய்துகொண்ட ஒப்பந்தங்களை உறுதிப்படுத்துகிறோம். நீங்கள் கட்டிய கோட்டைகள் உங்களுக்கே சொந்தமாகும்.
39 இந்நாள்வரை நீங்கள் செய்துள்ள தவறுகளையும் குறைகளையும் மன்னிக்கிறோம்; நீங்கள் அரசருக்குச் செலுத்தவேண்டிய சிறப்பு வரியிலிருந்து விலக்கு வழங்குகிறோம். எருசலேமில் வேறு வரிகள் இதுவரை விதிக்கப்பட்டிருந்தால் அவையும் இனிமேல் தண்டப்படமாட்டா.
40 உங்களிடையே தகுதியுள்ளவர்கள் அரசுப் பணிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். நம்மிடையே அமைதி நிலவட்டும். "
41 நூற்று எழுபதாம் ஆண்டு பிற இனத்தாரின் அடிமை நுகத்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் விடுதலை அடைந்தார்கள்.
42 "பெரும் தலைமைக் குருவும், படைத்தளபதியும் யூதர்களின் தலைவருமான சீமோன் ஆட்சிசெலுத்தும் முதல் ஆண்டு" என்று இஸ்ரயேல் மக்கள் தங்கள் ஆவணங்களிலும் ஒப்பந்தங்களிலும் எழுதத் தொடங்கினார்கள்.
43 அக்காலத்தில் சீமோன் கசாரா நகரை முற்றுகையிட்டுப் படைகளால் அதைச் சூழ்ந்துகொண்டார்; நகரக்கூடிய மரக்கோபுரம் ஒன்று செய்து அதை நகருக்குக் கொண்டுவந்து, காவல்மாடம் ஒன்றைத் தாக்கிக் கைப்பற்றினார்.
44 அந்த மரக்கோபுரத்துக்குள் இருந்தவர்கள் நகரினுள் நுழைந்ததும் அங்குப் பெருங் குழப்பம் உண்டாயிற்று.
45 நகரில் இருந்தவர்கள் துயரின் அடையாளமாகத் தங்களின் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, தங்களை மனைவி மக்களோடு மதில் மேல் ஏறினார்கள்; உரத்த குரல் எழுப்பித் தங்களோடு சமாதானம் செய்து கொள்ளுமாறு சீமோனை வேண்டிக் கொண்டார்கள்;
46 "நாங்கள் செய்த தீமைகளுக்கு ஏற்ப எங்களைத் தண்டியாது எங்கள்மீது மனமிரங்கும்" என்று கெஞ்சினார்கள்.
47 சீமோனும் அவர்களோடு ஒப்பந்தம் செய்து போர்புரிவதை நிறுத்தினார்; ஆனால் அவர்களை நகருக்கு வெளியே துரத்திவிட்டுச் சிலைகள் இருந்த வீடுகளைத் தூய்மைப்படுத்திய பின்பு புகழ்ப்பாக்களைப் பாடி இறைவனைப் போற்றியவண்ணம் நகருக்குள் நுழைந்தார்;
48 அதனின்று எல்லாத் தீட்டுகளையும் நீக்கி, திருச்சட்டப்படி ஒழுகிவந்தோரை அவ்விடம் குடியேற்றினார்; அதை மேலும் வலுப்படுத்தி அதில் தமக்கென ஓர் இல்லத்தையும் அமைத்துக்கொண்டார்.
49 ஆனால் எருசலேம் கோட்டைக்குள் இருந்தவர்கள் வெளியே நாட்டுப்புறம் போகவும் நகருக்குள் வரவும், வாங்கவும் விற்கவும் தடைசெய்யப்பட்டிருந்தார்கள்; ஆதலால் அவர்கள் பசியால் வருந்தினார்கள்; பலர் பட்டினியால் மடிந்தனர்.
50 இறுதியில் அவர்கள் சீமோனிடம் கதறியழுது தங்களுக்கு அமைதி அளிக்குமாறு அவரை வேண்டிக்கொண்டார்கள். அவரும் அவ்வாறே செய்தார்; ஆனால் அவர்களை அவ்விடத்தினின்று துரத்திவிட்டுக் கோட்டையைத் தீட்டுகளினின்று தூய்மைப்படுத்தினார்.
51 இஸ்ரயேலின் பெரும் பகைவன் அழிக்கப்பட்டதால், நூற்று எழுபத்தோராம் ஆண்டு இரண்டாம் மாதம் இருபத்துமூன்றாம் நாள் புகழ்ப்பாக்களையும் நன்றிப்பாக்களையும் பாடிக்கொண்டும் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டும், யாழ், கைத்தாளம், சுரமண்டலம் ஆகிய இசைக்கருவிகளை மீட்டிக்கொண்டும் கோட்டைக்குள் யூதர்கள் நுழைந்தார்கள்.
52 அந்த நாளை ஆண்டுதோறும் அவர்கள் மகிழ்ச்சியாய்க் கொண்டாட வேண்டும் என்று சீமோன் கட்டளையிட்டார். கோட்டைக்கு அருகில் இருந்த கோவில் மலையை மேலும் வலுப்படுத்தி, அதில் அவரும் அவருடன் இருந்தவர்களும் வாழ்ந்தார்கள்.
53 தம் மகன் யோவான் ஆண்மை கொண்டவராய் இருக்கக் கண்ட சீமோன் அவரைப் படைகளுக்கெல்லாம் தலைவராக ஏற்படுத்தினார். யோவான் கசாராவில் வாழ்ந்துவந்தார்.
1 மக்கபேயர் அதிகாரம் 14
1 திரிபோவை எதிர்த்துப் போரிட உதவி கேட்கும்படி நூற்று எழுபத்திரண்டாம் ஆண்டு தெமேத்திரி மன்னன் தன் படைகளைத் திரட்டிக்கொண்டு மேதியாவுக்குச் சென்றான்;
2 தெமேத்திரி தன் எல்லைக்குள் நுழைந்துவிட்டான் என்று பாரசீகம், மேதியா நாடுகளின் மன்னனான அர்சாகு கேள்விப்பட்டு அவனை உயிரோடு பிடித்துத் தன்னிடம் கொண்டு வருவதற்காகத் தன் படைத்தலைவர்களுள் ஒருவனை அனுப்பினான்.
3 அவன் சென்று தெமேத்திரியின் படையை முறியடித்து அவனைப் பிடித்து அர்சாகு அரசனிடம் கூட்டிச் சென்றான். அரசன் அவனைச் சிறையில் அடைத்தான்.
4 சீமோனுடைய காலம் முழுவதும் யூதா நாடு அமைதியாய் இருந்தது. அவர் தம் இனத்தாரின் நலனையே நாடினார். அவருடைய அதிகாரமும் மாட்சியும் அவர்தம் ஆட்சிக்காலம் முழுவதும் அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தன.
5 யாப்பா நகர்த் துறைமுகத்தைக் கைப்பற்றினார்; தீவுகளுக்குச் செல்லும் வாயிலாக அதை அமைத்தார்; இச்செயல் அவரது மாட்சிக்கே மணிமுடி ஆயிற்று.
6 தம் அரசின் எல்லைகளை விரிவுபடுத்தினார்; நாட்டைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
7 மிகப் பல போர்க் கைதிகளை ஒன்றுசேர்த்தார்; கசாராவையும் பெத்சூரையும் எருசலேம் கோட்டையையும் அடிபணியச்செய்தார்; கோட்டையிலிருந்து தீட்டுகளை நீக்கித் தூய்மைப்படுத்தினார். அவரை எதிர்த்தெழ யாரும் இல்லை.
8 மக்கள் தங்கள் நிலத்தை அமைதியாகப் பயிரிட்டு வந்தார்கள்; நிலம் நல்ல விளைச்சலைத் தந்தது; சமவெளி மரங்கள் கனி கொடுத்தன.
9 மூப்பர்கள் அனைவரும் தெருக்களில் அமர்ந்தார்கள்; நடந்த நல்லவைபற்றிக் கூடிப் பேசினார்கள்; இளைஞர்கள் பகட்டான போருடைகளை அணிந்தார்கள்.
10 சீமோன் உணவுப்பொருள்களைச் சேகரித்து நகரங்களுக்கு வழங்கினார்; பாதுகாப்புக்கான வழிவகைகளை அமைத்துக் கொடுத்தார். அவரது மாட்சியின் புகழ் உலகின் கடை எல்லைவரை பரவியது.
11 அவரது நாட்டில் அமைதி நிலவியது; இஸ்ரயேலில் மகிழ்ச்சி பொங்கிவழிந்தது.
12 அனைவரும் அவரவர்தம் திராட்சைக்கொடிக்கு அடியிலும் அத்தி மரத்துக்கு அடியிலும் அமைதியாக அமர்ந்திருந்தனர்; அவர்களை அச்சுறுத்துவார் எவரும் இல்லை.
13 நாட்டில் இஸ்ரயேலரை எதிர்க்க எவரும் இல்லை; அக்காலத்தில் எதிரி நாட்டு மன்னர்களும் முறியடிக்கப்பட்டார்கள்.
14 அவர் தம் மக்களுள் நலிந்தோர் அனைவருக்கும் வலுவூட்டினார். திருச்சட்டத்தின் மீது பற்றார்வம் கொண்டிருந்தார்; நெறிகெட்டவர்களையும் தீயவர்களையும்; அழித்தொழித்தார்.
15 அவர் திருஉறைவிடத்தை மாட்சிமைப்படுத்தினார்; திரளான கலன்களால் அதை அண்செய்தார்.
16 யோனத்தான் இறந்ததுபற்றி உரோமையர்கள் கேள்விப்பட்டார்கள்; ஸ்பார்த்தர்களுக்கும் அச்செய்தி எட்டியது. அவர்கள் எல்லாரும் பெரிதும் வருந்தினார்கள்.
17 அவருக்குப் பதிலாக அவருடைய சகோதரரான சிமோன் தலைமைக் குருவானார் என்றும் நாட்டையும் அதன் நகரங்களையும் ஆண்டுவந்தார் என்றும் ஸ்பார்த்தர்கள் கேள்வியுற்றார்கள்.
18 அவருடைய சகோதரர்களான யூதாவோடும் யோனத்தானோடும் தாங்கள் முன்பு செய்திருந்த நட்புறவையும் ஒப்பந்தத்தையும் புதுப்பிக்கும்படி வெண்கலத் தகடுகளில் அவருக்கு எழுதியனுப்பினார்கள்.
19 அவை எருசலேமில் சபை முன்னிலையில் படிக்கப்பட்டன.
20 ஸ்பார்த்தர்கள் அனுப்பியிருந்த மடலின் நகல் பின்வருமாறு; "தலைமைக் குருவாகிய சீமோனுக்கும் மூப்பர்களுக்கும் குருக்களுக்கும் மற்ற யூத மக்களாகிய எங்கள் சகோதரர்களுக்கும் ஸ்பார்த்தாவின் ஆளுநர்களும் நகரத்தாரும் வாழ்த்துக் கூறி எழுதுவது;
21 எங்கள் மக்களிடம் நீங்கள் அனுப்பிய தூதர்கள் உங்கள் பெருமை, புகழ் பற்றி எங்களுக்கு அறிவித்தார்கள். நாங்களும் அவர்களது வருகையினால் மகிழ்ச்சி அடைந்தோம்.
22 அவர்கள் சொன்ன யாவற்றையும் நாங்கள் பொதுப் பதிவேடுகளில் பின்வருமாறு எழுதிக் கொண்டோம்; 'யூதர்களுடைய தூதர்களான அந்தியோக்கின் மகன் நூமேனியும், யாசோன் மகன் அந்திப்பாத்தரும் எங்களோடு தங்களுக்குள்ள நட்புறவைப் புதுப்பித்துக் கொள்ள எங்களிடம் வந்தார்கள்.
23 அவர்களைச் சிறப்புடன் வரவேற்கவும், அவர்கள் கூறிய சொற்களை ஸ்பார்த்தர்கள் தங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுமாறு பொது ஆவணங்களில் அவற்றை எழுதி வைக்கவும் மக்கள் விருப்பம் கொண்டார்கள். இவற்றின் நகல் ஒன்றைத் தலைமைக் குருவாகிய சிமோனுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.' "
24 இதன் பிறகு, உரோமையர்களோடு செய்திருந்த ஒப்பந்தத்தை உறுதிசெய்ய ஆயிரம் மினா எடையுள்ள ஒரு பெரிய பொற் கேடயத்தோடு நூமேனியைச் சீமோன் உரோமைக்கு அனுப்பினார்.
25 இஸ்ரயேல் மக்கள் இவற்றைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, "சிமோனுக்கும் அவருடைய மைந்தர்களுக்கும் நாங்கள் எவ்வாறு நன்றி செலுத்துவோம்?
26 ஏனெனில் அவரும் அவருடைய சகோதரர்களும் அவருடைய தந்தை வீட்டாரும் உறுதியாக இருந்தார்கள்; இஸ்ரயேலின் பகைவர்களோடு போரிட்டு அவர்களைத் துரத்தியடித்தார்கள்; இவ்வாறு அதன் விடுதலையை நிலை நாட்டினார்கள்" என்று சொல்லி வியந்தார்கள். எனவே இச்சொற்களை வெண்கலத் தகடுகளில் பொறித்துச் சீயோன் மலையில் இருந்த தூண்கள்மீது வைத்தார்கள்.
27 இதுதான் அவர்கள் எழுதியதன் நகல்; "சீமோன் பெரிய தலைமைக் குருபீடப் பொறுப்பு ஏற்ற மூன்றாம் ஆண்டாகிய நூற்று எழுபத்திரண்டாம் ஆண்டு எலூல் மாதம் பதினெட்டாம் நாள் அசராமேலில்
28 குருக்கள், மக்கள், மக்களின் தலைவர்கள், நாட்டின் மூப்பர்கள் ஆகியொர் கூடியிருந்த பேரவையில் பின்வருமாறு எங்களுக்கு அறிவிக்கப்பட்டது;
29 "நாட்டில் அடிக்கடிபோர் மூண்டதால், யோவாரிபின் வழிமரபில் வந்த குருவான மத்தத்தியாசின் மகன் சீமோன் அவருடைய சகோதரர்களும் தங்கள் உயிரையே பணயம் வைத்தார்கள்; தங்கள் திருஉறைவிடத்தையும் திருச்சட்டத்தையும் காப்பதற்குத் தங்கள் நாட்டின் பகைவர்களை எதிர்த்தார்கள்; இவ்வாறு தங்கள் நாட்டுக்குச் சீரிய பெருமை சேர்த்தார்கள்.
30 யோனத்தான் தம் இனத்தாரை ஒன்றுகூட்டினார்; அவர்களின் தலைமைக் குருவானார்; தம் நாட்டு மக்களோடு துயில்கொண்டார்.
31 பகைவர்கள் அவர்களின் நாட்டின்மீது படையெடுக்கவும் அவர்களது திருஉறைவிடத்தைக் கைப்பற்றவும் திட்டமிட்டார்கள்.
32 அப்போது சீமோன் ஆர்த்தெழுந்து தம் இனத்தாருக்காகப் போர் செய்தார்; தம் நாட்டின் படைவீரர்களுக்குப் படைக்கலங்களும் ஊதியமும் வழங்குவதில் திரளான சொந்தப் பணத்தைச் செலவழித்தார்;
33 யூதேயாவின் நகர்களையும், குறிப்பாக யூதேயாவின் எல்லையில் இருந்த பெத்சூரையும் வலுப்படுத்தினார்; முன்பு பகைவர்கள் தங்கள் படைக்கலங்களைச் சேமித்து வைத்திருந்த அந்நகரில் யூதக் காவற்படையை நிறுவினார்;
34 கடலோரத்தில் இருக்கும் யாப்பாவையும் முன்பு பகைவர்கள் கைப்பற்றியிருந்த அசோத்து எல்லையில் உள்ள கசாராவையும் வலுப்படுத்தி அவ்விடங்களிலும் யூதர்களைக் குடியேற்றினார்; அங்குஅவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையானவையெல்லாம் கொடுத்தார்.
35 'மக்கள் சீமோனின் பற்றுறுதியையும் தம் இனத்தாருக்கு அவர் பெற்றுத்தர எண்ணியிருந்த பெருமையையும் கண்டு அவரைத் தங்கள் தலைவராகவும் தலைமைக் குருவாகவும் ஏற்படுத்தினார்கள்; ஏனென்றால் அவர் தம் இனத்தார்பால் நீதியுணர்வும் பற்றுறுதியும் கொண்டு எல்லா வகையிலும் தம் மக்களைப் பெருமைப்படுத்த விரும்பிப் பணிகள் பல செய்திருந்தார்.
36 அவரது காலத்தில் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. நாட்டினின்று பிற இனத்தார் துரத்தப்பட்டனர்; தாவீதின் நகராகிய எருசலேமில் கோட்டை ஒன்று அமைத்து அதிலிருந்து புறப்பட்டுத் திருஉறைவிடத்தின் சுற்றுப்புறத்தைத் தீட்டுப்படுத்தி, அதன் தூய்மைக்குப் பெரும் களங்கம் உண்டாக்கியிருந்தோரும் துரத்தப்பட்டனர்.
37 சீமோன் எருசலேம் கோட்டையில் யூதர்களைக் குடியேற்றி நாட்டினுடையவும் நகரினுடையவும் பாதுகாப்புக்காக அதை வலுப்படுத்தி நகர மதில்களை உயர்த்தினார்.
38 இவற்றின்பொருட்டு தெமேத்திரி மன்னன் சீமோனைத் தலைமைக் குருவாகத் தொடர்ந்து இருக்கச் செய்தான்;
39 தன் நண்பர்களுள் ஒருவராக உயர்த்திப் பெரிதும் பெருமைப்படுத்தினான்.
40 ஏனென்றால் உரோமையர்கள் யூதர்களைத் தங்களின் நண்பாகள், தோழர்கள், சகோதரர்கள் என்று அழைத்ததைப்பற்றியும், சீமோனுடைய தூதர்களைச் சிறப்புடன் வரவேற்றதைப்பற்றியும் கேள்விப்பட்டிருந்தான்.
41 'எனவே யூதர்களும் அவர்களின் குருக்களும் கீழ்க்கண்டவாறு முடிவு செய்தார்கள்; நம்பிக்கையுள்ள இறைவாக்கினர் ஒருவர் தோன்றும் வரை காலமெல்லாம் சீமோனே தங்கள்தலைவரும் தலைமைக் குருவுமாய் இருக்க வேண்டும்;
42 அவரே தங்களுக்கு ஆளுநராக இருக்கவேண்டும்; தங்கள் திருஉறைவிடத்தின் பொறுப்பை அவர் ஏற்று அதன் பணிகளுக்கும் நாட்டுக்கும் படைக்கலங்களுக்கும் கோட்டைகளுக்கும் பொறுப்பாளிகளை ஏற்படுத்தவேண்டும். திருஉறைவிடத்தின் பொறுப்பு அவருக்கே உரியது.
43 அனைவரும் அவருக்குக் கீழ்ப்படியவேண்டும்; அவர் பெயராலேயே நாட்டின் எல்லா ஒப்பந்தங்களையும் எழுதவேண்டும்; அவர் கருஞ்சிவப்பு ஆடையும் பொன் அணிகலன்களும் அணிந்துகொள்ளவேண்டும்.
44 'இம்முடிவுகளுள் எதையும் செயலற்றதாக்கவோ அவருடைய கட்டளைகளை எதிர்க்கவோ அவரது இசைவின்றி மக்களவையைக் கூட்டவோ, அரசருக்குரிய கருஞ்சிவப்பு ஆடை உடுத்திக்கொள்ளவோ, பொன் அணியூக்கு அணிந்து கொள்ளவோ மக்கள், குருக்கள் ஆகியோருள் யாருக்கும் உரிமை இல்லை.
45 உம்முடிவுகளுக்கு எதிராகச் செயல்புரிவோர் அல்லது இவற்றுள் எதையும் மீறுவோர் தண்டனைக்கு ஆளாவார்.
46 'இவற்றின்படி செயல்புரியும் உரிமையைச் சீமோனுக்கு அளிக்க மக்கள் அனைவரும் உடன்பட்டார்கள்.
47 சீமோனும் இதற்கு இசைந்து தலைமைக்குருவாகவும் படைத்தளபதியாகவும் யூதர்களுக்கும் குருக்களுக்கும் ஆட்சியாளராகவும் அனைவருக்கும் காப்பாளராகவும் இருக்க ஒப்புக்கொண்டார்.' "
48 இம்முடிவுகளை வெண்கலத்தகடுகளில் பொறித்துத் திருஉறைவிடத்தின் வாளகத்திற்குள் எல்லாரும் காணக்கூடிய இடத்தில் அவற்றை வைக்க அவர்கள் கட்டளையிட்டார்கள்.
49 சீமோனுக்கும் அவருடைய மைந்தர்களுக்கும் பயன்படுமாறு அவற்றின் நகல்களைக் கருவூலத்தில் வைக்கவும் ஆணையிட்டார்கள்.
1 மக்கபேயர் அதிகாரம் 15
1 தெமேத்திரி மன்னனின் மகன் அந்தியோக்கு யூதர்களின் தலைமைக் குருவும் ஆட்சியாளருமான சீமோனுக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தீவுகளிலிருந்து மடல் எழுதினான்.
2 அதன் உள்ளடக்கம் பின்வருமாறு; "தலைமைக் குருவும் ஆட்சியாளருமான சீமோனுக்கும் யூத இனத்தாருக்கும் அந்தியோக்கு மன்னன் வாழ்த்துக் கூறி எழுதுவது;
3 எங்கள் மூதாதையரின் நாட்டைச் சில கயவர்கள் கைப்பற்றிக்கொண்டபடியால் அதைச் சீர்படுத்திப் பழைய நிலைக்குக் கொணர முடிவுசெய்துள்ளேன்; அதற்காகவே பெரும் கூலிப்படையையும் போர்க் கப்பல்களையும் திரட்டியிருக்கிறேன்;
4 எங்களது நாட்டை அழித்து என் ஆட்சிக்கு உட்பட்ட பல நகரங்களைப் பாழாக்கியவர்களைத் தண்டிப்பதற்காக அவர்களது நாட்டின்மீது படையெடுக்க எண்ணம் கொண்டுள்ளேன்.
5 ஆதலால் எனக்குமுன் இருந்த மன்னர்கள் அனைவரும் உமக்கு விலக்கியிருந்த எல்லா வரிகளையும் வழங்கியிருந்த எல்லாச் சலுகைகளையும் இப்போது உறுதிப்படுத்துகிறேன்;
6 நாட்டுக்குத் தேவையான நாணயங்களை நீரே அடித்துக்கொள்ள உமக்கு அனுமதி அளிக்கிறேன்.
7 எருசலேம் நகரும் அதன் திருஉறைவிடமும் தன்னாட்சி பெற்றவையாய் இருக்கும். நீர் செய்துள்ள எல்லாப் படைக்கலங்களும், நீர் கட்டி முடித்து இப்போதும் உமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள கோட்டைகளும் உமக்கே சொந்தமாய் இருக்கும்.
8 அரச கருவூலத்துக்கு நீர் இப்போது செலுத்தவேண்டிய எல்லாக் கடனையும், இனிச் செலுத்தவேண்டிய கடனையும் இன்றுமுதல் என்றென்றும் தள்ளுபடி செய்கின்றேன்.
9 எமது நாட்டை நாம் மீண்டும் அடைந்தபிறகு, உங்களது பெருமை உலகெங்கும் விளங்கும்படி உம்மையும் உம் இனத்தாரையும் கோவிலையும் பெரிதும் மாட்சியுறச் செய்வோம். "
10 நூற்று எழுபத்து நான்காம் ஆண்டு அந்தியோக்கு தன் மூதாதையரின் நாட்டினுள் புகுந்தான். எல்லாப் படைகளும் அவனோடு சேர்ந்து கொண்டன. ஆதலால் திரிபோவுடன் சிலர் மட்டுமே இருந்தனர்.
11 அந்தியோக்கு அவனைத் துரத்தியதால், அவன் கடலோரமாய் இருந்த தோர் நகருக்குத் தப்பியோடினான்;
12 ஏனென்றால் தன் படைகள் தன்னைக் கைவிட்டதால் தனக்குப் பல தொல்லைகள் நேர்ந்தன என்பதை உணர்ந்திருந்தான்.
13 அந்தியோக்கு ஓர் இலட்சத்து இருபதாயிரம் படைவீரர்களோடும் எண்ணாயிரம் குதிரைவீரர்களோடும் தோருக்கு எதிராகப் பாசறை அமைத்தான்;
14 அந்த நகரைச் சுற்றி வளைத்துக்கொண்டான். கப்பல்களும் கடலில் இருந்தவண்ணம் போரில் கலந்து கொண்டன. கடல்பக்கமும் தலைப்பக்கமும் நகரை நெருக்கி யாரும் வெளியே போகாமலும் உள்ளே நுழையாமலும் தடுத்தான்.
15 இதற்கிடையில் பல்வேறு மன்னர்களுக்கும் நாடுகளுக்கும் எழுதப்பட்ட மடல்களோடு நூமேனியும் அவனுடன் இருந்தவர்களும் உரோமையினின்று எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள். அவற்றில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது;
16 "தாலமி மன்னருக்கு உரோமையர்களின் பேராளர் லூசியு வாழ்த்துக் கூறி எழுதுவது;
17 தலைமைக் குருவான சீமோனும் எங்களின் நண்பர்களும் கூட்டாளிகளுமான யூத மக்களும் அனுப்பிய தூதர்கள் பழைய நட்புறவையும் ஒப்பந்தத்தையும் புதுப்பிக்கும்படி எங்களிடம் வந்தார்கள்.
18 அவர்கள் அறுநூற்று எண்பத்து ஐந்து கிலோ எடையுள்ள பொற் கேடயம் ஒன்று கொண்டுவந்தார்கள்.
19 ஆதலால் அவர்களுக்குத் தீங்கு இழைக்கக் கூடாது என்றும், அவர்களையும் அவர்களுடைய நகரங்களையும் நாட்டையும் எதிர்த்துப் போரிடக்கூடாது என்றும், அவர்களை எதிர்த்துப் போர் செய்கிறவர்களோடு கூட்டுச் சேரக்கூடாது என்றும் பல்வேறு மன்னர்களுக்கும் நாடுகளுக்கும் எழுத முடிவுசெய்தோம்.
20 அவர்கள் கொண்டு வந்த கேடயத்தைப் பெற்றுக் கொள்ளவும் முடிவுசெய்தோம்.
21 ஆதலால் கயவர்கள் யாரேனும் யூதேயாவிலிருந்து உங்களிடம் தப்பியோடி வந்திருந்தால், யூதச் சட்டப்படி அவர்களைத் தண்டிக்குமாறு தலைமைக் குருவான சீமோனிடம் அவர்களை ஒப்புவித்துவிடுங்கள். "
22 இவ்வாறே தெமேத்திரி மன்னனுக்கும் அத்தால், அரியாரது, அர்சாகு ஆகியோருக்கும் லூசியு எழுதினான்;
23 சம்சாம், ஸ்பார்த்தா, தேல், மிந்து, சிகியோன், காரியா, சாமு, பம்பிலியா, லீக்கியா, அலிக்கார்னசு, உரோது, பசேல், கோசு, சீது, அராது கோர்த்தினா, கினிது, சைப்பிரசு, சீரேன் ஆகிய எல்லா நாடுகளுக்கும் எழுதினான்.
24 இம்மடலின் நகல் தலைமைக் குரு சீமோனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
25 அந்தியோக்கு மன்னன் மீண்டும் தோருக்கு எதிராய்ப் பாசறை அமைத்தான்; அதைத் தன் படையால் தொடர்ந்து தாக்கிக்கொண்டிருந்தான்; படைப்பொறிகள் செய்தான்; திரிபோவை அடைத்துவைத்து அவன் வெளியே போகவோ உள்ளே வரவோ முடியாதவாறு செய்தான்.
26 சீமோன் அந்தியோக்குக்கு உதவியாக, தேர்ந்தெடுத்த இரண்டாயிரம் வீரர்களை பொன், வெள்ளி திரளான படைக்கலங்களோடு அனுப்பிவைத்தார்.
27 ஆனால் அந்தியோக்கு அவர்களை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் சீமோனுடன் தான் செய்திருந்த ஒப்பந்தங்களை மீறி நட்புறவை முறித்துக் கொண்டான்.
28 அதன்பிறகு சீமோனைச் சந்தித்துப் பேசத் தன் நண்பர்களுள் ஒருவரான அத்தநோபியை அவன் அனுப்பி, "நீங்கள் எனது நாட்டின் நகரங்களாகிய யாப்பா, கசாரா, எருசலேம் கோட்டை ஆகியவற்றைக் கைப்பற்றியிருக்கிறீர்கள்;
29 அப்பகுதிகளைப் பாழாக்கி நாட்டில் பெரும் தீமைகள் புரிந்து எனது அரசில் பல இடங்களைப் பிடித்து வைத்திருக்கிறீர்கள்.
30 எனவே இப்போது நீங்கள் கைப்பற்றியுள்ள நகரங்களையும் யூதேயாவின் எல்லைகளுக்கு அப்பால் நீங்கள் பிடித்து வைத்துள்ள நாடுகளில் திரட்டியுள்ள திறையையும் ஒப்படைத்துவிடுங்கள்;
31 அல்லது அவற்றுக்குப் பதிலாக இருபது டன் வெள்ளியை எனக்குச் செலுத்துங்கள்; நீங்கள் உண்டாக்கிய அழிவுக்கும் நகரங்களுக்காகக் கட்ட வேண்டிய திறைக்கும் ஈடாக வேறு இருபது டன் வெள்ளியைக் கட்டிவிடுங்கள். இல்லையேல் நாங்கள் வந்து உங்கள்மீது போர்தொடுப்போம்" என்று சொல்லச் சொன்னான்.
32 மன்னனின் நண்பன் அத்தநோபி எருசலேம் வந்து, சீமோனுடைய மாட்சியையும் பொன், வெள்ளிக் கலன்கள் நிறைந்த நிலையடுக்கையும் மற்றச் செல்வப் பகட்டையும் கண்டு வாயடைத்து நின்றான்; மன்னனுடைய சொற்களை அவருக்கு அறிவித்தான்.
33 ஆனால் சீமோன் அவனுக்கு மறுமொழியாக, "நாங்கள் அயல்நாட்டைப் பிடித்துக்கொள்ளவில்லை; பிறருடைய சொத்துகளைக் கைப்பற்றிக்கொள்ளவுமில்லை. ஆனால் எங்கள் பகைவர்கள் நேர்மையின்றிக் கவர்ந்து, சிறிது காலம் வைத்திருந்த எங்கள் மூதாதையரின் உரிமைச் சொத்துகளையே திரும்பப் பெற்றுள்ளோம்.
34 தகுந்த வாய்ப்பு ஏற்பட்டதால் எங்கள் மூதாதையரின் உரிமைச் சொத்துகளை எங்களோடு தக்க வைத்துக் கொண்டுள்ளோம்.
35 ஆனால் நீர் கோரும் யாப்பா, கசாராவைப் பொறுத்தமட்டில், அந்நகரங்கள் மக்கள் நடுவிலும் எங்கள் நாட்டிலும் பெரும் தீமைகள் விளைவித்து வந்துள்ளன. ஆயினும் அவற்றுக்காக நான்கு டன் வெள்ளி கொடுப்போம்" என்றார்.
36 அதற்கு அத்தநோபி மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை; மாறாக, சினத்துடன் மன்னனிடம் திரும்பிச் சென்று, சீமோன் தன்னிடம் கூறியவற்றையும் அவரது மாட்சியையும் தான் கண்ட யாவற்றையும் அறிவித்தான். அப்போது மன்னன் கடுஞ் சீற்றம் கொண்டான்.
37 இதற்கிடையே திரிபோ கப்பலேறி ஒர்த்தோசியாவுக்கு ஓடிப்போனான்.
38 அந்தியோக்கு மன்னன் கெந்தபாயைக் கடற்கரைப் பகுதிக்குப் படைத் தலைவனாக ஏற்படுத்தி, காலாட்படையையும் குதிரைப்படையையும் அவனுக்கு அளித்தான்;
39 யூதர்களுக்கு எதிராகப் போர் தொடுக்கும்பொருட்டு யூதேயாவுக்கு எதிரில் பாசறை அமைக்கவும், கிதரோனை மீண்டும் கட்டியெழுப்பி, அதன் வாயில்களை வலுப்படுத்தவும் கெந்தபாய்க்குக் கட்டளையிட்டபின் திரிபோவைத் துரத்திச் சென்றான்.
40 யாம்னியா சேர்ந்த கெந்தபாய் மக்களைத் துன்புறுத்தி, யூதேயாமீது போர் தொடுத்தான்; அவர்களைச் சிறைப்பிடித்துக் கொல்லத் தொடங்கினான்.
41 மன்னனின் கட்டளைப்படி அவன் கிதரோனைக் கட்டியெழுப்பினான்; யூதேயா நாட்டில் புகுந்து சுற்றுக்காவல் புரியுமாறு அவ்விடத்தில் குதிரைப்படையையும் காலாட்படையையும் நிறுவினான்.
1 மக்கபேயர் அதிகாரம் 16
1 யோவான் கசாராவினின்று ஏறிச்சென்று கெந்தபாய் செய்தவற்றைத் தன் தந்தையாகிய சீமோனிடம் அறிவித்தார்.
2 அப்போது சீமோன் தம் மூத்த மைந்தர்களாகிய யூதா, யோவான் ஆகிய இருவரையும் அழைத்து அவர்களை நோக்கி, "நானும் என் சகோதரர்களும் என் தந்தையின் குடும்பமும் எங்கள் இளமைமுதல் இந்நாள்வரை இஸ்ரயேலில் போர்களை நடத்திவந்துள்ளோம்; இஸ்ரயேலைக் காப்பாற்றுவதில் பல முறை வெற்றி பெற்றோம்.
3 இப்போது நான் முதியவனாகியவிட்டேன். நீங்கள் விண்ணக இறைவனின் இரக்கத்தால் வளர்ச்சி அடைந்திருக்கிறீர்கள். ஆதலால் நீங்கள் என் சகோதரதரான யோனத்தானுக்கும் எனக்கும் பதிலாய் இருந்து நம் மக்களுக்காகப் போரிடுங்கள். விண்ணக இறைவனின் உதவி உங்களோடு இருப்பதாக" என்று கூறினார்.
4 பின்னர் நாட்டிலிருந்து இருபதாயிரம் காலாள்களையும் குதிரைவீரர்களையும் யோவான் தேர்ந்து கொண்டார். அவர்கள் கெந்தபாயை எதிர்த்துச் சென்று, அன்று இரவு மோதயினில் தங்கினார்கள்;
5 மறுநாள் காலையில் எழுந்து சமவெளியை அடைந்தார்கள். காலாட்படையினரும் குதிரைப்படையினரும் கொண்ட பெரும் படை ஒன்று அவர்களை எதிர்த்து வந்து கொண்டிருந்தது. இரு படைகளுக்கும் நடுவே காட்டாறு ஒன்று ஓடிற்று.
6 யோவானும் அவருடைய படைவீரர்களும் பகைவர்களுக்கு எதிரே அணிவகுத்து நின்றார்கள். தம் வீரர்கள் ஆற்றைக் கடக்க அஞ்சியதைக் கண்டு தாமே முதலில் கடந்தார். அதைக் கண்ட அவருடைய வீரர்களும் அவரைத் தொடர்ந்து ஆற்றைக் கடந்தார்கள்.
7 பகைவரின் குதிரைப்படையினர் பெருந்திரளாய் இருந்ததால் அவர் தம் படையைப் பிரித்துக் குதிரைப் படையினரைக் காலாட்படையினருக்கு நடுவில் இருக்கச் செய்தார்.
8 அவர்கள் எக்காளங்களை முழக்கவே கெந்தபாயும் அவனுடைய படைவீரர்களும் தப்பியோடினார்கள்; அவர்களுள் பலர் காயப்பட்டு மடிந்தார்கள்; எஞ்சியவர்கள் கிதரோனில் இருந்த கோட்டையை நோக்கி ஓடினார்கள்.
9 அப்போது யோவானின் சகோதரரான யூதா காயமடைந்தார். ஆனால் யோவான் கெந்தபாய் கட்டிய கிதரோன்வரை சென்று பகைவர்களைத் துரத்தியடித்தார்.
10 அவர்கள் அசோத்தின் வயல்களில் இருந்த காவல்மாடங்களுக்குள் தப்பியோடினார்கள். அசோத்து நகரை யோவான் தீக்கிரையாக்கினார். அவர்களுள் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் மடிந்தனர். பின் அவர் பாதுகாப்புடன் யூதேயா திரும்பினார்.
11 எரிகோ சமவெளிக்கு அபூபு மகன் தாலமி ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தான். அவனிடம்; திரளான வெள்ளியும் பொன்னும் இருந்தன;
12 ஏனெனில் அவன் தலைமைக் குருவின் மருமகன்.
13 ஆனால் அவன் பேராசை கொண்டு, நாட்டைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான்; சீமோனையும் அவருடைய மைந்தர்களையும் வஞ்சகமாகக் கொன்றுவிட எண்ணினான்.
14 யூதேயா நாட்டின் நகரங்களைச் சிமோன் பார்வையிட்டு அவற்றின் தேவைகளை நிறைவேற்றிவந்தார்; நூற்று எழுபத்தேழாம் ஆண்டு சபாத்து என்னும் பதினொராம் மாதம் தம் மைந்தர்களாகிய மத்தத்தியா, யூதா ஆகியோரோடு எரிகோவுக்கு இறங்கிச் சென்றார்.
15 அபூபு மகன் தான் கட்டிருந்த தோக்கு என்னும் சிறு கோட்டைக்குள் அவர்களை வஞ்சகமாய் வரவேற்று அவர்களுக்குப் பெரிய விருந்து ஏற்பாடு செய்தான்; ஆனால் அவ்விடத்தில் தன் ஆள்களுள் சிலரை ஒளித்துவைத்திருந்தான்.
16 சீமோனும் அவருடைய மைந்தர்களும் குடிமயக்கத்தில் இருந்தபோது தாலமியும் அவனைச் சேர்ந்தவர்களும் எழுந்து வந்து தங்கள் படைக்கலங்களை எடுத்துக்கொண்டு விருந்து நடைபெற்ற மன்றத்துக்குள் புகுந்து சீமோனையும் அவருடைய மைந்தர் இருவரையும் பணியாளர் சிலரையும் கொன்றார்கள்.
17 இவ்வாறு தாலமி இஸ்ரயேலுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து, நன்மைக்குப் பதிலாகத் தீமை புரிந்தான்.
18 தாலமி இச்செய்திகளை அந்தியோக்கு மன்னனுக்கு எழுதியனுப்பி, தனக்கு உதவியாகப் படைகளை அனுப்பவும் அவர்களின் நாட்டையும் நகரங்களையும் தனக்குக் கொடுத்து விடவும் கேட்டுக்கொண்டான்.
19 யோவானைக் கொல்வதற்காக வேறு சிலலைரக் கசாராவுக்கு அனுப்பினான்; தான் வெள்ளியும் பொன்னும் அன்பளிப்புகளும் வழங்கப் படைத்தலைவர்கள் தன்னிடம் வந்துசேருமாறு அவர்களுக்கு எழுதியனுப்பினான்.
20 எருசலேமையும் கோவில் அமைந்திருந்த மலையையும் கைப்பற்ற வேறு சிலரை அனுப்பினான்.
21 ஆனால் ஒருவர் கசாராவில் இருந்த யோவானிடம் முன்னதாகவே ஓடிச்சென்று, அவருடைய தந்தையும் சகோதரர்களும் அழிந்ததை அறிவித்து, அவரையும் கொலைசெய்யத் தாலமி ஆள்களை அனுப்பியிருக்கிறான் என்று எச்சரித்தார்.
22 யோவான் இதைக் கேள்வியுற்றுப் பெரிதும் திகிலடைந்தார்; தம்மைக் கொலைசெய்ய வந்தவர்களைப் பிடித்துக் கொன்றார்; ஏனெனில் அவர்கள் தம்மைக் கொல்லத் தேடினவர்கள் என்று அறிந்திருந்தார்.
23 யோவான் தம் தந்தைக்குப் பிறகு தலைமைக் குருவான நாள்முதல் புரிந்த மற்றச் செயல்களும் போர்களும் தீரச் செயல்களும் கட்டியெழுப்பிய மதில்களும்
24 மற்றச் சாதனைகளும் தலைமைக் குருவின் குறிப்பேட்டில் வரையப்பட்டுள்ளன.
திருவிவிலியம், திருவிவிலியம் bible in tamil, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு, திருவிவிலியம் கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, திருவிவிலியம் வரலாறு, கத்தோலிக்க திருவிவிலியம், பைபிள், பைபிள் வசனம் தேடல், பைபிள் வசனங்கள், பைபிள் வார்த்தை தேடல், தமிழ் பைபிள் வசனம், தமிழ் பைபிள், தமிழ் பைபிள் வார்த்தைகள், பைபிள் கேள்வியும் பதிலும், பைபிள் ஆராய்ச்சி, தமிழ் பைபிள் வினா விடை, பைபிள் வசனங்கள் தமிழில், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், பைபிள் வார்த்தைகள், பைபிள் தூய தமிழ் பெயர், பிறந்தநாள் பைபிள் வசனம், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் அதிகாரங்கள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், அன்பு பைபிள் வசனம், பைபிள் வெர்சஸ் இன் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், பைபிள் வினா விடை, பைபிள் கேள்வி பதில்கள், பைபிள் தமிழில், தமிழ் பைபிள் ஆடியோ, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனம், பைபிள் இன் தமிழ், பைபிள் ஆறுதல் வசனங்கள், பைபிள் பெண்கள் பெயர்கள், பைபிள் அர்த்தம், கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், பைபிள் வசனம் படம், கல்லறை பைபிள் வசனங்கள், பைபிள் பெயர்கள், தமிழ் பைபிள் விளக்கவுரை, பைபிள் வரலாறு, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் ஆடியோ பைபிள், பைபிளை எழுதியது யார், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் போதனைகள், பைபிள் அட்டவணை, தமிழ் பைபிள் ஆடியோ டவுன்லோடு, பைபிள் விடுகதைகள், பைபிள் வினாடி வினா, திருமண பைபிள் வசனம், வசனம் பைபிள், தமிழ் பைபிள் தேடுதல், பைபிள் பத்துக் கட்டளைகள், பைபிள் வசனங்கள் வேண்டும், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, பைபிள் தூய தமிழ், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், தமிழ் பைபிள் டவுன்லோட், பரிசுத்த வேதாகமம் தமிழ் பைபிள், ஆடியோ பைபிள், பைபிள் உருவான வரலாறு, பைபிள் வாக்குத்தத்தங்கள், பைபிள் பழைய ஏற்பாடு, பைபிள் பிரசங்க குறிப்பு, பைபிள் தமிழ் பெயர், தமிழ் பைபிள் வெர்சஸ் சர்ச், பைபிள் வேத ஆராய்ச்சி, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், கேள்வி பதில் தரப்பட்ட பைபிள், பைபிள் பத்து கட்டளைகள், பைபிள் எப்பொழுது எழுதப்பட்டது, கத்தோலிக்க பைபிள், பைபிள் நீதிமொழிகள், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தமிழ் பைபிள் வெர்சஸ், கொள்ளை நோய்கள் பைபிள், தமிழ் பைபிள் சர்ச், தமிழ் பைபிள் அகராதி, காதல் பற்றி பைபிள், விருத்தசேதனம் பைபிள், கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் விளக்கவுரை, பைபிள் கதை, bible வசனம், பத்து கட்டளைகள் bible, வேத வசனம் பைபிள், பைபிள் ஸ்டோரி தமிழ், பாவம் பைபிள், கிறிஸ்தவ பைபிள், எபிரேய பைபிள், பைபிள் வாசிப்பது எப்படி, பைபிள் வேர்ட்ஸ், பைபிள் சங்கீதம், விசுவாசம் பைபிள் செய்தி, பைபிள் ஸ்டடி, பைபிள் புத்தகங்கள், திருவிவிலியம், திருவிவிலியம் bible in tamil, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு, திருவிவிலியம் கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, திருவிவிலியம் வரலாறு, கத்தோலிக்க திருவிவிலியம், பைபிள், பைபிள் வசனம் தேடல், பைபிள் வசனங்கள், பைபிள் வார்த்தை தேடல், தமிழ் பைபிள் வசனம், தமிழ் பைபிள், தமிழ் பைபிள் வார்த்தைகள், பைபிள் கேள்வியும் பதிலும், பைபிள் ஆராய்ச்சி, தமிழ் பைபிள் வினா விடை, பைபிள் வசனங்கள் தமிழில், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், பைபிள் வார்த்தைகள், பைபிள் தூய தமிழ் பெயர், பிறந்தநாள் பைபிள் வசனம், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் அதிகாரங்கள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், அன்பு பைபிள் வசனம், பைபிள் வெர்சஸ் இன் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், பைபிள் வினா விடை, பைபிள் கேள்வி பதில்கள், பைபிள் தமிழில், தமிழ் பைபிள் ஆடியோ, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனம், பைபிள் இன் தமிழ், பைபிள் ஆறுதல் வசனங்கள், பைபிள் பெண்கள் பெயர்கள், பைபிள் அர்த்தம், கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், பைபிள் வசனம் படம், கல்லறை பைபிள் வசனங்கள், பைபிள் பெயர்கள், தமிழ் பைபிள் விளக்கவுரை, பைபிள் வரலாறு, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் ஆடியோ பைபிள், பைபிளை எழுதியது யார், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் போதனைகள், பைபிள் அட்டவணை, தமிழ் பைபிள் ஆடியோ டவுன்லோடு, பைபிள் விடுகதைகள், பைபிள் வினாடி வினா, திருமண பைபிள் வசனம், வசனம் பைபிள், தமிழ் பைபிள் தேடுதல், பைபிள் பத்துக் கட்டளைகள், பைபிள் வசனங்கள் வேண்டும், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, பைபிள் தூய தமிழ், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், தமிழ் பைபிள் டவுன்லோட், பரிசுத்த வேதாகமம் தமிழ் பைபிள், ஆடியோ பைபிள், பைபிள் உருவான வரலாறு, பைபிள் வாக்குத்தத்தங்கள், பைபிள் பழைய ஏற்பாடு, பைபிள் பிரசங்க குறிப்பு, பைபிள் தமிழ் பெயர், தமிழ் பைபிள் வெர்சஸ் சர்ச், பைபிள் வேத ஆராய்ச்சி, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், கேள்வி பதில் தரப்பட்ட பைபிள், பைபிள் பத்து கட்டளைகள், பைபிள் எப்பொழுது எழுதப்பட்டது, கத்தோலிக்க பைபிள், பைபிள் நீதிமொழிகள், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தமிழ் பைபிள் வெர்சஸ், கொள்ளை நோய்கள் பைபிள், தமிழ் பைபிள் சர்ச், தமிழ் பைபிள் அகராதி, காதல் பற்றி பைபிள், விருத்தசேதனம் பைபிள், கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் விளக்கவுரை, பைபிள் கதை, bible வசனம், பத்து கட்டளைகள் bible, வேத வசனம் பைபிள், பைபிள் ஸ்டோரி தமிழ், பாவம் பைபிள், கிறிஸ்தவ பைபிள், எபிரேய பைபிள், பைபிள் வாசிப்பது எப்படி, பைபிள் வேர்ட்ஸ், பைபிள் சங்கீதம், விசுவாசம் பைபிள் செய்தி, பைபிள் ஸ்டடி, பைபிள் புத்தகங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக