மாற்கு நற்செய்தி
மாற்கு நற்செய்தி ஆசிரியர்:
மாற்கு நற்செய்தி நுhலின் ஆசிரியர் யோவான் மாற்கு என்பது திருச்சபை மரபு, மாற்குவின் தாய் பெயர் மரியா. இவர்களுடைய வீட்டில் தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் வழிபட்டு வந்தனர் (தி ப 12:12) . மாற்கு 14:51, 52-இல் குறிப்பிடப்பட்டிருக்கும் இளை!ஞர் இவராக இருக்கலாம். இவர் பர்னபாவின் உறவினர். தொடக்கத்தில் பவுலோடு பயணம் செய்தவர். பவுலுடைய வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் (2 திமொ 4:11). இவர் திருத்துhதர் பேதுருவுக்கும் துணையாகத் திருத் தொண்டில் ஈடுபட்டிருந்தார். பேதுருவின் போதனைகளின் அடிப்படையில் தான் இந்நற்செய்தி எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது பலரது கருத்து.
மாற்கு நற்செய்தி சூழல்:
நற்செய்தி நுhல்களுள் மாற்கு நற்செய்தி நுhல்தான் முதலாவதாக எழுதப்பட்டது என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. கி.பி.64- ஆம் ஆண்டில் இருந்து 70-ஆம் ஆண்டுக்குள் இந்நுhல் எழுதப்பட்டிருக்க வேணடும. எருசலேம் அழிக்கப்படவிருந்த ச+ழலில், உரோமையரால் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டக் காலத்தில், உரோமை நகரிலிருந்த மாற்கு இதனை எழுதியிருக்க வேண்டும். பேதுரு,பவுல் போனற பெருந்தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்ட காலக் கட்டத்தில், இயேசுவின் நற்செய்தியைத் தொகுத்து அதற்கு எழுத்து வடிவம் கொடுக்க வேண்டியது இன்றியமையாத தேவையாகத் தெரிந்திருக்க வேண்டும்.
இந்நற்செய்தி நுhல் பிற இனத்துக் கிறிஸ்தவர்களைக் குறிப்பாகக் கண்முன் கொண்டு எழுதப்பட்டதாகக் தெரிகிறது. இந்நுhலின் ஆசிரியர், இயேசு கிறிஸ்துவைப்பற்றிய மரபுகளை, சிறப்பாக அவருடைய வல்ல செயல்கள்,உவமைகள், கூற்றுக்கள் ஆகியவற்றைத் தமக்கே உரிய பாணியில் விறுவிறுப்பாகத் தொகுத்து எழுதியுள்ளார். இவ்வாறு இயேசுவே மெசியா,இறைமகன் என்னும் உறுதியில் பிற இனத்துக் கிறிஸ்தவர்கள் வளர இந்நுhல் பெரிதும் உதவியாக அமைகிறது.
மாற்கு நற்செய்தி உள்ளடக்கம்:
"கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி" என்னும் தொடக்கச் சொற்களே நற்செய்தி நுhலுக்கு நல்ல தலைப்பாக அமைகின்றன. இந்நுhலின் முதல் பகுதியில் இயேசு கிறிஸ்து மாட்சிமை மிக்க இறைமகனாகிய மெசியா (1:1) என்பதையும் மனம் மாறும் மக்கள் பாவமன்னிபபுப் பெற்று, இறையாட்சியில் உரிமைக் குடிமக்களாகும் தகுதி பெறுகின்றனர் (1:15) என்பதையும் இவ்வாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறு கலிலேயாவில் மக்கள் திரளுக்குப் பணிபுரியும் இயேசு ,சீடர்களோடு இணைந்து செயல்பட்டு, பேய்கள் மற்றும் சமயத் தலைவர்களின் அதிகாரத்தை அடக்குகின்றார் என்பதை,மற்ற நற்செய்தி ஆசிரியர்களைவிட விளக்கமாக இவர் எடுத்துரைக்கிறார்.
இயேசு கிறிஸ்து மக்கள் அனைவருக்கும் மீட்பு வழங்கும் துன்புறும் மானிடமகன் (10:45) என்ற கருத்து, இரணடாம் பகுதியில் வலியுறுத்தப்படுகின்றது. இயேசு கிறிஸ்து துன்பங்கள் பட்டு இறந்து உயிர்பெற்றெழுந்து மீட்பரானார் என்னும் தொடக்கக் காலத் திருச்சபையின் மையப் போதனையை, இயேசுவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் இந்நுhல் ஆசிரியர் விரித்துக் கூறுகிறார்.
மாற்கு நற்செய்தி அமைப்பு :
மாற்கு நற்செய்தி பகுதி 1.
முன் னுரை 1:1 - 13
மாற்கு நற்செய்தி பகுதி 2.
இயேசுவே மெசியா (1:14 - 8:30)
1. இயேசுவும் மக்கள் கூட்டமும் 1:14 - 3:6
2. இயேசுவும் சீடர்களும் 3:7 - 6:6அ
3. இயேசு தம்மைச் சீடருக்கு வெளிப்படுத்தல் 6:6 ஆ - 8:26
4. இயேசு மெசியா என்னும் அறிக்கை 8:27 - 30
மாற்கு நற்செய்தி பகுதி 3.
இயேசுவே மானிடமகன் (8:31 - 16:8)
1. பயணம் செய்யும் மானிடமகன் 8:31 - 10:52
2. எருசலேமில் மானிடமகன் 11:1 - 13:37
3. மானிடமகன் முழுமையாய் வெளிப்படுத்தப்படல் 14:1 - 16:8
மாற்கு நற்செய்தி பகுதி 4.
முடிவுரை 16:9 - 20
மாற்கு நற்செய்தி அதிகாரம் 1
1 கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்;
2 "இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.
3 பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்" என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.
4 இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.
5 யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.
6 யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.
7 அவர் தொடர்ந்து, "என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.
8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்" எனப் பறைசாற்றினார்.
9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.
10 அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.
11 அப்பொழுது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் ப+ரிப்படைகின்றேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
12 உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
13 பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.
14 யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.
15 காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அவர் கூறினார்.
16 அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.
17 இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார்.
18 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
19 பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
20 உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.
21 அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார்.
22 அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.
23 அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.
24 அவரைப் பிடித்திருந்த ஆவி, "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று கத்தியது.
25 "வாயை மூடு; இவரை விட்டு வெளியோ போ" என்று இயேசு அதனை அதட்டினார்.
26 அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.
27 அவர்கள் அனைவரும் திகைப்புற்று, "இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!" என்று தங்களிடையே பேசிக் கொண்டனர்.
28 அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.
29 பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.
30 சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்.
31 இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.
32 மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள்.
33 நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது.
34 பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.
35 இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.
36 சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள்.
37 அவரைக் கண்டதும், "எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்" என்றார்கள்.
38 அதற்கு அவர், "நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்" என்று சொன்னார்.
39 பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.
40 ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார்.
41 இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்றார்.
42 உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.
43 பிறகு அவரிடம், "இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும்.
44 நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்" என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.
45 ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.
மாற்கு நற்செய்தி அதிகாரம் 2
1 சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று.
2 பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.
3 அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர்.
4 மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.
5 இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.
6 அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், "இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்?
7 இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.
8 உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, "உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?
9 முடக்குவாதமுற்ற இவனிடம் "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்பதா? "எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது?
10 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி,
11 "நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ" என்றார்.
12 அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், "இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே" என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
13 இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார்.
14 பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், "என்னைப் பின்பற்றி வா" என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
15 பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள்.
16 அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், "இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?" என்று கேட்டனர்.
17 இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்.
18 யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்துவந்தனர். சிலர் இயேசுவிடம், "யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பிருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை?" என்று கேட்டனர்.
19 அதற்கு இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்கமுடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பிருக்க முடியாது.
20 ஆனால் மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.
21 எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த புதிய துணி பழையதிலிருந்து கிழியும்? கிழிசலும் பெரிதாகும்.
22 அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது" என்றார்.
23 ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர்.
24 அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், "பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?" என்று கேட்டனர்.
25 அதற்கு அவர் அவர்களிடம், "தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா?
26 அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?" என்றார்.
27 மேலும் அவர் அவர்களை நோக்கி, "ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை.
28 ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" என்றார்.
மாற்கு நற்செய்தி அதிகாரம் 3
1 அவர் மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார்.
2 சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்.
3 இயேசு கை சூம்பிவரை நோக்கி, "எழுந்து, நடுவே நில்லும்" என்றார்.
4 பின்பு அவர்களிடம், "ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?" என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள்.
5 அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, "கையை நீட்டும்" என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது.
6 உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.
7 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா,
8 எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர்.
9 மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன்னார்.
10 ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந்தனர்.
11 தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, "இறைமகன் நீரே" என்று கத்தின.
12 அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.
13 அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள்.
14 தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்;
15 அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.
16 அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன்,
17 செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் - இவ்விருவருக்கும் "'இடியைப் போன்றோர்" எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார்.
18 அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன்,
19 இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.
20 அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.
21 அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.
22 மேலும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், "இவனைப் பெயல்செப+ல் பிடித்திருக்கிறது" என்றும் "பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்" என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.
23 ஆகவே அவர் அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது; "சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்?
24 தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது.
25 தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது.
26 சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு.
27 முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.
28 உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார்.
29 ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்."
30 "இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது" என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.
31 அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.
32 அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. "அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள்" என்று அவரிடம் சொன்னார்கள்.
33 அவர் அவர்களைப் பார்த்து, "என்தாயும் என் சகோதரர்களும் யார்? என்று கேட்டு,
34 தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, "இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே.
35 கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்றார்.
மாற்கு நற்செய்தி அதிகாரம் 4
1 அவர் மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர்.
2 அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது;
3 "இதோ, கேளுங்கள், விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.
4 அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன.
5 வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன.
6 ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின.
7 மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை.
8 ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.
9 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்."
10 அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்து கொண்டு, உவமைகளைப்பற்றி அவரிடம் கேட்டார்கள்.
11 அதற்கு இயேசு அவர்களிடம், "இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன.
12 எனவே அவர்கள் "ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டுகொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள்" என்று கூறினார்.
13 மேலும் அவர் அவர்களை நோக்கி, "இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்?
14 விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார்.
15 வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான்.
16 பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள்.
17 ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள்.
18 முட்செடிகளுக்கு இடையில் விதைக்கபட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள்
19 இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கி விடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள்.
20 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக் கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்" என்றார்.
21 இயேசு அவர்களிடம், "விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின் மீது வைப்பதற்காக அல்லவா?
22 வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை.
23 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்றார்.
24 மேலும் அவர், "நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும்.
25 ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்" என்று அவர்களிடம் கூறினார்.
26 தொடர்ந்து இயேசு, "இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்;
27 நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது.
28 முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது.
29 பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது" என்று கூறினார்.
30 மேலும் அவர், "இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்?
31 அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது.
32 அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள்விடும்" என்று கூறினார்.
33 அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார்.
34 உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.
35 அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, "அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்" என்றார்.
36 அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.
37 அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது.
38 அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?" என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.
39 அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, "இரையாதே, அமைதியாயிரு" என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.
40 பின் அவர் அவர்களை நோக்கி, "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" என்று கேட்டார்.
41 அவர்கள் பேரச்சம் கொண்டு, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ!" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.
மாற்கு நற்செய்தி அதிகாரம் 5
1 அவர்கள் கடலுக்கு அக்கரையிலிருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள்.
2 இயேசு படகைவிட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார்.
3 கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால்கூடக் கட்டி வைக்க முடியவில்லை.
4 ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை.
5 அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்.
6 அவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு ஓடிவந்து அவரைப் பணிந்து,
7 "இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்" என்று உரத்த குரலில் கத்தினார்.
8 ஏனெனில் இயேசு அவரிடம், "தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ" என்று சொல்லியிருந்தார்.
9 அவர் அம்மனிதரிடம், "உம் பெயர் என்ன?" என்று கேட்க அவர், "என் பெயர் "இலேகியோன் ", ஏனெனில் நாங்கள் பலர்" என்று சொல்லி,
10 அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாமென்று அவரை வருந்தி வேண்டினார்.
11 அங்கே மலைப்பகுதியில் பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன.
12 "நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்" என்று தீய ஆவிகள் அவரை வேண்டின.
13 அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.
14 பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர்.
15 அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள்.
16 நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
17 அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.
18 அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடு கூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்.
19 ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, "உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்" என்றார்.
20 அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.
21 இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார்.
22 தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து,
23 "என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்" என்று அவரை வருந்தி வேண்டினார்.
24 இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர்.
25 அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார்.
26 அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற்றது.
27 அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார்.
28 ஏனெனில், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" என்று அப்பெண் எண்ணிக் கொண்டார்.
29 தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.
30 உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, "என் மேலுடையைத் தொட்டவர் யார்?" என்று கேட்டார்.
31 அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், "இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், "என்னைத் தொட்டவர் யார்?" என்கிறீரே!" என்றார்கள்.
32 ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
33 அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார்.
34 இயேசு அவரிடம், "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு" என்றார்.
35 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், "உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?" என்றார்கள்.
36 அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்" என்று கூறினார்.
37 அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.
38 அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார்.
39 அவர் உள்ளே சென்று, "ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்" என்றார்.
40 அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார்.
41 சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், "தலித்தா கூம்" என்றார். அதற்கு, "சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு" என்பது பொருள்.
42 உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள்.
43 "இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது" என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.
மாற்கு நற்செய்தி அதிகாரம் 6
1 அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.
2 ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், "இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்!
3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?" என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
4 இயேசு அவர்களிடம், "சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்" என்றார்.
5 அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை.
6 அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார்.
7 அப்பொழுது அவர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார்.
8 மேலும், "பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம்.
9 ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
10 மேலும் அவர், "நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள்.
11 உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்" என்று அவர்களுக்குக் கூறினார்;
12 அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்;
13 பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் ப+சிக் குணப்படுத்தினார்கள்.
14 இயேசுவின் பெயர் எங்கும் பரவியது. ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான். சிலர், "இறந்த திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்; இதனால் தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன" என்றனர்.
15 வேறு சிலர், "இவர் எலியா" என்றனர். மற்றும் சிலர், "ஏனைய இறைவாக்கினரைப்போல் இவரும் ஓர் இறைவாக்கினரே" என்றனர்.
16 இதைக் கேட்ட ஏரோது, "இவர் யோவானே. அவர் தலையை நான் வெட்டச் செய்தேன். ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்" என்று கூறினான்.
17 இதே ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆளனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்.
18 ஏனெனில் யோவான் ஏரோதிடம், "உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல" எனச் சொல்லிவந்தார்.
19 அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை.
20 ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்.
21 ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான்.
22 அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், "உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்" என்றான்.
23 "நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்" என்றும் ஆணையிட்டுக் கூறினான்.
24 அவள் வெளியே சென்று, "நான் என்ன கேட்கலாம் ?" என்று தன்தாயை வினவினாள். அவள், "திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்" என்றாள்.
25 உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, "திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்" என்று கேட்டாள்.
26 இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை.
27 உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி,
28 அதை ஒரு தட்டில் கொண்டுவந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
29 இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
30 திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்துகூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள்.
31 அவர் அவர்களிடம், நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்" என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.
32 அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.
33 அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர்.
34 அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.
35 இதற்குள் நெடுநேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து, "இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, ஏற்கெனவே நெடுநேரம் ஆகிவிட்டது.
36 சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக்கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பிவிடும்" என்றனர்.
37 அவர் அவர்களிடம், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்று பதிலளித்தார். அவர்கள், "நாங்கள் போய் இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறீரா?" என்று கேட்டார்கள்.
38 அப்பொழுது அவர், "உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்" என்று கூற, அவர்களும் பார்த்து விட்டு, "ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன" என்றார்கள்.
39 அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார்.
40 மக்கள் நூறு பேராகவும், ஐம்பது பேராகவும் வரிசை வரிசையாய் அமர்ந்தனர்.
41 அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார்.
42 அனைவரும் வயிறார உண்டனர்.
43 பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
44 அப்பம் உண்ட ஆண்களின் தொகை ஐயாயிரம்.
45 இயேசு கூட்டத்தினரை அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது தம் சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.
46 அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார்.
47 பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால் அவர் தனியே கரையில் இருந்தார்.
48 அப்போது எதிர்க் காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை.
49 அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, "அது பேய்" என்று எண்ணி அவர்கள் அலறினார்கள்.
50 ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். "துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்" என்றார்;
51 பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிகமிக மலைத்துப் போனார்கள்.
52 ஏனெனில் அப்பங்கள்பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப்போயிருந்தது.
53 அவர்கள் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்து படகைக் கட்டி நிறுத்தினார்கள்.
54 அவர்கள் படகைவிட்டு இறங்கிய உடனே, மக்கள் இயேசுவை இன்னார் என்று கண்டுணர்ந்து,
55 அச்சுற்றுப் பகுதி எங்கும் ஓடிச் சென்று, அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் நோயாளர்களைப் படுக்கையில் கொண்டு வரத் தொடங்கினார்கள்.
56 மேலும் அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொதுவிடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.
மாற்கு நற்செய்தி அதிகாரம் 7
1 ஒருநாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் அவரிடம் வந்து கூடினர்.
2 அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள்.
3 பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை;
4 சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.
5 ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, "உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?" என்று கேட்டனர்.
6 அதற்கு அவர், "வெளிவேடக்காரர்களாகிய உங்களைப்பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். "இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது.
7 மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்" என்று அவர் எழுதியுள்ளார்.
8 நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்" என்று அவர்களிடம் கூறினார்.
9 மேலும் அவர், "உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள்.
10 "உன் தந்தையையும் தாயையும் மதித்துநட" என்றும் தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்" என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா!
11 ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, "நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது "கொர்பான்" ஆயிற்று; அதாவது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று" என்றால்,
12 அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை.
13 இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்" என்று அவர்களிடம் கூறினார்.
14 இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, "நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள்.
15 வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும்.
16 (கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும் ") என்று கூறினார்.
17 அவர் மக்கள் கூட்டத்தை விட்டு வீட்டிற்குள் வந்தபோது அவருடைய சீடர் அவரிடம் இந்த உவமையைப்பற்றிக் கேட்க,
18 அவர் அவர்களிடம், "நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப் படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா?
19 ஏனென்றால், அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய் விடுகிறது" என்றார். இவ்வாறு அவர் எல்லா உணவுப் பொருள்களும் தூயனவென்று குறிப்பிட்டார்.
20 மேலும் "மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும்.
21 ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை,
22 தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன.
23 தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப் படுத்துகின்றன" என்றார்.
24 இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை.
25 உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது.
26 அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.
27 இயேசு அவரைப் பார்த்து, "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்றார்.
28 அதற்கு அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே" என்று பதிலளித்தார்.
29 அப்பொழுது இயேசு அவரிடம், "நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று" என்றார்.
30 அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.
31 மீண்டும் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார்.
32 காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர்.
33 இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்.
34 பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி "எப்பத்தா" அதாவது "திறக்கப்படு" என்றார்.
35 உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.
36 இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள்.
37 அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய் , "இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!" என்று பேசிக்கொண்டார்கள்.
மாற்கு நற்செய்தி அதிகாரம் 8
1 அந்நாள்களில் மீண்டும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். உண்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை. இயேசு தம் சீடரை வரவழைத்து அவர்களிடம்,
2 "நான் இம்மக்கள் கூட்டத்தின் மீது பரிவுகொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவுமில்லை.
3 நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர்" என்று கூறினார்.
4 அதற்கு அவருடைய சீடர்கள், "இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவு அளிப்பது எப்படி?" என்று கேட்டார்கள்.
5 அப்போது அவர் அவர்களைப் பார்த்து, "உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?" என்று கேட்டார். அவர்கள் "ஏழு" என்றார்கள்.
6 தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்; பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள்.
7 சிறு மீன்கள் சிலவும் அவர்களிடம் இருந்தன. அவற்றின்மீது அவர் ஆசிகூறிப் பரிமாறச் சொன்னார்.
8 அவர்கள் வயிறார உண்டார்கள். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தார்கள்.
9 அங்கு இருந்தவர்கள் ஏறக்குறைய நாலாயிரம் பேர். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்;
10 உடனடியாகத் தம் சீடருடன் படகேறித் தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார்.
11 பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத் தொடங்கினர்; வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதித்தனர்.
12 அவர் பெருமூச்சுவிட்டு, "இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்? இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
13 அவர்களை விட்டு அகன்று மீண்டும் படகேறி அவர் மறு கரைக்குச் சென்றார்.
14 சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள். படகில் அவர்களிடம் ஓர் அப்பம் மட்டுமே இருந்தது.
15 அப்பொழுது இயேசு, "பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
16 அவர்களோ தங்களிடம் அப்பம் இல்லையே என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.
17 இதை அறிந்த இயேசு அவர்களை நோக்கி, "நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக் கொள்ளுகிறீர்கள்? இன்னுமா உணராமலும் புரிந்து கொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று?
18 கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? ஏன், உங்களுக்கு நினைவில்லையா?
19 ஐந்து அப்பங்களை நான் ஐயாயிரம் பேருக்குப் பிட்டு அளித்த போது, மீதியான துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?" என்று அவர் கேட்க, அவர்கள் "பன்னிரண்டு" என்றார்கள்.
20 "ஏழு அப்பங்களை நான் நாலாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது மீதித் துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?" என்று கேட்க, அவர்கள், "ஏழு" என்றார்கள்.
21 மேலும் அவர் அவர்களை நோக்கி, "இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?" என்று கேட்டார்.
22 அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர்.
23 அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, "ஏதாவது பார்க்கிறீரா?" என்று கேட்டார்.
24 அவர் நிமிர்ந்து பார்த்து, "மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்" என்று சொன்னார்.
25 இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப் பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்.
26 இயேசு அவரிடம், "ஊரில் நுழைய வேண்டாம்" என்று கூறி அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
27 இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டார்.
28 அதற்கு அவர்கள் அவரிடம், "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்" என்றார்கள்.
29 "ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா" என்று உரைத்தார்.
30 தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.
31 "மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்" என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார்.
32 இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார்.
33 ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், "என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்று கடிந்துகொண்டார்.
34 பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.
35 ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்.
36 ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?
37 அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?
38 பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப்படுவார்" என்றார்
மாற்கு நற்செய்தி அதிகாரம் 9
1 மேலும் அவர் அவர்களிடம், "இங்கே இருப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
2 ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களைமட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார்.
3 அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின.
4 அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
5 பேதுரு இயேசுவைப் பார்த்து, "ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்றார்.
6 தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.
7 அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது.
8 உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.
9 அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், "மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
10 அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, "இறந்து உயிர்த்தெழுதல்" என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.
11 அவர்கள் அவரிடம், "எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர் கூறுவதேன்?" என்று கேட்டார்கள்.
12 அதற்கு அவர், "எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் மானிட மகன் பல துன்பங்கள் படவும் இகழ்ந்து தள்ளப்படவும் வேண்டுமென்று அவரைக் குறித்து எழுதப்பட்டுள்ளதே, அது எப்படி?
13 ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியா வந்துவிட்டார். அவர்கள் தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவரைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளவாறே அவை நிகழ்ந்தன" என்றார்.
14 அவர்கள் மற்ற சீடரிடம் வந்தபொழுது, பெருந்திரளான மக்கள் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும் மறைநூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர்.
15 மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று அவரிடம் ஓடிப்போய் அவரை வாழ்த்தினர்.
16 அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் இவர்களோடு எதைப்பற்றி வாதாடுகிறீர்கள்?" என்று கேட்டார்.
17 அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, "போதகரே. தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன்.
18 அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்; உடம்பும் விறைத்துப்போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லை" என்று கூறினார்.
19 அதற்கு அவர் அவர்களிடம், "நம்பிக்கையற்ற தலைமுறையினரே. எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள்" என்று கூறினார்.
20 அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது.
21 அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, "இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?" என்று கேட்டார். அதற்கு அவர், "குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்துவருகிறது.
22 இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பலமுறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்" என்றார்.
23 இயேசு அவரை நோக்கி, "இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்" என்றார்.
24 உடனே அச்சிறுவனின் தந்தை, "நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்" என்று கதறினார்.
25 அப்போது மக்கள் கூட்டம் தம்மிடம் ஓடிவருவதை இயேசு கண்டு, அந்தத் தீய ஆவியை அதட்டி, "ஊமைச் செவிட்டு ஆவியே,உனக்குக் கட்டளையிடுகிறேன்; இவனை விட்டுப் போ; இனி இவனுள் நுழையாதே" என்றார்.
26 அது அலறி அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாக்கி வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே அவர்களுள் பலர், "அவன் இறந்துவிட்டான்" என்றனர்.
27 இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான்.
28 அவர் வீட்டில் நுழைந்ததும் அவருடைய சீடர் அவரிடம் தனிமையாக வந்து, "அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?" என்று கேட்டனர்.
29 அதற்கு அவர், "இவ்வகைப் பேய் இறை வேண்டலினாலும் (நோன்பினாலும் ) அன்றி வேறு எதனாலும் வெளியேறாது" என்றார்.
30 அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார்.
31 ஏனெனில், "மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்" என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார்.
32 அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.
33 அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, "வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார்.
34 அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள்.
35 அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்றார்.
36 பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு,
37 "இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்" என்றார்.
38 அப்பொழுது யோவான் இயேசுவிடம், "போதகரே , ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்" என்றார்.
39 அதற்கு இயேசு கூறியது; "தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார்.
40 ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.
41 நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
42 "என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.
43 உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.
44 உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள்.
45 நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.
46 உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள்.
47 நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது.
48 நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.
49 ஏனெனில் பலிப்பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவதுபோல் ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர்.
50 உப்பு நல்லது. ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால் எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்குவீர்கள்? நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள்.
மாற்கு நற்செய்தி அதிகாரம் 10
1 இயேசு அங்கிருந்து புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம் போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார்.
2 பரிசேயர் அவரை அணுகி, "கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.
3 அவர் அவர்களிடம் மறுமொழியாக, "மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?" என்று கேட்டார்.
4 அவர்கள், "மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்" என்று கூறினார்கள்.
5 அதற்கு இயேசு அவரிகளிடம், "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்.
6 படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள். "ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
7 இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்.
8 இருவரும் ஒரே உடலாய் இருப்பர். 'இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்.
9 எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.
10 பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.
11 இயேசு அவர்களை நோக்கி, "தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான்.
12 தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்" என்றார்.
13 சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.
14 இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.
15 இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
16 பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.
17 இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, "நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று அவரைக் கேட்டார்.
18 அதற்கு இயேசு அவரிடம், "நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.
19 உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? "கொலைசெய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட"" என்றார்.
20 அவர் இயேசுவிடம், "போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்" என்று கூறினார்.
21 அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்று அவரிடம் கூறினார்.
22 இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.
23 இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், "செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்" என்றார்.
24 சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, "பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்.
25 அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.
26 சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், "பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்?" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
27 இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, "மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்" என்றார்.
28 அப்போது பேதுரு அவரிடம், "பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே" என்று சொன்னார்.
29 அதற்கு இயேசு, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும்
30 இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.
31 முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்" என்றார்.
32 அவர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார். சீடர் திகைப்புற்றிருக்க, அவரைப் பின்பற்றிய ஏனையோர் அச்சம் கொண்டிருந்தனர். அவர் மீண்டும் பன்னிருவரை அழைத்துத் தமக்கு நிகழவிருப்பவற்றைக் குறித்துப் பேசத் தொடங்கினார்.
33 அவர், "இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து அவரைப் பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்;
34 அவர்கள் ஏளனம் செய்து, அவர் மீது துப்பி, சாட்டையால் அடித்து அவரைக் கொலை செய்வார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்" என்று அவர்களிடம் கூறினார்.
35 செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், "போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்கள்.
36 அவர் அவர்களிடம், "நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார்.
37 அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்" என்று வேண்டினர்.
38 இயேசுவோ அவர்களிடம், "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உஙகளால் பெற இயலுமா?" என்று கேட்டார்.
39 அவர்கள் அவரிடம், "இயலும்" என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, "நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள்.
40 ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்" என்று கூறினார்.
41 இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர்.
42 இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், "பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்.
43 ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.
44 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்.
45 ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரை கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார்.
46 இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.
47 நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, "இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கத்தத் தொடங்கினார்.
48 பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், "தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று இன்னும் உரக்கக் கத்தினார்.
49 இயேசு நின்று, "அவரைக் கூப்பிடுங்கள்" என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, "துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்" என்றார்கள்.
50 அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார்.
51 இயேசு அவரைப் பார்த்து, "உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், "ரப+ணி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்" என்றார்.
52 இயேசு அவரிடம், "நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று" என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.
மாற்கு நற்செய்தி அதிகாரம் 11
1 இயேசு தம் சீடரோடு ஒலிவமலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி,
2 "உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.
3 யாராவது உங்களிடம், "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று கேட்டால், "இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார்" எனச் சொல்லுங்கள்" என்றார்.
4 அவர்கள் சென்று ஒரு வீட்டுவாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்துக் கொண்டுவந்தார்கள்.
5 அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் அவர்களிடம், "என்ன செய்கிறீர்கள்? கழுதைக் குட்டியையா அவிழ்க்கிறீர்கள்?" என்று கேட்டனர்.
6 அவர்கள் இயேசு தங்களுக்குக் கூறியபடியே சொல்ல, அங்கு நின்றவர்களும் போகவிட்டனர்.
7 பிறகு அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, அதன் மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார்.
8 பலர் தங்கள் மேலுடைகளையும், வேறு சிலர் வயல் வெளிகளில் வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர்.
9 முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், "ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!
10 வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று ஆர்ப்பரித்தனர்.
11 அவர் எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார். அவர் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ஏற்கெனவே மாலை வேளையாகி விட்டதால், பன்னிருவருடன் பெத்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
12 மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று.
13 இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக்காலம் அல்ல.
14 அவர் அதைப் பார்த்து, "இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது" என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
15 அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். கோவிலுக்குள் சென்றதும் இயேசு அங்கு விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார்; நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார்.
16 கோவில் வழியாக எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல அவர் விடவில்லை.
17 ';என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும்" என்று மறைநூலில் எழுதியுள்ளது" என்று அவர்களுக்குக் கற்பித்தார்; "ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்" என்றார்.
18 தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இதைக் கேட்டு, அவரை எப்படி ஒழித்துவிடலாம் என்று வழிதேடினார்கள். எனினும் கூட்டத்தினர் அனைவரும் அவரது போதனையில் ஆழ்ந்து வியந்திருந்ததால் அவர்கள் அவருக்கு அஞ்சினார்கள்.
19 மாலை வேளை ஆனதும் இயேசுவும் சீடர்களும் நகரத்திலிருந்து வெளியேறினார்கள்.
20 காலையில் அவர்கள் அவ்வழியே சென்றபோது அந்த அத்தி மரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைக் கண்டார்கள்.
21 அப்போது பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து அவரை நோக்கி, "ரபி, அதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று" என்றார்.
22 அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து, "கடவுள்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.
23 உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எவராவது இந்த மலையைப் பார்த்து, "பெயர்ந்து கடலில் விழு" எனத் தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால், அவர் சொன்னவாறே நடக்கும்.
24 ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்.
25 நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள்.
26 அப்போது உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்" என்று கூறினார்.
27 அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்து கொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து,
28 "எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?" என்று கேட்டனர்.
29 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, "நானும், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன்.
30 திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்" என்றார்.
31 அவர்கள், ';விண்ணகத்திலிருந்து வந்தது" என்போமானால், "பின் ஏன் அவரை நம்பவில்லை" எனக் கேட்பார். எனவே "மனிதரிடமிருந்து வந்தது" என்போமா?" என்று தங்களிடையே பேசிக் கொண்டிருந்தார்கள்.
32 ஆனால் மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள்.
33 எனவே, அவர்கள் இயேசுவிடம், "எங்களுக்குத் தெரியாது" என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், "எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் கூறமாட்டேன்" என்றார்.
மாற்கு நற்செய்தி அதிகாரம் 12
1 இயேசு அவர்களிடம் உவமைகள் வாயிலாகப் பேசத் தொடங்கினார்; "ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டுச் சுற்றிலும் வேலியடைத்து, பிழிவுக்குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார். பிறகு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும்பயணம் மேற்கொண்டார்.
2 பருவகாலம் வந்ததும் அத்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு ஒரு பணியாளரை அவர் அனுப்பினார்.
3 ஆனால் அவர்கள் அவரைப் பிடித்து நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.
4 மீண்டும் அவர் வேறொரு பணியாளரை அவர்களிடம் அனுப்ப, அவரையும் அவர்கள் தலையில் அடித்து அவமதித்தார்கள்.
5 அவர் மேலும் ஒருவரை அனுப்ப, அவரையும் கொலை செய்தார்கள்; அவர் வேறு பலரையும் அனுப்பினார். அவர்களுள் சிலரை நையப்புடைத்தார்கள்; சிலரைக் கொன்றார்கள்.
6 இன்னும் எஞ்சியிருந்தவர் ஒருவரே. அவர் அவருடைய அன்பு மகன், தம்மகனை அவர்கள் மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு இறுதியாக அவரை அவர்களிடம் அனுப்பினார்.
7 அப்பொழுது அத்தோட்டத் தொழிலாளர்கள், "இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள் நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நமக்கு உரியதாகும்" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
8 அவ்வாறே அவரைப் பிடித்துக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.
9 திராட்சைத் தோட்ட உரிமையாளர் என்ன செய்வார்? அவர் வந்து அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் ஒப்படைப்பார்.
10 "கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று.
11 ஆண்டவரால் நிகழ்ந்துள்ள இது நம் கண்களுக்கு வியப்பாயிற்று" என்னும் மறைநூல் வாக்கை நீங்கள் வாசித்தது இல்லையா?" என்று அவர் கேட்டார்.
12 தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டு அவரைப் பிடிக்க வழிதேடினார்கள்; ஆனால் மக்கள் கூட்டத்துக்கு அஞ்சினார்கள்; ஆகவே அவரை விட்டு அகன்றார்கள்.
13 பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்கவைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர்.
14 அவர்கள் அவரிடம் வந்து, "போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா?" என்று கேட்டார்கள்.
15 அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்து கொண்டு, "ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டுவாருங்கள். நான் பார்க்க வேண்டும்" என்றார்.
16 அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், "இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "சீசருடையவை" என்றார்கள்.
17 அதற்கு இயேசு அவர்களை நோக்கி, "சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.
18 உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி,
19 "போதகரே, ஒருவர் மகப் பேறின்றித் தம் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவரைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு சகோதரருக்கு வழிமரபு உருவாக்கவேண்டும் என்று மோசே நமக்கு எழுதி வைத்துள்ளார்.
20 சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார்.
21 இரண்டாமவர் அவரை மணந்து அவரும் மகப்பேறின்றி இறந்ததார். மூன்றாமவருக்கும் அவ்வாறே நிகழ்ந்தது.
22 ஏழு பேருக்கும் மகப்பேறு இல்லாமற்போயிற்று. அனைவருக்கும் கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.
23 அவர்கள் உயிர்த்தெழும் போது, அவர் அவர்களுள் யாருக்கு மனைவியாக இருப்பார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே!" என்று கேட்டனர்.
24 அதற்கு இயேசு அவர்களிடம், "உங்களுக்கு மறைநூலும் தெரியாது, கடவுளின் வல்லமையும் தெரியாது. இதனால்தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.
25 இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. மாறாக அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்.
26 இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் நூலில் முட்புதர் பற்றிய நிகழ்ச்சியில் இவ்வாறு வாசித்ததில்லையா? "ஆபிரகாமின் கடவுள் ஈசாக்கின் கடவுள் யாக்கோபின் கடவுள் நானே" என்று கடவுள் அவரிடம் சொன்னாரே!
27 அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்று கூறினார்.
28 அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்று கேட்டார்.
29 அதற்கு இயேசு, "இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.
30 உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக" என்பது முதன்மையான கட்டளை.
31 "உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக" என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை" என்றார்.
32 அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், "நன்று போதகரே, "கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை" என்று நீர் கூறியது உண்மையே.
33 அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது" என்று கூறினார்.
34 அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், "நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை" என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
35 இயேசு கோவிலில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, "மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் கூறுவது எப்படி?
36 தூய ஆவியின் தூண்டுதலால், "ஆண்டவர் என் தலைவரிடம், "நான் உம் பகைவரை உமக்கு அடிபணியவைக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்" என்று உரைத்தார்" எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா!
37 தாவீது அவரைத் தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி?" என்று கேட்டார். அப்போது பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
38 இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது, "மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்;
39 தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்;
40 கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் இவர்களே" என்று கூறினார்.
41 இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக்காசு போடுவதை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர்.
42 அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார்.
43 அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, "இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
44 ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்" என்று அவர்களிடம் கூறினார்.
மாற்கு நற்செய்தி அதிகாரம் 13
1 இயேசு கோவிலைவிட்டு வெளியே வந்தபோது அவருடைய சீடருள் ஒருவர், "போதகரே, எத்தகைய கற்கள்! எத்தகைய கட்டடங்கள்! பாரும்" என்று அவரிடம் சொல்ல,
2 இயேசு அவரை நோக்கி, "இந்த மாபெரும் கட்டடங்களைப் பார்க்கிறீர் அல்லவா! இங்குக் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும்" என்றார்.
3 இயேசு கோவிலுக்கு எதிராக உள்ள ஒலிவ மலைமீது அமர்ந்திருந்த போது பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் அவரிடம் தனியாக வந்து,
4 "நீர் கூறியவை எப்போது நிகழும்? இவையனைத்தும் நிறைவேறப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? எங்களுக்குச் சொல்லும்" என்று கேட்டனர்.
5 அதற்கு இயேசு அவர்களிடம் கூறியது; "உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
6 ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, "நானே அவர்" என்று சொல்லிப் பலரை நெறிதவறச் செய்வர்.
7 போர் முழக்கங்களையும் போர்களைப்பற்றிய செய்திகளையும் கேட்கும் பொழுது நீங்கள் திடுக்கிடாதீர்கள். இவை நிகழத்தான் வேண்டும். ஆனால் இவையே முடிவாகா.
8 நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்; பல இடங்களில் நில நடுக்கங்கள் ஏற்படும்; பஞ்சமும் உண்டாகும். இவை கொடும் வேதனைகளின் தொடக்கமே.
9 "நீங்கள் கவனமாயிருங்கள்; உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள்; தொழுகைக்கூடங்களில் உங்களை நையப்புடைப்பார்கள்; என் பொருட்டு ஆளுநர் முன்னும் அரசர் முன்னும் நிறுத்தப்பட்டு அவர்கள் முன் எனக்குச் சான்று பகர்வீர்கள்.
10 ஆனால் எல்லா மக்களினத்தவர்க்கும் முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும்.
11 அவர்கள் உங்களைக் கைதுசெய்து கொண்டு செல்லும்போது என்ன பேசுவது என நீங்கள் முன்னதாகவே கவலைப்பட வேண்டாம்; அந்த நேரத்தில் உங்களுக்கு அருளப்படுவதையே பேசுங்கள். ஏனெனில் பேசுவோர் நீங்கள் அல்ல. மாறாக, தூய ஆவியாரே.
12 மேலும் சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தை பிள்ளையையும் கொல்வதற்கு என ஒப்புவிப்பர்; பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழும்பி அவர்களைக் கொல்வார்கள்.
13 எனது பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பர். ஆனால் இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்.
14 "நடுங்க வைக்கும் தீட்டு" நிற்கக்கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். படிப்பவர் இதைப் புரிந்து கொள்ளட்டும். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்.
15 வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்க வேண்டாம்; தம் வீட்டினின்று எதையும் எடுக்க அதில் நுழையவும் வேண்டாம்.
16 வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வர வேண்டாம்.
17 அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோர் நிலைமை அந்தோ பரிதாபம்!
18 இவை குளிர்காலத்தில் நிகழாதபடி இறைவனிடம் வேண்டுங்கள்.
19 ஏனெனில் இவை துன்பம்தரும் நாள்களாய் இருக்கும். கடவுள் படைக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இந்நாள்வரை இத்தகைய வேதனை உண்டானதில்லை; இனிமேலும் உண்டாகப் போவதில்லை.
20 ஆண்டவர் அந்நாள்களைக் குறைக்காவிடில் எவரும் தப்பிப் பிழைக்க முடியாது. ஆனால் தாம் தேர்ந்து கொண்டவர்களின் பொருட்டு அவர் அந்நாள்களைக் குறைத்திருக்கிறார்.
21 "அப்பொழுது யாராவது உங்களிடம், "இதோ, மெசியா இங்கே இருக்கிறார்; அதோ, அங்கே இருக்கிறார்" எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம்.
22 ஏனெனில் போலி மெசியாக்களும் போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறிதவறச் செய்ய அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்து காட்டுவர்.
23 நீங்களோ கவனமாயிருங்கள். அனைத்தையும் முன்னதாகவே உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.
24 "அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.
25 விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.
26 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.
27 பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
28 "அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.
29 அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
30 இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
31 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.
32 "ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.
33 கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது.
34 நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார்.
35 அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.
36 அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது.
37 நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்; விழிப்பாயிருங்கள்.
மாற்கு நற்செய்தி அதிகாரம் 14
1 பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நிகழ இன்னும் இரண்டு நாள்கள் இருந்தன. தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்யலாம் என்று வழிதேடிக் கொண்டிருந்தனர்;
2 ஆயினும், "விழாவின்போது வேண்டாம்; ஒரு வேளை மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும்" என்று நினைத்தனர்.
3 இயேசு, பெத்தானியாவில் தொழு நோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கே பந்தியில் அமர்ந்திருந்தபோது இலாமிச்சை நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் வந்தார். அந்தத் தைலம் கலப்பற்றது, விலையுயர்ந்தது. அவர் அப்படிகச் சிமிழை உடைத்து இயேசுவின் தலையில் ஊற்றினார்.
4 ஆனால் அங்கிருந்த சிலர் கோபமடைந்து, "இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை முந்நூறு தெனாரியத்துக்கும் மேலாக விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே, "என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
5 அப்பெண் மீதும் சீறி எழுந்தனர்.
6 இயேசு அவர்களிடம், "அவரை விடுங்கள். ஏன் அவருக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது முறையான செயலே.
7 ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள். நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யமுடியும். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை.
8 இவர் தம்மால் இயன்றதைச் செய்தார். என் அடக்கத்திற்காக இவர் முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் ப+சிவிட்டார்.
9 உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இவர் செய்ததும் எடுத்துக் கூறப்படும்; இவரும் நினைவு கூறப்படுவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று கூறினார்.
10 பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான்.
11 அவர்கள் அதை அறிந்து மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். அவனும் அவரை எப்படிக் காட்டிக்கொடுக்கலாம் என்று வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.
12 புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், "நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார்கள்.
13 அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்; "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள்.
14 அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், "நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?" என்று போதகர் கேட்கச் சொன்னார்" எனக் கூறுங்கள்.
15 அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்."
16 சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
17 மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார்.
18 அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தபொழுது இயேசு, "என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
19 அவர்கள் வருத்தமுற்று, ஒருவர் பின் ஒருவராக, "நானோ?நானோ?" என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.
20 அதற்கு அவர், "அவன் பன்னிருவருள் ஒருவன்; என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவன்.
21 மானிடமகன் தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளவாறே போகிறார். ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்" என்றார்.
22 அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, "இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்" என்றார்.
23 பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர்.
24 அப்பொழுது அவர் அவர்களிடம், "இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்.
25 இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
26 அவர்கள் புகழ்ப்பாடல் பாடிவிட்டு ஒலிவமலைக்குச் சென்றார்கள்.
27 இயேசு அவர்களிடம், "நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். ஏனெனில், "ஆயரை வெட்டுவேன்; அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும்" என்று மறைநூலில் எழுதியுள்ளது.
28 ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப் போவேன்" என்றார்.
29 பேதுரு அவரிடம், "எல்லாரும் ஓடிப்போய்விட்டாலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன்" என்றார்.
30 இயேசு அவரிடம், "இன்றிரவில் சேவல் இருமுறை கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உனக்குச் சொல்கிறேன்" என்றார்.
31 அவரோ, "நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்" என்று மிக அழுத்தமாகச் சொன்னார். அப்படியே அவர்கள் அனைவரும் சொன்னார்கள்.
32 பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம் சீடரிடம், "நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள்" என்று கூறி,
33 பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்.
34 அவர், "எனது உள்ளம் சாவுவருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள்" என்று அவர்களிடம் கூறினார்.
35 சற்று அப்பால் சென்று தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார்.
36 "அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்று கூறினார்.
37 அதன்பின்பு அவர் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், "சீமோனே, உறங்கிக் கொண்டா இருக்கிறாய்? ஒரு மணிநேரம் விழித்திருக்க உனக்கு வலுவில்லையா?
38 உங்கள் மனம் ஆர்வம் உடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்" என்றார்.
39 அவர் மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி இறைவனிடம் வேண்டினார்.
40 அவர் திரும்பவும் வந்தபோது அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவருக்கு என்ன மறுமொழி கூறுவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.
41 அவர் மூன்றாம் முறை வந்து அவர்களை நோக்கி, "இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? போதும், நேரம் வந்துவிட்டது. மானிடமகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படப் போகிறார்.
42 எழுந்திருங்கள், போவோம். இதோ, என்னைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான்" என்று கூறினார்.
43 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது.
44 அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவன், "நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு, அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள்" என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.
45 அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி, "ரபி" எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.
46 அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர்.
47 அருகில் நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்.
48 இயேசு அவர்களைப் பார்த்து, "கள்வனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைது செய்ய வந்தது ஏன்?
49 நான் நாள்தோறும் கோவிலில் கற்பித்துக் கொண்டு உங்களோடு இருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே! ஆனால் மறைநூலில் எழுதப்பட்டுள்ளவை நிறைவேற வேண்டும்" என்றார்.
50 அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.
51 இளைஞர் ஒருவர் தம் வெறும் உடம்பின் மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக் கொண்டு அவர் பின்னே சென்றார்; அவரைப் பிடித்தார்கள்.
52 ஆனால் அவர் துணியை விட்டு விட்டு ஆடையன்றித் தப்பி ஓடினார்.
53 அவர்கள் இயேசுவைத் தலைமைக் குருவிடம் கூட்டிச் சென்றார்கள். எல்லாத் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் ஒன்று கூடினார்கள்.
54 பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். தலைமைக் குருவின் வீட்டு உள்முற்றம் வரை வந்து காவலரோடு உட்கார்ந்து நெருப்பின் அருகே அவர் குளிர்காய்ந்து கொண்டிருந்தார்.
55 தலைமைக் குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகச் சான்று தேடினார்கள். ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை.
56 பலர் அவருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொன்னார்கள். ஆனால் அச்சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தன.
57 சிலர் எழுந்து, "மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்து விட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை
58 மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம்" என்று அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று கூறினர்.
59 அப்படியும் அவர்களுடைய சான்று ஒத்துவரவில்லை.
60 அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவர்களின் நடுவே நின்று, "இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி ஒன்றும் கூற மாட்டாயா?" என்று இயேசுவைக் கேட்டார்.
61 ஆனால் அவர் பேசாதிருந்தார். மறுமொழி ஒன்றும் அவர் கூறவில்லை. மீண்டும் தலைமைக் குரு, "போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ?" என்று அவரைக் கேட்டார்.
62 அதற்கு இயேசு, "நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள் "என்றார்.
63 தலைமைக் குருவோ தம் அங்கியைக் கிழித்துக்கொண்டு, "இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா?
64 இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக் கேட்டீர்களே; உங்களுக்கு என்ன தோன்றுகிறது?" என்று கேட்க, அவர்கள் அனைவரும், "இவன் சாக வேண்டியவன்" என்று தீர்மானித்தார்கள்.
65 பின்பு சிலர் அவர்மேல் துப்பவும், அவர் முகத்தை மூடி அவரைக் கையால் குத்தி, "இறைவாக்கினனே, யார் எனச் சொல்" என்று கேட்கவும் தொடங்கினர். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர்.
66 அப்பொழுது பேதுரு கீழே முற்றத்தில் இருக்க, தலைமைக் குருவின் பணிப் பெண் ஒருவர் வந்து,
67 பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருக்கக் கண்டு அவரைக் கூர்ந்து நோக்கி, "நீயும் இந்த நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்தானே" என்றார்.
68 அவரோ, "நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, புரியவுமில்லை" என்று மறுதலித்து, வெளி முற்றத்திற்குச் சென்றார். (அப்பொழுது சேவல் கூவிற்று ).
69 அந்தப் பணிப்பெண் அவரைக் கண்டு சூழ இருந்தவர்களிடம், "இவனும் அவர்களைச் சேர்ந்தவன்தான்" என்று மீண்டும் கூறத் தொடங்கினார்.
70 அவர் மீண்டும் மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின் சூழ இருந்தவர்களும், "உண்மையாகவே நீ அவர்களைச் சேர்ந்தவனே. ஏனெனில் நீ ஒரு கலிலேயன்" என்று மீண்டும் பேதுருவிடம் கூறினார்கள்.
71 அவரோ, "நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த மனிதனை எனக்குத் தெரியாது" என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார்.
72 உடனே இரண்டாம் முறை சேவல் கூவிற்று. அப்பொழுது, "சேவல் இருமுறை கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று இயேசு தமக்குக் கூறிய சொற்களைப் பேதுரு நினைவு கூர்ந்து மனம் உடைந்து அழுதார்.
மாற்கு நற்செய்தி அதிகாரம் 15
1 பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று பிலாத்திடம் ஒப்புவித்தனர்.
2 பிலாத்து அவரை நோக்கி, "நீ யூதரின் அரசனா?" என்று கேட்க அவர், "அவ்வாறு நீர் சொல்கிறீர்" என்று பதில் கூறினார்.
3 தலைமைக் குருக்கள் அவர்மீது பல குற்றங்களைச் சுமத்தினார்கள்.
4 மீண்டும் பிலாத்து, "நீ பதில் ஒன்றும் சொல்ல மாட்டாயா? உன் மீது இத்தனை குற்றங்களைச் சுமத்துகிறார்களே!" என்று அவரிடம் கேட்டான்.
5 இயேசுவோ எப்பதிலும் கூறவில்லை. ஆகவே பிலாத்து வியப்புற்றான்.
6 விழாவின்போது மக்கள் கேட்டுக் கொள்ளும் ஒரு கைதியை அவர்களுக்காகப் பிலாத்து விடுதலை செய்வதுண்டு.
7 பரபா என்னும் கைதி ஒருவன் இருந்தான். ஒரு கலகத்தில் கொலை செய்த கலகக்காரரோடு பிடிபட்டவன் அவன்.
8 மக்கள் கூட்டம் வந்து, வழக்கமாய்ச் செய்வதுபோல ஒரு கைதியை விடுதலை செய்யுமாறு பிலாத்துவை வேண்டத் தொடங்கியது.
9 அதற்குப் பிலாத்து, "யூதரின் அரசரை உங்களுக்காக நான் விடுதலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா?" என்று கேட்டான்.
10 ஏனெனில் தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் அவரை ஒப்புவித்திருந்தார்கள் என்று அவன் உணர்ந்திருந்தான்.
11 ஆனால் தலைமைக் குருக்கள் தங்களுக்குப் பரபாவையே அவன் விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்குமாறு கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள்.
12 பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து, "அப்படியானால் நீங்கள் யூதரின் அரசர் என்று குறிப்பிடும் இவனை நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.
13 அவர்கள், "அவனைச் சிலுவையில் அறையும்" என்று மீண்டும் கத்தினார்கள்.
14 அதற்குப் பிலாத்து, "இவன் செய்த குற்றம் என்ன?" என்று கேட்க, அவர்கள், "அவனைச் சிலுவையில் அறையும்" என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள்.
15 ஆகவே பிலாத்து கூட்டத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பரபாவை விடுதலை செய்து, இயேசுவைக் கசையால் அடித்து, சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.
16 பிறகு படைவீரர் அவரை ஆளுநர் மாளிகையின் முற்றத்திற்கு இழுத்துக்கொண்டு போய்ப் படைப்பிரிவினர் அனைவரையும் கூட்டினர்;
17 அவருக்குச் செந்நிற ஆடையை உடுத்தினர்; ஒரு முள் முடி பின்னி அவருக்குச் சூட்டி,
18 "யூதரின் அரசே வாழ்க!" என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்;
19 மேலும் கோலால் அவர் தலையில் அடித்து. அவர்மீது துப்பி, முழந்தாள்படியிட்டு அவரை வணங்கினர்.
20 அவரை ஏளனம் செய்த பின் செந்நிற ஆடையைக் கழற்றி விட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக வெளியே கூட்டிச் சென்றனர்.
21 அப்பொழுது அலக்சாந்தர், ரூயஅp;பு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். படைவீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.
22 அவர்கள் "மண்டைஓட்டு இடம்" எனப்பொருள்படும் "கொல்கொதா" வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள்;
23 அங்கே அவருக்கு வெள்ளைப் போளம் கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை.
24 பிறகு அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; குலுக்கல் முறையில் யாருக்கு எது என்று பார்த்து அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள்.
25 அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி.
26 அவரது மரண தண்டனைக்கான காரணத்தை அறிவிக்க "யூதரின் அரசன்" என்று அவர்கள் எழுதிவைத்தார்கள்;
27 அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக,
28 இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்.
29 அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, "ஆகா, திருக்கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே,
30 சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே விடுவித்துக்கொள்" என்று அவரைப் பழித்துரைத்தார்கள்.
31 அவ்வாறே தலைமைக் குருக்கள் மறைநூல் அறிஞர்களுடன் சேர்ந்து அவரை ஏளனம் செய்து, "பிறரை விடுவித்தான், தன்னையே விடுவிக்க முடியவில்லை" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
32 அவர்கள், "இஸ்ரயேலின் அரசனாகிய மெசியா இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் கண்டு நம்புவோம்" என்றார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவர்களும் அவரை இகழ்ந்தார்கள்.
33 நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.
34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, "எலோயி, எலோயி, லெமா சபக்தானி?" என்று உரக்கக் கத்தினார். "என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்பது அதற்குப் பொருள்.
35 சூழ நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக்கேட்டு, "இதோ! எலியாவைக் கூப்பிடுகிறான்" என்றனர்.
36 அப்பொழுது அவர்களுள் ஒருவர் ஓடிச்சென்று கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்துக்கொண்டே, "பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம்" என்றார்.
37 இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.
38 அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது.
39 அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, "இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்" என்றார்.
40 பெண்கள் சிலரும் தொலையில் நின்று உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். அவர்களுள் மகதலா மரியாவும் சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும், சலோமி என்பவரும் இருந்தனர்.
41 இயேசு கலிலேயாவில் இருந்த போது அவர்கள் அவரைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்தவர்கள், அவருடன் எருசலேமுக்கு வந்திருந்த வேறுபல பெண்களும் அங்கே இருந்தார்கள்.
42 இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று ஓய்வுநாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால்,
43 அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்.
44 ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து, "அவன் இதற்குள் இறந்து விட்டானா?" என்று கேட்டான்.
45 நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான்.
46 யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார்; அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார்.
47 அவரை எங்கே வைத்தனர் என்பதை மகதலா மரியாவும் யோசேப்பின் தாய் மரியாவும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மாற்கு நற்செய்தி அதிகாரம் 16
1 ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் அவரது உடலில் ப+சுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கினர்.
2 வாரத்தின் முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் அவர்கள் கல்லறைக்குச் சென்றார்கள்.
3 "கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?" என்று அவர்கள் ஒருவரோடு ஒருவர் கேட்டுக் கொண்டார்கள்.
4 ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல்.
5 பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள்.
6 அவர் அவர்களிடம், "திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம்.
7 நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், "உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்" எனச் சொல்லுங்கள்" என்றார்.
8 அவர்கள் கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்; நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள்.
9 (வாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார்.
10 மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள்.
11 அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.
12 அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார்.
13 அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை.
14 இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதை நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார்.
15 இயேசு அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.
17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்;
18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்" என்று கூறினார்.
19 இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.
20 அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.)
திருவிவிலியம், திருவிவிலியம் bible in tamil, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு, திருவிவிலியம் கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, திருவிவிலியம் வரலாறு, கத்தோலிக்க திருவிவிலியம், பைபிள், பைபிள் வசனம் தேடல், பைபிள் வசனங்கள், பைபிள் வார்த்தை தேடல், தமிழ் பைபிள் வசனம், தமிழ் பைபிள், தமிழ் பைபிள் வார்த்தைகள், பைபிள் கேள்வியும் பதிலும், பைபிள் ஆராய்ச்சி, தமிழ் பைபிள் வினா விடை, பைபிள் வசனங்கள் தமிழில், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், பைபிள் வார்த்தைகள், பைபிள் தூய தமிழ் பெயர், பிறந்தநாள் பைபிள் வசனம், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் அதிகாரங்கள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், அன்பு பைபிள் வசனம், பைபிள் வெர்சஸ் இன் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், பைபிள் வினா விடை, பைபிள் கேள்வி பதில்கள், பைபிள் தமிழில், தமிழ் பைபிள் ஆடியோ, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனம், பைபிள் இன் தமிழ், பைபிள் ஆறுதல் வசனங்கள், பைபிள் பெண்கள் பெயர்கள், பைபிள் அர்த்தம், கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், பைபிள் வசனம் படம், கல்லறை பைபிள் வசனங்கள், பைபிள் பெயர்கள், தமிழ் பைபிள் விளக்கவுரை, பைபிள் வரலாறு, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் ஆடியோ பைபிள், பைபிளை எழுதியது யார், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் போதனைகள், பைபிள் அட்டவணை, தமிழ் பைபிள் ஆடியோ டவுன்லோடு, பைபிள் விடுகதைகள், பைபிள் வினாடி வினா, திருமண பைபிள் வசனம், வசனம் பைபிள், தமிழ் பைபிள் தேடுதல், பைபிள் பத்துக் கட்டளைகள், பைபிள் வசனங்கள் வேண்டும், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, பைபிள் தூய தமிழ், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், தமிழ் பைபிள் டவுன்லோட், பரிசுத்த வேதாகமம் தமிழ் பைபிள், ஆடியோ பைபிள், பைபிள் உருவான வரலாறு, பைபிள் வாக்குத்தத்தங்கள், பைபிள் பழைய ஏற்பாடு, பைபிள் பிரசங்க குறிப்பு, பைபிள் தமிழ் பெயர், தமிழ் பைபிள் வெர்சஸ் சர்ச், பைபிள் வேத ஆராய்ச்சி, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், கேள்வி பதில் தரப்பட்ட பைபிள், பைபிள் பத்து கட்டளைகள், பைபிள் எப்பொழுது எழுதப்பட்டது, கத்தோலிக்க பைபிள், பைபிள் நீதிமொழிகள், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தமிழ் பைபிள் வெர்சஸ், கொள்ளை நோய்கள் பைபிள், தமிழ் பைபிள் சர்ச், தமிழ் பைபிள் அகராதி, காதல் பற்றி பைபிள், விருத்தசேதனம் பைபிள், கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் விளக்கவுரை, பைபிள் கதை, bible வசனம், பத்து கட்டளைகள் bible, வேத வசனம் பைபிள், பைபிள் ஸ்டோரி தமிழ், பாவம் பைபிள், கிறிஸ்தவ பைபிள், எபிரேய பைபிள், பைபிள் வாசிப்பது எப்படி, பைபிள் வேர்ட்ஸ், பைபிள் சங்கீதம், விசுவாசம் பைபிள் செய்தி, பைபிள் ஸ்டடி, பைபிள் புத்தகங்கள், திருவிவிலியம், திருவிவிலியம் bible in tamil, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு, திருவிவிலியம் கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, திருவிவிலியம் வரலாறு, கத்தோலிக்க திருவிவிலியம், பைபிள், பைபிள் வசனம் தேடல், பைபிள் வசனங்கள், பைபிள் வார்த்தை தேடல், தமிழ் பைபிள் வசனம், தமிழ் பைபிள், தமிழ் பைபிள் வார்த்தைகள், பைபிள் கேள்வியும் பதிலும், பைபிள் ஆராய்ச்சி, தமிழ் பைபிள் வினா விடை, பைபிள் வசனங்கள் தமிழில், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், பைபிள் வார்த்தைகள், பைபிள் தூய தமிழ் பெயர், பிறந்தநாள் பைபிள் வசனம், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் அதிகாரங்கள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், அன்பு பைபிள் வசனம், பைபிள் வெர்சஸ் இன் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், பைபிள் வினா விடை, பைபிள் கேள்வி பதில்கள், பைபிள் தமிழில், தமிழ் பைபிள் ஆடியோ, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனம், பைபிள் இன் தமிழ், பைபிள் ஆறுதல் வசனங்கள், பைபிள் பெண்கள் பெயர்கள், பைபிள் அர்த்தம், கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், பைபிள் வசனம் படம், கல்லறை பைபிள் வசனங்கள், பைபிள் பெயர்கள், தமிழ் பைபிள் விளக்கவுரை, பைபிள் வரலாறு, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் ஆடியோ பைபிள், பைபிளை எழுதியது யார், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் போதனைகள், பைபிள் அட்டவணை, தமிழ் பைபிள் ஆடியோ டவுன்லோடு, பைபிள் விடுகதைகள், பைபிள் வினாடி வினா, திருமண பைபிள் வசனம், வசனம் பைபிள், தமிழ் பைபிள் தேடுதல், பைபிள் பத்துக் கட்டளைகள், பைபிள் வசனங்கள் வேண்டும், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, பைபிள் தூய தமிழ், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், தமிழ் பைபிள் டவுன்லோட், பரிசுத்த வேதாகமம் தமிழ் பைபிள், ஆடியோ பைபிள், பைபிள் உருவான வரலாறு, பைபிள் வாக்குத்தத்தங்கள், பைபிள் பழைய ஏற்பாடு, பைபிள் பிரசங்க குறிப்பு, பைபிள் தமிழ் பெயர், தமிழ் பைபிள் வெர்சஸ் சர்ச், பைபிள் வேத ஆராய்ச்சி, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், கேள்வி பதில் தரப்பட்ட பைபிள், பைபிள் பத்து கட்டளைகள், பைபிள் எப்பொழுது எழுதப்பட்டது, கத்தோலிக்க பைபிள், பைபிள் நீதிமொழிகள், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தமிழ் பைபிள் வெர்சஸ், கொள்ளை நோய்கள் பைபிள், தமிழ் பைபிள் சர்ச், தமிழ் பைபிள் அகராதி, காதல் பற்றி பைபிள், விருத்தசேதனம் பைபிள், கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் விளக்கவுரை, பைபிள் கதை, bible வசனம், பத்து கட்டளைகள் bible, வேத வசனம் பைபிள், பைபிள் ஸ்டோரி தமிழ், பாவம் பைபிள், கிறிஸ்தவ பைபிள், எபிரேய பைபிள், பைபிள் வாசிப்பது எப்படி, பைபிள் வேர்ட்ஸ், பைபிள் சங்கீதம், விசுவாசம் பைபிள் செய்தி, பைபிள் ஸ்டடி, பைபிள் புத்தகங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக