சீராக்கின் ஞானம்
முன்னுரை:
செலுhக்கியர் ஆட்சியின் போது கிரேக்க மொழி, பண்பாடு, வழிபாட்டு முறை முதலியன யூதர்கள் மீது திணிக்கப்பட்டன. யூதர் பலரும் இவற்றை விரும்பி ஏற்கத் தொடங்கினர். இக்கட்டத்தில் (ஏறத்தாழ கி.மு. 180) சீராக்கின் மகனும் எருசலேமில் வாழ்ந்த மறை நுhலறிஞருமான ஏசு, தம்மவரை யூத மறையில் உறுதிப்படுத்தி ஊக்குவிக்க எண்ணினார். உண்மையான ஞானம் இஸ்ரயேலில் தான் உள்ளது; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் தான் அது அடங்கும் என்பதை வலியுறுத்தி இந்நுhலை எழுதினார். எனவே இந்நுhல் எபிரேயத்தில் ,சீராவின் மகனான ஏசுவின் ஞானம் அல்லது "பென் சீரா" என வழங்குகிறது.
எபிரேய மொழியில் எழுதப் பெற்ற இந்நுhலை, பாலஸ்தீனத்துக்கு வெளியே கிரேக்கச் சூழலில் வாழ்ந்த யூதர்களின் நலன் கருதி, ஏசுவின் பேரன் (ஏறத்தாழ கி.மு. 132) கிரேக்கத்தில் மொழி பெயர்த்து, அதற்கு ஒரு முன்னுரையும் வரைந்தார். தொடக்கத் திருச்சபையில் ,திருப்பாடல்கள், நுhலுக்கு அடுத்தபடி இந்நுhல் திருவழிபாட்டிலும் மறைக்கல்வியிலும் மிகுதியாகப் பயன்பட்ட காரணத்தால், இது "சபை நுhல்" என்றும் பெயர் பெற்றது.
இந்நுhலின் எபிரேய பாடம் முழுதும் தொலைந்து விட, இதன் மொழி பெயர்ப்பான கிரேக்க பாடமே நமக்கு மூலபாடமாகப் பயன்பட்டு; வருகிறது. எனினும் எபிரேய பாடத்தின் பெரும் பகுதி தொல்லியல் ஆராய்ச்சியின் பயனாக இன்று நமக்குக் கிடைத்துள்ளதால், கிரேக்க பாடத்தை நன்கு புரிந்து கொள்ள இது பெரிதும் துணை புரிகிறது.
நுhலின் பிரிவுகள்
1) முகவுரை 1 - 35
2) ஞானம் வழங்கும் நன்னெறி 1:1 - 43:33
3) மூதாதையர் புகழ்ச்சி 44:1 - 50:29
4) பிற்சேர்க்கை 51:1 - 30
----------------------------
முகவுரை :
1-14 திருச்சட்டம், இறைவாக்கு நூல்கள், அவற்றைத் தொடர்ந்து வரும் ஏடுகள் வழியாகப் பல சிறந்த படிப்பினைகள் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. அவை காட்டும் நற்பயிற்சிக்காகவும் ஞானத்துக்காகவும் இஸ்ரயேலைப் புகழ்வது நமது கடமையாகும். அந்நூல்களைப் படிப்போர் அவற்றைப் புரிந்து கொண்டால் மட்டும் போதாது; கல்வியில் நாட்டம் கொண்டோர் என்னும் முறையில் தங்கள் பேச்சாலும் எழுத்தாலும் மற்றவர்களுக்கு உதவி செய்யவும் வேண்டும். எனவே, என் பாட்டனாராகிய ஏசு திருச்சட்டம், இறைவாக்கு நூல்கள், நம் மூதாதையர் எழுதிய மற்ற ஏடுகள் ஆகியவற்றை ஆழ்ந்து கற்பதில் ஆர்வம் காட்டினார்; அவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றபின் நற்பயிற்சி, ஞானம்பற்றி அவரே எழுதலானார். இவ்வாறு அவர் எழுதியவற்றின் துணைகொண்டு, கல்வியில் நாட்டம் கொண்டோர் திருச்சட்டத்திற்கு ஏற்ப வாழ்வதில் பெரும் முன்னேற்றம் காண்பர்.
15-26 எனவே, நீங்கள் இந்நூலை நன்மனத்தோடும், கவனத்தோடும் படிக்குமாறு வேண்டுகிறேன். நான் மிகுந்த கருத்துடன் இந்த மொழி பெயர்ப்பைச் செய்திருந்தாலும், சில சொற்றொடர்களைச் சற்றுப் பிழைபட மொழிபெயர்த்திருக்கக்கூடும். அதற்காக என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள்; ஏனெனில் மூலமொழியாகிய எபிரேயத்தில் சொல்லப்பட்டதைப் பிறிதொரு மொழியில் பெயர்த்து எழுதுகின்றபொழுது, அது முதல் நூல் பொருளை உணர்த்துவதில்லை. இந்த நூலுக்கு மட்டுமன்று; திருச்சட்டம், இறைவாக்கு நூல்கள், மற்ற ஏடுகள் ஆகிய எல்லாவற்றுக்குமே இது பொருந்தும். இவற்றின் பொருள் மூலமொழியில் பெரும் அளவில் மாறுபடுகிறது.
27-35 மன்னர் யூர்கெத்தின் ஆட்சியின் முப்பத்தெட்டாம் ஆண்டில், நான் எகிப்துக்குச் சென்று அங்குச் சிறிது காலம் தங்கியிருந்தேன். அப்பொழுது மிகுதியாகக் கற்றுக்கொள்வதற்கு உகந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எனவே நானே பெரும் முயற்சி எடுத்து உழைத்து, இந்த நூலைமொழிபெயர்ப்பது முதன்மையான தேவை என்று உணர்ந்தேன். அப்போது மிகுந்த கருத்தோடும் திறமையோடும் செயல்புரிந்து அப்பணியை முடித்தேன். இவ்வாறு, வெளிநாடுகளில் வாழ்ந்துவருபவருள் படிப்பினைமீது, நாட்டம் கொள்வோரும் திருச்சட்டத்தின்படி வாழ்வதற்கான நற்பயிற்சியில் ஈடுவடுவோரும் பயன்அடையும்பொருட்டு அதை வெளியிட்டுள்ளேன்.
அதிகாரம் 1
1 ஞானமெல்லாம் ஆண்டவரிடமிருந்து வருகின்றது; அது என்றும் அவரோடு இருக்கின்றது.
2 கடல் மணலையோ மழைத்துளியையோ முடிவில்லாக் காலத்தையோ யாரே கணக்கிடுவர்?
3 வான்வெளியின் உயரத்தையோ நிலவுலகின் அகலத்தையோ ஆழ்கடலையோ ஞானத்தையோ யாரே தேடிக் காண்பர்?
4 எல்லாவற்றுக்கும் முன்னர் ஞானமே உண்டாக்கப்பட்டது; கூர்மதி கொண்ட அறிவுத்திறன் என்றென்றும் உள்ளது.
5 (உயர்வானில் உள்ள கடவுளின் வாக்கே ஞானத்தின் ஊற்று; என்றுமுள கட்டளைகளே அதை அடையும் வழிகள்.)
6 ஞானத்தின் ஆணிவேர் யாருக்கு வெளியிடப்பட்டது? அதன் நுணுக்கங்களை அறிந்தவர் எவர்?
7 (ஞானத்தின் அறிவாற்றல் யாருக்குத் தெளிவாக்கப்பட்டது? அதன் பரந்த பட்டறிவைப் புரிந்துகொண்டவர் யார்?)
8 ஆண்டவரே ஒருவரே ஞானியாவார்; தம் அரியணையில் வீற்றிருக்கும் அவர் பெரிதும் அச்சத்திற்குரியவர்.
9 அவரே ஞானத்தைப் படைத்தவர்; அதனைக் கண்டு கணக்கிட்டவர்; தம் வேலைப்பாடுகளையெல்லாம் அதனால் நிரப்பியர்.
10 தம் ஈகைக்கு ஏற்ப எல்லா உயிர்களுக்கும் அவரே அதைக் கொடுத்துள்ளார்; தம்மீது அன்புகூர்வோருக்கு அதை வாரி வழங்கியுள்ளார்.
11 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே மாட்சியும் பெருமையுமாகும்; அதுவே மகிழ்ச்சியும் அக்களிப்பின் மணிமுடியுமாகும்.
12 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே உள்ளத்தை இன்புறுத்துகிறது; மகிழ்வையும் அக்களிப்பையும் நீடிய ஆயுளையும் வழங்குகிறது.
13 ஆண்டவரிடம் அச்சம் கொள்வோரது முடிவு மகிழ்ச்சிக்கு உரியதாய் அமையும்; அவர்கள் இறக்கும் நாளில் ஆசி பெறுவார்கள்.
14 ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் தொடக்கம்; அது இறைப்பற்றுள்ளோருக்கு தாய் வயிற்றிலிருக்கும்பொழுதே வழங்கப்பெறுகிறது.
15 ஞானம்; மனிதர் நடுவில் முடிவில்லாத அடித்தளத்தை அமைத்துள்ளது; அவர்களுடைய வழிமரபினரிடையே நீங்காது நிலைத்திருக்கும்.
16 ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் நிறைவு; அது தன் கனிகளால் மனிதருக்கும் களிப்பூட்டுகிறது.
17 அது அவர்களின் இல்லம் முழுவதையும் விரும்பத்தக்க நலன்களால் நிரப்பிவிடும்; தன் விளைச்சலால் அவர்களின் களஞ்சியங்களை நிறைத்திடும்.
18 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் மணிமுடி; அது அமைதியைப் பொழிந்து, உடல்நலனைக் கொழிக்கச் செய்கிறது.
19 ஆண்டவரே அதனைக் கண்டு கணக்கிட்டார்; அறிவாற்றலையும் நுண்ணறிவையும் மனிதருக்கு மழையெனப் பொழிந்திட்டார்; அதை உறுதியாய்ப் பற்றிக்கொண்டோரை மாட்சியால் உயர்த்திட்டார்.
20 ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் ஆணிவேர்; அதன் கிளைகள் நீடிய வாழ்நாள்கள்.
21 (ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் பாவங்களை விரட்டிவிடுகிறது. அது இருக்கும்போது சினத்தையெல்லாம் அகற்றிவிடுகிறது.)
22 நேர்மையற்ற சினத்தை நியாயப்படுத்த முடியாது; சினத்தால் நிலை தடுமாறுவோர் வீழ்ச்சி அடைவர்.
23 பொறுமையுள்ளோர் தக்க காலம்வரை அமைதி காப்பர்; பின்னர், மகிழ்ச்சி அவர்களுள் ஊற்றெடுத்துப் பாயும்.
24 அவர்கள் தக்க நேரம்வரை நா காப்பார்கள். பலருடைய வாய் அவர்களது அறிவுக்கூர்மையை எடுத்துரைக்கும்.
25 ஞானத்தின் கருவூலங்களில் அறிவார்ந்த பொன்மொழிகள் உண்டு; பாவிகளுக்கு இறைப்பற்று அருவருப்பைத் தரும்.
26 ஞானத்தை நீ அடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; அப்போது ஆண்டவரே உனக்கு ஞானத்தை வாரி வழங்குவார்.
27 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானமும் நற்பயிற்சியுமாகும். பற்றுறுதியும் பணிவும் அவருக்கு மகிழ்ச்சி தரும்.
28 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சத்தைப் புறக்கணியாதே; பிளவுபட்ட உள்ளத்தோடு அவரிடம் செல்லாதே.
29 மனிதர்முன் வெளிவேடம் போட வேண்டாம். நாவடக்கம் கொள்.
30 நீ வீழ்ச்சியுறாதவாறு செருக்குக் கொள்ளாதே. உன்மீதே மானக்கேட்டை வருவித்துக்கொள்ளாதே. ஆண்டவருக்கு நீ ஆஞ்சி நடவாததாலும் உன் உள்ளத்தில் கள்ளம் நிறைந்திருந்ததாலும் ஆண்டவர் உன் மறைவான எண்ணங்களை வெளிப்படுத்துவார்; சபையார் எல்லார் முன்னிலையில் உன்னைத் தாழ்த்துவார்.
அதிகாரம் 2
1 குழந்தாய், ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால், சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு செய்துகொள்.
2 உள்ளத்தில் உண்மையுள்ளவனாய் இரு; உறுதியாக இரு; துன்ப வேளைகளில் பதற்றமுடன் செயலாற்றாதே.
3 ஆண்டவரைச் சிக்கெனப் பிடித்துக்கொள்; அவரை விட்டு விலகிச் செல்லாதே. உன் வாழ்க்கையின் முடிவில் வளமை அடைவாய்.
4 என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள்; இழிவுவரும்போது பொறுமையாய் இரு.
5 நெருப்பில் பொன் புடமிடப்படுகிறது; ஏற்புடைய மனிதர் மானக்கேடு எனும் உலையில் சோதித்துப் பார்க்கப்படுகின்றனர்.
6 ஆண்டவரிடம் பற்றுறுதி கொள்; அவர் உனக்குத் துணை செய்வார். உன் வழிகளைச் சீர்படுத்து; அவரிடம் நம்பிக்கை கொள்.
7 ஆண்டவருக்கு அஞ்சுவோரே. அவரிடம் இரக்கத்துக்காகக் காத்திருங்கள்; நெறி பிறழாதீர்கள்; பிறழ்ந்தால் வீழ்ச்சி அடைவீர்கள்.
8 ஆண்டவருக்கு அஞ்சுவோரே, அவரிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்; உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காமற் போகாது.
9 ஆண்டவருக்கு அஞ்சுவோரே, நல்லவைமீது நம்பிக்கை கொள்ளுங்கள்; நிலையான மகிழ்ச்சியையும் இரக்கத்தையும் எதிர்நோக்கியிருங்கள்.
10 முந்திய தலைமுறைகளை எண்ணிப்பாருங்கள். ஆண்டவரிடம் பற்றுறுதி கொண்டிருந்தோருள் ஏமாற்றம் அடைந்தவர் யார்? அவருக்கு அஞ்சி நடந்தோருள் கைவிடப்பட்டவர் யார்? அவரை மன்றாடினோருள் புறக்கணிக்கப்பட்டவர் யார்?
11 ஆண்டவர் பரிவும் இரக்கமும் உள்ளவர்; பாவங்களை மன்னிப்பவர்; துன்ப வேளையில் காப்பாற்றுகிறவர்.
12 கோழை நெஞ்சத்தவருக்கும் ஆற்றலற்ற கையருக்கும் இரட்டை வேடமிடும் பாவிகளுக்கும் ஐயோ, கேடு வரும்!
13 உறுதியற்ற உள்ளத்தவருக்கும் ஐயோ, கேடு வரும்! ஏனெனில் அவர்கள் பற்றுறுதி கொள்ளவில்லை; எனவே அவர்களுக்குப் பாதுகாப்பு இராது.
14 தளர்ச்சி அடைந்தோரே, உங்களுக்கும் ஐயோ, கேடு வரும்! ஆண்டவர் உங்களைச் சந்திக்க வரும்போது என்ன செய்வீர்கள்?
15 ஆண்டவருக்கு அஞ்சுவோர் அவருடைய சொற்களைக் கடைப்பிடிப்பர்; அவர்மீது அன்புசெலுத்துவோர் அவர்தம் வழிகளைப் பின்பற்றுவர்.
16 ஆண்டவருக்கு அஞ்சுவோர் அவர்தம் விருப்பத்தையே தேடுவர்; அவரிடம் அன்பு பாராட்டுவோர் அவர்தம் திருச்சட்டத்தில் நிறைவு அடைவர்.
17 ஆண்டவருக்கு அஞ்சுவோர் முன்னேற்பாடாய் இருப்பர்; அவர் திருமுன் தங்களைத் தாழ்த்திக் கொள்வர்.
18 'ஆண்டவரின் கைகளில் நாம் விழுவோம்; மனிதரின் கைகளில் விழமாட்டோம்; ஏனெனில் அவரது பெருமையைப் போன்று அவர்தம் இரக்கமும் சிறந்தது' என அவர்கள் சொல்லிக் கொள்வார்கள்.
அதிகாரம் 3
1 குழந்தைகளே, உங்கள் தந்தையாகிய எனக்குச் செவிசாயுங்கள்; நான் கூறுவதன்படி செயல்படுங்கள்; அப்பொழுது காப்பாற்றப்படுவீர்கள்.
2 பிள்ளைகளைவிடத் தந்தையரை ஆண்டவர் மிகுதியாக மேன்மைப்படுத்தியுள்ளார்; பிள்ளைகள்மீது அன்னையருக்குள்ள உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளார்.
3 தந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொள்கின்றனர்.
4 அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர்.
5 தந்தையரை மதிப்போருக்குத் தங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும்; அவர்களுடைய மன்றாட்டு கேட்கப்படும்.
6 தந்தையரை மேன்மைப்படுத்துவோர் நீடுவாழ்வர்; ஆண்டவருக்குப் பணிந்து நடப்போர் தங்கள் அன்னையர்க்கு மதிப்பு அளிப்பர்.
7 தலைவர்கள் கீழ்ப்பணியாளர்கள் போல் அவர்கள் தங்கள் பெற்றோருக்குப் பணி செய்வார்கள்.
8 சொல்லாலும் செயலாலும் உங்கள் பெற்றோரை மதியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு ஆண்டவரின் ஆசி கிடைக்கும்.
9 தந்தையின் ஆசி பிள்ளைகளின் குடும்பங்களை நிலைநாட்டும்; தாயின் சாபம் அவற்றை வேரோடு பெயர்த்தெறிந்துவிடும்.
10 உங்கள் தந்தையரை அவமதிப்பதில் பெருமை கொள்ளாதீர்கள்; உங்கள் தந்தையரின் சிறுமை உங்களுக்குப் பெருமையாகாது.
11 தந்தை மதிக்கப்பெற்றால் அது பிள்ளைகளுக்குப் பெருமை; தாய்க்கு இழிவு ஏற்பட்டால் அது பிள்ளைகளுக்குச் சிறுமை.
12 குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு; அவரது வாழ்நாளெல்லாம் அவர் உள்ளத்தைப் புண்படுத்தாதே.
13 அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைப்பிடி; நீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே.
14 தந்தைக்குக்காட்டும் பரிவு மறக்கப்படாது. அது உன் பாவங்களுக்குக் கழுவாயாக விளங்கும்.
15 உன் துன்ப நாளில் கடவுள் உன்னை நினைவுகூர்வார்; பகலவனைக் கண்ட பனிபோல் உன் பாவங்கள் மறைந்தொழியும்.
16 தந்தையரைக் கைவிடுவோர் கடவுளைப் பழிப்பவர் போல்வர்; அன்னையர்க்குச் "சினமூட்டுவோர் ஆண்டவரால் சபிக்கப்படுவர்.
17 குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்; அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர்.
18 நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட. அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும்.
19 (உயர்ந்தோர், புகழ்பெற்றோர் பலர் உள்ளனர். ஆயினும் எளியோருக்குத்தான் ஆண்டவர் தம் மறைபொருளை வெளிப்படுத்துகிறார்.)
20 ஆண்;டவரின் ஆற்றல் பெரிது; ஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகின்றார்.
21 உனக்கு மிகவும் கடினமாக இருப்பவற்றைத் தேடாதே; உன் ஆற்றலுக்கு மிஞ்சியதை ஆராயாதே.
22 உனக்குக் கட்டளையிடப்பட்டவை பற்றி எண்ணிப்பார்; ஏனெனில் மறைந்துள்ளவைபற்றி நீ ஆராய வேண்டியதில்லை.
23 உனக்கு அப்பாற்பட்ட செயல்களில் தலையிடாதே; ஏனெனில் உனக்குக் காட்டப்பட்டவையே மனித அறிவுக்கு எட்டாதவை.
24 மாந்தரின் இறுமாப்பு பலரை நெறிபிறழச் செய்திருக்கிறது; தவறான கணிப்புகள் தீர்ப்புகளை ஊறுபடுத்தியுள்ளன.
25 (கண் இல்லையேல் பார்க்க முடியாது. அறிவு இல்லையேல் அது இருப்பதாகக் காட்டிக் கொள்ளாதே.)
26 பிடிவாதம் கொண்டோர் இறுதியில் தீமைக்கு உள்ளாவர்; கேட்டினை விரும்புவோர் அதனால் அழிவர்.
27 அடங்கா மனத்தோர் தொல்லைகளால் அழுத்தப்படுவர்; பாவிகள் பாவத்தைப் பெருக்குவர்.
28 இறுமாப்புக்கொண்டோரின் நோக்கு மருந்து இல்லை; ஏனெனில் தீமை அவர்களுள் வேரூயஅp;ன்றி விட்டது.
29 நுண்ணறிவாளர் உவமைகளைப் புரிந்துகொள்வர்; ஞானிகள் கேட்டறியும் ஆவல் மிக்கவர்கள்.
30 எரியும் நெருப்பைத் தண்ணீர் அவிக்கும்; தருமம் செய்தல் பாவங்களைக் கழுவிப் போக்கும்.
31 நன்மை செய்தோர்க்கே நன்மை செய்வோர் தங்களது எதிர்காலத்தை எண்ணிச் செயல்படுகின்றனர்; தங்களது வீழ்ச்சிகாலத்தில் அவர்கள் உதவி பெறுவர்.
அதிகாரம் 4
1 குழந்தாய், ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே; கையேந்தி நிற்போரைக் காத்திருக்க வைக்காதே.
2 பசித்திருப்போரை வாட்டி வதைக்காதே; வறுமையில் உழல்வோரை எரிச்சலூட்டாதே.
3 உள்ளம் உடைந்தோர்க்குத் துயரங்களைக் கூட்டாதே; வறுமையில் உழல்வோருக்குக் காலம் தாழ்த்தாமல் உதவி செய்.
4 துன்புறுவோரின் வேண்டுதலைத் தள்ளிவிடாதே; ஏழையரிடமிருந்து உன் முகத்தைத் திருப்பிகொள்ளாதே.
5 உன்னிடம் உதவி வேண்டுவோரிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக் கொள்ளாதே; உன்னைச் சபித்திட யாருக்கும் வாய்ப்பு அளிக்காதே.
6 ஏழைகள் கசப்புணர்வினால் உன்னைச் சபித்தால், அவர்களைப் படைத்தவர் அவர்களுடைய வேண்டுதலுக்குச் செவிசாய்ப்பார்.
7 மக்களின் அன்புக்கு உரியவனாய் இரு; பெரியோர்களுக்குத் தலை வணங்கு.
8 ஏழைகளுக்குச் செவிசாய்; அவர்களுக்கு அமைதியாக, கனிவோடு பதில் சொல்.
9 ஒடுக்குவோரின் கையினின்று ஒடுக்கப்பட்டோரை விடுவி; நீதியான தீர்ப்பு வழங்குவதில் உறுதியாய் இரு.
10 கைவிடப்பட்டோர்க்குத் தந்தையாய் இரு; அவர்களின் அன்னையர்க்குத் துணைவன்போல் இரு. அப்போது நீ உன்னத இறைவனின் பிள்ளைபோல் இருப்பாய்; தாயைவிட அவர் உன்மீது அன்புகூர்வார்.
11 ஞானம் தன் மக்களை மேன்மைப்படுத்தும்; தன்னைத் தேடுவோர்க்குத் துணைநிற்கும்.
12 ஞானத்திற்கு அன்பர் வாழ்விற்கும் அன்பர்; அதனை வைகறையிலேயே தேடுவோர் மகிழ்ச்சியால் நிரம்புவர்.
13 அதனைப் பற்றிக்கொள்வோர் மாட்சியை உரிமையாக்கிக்கொள்வர்; அது செல்லும் இடமெல்லாம் ஆண்டவர் ஆசி வழங்குவார்.
14 அதற்குப் பணி செய்வோர் தூய இறைவனுக்கே ஊழியம் புரிகின்றனர்; ஞானத்துக்கு அன்பர் ஆண்டவருக்கும் அன்பர்.
15 ஞானத்துக்குப் பணிவோர் மக்களினங்களுக்குத் தீர்ப்பு வழங்குவர்; அதற்குச் செவிசாய்ப்போர் பாதுகாப்பாய் வாழ்வர்;
16 ஞானத்தை நம்புவோர் அதனை உரிமையாக்கிக் கொள்வர்; அவர்களுடைய வழி மரபினரும் அதனை உடைமையாக்கிக் கொள்வர்;
17 முதலில் அவர்களை அது கோணல் வழியில் அழைத்துச் செல்லும்; அவர்களுக்கு அச்ச நடுக்கத்தை வருவிக்கும்; தனக்கு அவர்கள்மீது நம்பிக்கை ஏற்படும்வரை அவர்களை அது கண்டிக்கும், வதைக்கும்; தன் நெறிமுறைகளால் அவர்களைச் சோதிக்கும்.
18 அது மீண்டும் அவர்களிடமேவந்து அவர்களை மகிழ்விக்கும்; அவர்களுக்குத் தன் இரகசியங்களை வெளிப்படுத்தும்.
19 அதைவிட்டு அவர்கள் விலகிச் சென்றால், அவர்களை அது கைவிட்டுவிடும்; அழிவுக்கு அவர்களை இட்டுச் செல்லும்.
20 தக்கநேரம் பார்; தீமையைக்குறித்து விழிப்பாயிரு; உன்னைப்பற்றியே நாணம் அடையாதே.
21 ஒரு வகை நாணம் பாவத்திற்கு இட்டுச்செல்லும்; மற்றொரு வகை நாணம் மாட்சியையும் அருளையும் தரும்.
22 பாகுபாடு காட்டி உனக்கே கேடு வருவித்துக் கொள்ளாதே; பணிவின் பெயரால் வீழ்ச்சி அடையாதே.
23 பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருந்துவிடாதே.
24 ஞானம் பேச்சில் புலப்படும்; நற்பயிற்சி வாய்மொழியால் வெளிப்படும்.
25 உண்மைக்கு மாறாகப் பேசாதே; உன் அறியாமைக்காக நாணம் கொள்.
26 உன் பாவங்களை அறிக்கையிட வெட்கப்படாதே; ஆற்றின் நீரோட்டத்தைத் தடை செய்யமுயலாதே.
27 மூடருக்கு அடிபணியாதே; வலியோருக்குப் பாகுபாடு காட்டாதே.
28 இறக்கும்வரை உண்மைக்காகப் போராடு; கடவுளாகிய ஆண்டவர் உனக்காகப் போரிடுவார்.
29 பேச்சில் துடுக்காய் இராதே; செயலில் சோம்பலாகவும் ஈடுபாடின்றியும் இராதே.
30 வீட்டில் சிங்கம்போல் இராதே; பணியாளர்முன் கோழையாய் இராதே.
31 பெறுவதற்காக மட்டும் கைகளை விரித்து வைத்திராதே; கொடுக்கும் நேரத்திலோ உன் கைகளை மூடிக்கொள்ளாதே.
அதிகாரம் 5
1 உன் செல்வங்களில் நம்பிக்கை வைக்காதே; "எனக்கு அவை போதும்" எனச் சொல்லாதே.
2 உன் நாட்டங்களுக்கும் வலிமைக்கும் அடிமையாகாதே; உன் உள்ளத்து விருப்பங்களைப் பின்பற்றாதே.
3 எனக்கு எதிராய்ச் செயல்படக்கூடியவர் யார்? எனச் சொல்லாதே; ஆண்டவர் உன்னைத் தண்டியாமல் விடமாட்டார்.
4 "நான் பாவம் செய்தேன்; இருப்பினும், எனக்கு என்ன நேர்ந்துவிட்டது?" எனக்கூறாதே; ஆண்டவர் பொறுமை உள்ளவர்.
5 பாவத்துக்கு மேல் பாவம் செய்யும் அளவுக்குப் பாவ மன்னிப்புப்பற்றி அச்சம் இல்லாமல் இராதே. "ஆண்டவரின் பரிவு எல்லையற்றது;
6 எண்ணற்ற என் பாவங்களை அவர் மன்னித்துவிடுவார்" என உரைக்காதே. அவரிடம் இரக்கமும் சினமும் உள்ளன; அவரது சீற்றம் பாவிகளைத் தாக்கும்.
7 ஆண்டவரிடம் திரும்பிச் செல்லக் காலம் தாழ்த்தாதே. நாள்களைத் தள்ளிப்போடாதே. ஆண்டவரின் சினம் திடீரென்று பொங்கியெழும்; அவர் தண்டிக்கும் காலத்தில் நீ அழிந்துபோவாய்.
8 முறைகேடான செல்வங்களில் நம்பிக்கை வைக்காதே; பேரிடரின் நாளில் அவற்றால் உனக்குப் பயன் இராது.
9 எல்லா வகைக் காற்றிலும் தூற்றிக் கொள்ளாதே; எல்லா வழிகளிலும் போகாதே; இரட்டை நாக்குக் கொண்ட பாவிகள் இவ்வாறே செய்வார்கள்.
10 உன் மனச்சான்றை உறுதியோடு பின்பற்று; முன் பின் முரண்படாமல் பேசு.
11 விரைந்து செவிசாய்; பொறுத்திருந்து விடை கூறு.
12 உனக்குத் தெரிந்தால், மறுமொழி கூறு; இல்லையேல் வாயை மூடிக்கொள்.
13 பெருமையும் சிறுமையும் பேச்சினால் வரும்; நாக்கே ஒருவருக்கு வீழ்ச்சியைத் தரும்.
14 புறங்கூறுபவன் எனப்பெயர் வாங்காதே; உன் நாவால் மற்றவர்களுக்குக் கண்ணி வைக்காதே. திருடர்களுக்கு உரியது இகழ்ச்சி; இரட்;டை நாக்கினருக்கு உரியது கடும் கண்டனம்.
15 பெரிதோ சிறிதோ எதிலும் குற்றம் செய்யாதே; நண்பனாவதற்கு மாறாகப் பகைவனாகாதே. கெட்ட பெயர் இழுக்கையும் பழிச்சொல்லையும் வருவிக்கும்; இரட்டை நாக்குக்கொண்ட பாவிகளுக்கு இவை நேரும்.
அதிகாரம் 6
1 கெட்ட பெயர் இழுக்கையும் பழிச்சொல்லையும் வருவிக்கும்; இரட்டை நாக்குக்கொண்ட பாவிகளுக்கு இவை நேரும்.
2 தீய நாட்டங்களின் பிடியில் சிக்கிக்கொள்ளாதே; இல்லையேல், காளையிடம் சிக்கியவன்போலக் கீறிக் குதறப்படுவாய்.
3 உன் இலைகள் விழுங்கப்படும்; கனிகள் அழிக்கப்படும்; பட்ட மரம்போல நீ விடப்படுவாய்.
4 தீய நாட்டங்களுக்கு ஒருவர் இடம் கொடுத்தால் அவையே அவரை அழித்துவிடும்; அவர் பகைவரின் நகைப்புக்கும் ஆளாவார்.
5 இன்சொல் நண்பர் தொகையைப் பெருக்கும்; பண்பான பேச்சு உன் மதிப்பை உயர்த்தும்.
6 அனைவரோடும் நட்புடன் பழகு; ஆனால் ஆயிரத்தில் ஒருவரே உனக்கு ஆலோசகராய் இருக்கட்டும்.
7 ஆய்ந்து நட்புக்கொள்; நண்பரையும் விரைவில் நம்பிவிடாதே.
8 தன்னலம் தேடும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள்.
9 பகைவர்களாய் மாறும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உங்கள் பிணக்கை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி, உனக்கு இழிவைக் கொண்டு வருவார்கள்.
10 உன்னுடன் விருந்துண்ணும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள்.
11 நீ நல்ல நிலையில் இருக்கும்போது, அவர்கள் உன் உயிருக்கு உயிரான நண்பர்களாய் இருப்பார்கள்; உன் பணியாளர்களை ஆட்டிப் படைப்பார்கள்;
12 நீ தாழ்ந்துவிட்டால் உனக்கு எதிராய் அவர்கள் மாறுவார்கள்; உன் முகத்தில் விழிக்கமாட்டார்கள்.
13 உன் பகைவர்களிடமிருந்து விலகி நில்; உன் நண்பர்களிடம் எச்சரிக்கையாய் இரு.
14 நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பாதுகாப்பான புகலிடம் போன்றவர்கள்; இத்தகைய நண்பர்களைக் கண்டவர்கள் புதையலைக் கண்டவரைப் போன்றவர்கள்.
15 நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை; அவர்களது தகைமைக்கு அளவுகோல் இல்லை.
16 நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நலம் அளிக்கும் மருந்து போன்றவர்கள்; ஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர்.
17 ஆண்டவருக்கு அஞ்சுவோரே முறையான நட்புப் பேணுவோர். அவர்களை அடுத்தவர்களும் அவர்களைப்போலவே இருப்பார்கள்.
18 குழந்தாய், இளமைமுதல் நற்பயிற்சியைத் தேர்ந்துகொள்; முதுமையிலும் ஞானம் பெறுவாய்.
19 உழுது, விதைத்து, பின் நல்ல விளைச்சலுக்காகக் காத்திருக்கும் உழவர்போன்று ஞானத்தை அணுகு. ஞானத்துக்காக உழைப்போர் சிறிதளவே களைப்படைவர்; விரைவிலேயே அதன் கனிகளை உண்பர்.
20 நற்பயிற்சி இல்லாதவர்களிடம் ஞானம் மிகக் கடுமையாக நடந்துகொள்ளும்; அறிவிலிகள் அதனோடு நிலைத்திருக்கமுடியாது.
21 அது அவர்களைச் சோதிக்கும் பாறாங்கல்லாய் இருக்கும்; அவர்கள் அதைத் தள்ளிவிடக் காலம் தாழ்த்தமாட்டார்கள்.
22 ஞானம் பெயர்ப் பொருத்தம் உடையது; பலருக்கு அது புலப்படுவதில்லை.
23 குழந்தாய், உற்றுக்கேள்; என் தீர்ப்புகளை ஏற்றுக்கொள்; என் அறிவுரைகளைப் புறக்கணியாதே.
24 ஞானத்தின் விலங்குகளில் உன் கால்களைப் பிணைத்துக்கொள்; அதன் சங்கிலியில் உன் கழுத்தைப் புகுத்திக்கொள்.
25 குனிந்து அதனைத் தோளில் தூக்கிச் சுமந்து செல்; அதன் தளைகளைக் கண்டு எரிந்து விழாதே.
26 உன் முழு உள்ளத்தோடும் அதனை அணுகு; உன் முழு வலிமையோடும் அதன் வழியில் நடந்து செல்.
27 அதனை நீ நாடித் தேடு; அது உனக்குப் புலப்படும். அதனைச் சிக்கெனப் பிடி; நழுவவிடாதே.
28 முடிவில் அது அளிக்கும் ஓய்வைப் பெறுவாய்; அதுவே உனக்கு மகிழ்ச்சியாய் மாறும்.
29 அதன் விலங்குகள் உனக்கு வலிமையான பாதுகாப்பு ஆகும்; அதன் தளைகள் மாட்சிமிகு ஆடையாக மாறும்.
30 அதன் மீது பொன் அணிகலன் உள்ளது; அதன் தளைகள் நீல மணிவடமாகும்.
31 ஞானத்தை மாட்சிமிகு ஆடையாக அணிந்துகொள்; மகிழ்ச்சிதரும் மணிமுடியாகச் சூடிக்கொள்.
32 சூழந்தாய், நீ விரும்பினால் நற்பயிற்சி பெற முடியம்; உன் கருத்தைச் செலுத்தினால் திறமையுடன் திகழ முடியும்.
33 கேட்டறிய ஆர்வம் கொண்டால் அறிவு பெறுவாய்; பிறருக்குச் செவிசாய்த்தால் ஞானியாவாய்;
34 மூப்பர்களின் தோழமையை நாடு; ஞானிகள் யார் எனக் கண்டு அவர்களைச் சார்ந்து நில்.
35 கடவுளைப் பற்றிய எல்லா உரைகளுக்கும் செவிசாய்ப்பதில் ஆர்வம் காட்டு; அறிவுக்கூர்மை கொண்ட பழமொழிகளைக் கேட்காமல் விட்டுவிடாதே.
36 அறிவுக்கூர்மை படைத்தோரை நீ கண்டுவிட்டால், விரைந்து அவர்களிடம் செல்; உன் காலடி பட்டு அவர்களின் வீட்டு வாயிற்படிகள் தேயட்டும்.
37 ஆண்டவரின் நெறிமுறைகளை எண்ணிப்பார்; அவருடைய கட்டளைகளை எப்போதும் உள்ளத்தில் இருத்து. அவரே உன் உள்ளத்திற்குத் தெளிவூட்டுவார்; நீ விரும்பும் ஞானத்தை உனக்கு அருள்வார்.
அதிகாரம் 7
1 தீமை செய்யாதே; தீமை ஒருபோதும் உனக்கு நேராது.
2 அநீதியை விட்டு அகன்று செல்; அநீதியும் உன்னைவிட்டு விலகும்.
3 குழந்தாய், அநீதி எனும் நிலத்தில் விதைக்காதே; அப்போது அதில் நீர் ஏழு மடங்கு விளைச்சலை அறுக்கமாட்டாய்.
4 ஆண்டவரிடமிருந்து உயர்நிலையைத் தேடாதே; பெருமைக்குரிய இருக்கையை மன்னரிடமிருந்து நாடாதே.
5 ஆண்டவர் திருமுன் உன்னையே நீதிமான் ஆக்கிக்கொள்ளாதே; மன்னர் முன் உன்னையே ஞானி ஆக்கிக்கொள்ளாதே.
6 நடுவர் ஆவதற்கு விரும்பாதே; அநீதியை நீக்க உன்னால் முடியாமல் போகலாம்; வலியவருக்கு அஞ்சி உன் நேர்மைக்கே இழுக்கு வருவிக்கலாம்.
7 நகர மக்களுக்கு எதிராகக் குற்றம் செய்யாதே; மக்கள்முன் உன் பெயரைக் கெடுத்துக்கொள்ளாதே.
8 செய்த பாவத்தையே மீண்டும் செய்யாதே; அவற்றுள் ஒன்றாவது உனக்குத் தண்டனை பெற்றுத் தரும்.
9 "நான் அளிக்கும் எண்ணற்ற கொடைகளை ஆண்டவர் கண்ணோக்குவார்; உன்னத கடவுளுக்கு நான் செலுத்தும் பலிகளை ஏற்றுக்கொள்வார்" எனச் சொல்லாதே.
10 நீ மன்றாடும்போது மனம் சோர்ந்து போகாதே; தருமம் செய்வதைப் புறக்கணியாதே.
11 கசப்புணர்வு கொண்டோரை எள்ளிநகையாடாதே; நம்மைத் தாழ்த்தவும் உயர்த்தவும் வல்லவர் ஒருவர் உள்ளார்.
12 பொய் புனைந்து உன் உடன்பிறப்பை ஏமாற்றாதே; உன் நண்பர்க்கும் அவ்வாறே செய்யாதே.
13 பொய் சொல்ல விரும்பாதே; பொய் பேசும் பழக்கம் நன்மை தராது.
14 மூப்பர் கூட்டத்தில் உளறாதே; நீ வேண்டும் போது பின்னிப் பின்னிப் பேசாதே.
15 கடும் உழைப்பையும் உழவுத் தொழிலையும் வெறுக்காதே; இவை உன்னத இறைவனால் ஏற்படுத்தப்பட்டவை.
16 பாவிகளின் கூட்டத்தோடு சேராதே; கடவுளின் சினம் காலம் தாழ்த்தாது வெளிப்படும் என்பதை மறவாதே.
17 பணிவையே பெரிதும் நாடு; இறைப்பற்றில்லாதவர்களுக்கு நெருப்பும் புழுக்களும் தண்டனையாகக் கிடைக்கும்.
18 பணத்துக்காக நண்பரைக் கைவிடாதே; உண்மையான சகோதரனை ஓபிர் நாட்டுப் பொன்னுக்காகவும் பண்டம் மாற்றாதே.
19 ஞானமுள்ள நல்ல மனைவியை இழந்துவிடாதே; அவளது நன்னயம் பொன்னைவிட உயர்ந்தது.
20 உண்மையுடன் உழைக்கும் உன் அடிமைகளுக்கும், தங்கள் உயிரையே உனக்காகக் கொடுக்கும் கூலியாள்களுக்கும், எவ்வகைத் தீங்கும் செய்யாதே.
21 அறிவுக்கூர்மை கொண்ட அடிமைக்கு அன்புகாட்டு; அவனுக்கு விடுதலை கொடுக்க மறுக்காதே.
22 உன் வீட்டில் விலங்குகள் இருந்தால் அவற்றைக் கவனித்துக்கொள்; அவை உனக்குப் பயன் கொடுத்தால் அவற்றை வைத்துக்கொள்.
23 உனக்குப் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு நற்பயற்சி அளி; இளமைமுதலே பணிந்திருக்கச் செய்.
24 உனக்குப் பெண் பிள்ளைகள் இருந்தால், அவர்களது கற்பில் அக்கறை காட்டு; அவர்களுக்கு மிகுதியாகச் செல்லம் கொடுக்காதே.
25 உன் மகளுக்குத் திருமணம் செய்துவை; உன் தலையாய கடமையைச் செய்தவன் ஆவாய். அறிவுக்கூர்மை படைத்தவருக்கே உன் மகளை மணமுடித்துக்கொடு.
26 உன் உள்ளத்திற்கு ஏற்ற மனைவி உனக்கு இருந்தால் அவளைத் தள்ளி வைக்காதே; நீ வெறுக்கும் மனைவியை நம்பிவிடாதே.
27 உன் தந்தையை உன் முழு உள்ளத்துடன் மதித்து நட; உன் தாயின் பேறுகாலத் துன்பத்தை மறவாதே.
28 அவர்கள் உன்னைப் பெற்றெடுத்தார்கள்; அதற்கு ஈடாக உன்னால் எதையும் செய்ய முடியாது என்பதை நினைவில் இருத்து.
29 உன் முழு உள்ளத்தோடு ஆண்டவருக்கு அஞ்சு; அவருடைய குருக்களை மதித்து நட.
30 உன்னை உண்டாக்கியவர்மீது உன் முழு வலிமையோடும் அன்பு செலுத்து; அவருடைய திருப்பணியாளர்களைக் கைவிடாதே.
31 ஆண்டவருக்கு அஞ்சு; குருக்களைப் பெருமைப்படுத்து; குருக்களுக்குரிய பங்காகிய முதற்கனி, குற்றம்போக்கும் பலி, உழைப்பின் பயன், தூய்மையாக்கும் பலி, தூய பொருள்களின் முதற்பயன் ஆகியவற்றை உனக்குக் கட்டளையிட்டுள்ளபடி கொடு.
32 ஏழைகளுக்குத் தாராளமாய்க் கொடு; இதனால் இறை ஆசி முழுமையாக உனக்குக் கிடைக்கும்;
33 உயிர் வாழ்வோர் அனைவருக்கும் கனிவோடு கொடு; உயிர் நீத்தோர்க்கும் அன்பு காட்ட மறவாதே.
34 அழுவோரைத் தவிர்க்காதே; புலம்புவோரோடு புலம்பு.
35 நோயாளிகளைச் சந்திக்கத் தயங்காதே; இத்தகைய செயல் மற்றவர்களின் அன்பினை உனக்குப் பெற்றுத் தரும்.
36 எல்லாவற்றிலும் உன் முடிவை நினைவில் கொள்; அவ்வாறேனில் ஒருபோதும் நீ பாவம் செய்யமாட்டாய்.
அதிகாரம் 8
1 வலியவரோடு வழக்காடாதே; அவர்கள் கையில் சிக்கிக்கொள்ள நேரிடும்.
2 செல்வருடன் சண்டையிடாதே; உன்னைவிட அவர்கள் வசதிமிக்கவர்கள். பொன்னாசை பலரை அழித்திருக்கிறது; மன்னர்களின் மனத்தையும் கெடுத்திருக்கிறது.
3 வாயாடிகளோடு வாதிடாதே; எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்காதே.
4 பண்பற்றோரிடம் நகையாடாதே; உன் முன்னோரை அவர்கள் பழித்துரைக்கலாம்.
5 பாவத்தினின்று மனந்திரும்புவோரைப் பழிக்காதே; நாம் எல்லாருமே தண்டனைக்கு உரியவர்கள் என்பதை நினைத்துக் கொள்.
6 முதியோர் எவரையும் இகழாதே; நம்முள் சிலரும் முதுமை அடைந்து வருகிறோம்.
7 இறந்தோரைக் கண்டு மகிழாதே; நாம் எல்லாருமே சாக வேண்டும் என்பதை நினைவில் கொள்.
8 ஞானிகளுடைய அறிவுரைகளைப் புறக்கணியாதே; அவர்களுடைய பொன்மொழிகளைக் கற்றுணர். அவற்றால் நற்பயிற்சி பெறுவாய்; பெரியார்களுக்குப் பணி செய்யக் கற்றுக்கொள்வாய்.
9 முதியோரின் உரைகளைப் புறக்கணியாதே; அவர்களும் தங்கள் முன்னோரிடமிருந்தே கற்றுக்கொண்டார்கள்; அவர்களிடமிருந்து நீயும் அறிவுக் கூர்மை பெறுவாய்; தகுந்த நேரத்தில் தக்க விடை கூற அறிந்துகொள்வாய்.
10 பாவிகளது தீய நாட்டத்தைத் தூண்டிவிடாதே; அது உன்னைப் பொசுக்கிவிடும்.
11 இறுமாப்புக் கொண்டோருடன் மோதாதே; மோதினால், உன் சொற்களைக் கொண்டே உன்மீது குற்றம் சாட்டுவர்.
12 உன்னிலும் வலியோருக்குக் கடன்கொடாதே; கொடுத்தால், அதை இழந்து விட்டதாக எண்ணிக்கொள்.
13 உன் உடைமைக்கு மிஞ்சிப் பிணையம் ஆகாதே; பிணையமானால், பணம் செலுத்த ஆயத்தமாய் இரு.
14 நடுவருக்கே எதிராக வழக்குத் தொடுக்காதே; அவரது பெருமையை முன்னிட்டு அவர் சார்பாகவே தீர்ப்பு வழங்கப்படும்.
15 தறுதலைகளோடு பயணம் செய்யாதே; அவர்கள் உனக்குச் சுமையாய் இருப்பார்கள்; தங்களது விருப்பம் போல நடப்பார்கள்; அவர்களது அறிவின்மையால் நீயும் அவர்களோடு அழிய நேரிடும்.
16 முன்கோபிகளுடன் சண்டையிடாதே; அவர்களுடன் ஆளில்லாத் தனியிடத்திற்குச் செல்லாதே. கொலை செய்யவும் அவர்கள் அஞ்சுவதில்லை; உனக்கு உதவி இல்லாத இடத்தில் உன்னைத் தாக்கி வீழ்த்துவார்கள்.
17 அறிவிலிகளோடு கலந்தாராயாதே; அவர்களால் இரகசியங்களைக் காப்பாற்ற முடியாது.
18 மறைக்க வேண்டியவற்றை அன்னியர் முன் செய்யாதே; அவர்கள் எதை வெளியிடுவார்கள் என உனக்குத் தெரியாது.
19 திறந்த உள்ளத்துடன் எல்லாரிடமும் பேசாதே; அவர்கள் உனக்கு நன்றி உள்ளவர்களாய் இருக்கமாட்டார்கள்.
அதிகாரம் 9
1 உன் காதல் மனையாளைப் பார்த்துப் பொறாமைப்படாதே; உனக்கே தீங்கு விளைவிக்கும் தீய பழக்கங்களை அவளுக்குச் சொல்லிக்கொடாதே.
2 ஒரு பெண்ணுக்கு நீ அடிமையாகாதே; இல்லையேல், அவள் உன்னையே அடக்கியாள நேரிடும்.
3 நெறிகெட்டவளை அணுகிச் செல்லாதே; அவளது வலைக்குள் வீழ்ந்திடுவாய்.
4 பாடகியுடன் உனக்குத் தொடர்பு வேண்டாம். அவளது மயக்கும் வலையில் சிக்கிக்கொள்வாய்.
5 கன்னிப்பெண்ணை உற்று நோக்காதே; நீ தடுமாறி அவளால் தண்டனைக்கு ஆளாவாய்.
6 விலைமாதரிடம் உன் உள்ளத்தைப் பறிகொடாதே; உன் உரிமைச் சொத்தை நீ இழக்க நேரிடும்.
7 நகரின் தெருக்களில் அங்குமிங்கும் பராக்குப் பார்க்காதே; ஆள்நடமாட்டமற்ற இடங்களில் சுற்றித்திரியாதே.
8 அழகான பெண்ணிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக்கொள்; பிறன் மனைவியின் அழகை உற்றுநோக்காதே. பெண்களின் அழகால் பலர் நெறி பிறழ்ந்துள்ளனர்; இதனால் காமம் தீயெனப் பற்றியெரியும்.
9 அடுத்தவருடைய மனைவியுடன் அமர்ந்து விருந்துண்ணாதே; அவளுடன் மது அருந்திக் களிக்காதே; உன் மனம் அவளிடம் மயங்கிவிடும்; முடிவில் உன் வாழ்வே வீழ்ச்சியுறும்.
10 உன் பழைய நண்பர்களைக் கைவிடாதே; புதிய நண்பர்கள் அவர்களுக்கு இணையாகமாட்டார்கள்; புதிய நண்பர்கள் புதிய மதுவைப் போன்றவர்கள். நாள் ஆக ஆகத்தான் அதை நீ சுவைத்துக் களிப்பாய்.
11 பாவிகளின் பெருமை கண்டு பொறாமை கொள்ளாதே; அவர்களுக்கு வரவிருக்கும் கேடு உனக்குத் தெரியாது.
12 இறைப்பற்றில்லாதவர்களுக்குப் பிடித்தமானவற்றில் இன்பம் கொள்ளாதே; அவர்கள் தங்கள் வாழ்நாளிலேயே தண்டனை பெறுவார்கள் என்பதை நினைவில் இருத்து.
13 கொலை செய்ய அதிகாரம் கொண்டவர்களை விட்டுத் தொலைவில் இரு; அப்பொழுது சாவுபற்றிய அச்சத்தால் நீ அலைக்கழிக்கப்படமாட்டாய்; அவர்களிடம் நீ சென்றால் தவறு ஏதும் செய்யாதே; செய்தால் உன் உயிரை அவர்கள் வாங்கிவிடுவார்கள். கண்ணிகள் நடுவே நீ நடக்கிறாய் என்றும் நகரின் கோட்டை கொத்தளங்கரூநரசழ்டே செல்கிறாய் என்றும் அறிந்துகொள்.
14 அடுத்திருப்பவரை அறிய முடிந்தவரை முயற்சி செய்; ஞானிகளைக் கலந்து ஆலோசனை செய்.
15 அறிவுக்கூர்மை படைத்தவர்களோடு உரையாடு; உன் பேச்செல்லாம் உன்னத இறைவனின் திருச்சட்டம்பற்றி அமையட்டும்.
16 நீதிமான்கள் உன்னுடன் விருந்தாடட்டும்; ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே உனது பெருமையாக இருக்கட்டும்.
17 கைவினைஞரின் திறமையைக் கொண்டே பொருள்கள் மதிப்புப் பெறுகின்றன; மக்கள் தலைவர் தம் பேச்சைக் கொண்டே ஞானியாய் மதிக்கப்படுகிறார்.
18 வாயாடியைக் கண்டு அவர்களின் நகரத்தார் அஞ்சுவர்; உளறு வாயரை ஊரார் வெறுப்பர்.
அதிகாரம் 10
1 அறிவுடைய நடுவர் தம் மக்களுக்கு நற்பயிற்சி அளிப்பார்; அறிவுக்கூர்மை கொண்டோரின் ஆட்சி சீராய் அமையும்.
2 மக்களின் நடுவர் எவ்வாறோ அவருடைய பணியாளர்கள் அவ்வாறே; நகரத் தலைவர் எவ்வழியோ, அவ்வழி நகர மக்கள்.
3 நற்பயிற்சி பெறாத மன்னர் தம் மக்களை அழிப்பார்; ஆட்சியாளர்களின் அறிவுக்கூர்மையால் நகர் கட்டியெழுப்பப்படும்.
4 மண்ணுலகில் அதிகாரம் ஆண்டவரின் கையில் உள்ளது; ஏற்ற தலைவரைத் தக்க நேரத்தில் அவரே எழுப்புகிறார்.
5 மனிதரின் மேம்பாடு ஆண்டவரின் கையில் உள்ளது; மறைநூல் அறிஞர்களை அவர் பெருமைப்படுத்துவார்.
6 அநீதி ஒவ்வொன்றுக்காகவும் அடுத்திருப்பவர்மீது சினம் கொள்ளாதே; இறுமாப்புள்ள செயல்கள் எதையும் செய்யாதே.
7 இறுமாப்பை ஆண்டவரும் மனிதரும் வெறுப்பர்; அநீதியை இருவரும் பழிப்பர்.
8 அநீதி, இறுமாப்பு, செல்வம் ஆகியவற்றால் ஆட்சி கைமாறும்.
9 புழுதியும் சாம்பலுமாக மனிதர் எவ்வாறு செருக்குற முடியும்? உயிரோடு இருக்கும்போதே அவர்களது உடல் அழியத் தொடங்கும்.
10 நாள்பட்ட நோய் மருத்துவரைத் திணறடிக்கிறது; இன்று மன்னர், நாளையோ பிணம்!
11 மனிதர் இறந்தபின் பூச்சிகள், காட்டு விலங்குகள், புழுக்களே அவர்களது உரிமைச்சொத்து ஆகின்றன.
12 ஆண்டவரிடமிருந்து விலகிச் செல்வதே மனிதருடைய இறுமாப்பின் தொடக்கம்; அவர்களின் உள்ளம் தங்களைப் படைத்தவரை விட்டு அகன்று போகின்றது.
13 பாவமே ஆணவத்தின் தொடக்கம். அதில் மூழ்கிப்போனவர்கள் அருவருப்பை உண்டாக்குகின்றனர்; இதனால், ஆண்டவர் அவர்கள்மீது கேட்டறியாப் பேரிடர்களை வருவிப்பார்; அவர்களை முழுதும் அழித்தொழிப்பார்.
14 ஆளுநர்களின் அரியணையினின்று ஆண்டவர் அவர்களை வீழ்த்துகிறார்; அவர்களுக்குப் பதிலாகப் பணிவுள்ளோரை அமர்த்துகிறார்.
15 நாடுகளின் ஆணிவேரை ஆண்டவர் அகழ்ந்தெறிகிறார்; அவர்களுக்குப் பதிலாகத் தாழ்ந்தோரை நட்டுவைக்கிறார்.
16 ஆண்டவர் பிற இனத்தாரைப் பாழாக்குகிறார்; அவர்களை அடியோடு அழிக்கிறார்.
17 அவர்களுள் சிலரை அகற்றி அழித்தொழிக்கிறார்; அவர்களின் நினைவை உலகினின்று துடைத்தழிக்கிறார்.
18 செருக்கு மனிதருக்கென்று படைக்கப்படவில்லை; கடுஞ் சீற்றமும் மானிடப் பிறவிக்கு உரியதல்ல.
19 மதிப்பிற்குரிய இனம் எது? மனித இனம். மதிப்பிற்குரிய இனம் எது? ஆண்டவருக்கு அஞ்சும் இனம். மதிக்கத் தகாத இனம் எது? அதே மனித இனம். மதிக்கத் தகாத இனம் எது? கட்டளைகளை மீறும் இனம்.
20 உடன் பிறந்தாருள் மூத்தவர் மதிப்பிற்குரியவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோர் அவர் முன்னிலையில் மதிப்புப்பெறுவர்.
21 (ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஏற்பின் தொடக்கம்; பிடிவாதமும் ஆணவமும் புறக்கணிப்பின் தொடக்கம்;)
22 செல்வர், மாண்புமிக்கோர், வறியவர் ஆகிய எல்லாருக்கும் உண்மையான பெருமை ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே.
23 அறிவுக்கூர்மை படைத்த ஏழைகளை இழிவுபடுத்தல் முறையன்று; பாவிகளைப் பெருமைப்படுத்துவதும் சரியன்று.
24 பெரியார்கள், நடுவர்கள், ஆட்சியாளர்கள் ஆகியோர் பெருமை பெறுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை விட இவர்களுள் யாருமே பெரியவர் அல்லர்.
25 ஞானமுள்ள அடிமைக்கு உரிமைக் குடிமக்கள் பணிபுரிவார்கள்; இது கண்டு அறிவாற்றல் நிறைந்தவர்கள் முறையிடமாட்டார்கள்.
26 நீ உன் வேலையைச் செய்யும்போது, உன் ஞானத்தைக் காட்டிக் கொள்ளாதே; வறுமையில் வாடும்போது உன்னையே பெருமைப்படுத்திக் கொள்ளாதே.
27 தற்பெருமை பாராட்டி உணவுக்கு வழிஇல்லாதோரைவிட உழைத்து வளமையுடன் வாழ்வோர் சிறந்தோர்.
28 குழந்தாய், பணிவிலே நீ பெருமைகொள்; உன் தகுதிக்கு ஏற்ற உன்னையே நீ மதி.
29 தங்களுக்கு எதிராகவே குற்றம் செய்வோரை நீதிமான்களென யாரே கணிப்பர்? தங்கள் வாழ்வையே மதிக்கத் தெரியாதவர்களை யாரே பெருமைப்படுத்துவர்?
30 ஏழையருக்குத் தங்கள் அறிவாற்றலால் சிறப்பு; செல்வருக்குத் தங்கள் செல்வத்தால் சிறப்பு.
31 வறுமையிலேயே பெருமை பெறுவோர் செல்வச் செழிப்பில் எத்துணைப் பெருமை அடைவர்! செல்வச் செழிப்பிலேயே சிறுமையுறுவோர் வறுமையில் எத்துணைச் சிறுமையுறுவர்!
அதிகாரம்11
1 நலிவுற்றோரின் ஞானம் அவர்களைத் தலைநிமிரச் செய்யும்; பெரியார்கள் நடுவில் அவர்களை அமரச் செய்யும்.
2 உடல் அழகுக்காக ஒருவரைப் புகழ வேண்டாம்; தோற்றத்துக்காக ஒருவரை இகழவும் வேண்டாம்;
3 பறப்பனவற்றுள் சிறியது தேனீ; எனினும், அது கொடுக்கும் தேன் இனியவற்றுள் சிறந்தது.
4 நீ அணிந்திருக்கும் ஆடைகுறித்துப் பெருமை பாராட்டாதே; நீ புகழ்பெறும் நாளில் உன்னையே உயர்த்திக்கொள்ளாதே. ஆண்டவரின் செயல்கள் வியப்புக்குரியவை; அவை மனிதரின் கண்ணுக்கு மறைவாய் உள்ளன.
5 மாமன்னர் பலர் மண்ணைக் கவ்வினர்; எதிர்பாராதோர் பொன்முடி புனைந்தனர்.
6 ஆட்சியாளர் பலர் சிறுமையுற்றனர்; மாட்சியுற்றோர் மற்றவரிடம் ஒப்புவிக்கப் பெற்றனர்.
7 தீர ஆராயாமல் குற்றம் சுமத்தாதே; முதலில் சோதித்தறி; பின்னர் இடித்துரை.
8 மற்றவருக்குச் செவிசாய்க்குமுன்பே மறுமொழி சொல்லாதே; அடுத்தவர் பேசும்போது குறுக்கே பேசாதே.
9 உன்னைச் சாராதவை பற்றி வாதிடாதே; பாவிகள் தீர்ப்பு வழங்கும்போது அவர்களோடு அமராதே.
10 குழந்தாய், பல அலுவல்களில் ஈடுபடாதே; ஈடுபட்டால் குற்றப்பழி பெறாமல் போகமாட்டாய்; செய்யத் தொடங்கினாலும் முடிக்கமாட்டாய்; தப்ப முயன்றாலும் முடியாது.
11 சிலர் மிகவும் கடுமையாய் உழைக்கின்றனர்; போராடுகின்றனர்; விரைந்து செயல்புரிகின்றனர்; எனினும் பின்தங்கியே இருக்கின்றனர்.
12 வேறு சிலர் மந்தமானவர்கள்; பிறர் உதவியால் வாழ்பவர்கள்; உடல் வலிமை இல்லாதவர்கள்; வறுமையில் உழல்பவர்கள். ஆண்டவர் அவர்களைக் கடைக்கண் நோக்குகின்றார்; தாழ்நிலையினின்று அவர்களை உயர்த்தி விடுகிறார்;
13 அவர்களைத் தலைநிமிரச் செய்கிறார்; அவர்களைக் காணும் பலர் வியப்பில் ஆழ்கின்றனர்.
14 நன்மை தீமை, வாழ்வு சாவு, வறுமை வளமை ஆகிய அனைத்தும் ஆண்டவரிடமிருந்தே வருகின்றன.
15 (ஞானம், அறிவாற்றல், திருச்சட்டம் பற்றிய அறிவு ஆகியவை ஆண்டவரிடமிருந்தே வருகின்றன. அன்பும் நற்செயல் செய்யும் பண்பும் அவரிடமிருந்தே உண்டாகின்றன.)
16 (தவறும் இருளும் பாவிகளுக்காகவே உண்டாக்கப்பட்டன. தீவினைகளில் செலுக்குறுவோரிடம் தீமை செழித்து வளரும்.)
17 இறைப்பற்றுள்ளோரிடம் ஆண்டவரின் கொடைகள் நிலைத்து நிற்கும்; அவரது பரிவு என்றும் வெற்றியைக் கொணரும்.
18 சிலர் தளரா ஊக்கத்தினாலும் தன்னல மறுப்பினாலும் செல்வர் ஆகின்றனர். அவர்களுக்கு உரிய பரிசு அதுவே.
19 "நான் ஓய்வைக் கண்டடைந்தேன்; நான் சேர்த்துவைத்த பொருள்களை இப்போது உண்பேன்" என அவர்கள் ஒவ்வொருவரும் சொல்லிக் கொள்வர். இது எத்துணைக் காலத்துக்கு நீடிக்கும் என்பதையும் தங்கள் சொத்துகளைப் பிறரிடம் விட்டுவிட்டு இறக்க நேரிடும் என்பதையும் அவர்கள் அறியார்கள்.
20 நீ செய்த ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டிரு; அதில் ஈடுபாடு கொண்டிரு; உன் உழைப்பிலே முதுமை அடை.
21 பாவிகளின் செயல்களைக் கண்டு வியப்பு அடையாதே; ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்; உன் உழைப்பில் நிலைத்திரு. நொடிப்பொழுதில் ஏழையரைத் திடீரென்று செல்வராய் மாற்றுவது ஆண்டவரின் பார்வையில் எளிதானது.
22 ஆண்டவரின் ஆசியே இறைப்பற்றுள்ளோருக்குக் கிடைக்கும் பரிசு. அவர் தம் ஆசியை விரைந்து தழைக்கச் செய்வார்.
23 "எனக்குத் தேவையானது என்ன இருக்கிறது? இனிமேல் வேறு என்ன நன்மைகள் எனக்குக் கிடைக்கும்?" எனச் சொல்லாதே.
24 "எனக்குப் போதுமானது உள்ளது. இனி எனக்கு என்ன தீங்கு நேரக்கூடும்?" எனவும் கூறாதே.
25 வளமாக வாழும்போது, பட்ட துன்பங்கள் மறந்து போகின்றன; துன்பத்தில் உழலும்போது, துய்த்த நன்மைகள் மறந்து போகின்றன.
26 அவரவர் நடத்தைக்கு ஏற்ப இறுதிநாளில் மனிதருக்குப் பரிசு அளிப்பது ஆண்டவர்க்கு எளிதானது.
27 சிறிது நேரத் துன்பம், முன்னர் துய்த்த இன்பத்தை மறக்கச் செய்கிறது. வாழ்வின் முடிவில் மனிதரின் செயல்கள் வெளிப்படுத்தப்படும்.
28 இறக்குமுன் யாரையும் பேறுபெற்றவர் எனப் போற்றாதே; பிள்ளைகள் வழியாகவே ஒருவரது தகைமை வெளிப்படும்.
29 எல்லா மனிதரையும் உன் வீட்டுக்கு அழைத்து வராதே; இரண்டகர் பல சூழ்ச்சிகள் செய்வர்.
30 இறுமாப்புப் படைத்தோர் பறவைகளைப் பொறிக்குள் சிக்கவைக்கப் பயன்படும் கௌதாரி போன்றோர்; அவர்கள் உளவாளி போல் உன் வீழ்ச்சியைக் கவனித்துக் கொண்டிருப்பர்.
31 நன்மைகளைத் தீமைகளாக மாற்ற அவர்கள் பதுங்கிக் காத்திருப்பார்கள்; புகழத்தக்க செயல்களில் குறை காண்பார்கள்.
32 ஒரேயொரு தீப்பொறி கரிமலையையே எரிக்கும்; ஒரு பாவி பிறரைத் தாக்கப் பதுங்கிக் காத்திருப்பான்.
33 தீச்செயல் புரிவோர் குறித்து விழிப்பாய் இரு; அவர்கள் தீங்கு விளைவிக்கச் சூழ்ச்சி செய்கிறார்கள். இதனால் உன் பெருமைக்கு என்றும் இழுக்கு ஏற்படுத்தலாம்.
34 அன்னியரை உன் வீட்டில் வரவேற்றால், அவர்கள் உனக்குத் தொல்லைகளைத் தூண்டிவிடுவர்; கடைசியில் உன் வீட்டாருக்கே உன்னை அன்னியன் ஆக்கிவிடுவர்.
அதிகாரம் 12
1 நீ நன்மை செய்தால் யாருக்குச் செய்கிறாய் என்பதைத் தெரிந்து செய்; உன் நற்செயல்களுக்கு நன்றி பெறுவாய்.
2 இறைப்பற்றுள்ளோருக்கு நன்மை செய்; உனக்குக் கைம்மாறு கிடைக்கும். அவர்களால் இயலாவிடினும் உன்னத இறைவன் கைம்மாறு செய்வார்.
3 தீமையில் விடாப்பிடியாய் இருப்போருக்கு நன்மை பிறவாது; தருமம் செய்யாதோருக்கும் அவ்வாறே நிகழும்.
4 இறைப்பற்றுள்ளோருக்குக் கொடு; பாவிகளுக்கு உதவாதே.
5 நலிவுற்றோருக்கு நன்மை செய்; இறைப்பற்றில்லாதோருக்குக் கொடாதே. அவர்களுக்குரிய உணவைக்கூட நிறுத்திவை; அவர்களுக்கு அதை அளிக்காதே; அதைக்கொண்டே அவர்கள் உன்னை வீழ்த்த நேரிடும். நீ அவர்களுக்குச் செய்த நன்மைகளுக்கெல்லாம் கைம்மாறாக அவற்றைப்போல் இரு மடங்கு தீமை அடைவாய்.
6 உன்னத இறைவனும் பாவிகளை வெறுக்கிறார்; இறைப்பற்றில்லாதோரை ஒறுக்கிறார்.
7 நல்லாருக்குக் கொடு; பாவிகளுக்கு உதவாதே.
8 இன்பத்தில் உண்மையான நண்பனை அறிந்துகொள்ள முடியாது; துன்பத்தில் உன் பகைவனைக் கண்டு கொள்ள முடியும்.
9 ஒருவரது உயர்வு அவருடைய பகைவருக்கு வருத்தம் தரும்; அவரது தாழ்வு நண்பரையும் விலகச் செய்யும்.
10 ஒருகாலும் உன் பகைவரை நம்பாதே; அவர்களின் தீய குணம் செம்பில் பிடித்த களிம்பு போன்றது.
11 அவர்கள் தங்களையே தாழ்த்திக் கொண்டாலும், இச்சகம் பேசினாலும், அவர்களைக் குறித்து விழிப்பாய் இருந்து உன்னையே காத்துக்கொள். கண்ணாடியைத் துடைப்போர்போன்று அவர்களிடம் நடந்து கொள். அது முழுதும் கறைபடவில்லை என்பதை நீ அறிந்துகொள்வாய்.
12 உன் எதிரிகளை உன் அருகில் நிற்கவிடாதே; அவர்கள் உன்னை வீழ்த்தி, உன் இடத்தைக் கைப்பற்றிக்கொள்ளலாம். உன் வலப்புறத்திலும் அவர்களை அமர்த்தாதே; உன் இருக்கையைப் பறிக்கத் தேடலாம். நான் சொன்னதெல்லாம் உண்மை என இறுதியில் உணர்வாய்; என் சொற்கள் உன்னை உறுத்திக் கொண்டே இருக்கும்.
13 பாம்பாட்டியைப் பாம்பு கடித்துவிட்டால் யாரே அவருக்கு இரங்குவர்? காட்டு விலங்குகளின் அருகில் செல்வோர்மீதும் யாரே பரிவு காட்டுவர்?
14 அவ்வாறே, பாவிகளோடு சேர்ந்து பழகி, அவர்களுடைய பாவங்களிலும் ஈடுபாடு காட்டுவோர்மீது யாரே இரக்கம் காட்டுவர்?
15 சிறிது நேரம் அவர்கள் உன்னுடன் உறவாடுவார்கள்; நீ தடுமாற நேர்ந்தால் உன்னைத் தாங்கிக்கொள்ளமாட்டார்கள்.
16 பகைவர் உதட்டில் தேன் ஒழுகப்பேசுவர்; உள்ளத்திலோ உனக்குக் குழி பறிக்கத் திட்டமிடுவர்; உனக்கு முன் கண்ணீர் சிந்துவர்; வாய்ப்புக் கிடைக்கும் போது அவர்களது கொலை வெறி அடங்காது.
17 உனக்குத் துன்பம் நேர்ந்தால் அங்கே உனக்குமுன் அவர்களைக் காண்பாய்; உனக்கு உதவி செய்வதுபோல் உன் காலை இடறிவிடுவர்.
18 அவர்கள் தங்களது முகப்பொலிவை மாற்றிக்கொண்டு எள்ளி நகையாடும்படி தலையாட்டுவர்; கை கொட்டுவர்; புரளிகளைப் பரப்புவர்.
அதிகாரம் 13
1 மையைத் தொடுவோர் தங்களைக் கறைப்படுத்திக் கொள்வர்; செருக்குடையோருடன் சேர்ந்து பழகுவோர் அவர்களைப்போலவே மாறுவர்.
2 உன்னால் சுமக்க முடியாத சுமைகளைத் தூக்காதே; உன்னைவிட வலிமை வாய்ந்தோருடனும் செல்வம் படைத்தோருடனும் உறவு கொள்ளாதே. மண்பானைக்கும் இரும்புக் கொப்பரைக்கும் என்ன தொடர்பு? கொப்பரையுடன் பானை மோதிச் சுக்குநூறாகும்.
3 செல்வர்கள் அநீதி இழைப்பதுமன்றி ஏழைகளை இழிவுபடுத்தவும் செய்வார்கள்; ஏழைகளோ அநீதிக்கு ஆளாவதோடு மன்னிப்பும் கேட்கவேண்டும்.
4 உன்னால் தங்களுக்குப் பயன் விளையுமாயின், செல்வர் உன்னைச் சுரண்டுவர்; உனக்கு ஒரு தேவை என்றால் உன்னைக் கைவிடுவர்.
5 நீ வசதியாய் இருக்கும்போது உன்னோடு ஒட்டி உறவாடுவர்; உன்னை வெறுமையாக்கி விட்டுக் கவலையின்றி இருப்பர்.
6 உன் உதவி அவர்களுக்குத் தேவைப்படும் போது உன்னை ஏமாற்றுவர்; உன்னைப் பார்த்துப் புன்முறுவல் பூத்து உனக்கு ஊக்கம் அளிப்பர்; உன்னிடம் நயந்து பேசி, "உனக்குத் தேவையானது என்ன?" எனக் கேட்பர்.
7 நீ திகைக்கத் திகைக்க உனக்குப் பல்சுவை விருந்தூட்டி, சிறிது சிறிதாக உன்னை அறவே கறந்து, இறுதியில் உன்னை எள்ளி நகையாடுவர்; பின்னர் உன்னைக் காண நேர்ந்தால் ஒதுங்கிச் செல்வர்; உன்னைப் பார்த்துத் தலையாட்டுவர்.
8 ஏமாந்து போகாதவாறு எச்சரிக்கையாய் இரு; உன் அறிவின்மையால் தாழ்வுறாதே.
9 வலியோர் உன்னை விருந்துக்கு அழைக்கும்போது ஆர்வம் காட்டாதே; அப்படியானால் மீண்டும் மீண்டும் உன்னை அழைப்பர்.
10 எதிலும் முந்திக்கொள்ளாதே; நீ ஒதுக்கப்படலாம். தொலைவில் ஒதுங்கி நில்லாதே; நீ மறக்கப்படுவாய்.
11 வலியோரை உனக்கு இணையாக நடத்த முயலாதே; அவர்களின் நீண்ட பேச்சுகளை நம்பாதே. உன்னை ஆழம் காணவே அவர்கள் நீண்டநேரம் பேசுகின்றார்கள்; அவர்கள் சிரித்துப் பேசுவதும் உன்னைக் கணிப்பதற்கே.
12 இரகசியங்களைக் காப்பாற்றாதோர் இரக்கமற்றோர்; உன்னைக் கொடுமைப்படுத்தவும் சிறைப்படுத்தவும் அவர்கள் தயங்கமாட்டார்கள்.
13 அவற்றைக் காப்பாற்றுவதில் மிகவும் கவனமாய் இரு; ஏனெனில் உனது வீழ்ச்சியை மடியில் கட்டிக்கொண்டு நடக்கிறாய்.
14 (நீ உறங்கும்போது இவற்றைக் கேட்க நேர்ந்தால் விழித்தெழு; உன் வாழ்நாள்முழுவதும் ஆண்டவர்மீது அன்புசெலுத்து; உன் மீட்புக்காக அவரை மன்றாடு.)
15 ஒவ்வோர் உயிரும் தன் இனத்தின்மீது அன்பு பாராட்டுகிறது; ஒவ்வொரு மனிதரும் தமக்கு அடுத்திருப்பவர்மீது அன்பு செலுத்துகிறார்.
16 உயிரினங்களெல்லாம் தங்கள் இனங்களோடு சேர்ந்து வாழ்கின்றன; மனிதரும் தம்மைப்போன்ற மனிதருடன் இணைந்தே வாழ்கின்றனர்.
17 ஓநாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் உறவு எது? பாவிகளுக்கும் இறைப்பற்றுள்ளோருக்கும் தொடர்பு எது?
18 கழுதைப் புலிக்கும் நாய்க்கும் இடையே அமைதி எது? செல்வர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே சமாதானம் ஏது?
19 காட்டுக் கழுதைகள் பாலைநிலத்தில் சிங்கங்களுக்கு இரையாகும்; ஏழைகளைச் செல்வர்கள் விழுங்குவர்.
20 இறுமாப்புக் கொண்டோர் தாழ்ச்சியை அருவருப்பர்; செல்வர் ஏழைகளை அருவருப்பர்.
21 செல்வர் தடுமாறினால் நண்பர்கள் தாங்குவார்கள்; எளியோர் விழும்போது நண்பர்களும் சேர்ந்து தள்ளி விடுவார்கள்.
22 செல்வர் நாத்தவறினால் அவரைக் காப்பாற்றப் பலர் இருப்பர்; தகாதவற்றைப் பேசினும் அவற்றை முறைப்படுத்துவர். எளியோர் நாத்தவறினால் அவர்கள்மீது குற்றஞ் சாட்டுவர்; அறிவுக்கூர்மையோடு பேசினும் அவர்களுக்குச் செவிசாய்ப்பார் யாரும் இலர்.
23 செல்வர் பேசும்போது எல்லாரும் அமைதியாய்க் கேட்பர்; அவரது பேச்சை வானுயரப் புகழ்வர். ஏழை பேசும்போது, "இவன் யார்?" எனக் கேட்பர்; பேச்சில் தடுமாற்றம் ஏற்படின், அவரைப் பிடித்து வெளியே தள்ளுவர்.
24 பாவக் கலப்பில்லாத செல்வம் நன்று; வறுமை தீயது என இறைப்பற்றில்லாதோரே கூறுவர்.
25 மனிதரின் உள்ளம் நன்மைக்கோ தீமைக்கோ முகத் தோற்றத்தை மாற்றி விடுகிறது.
26 இனிய உள்ளத்தின் அடையாளம் மலர்ந்த முகம். உவமைகளைக் கண்டுபிடிக்கக் கடும் உழைப்போடு கூடிய சிந்தனை வேண்டும்.
அதிகாரம் 14
1 நாவினால் தவறு செய்யாதோர் பேறுபெற்றோர்; அவர்கள் பாவங்களுக்கான மன உறுத்தல் இல்லாதவர்கள்.
2 தம் மனச்சான்றால் கண்டிக்கப்படாதோர் பேறுபெற்றோர்; நம்பிக்கை தளராதோரும் பேறு பெற்றோர்.
3 கஞ்சனுக்குச் செல்வம் ஏற்றதல்ல; கருமிக்க அதனால் என்ன பயன்?
4 தமக்கெனச் செலவிடாமல் சேர்த்து வைக்கும் செல்வம் பிறரையே சென்று அடையும்? அச்செல்வத்தால் பிறரே வளமுடன் வாழ்வர்.
5 தங்களையே கடுமையாக நடத்துவோர் அடுத்தவருக்கு எங்ஙனம் நன்மை செய்வர்? அவர்கள் தங்களிடம் உள்ள செல்வங்களையே துய்த்து மகிழத் தெரியாதவர்கள்.
6 தமக்குத்தாமே கருமியாய் இருப்போரைவிடக் கொடியவர் இலர்; அவர்களது கஞ்சத்தனத்துக்கு இதுவே தண்டனை.
7 அவர்கள் நன்மை செய்தாலும் அது அவர்களை அறியாமல் நிகழ்கின்றது; இறுதியில் தங்கள் கஞ்சத்தனத்தையே காட்டி விடுவர்.
8 பொறாமை கொண்டோர் தீயோர்; பிறரைப் புறக்கணித்து முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொள்வர்.
9 பேராசை கொண்டோர் உள்ளது கொண்டு நிறைவு அடைவதில்லை; பேராசையுடன் கூடிய அநீதி, உள்ளம் தளர்வு அடையச் செய்கிறது.
10 கருமிகள் மற்றவர்களுக்கு உணவை அளந்தே கொடுப்பார்கள். அவர்களின் உணவறையில் எதுவும் இராது.
11 குழந்தாய், உள்ளத்தைக் கொண்டு உன்னையே பேணிக்கொள்; ஆண்டவருக்கு ஏற்ற காணிக்கை செலுத்து.
12 இறப்பு யாருக்கும் காலம் தாழ்த்தாது என்பதையும் நீ சாகவேண்டிய நேரம் உனக்கு இன்னும் சொல்லப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்.
13 நீ இறக்குமுன் உன் நண்பர்களுக்கு உதவி செய்; உன்னால் முடிந்தவரை தாராளமாகக் கொடு.
14 ஒவ்வொரு நாளும் உனக்குக் கிடைக்கும் நன்மைகளை நன்கு பயன்படுத்து; உன் வாழ்வின் இன்பங்களைத் துய்க்காமல் விட்டுவிடாதே.
15 உன் உழைப்பின் பயனைப் பிறருக்கு விட்டுவிடுவதில்லையா? நீ உழைத்துச் சேர்த்ததைப் பங்கிட்டுக்கொள்ள விடுவதில்லையா?
16 கொடுத்து வாங்கு; மகிழ்ந்திரு. பாதாளத்தில் இன்பத்தைத் தேட முடியாது.
17 ஆடைபோன்று மனிதர் அனைவரும் முதுமை அடைகின்றனர்; "நீ திண்ணமாய்ச் சாவாய்" என்பதே தொன்மை நெறிமுறை.
18 இலை அடர்ந்த மரத்தின் சில இலைகள் உதிர்கின்றன; சில இலைகள் தளிர்க்கின்றன. ஊனும் உதிரமும் கொண்ட மனித இனத்திலும் சிலர் இறப்பர்; சிலர் பிறப்பர்.
19 கை வேலைப்பாடுகளெல்லாம் மட்கி மறையும்; அவற்றைச் செய்தோரும் அவற்றோடு மறைந்தொழிவர்.
20 ஞானத்தில் நாட்டம் செலுத்துவோர் பேறுபெற்றோர்; அறிவுக்கூர்மை கொண்டு வாதிடுவோரும் பேறுபெற்றோர்.
21 ஞானத்தின் வழிகள் பற்றித் தம் உள்ளத்தில் எண்ணிப்பார்ப்போரும் அதன் இரகசியங்களைச் சீர்தூக்கிப் பார்ப்போரும் பேறுபெற்றோர்.
22 வேடர்போன்று அதைத் தேடிச்சென்று அதன் வழிகளில் பதுங்கியிருப்போரும் பேறுபெற்றோர்.
23 அதன் பலகணி வழியே உற்றுநோக்குவோரும் அதன் கதவு அருகே நின்று கேட்போரும் பேறுபெற்றோர்.
24 அதன் வீட்டின் அருகே தங்குவோரும் அதன் சுவரில் தம் கூடாரத்தின் முளையை இறுக்குவோறும் பேறுபெற்றோர்.
25 அதன் அருகிலேயே தம் கூடாரத்தை அமைப்போரும் அதன் இனிமை நிறைந்த இடத்தில் தம் இல்லத்தைக் கட்டுவோரும் பேறுபெற்றோர்.
26 அதன் நிழலில் தம் பிள்ளைகளைக் கிடத்துவோரும் அதன் கிளைகளுக்கு அடியில் தங்குவோரும் பேறுபெற்றோர்.
27 வெப்பத்தினின்று ஞானத்திடம் தஞ்சம் புகுவோரும் அதன் மாட்சியின் நடுவே குடியிருப்போரும் பேறுபெற்றோர்.
அதிகாரம் 15
1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள் இவற்றையெல்லாம் செய்வார்கள்; திருச்சட்டத்தைக் கற்றுத் தேர்ந்தவர்கள் ஞானத்தை அடைவார்கள்.
2 தாய் போன்று ஞானம் அவர்களை எதிர்கொள்ளும்; இளம் மணமகள்போல அவர்களை வரவேற்கும்.
3 அறிவுக் கூர்மை எனும் உணவை அவர்கள் அருந்தக் கொடுக்கும்; ஞானமாகிய நீரைப் பருக அளிக்கும்.
4 அவர்கள் அதன்மீது சாய்ந்து கொள்வார்கள்; விழமாட்டார்கள்; அதைச் சார்ந்து வாழ்பவர்கள் இகழ்ச்சி அடையமாட்டார்கள்.
5 அடுத்திருப்பவருக்கு மேலாக அது அவர்களை உயர்த்தும்; சபை நடுவில் பேச நாவன்மை நல்கும்.
6 அவர்கள் அக்களிப்பையும் மகிழ்ச்சியின் முடியையும் கண்டடைவார்கள்; நிலையான பெயரை உரிமையாக்கிக் கொள்வார்கள்.
7 அறிவிலிகள் ஞானத்தை அடையமாட்டார்கள்; பாவிகள் அதைக் காணமாட்டார்கள்;
8 இறுமாப்பினின்று அது விலகி நிற்கும்; பொய்யர் ஒரு போதும் அதை நினைத்துப்பாரார்.
9 பாவிகளின் வாயிலிருந்து வரும் இறைப்புகழ்ச்சி தகாதது; அது ஆண்டவரிடமிருந்து அவர்களுக்கு அருளப்படவில்லை.
10 ஞானத்தினின்று இறைப்புகழ்ச்சி வெளிப்படவேண்டும்; ஆண்டவரே அதை வளமுறச் செய்வார்.
11 "ஆண்டவரே என் வீழ்ச்சிக்குக் காரணம்" எனச் சொல்லாதே; தாம் வெறுப்பதை அவர் செய்வதில்லை.
12 "அவரே என்னை நெறிபிறழச் செய்தார்" எனக் கூறாதே; பாவிகள் அவருக்குத் தேவையில்லை.
13 ஆண்டவர் அருவருப்புக்குரிய அனைத்தையும் வெறுக்கிறார்; அவருக்கு அஞ்சிநடப்போர் அவற்றை விரும்புவதில்லை.
14 அவரே தொடக்கத்தில் மனிதரை உண்டாக்கினர்; தங்கள் விருப்புரிமையின்படி செயல்பட அவர்களை விட்டுவிட்டார்.
15 நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது.
16 உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்; உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள்.
17 மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்.
18 ஆண்டவரின் ஞானம் பெரிது. அவர் ஆற்றல் மிக்கவர்; அனைத்தையும் அவர் காண்கிறார்.
19 ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் மீது அவரது பார்வை இருக்கும்; மனிதரின் செயல்கள் அனைத்தையும் அவர் அறிவார்.
20 இறைப்பற்றின்றி இருக்க யாருக்கும் ஆண்டவர் கட்டளையிட்டதில்லை; பாவம் செய்ய எவருக்கும் அவர் அனுமதி கொடுத்ததும் இல்லை.
அதிகாரம் 16
1 பயனற்ற பிள்ளைகள் பலரைப் பெற ஏங்காதே; இறைப்பற்றில்லாத மக்கள் பற்றி மகிழ்ச்சி கொள்ளாதே.
2 அவர்கள் பலராய் இருப்பினும் ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் அவர்களிடம் இல்லையெனில் அவர்களால் மகிழ்ச்சி அடையாதே.
3 அவர்களின் நீடிய வாழ்வில் நம்பிக்கை வைக்காதே; அவர்களுடைய எண்ணிக்கையை நம்பியிராதே. ஓராயிரம் பிள்ளைகளைவிட ஒரே பிள்ளை சிறந்ததாய் இருக்கலாம்; இறைப்பற்றில்லாத பிள்ளைகளைப் பெறுவதைவிடப் பிள்ளையின்றி இறப்பது நலம்.
4 அறிவுக்கூர்மை படைத்த ஒருவர் ஒரு நகரையே மக்களால் நிரப்பக்கூடும்; ஒழுக்க வரம்பு அற்றோரின் ஒரு குலம் அதைச் சுடுகாடாக மாற்ற இயலும்.
5 இவைபோன்ற பலவற்றை என் கண் கண்டுள்ளது; இவற்றினும் பெரியனவற்றை என் காது கேட்டுள்ளது.
6 பாவிகளின் கூட்டத்தில் தீ கொழுந்துவிட்டு எரியும்; கட்டுப்பாடில்லா நாட்டில் சினம் பற்றியெரியும்.
7 தங்கள் வலிமைகொண்டு கிளர்ச்சி செய்த பழங்கால அரக்கர்களை ஆண்டவர் மன்னிக்கவில்லை.
8 லோத்து என்பவரை அடுத்து வாழ்ந்தவர்களை அவர் அழிக்காமல் விடவில்லை; அவர்களின் இறுமாப்பினால் அவர்களை வெறுத்தார்.
9 கேட்டிற்குரிய நாட்டின்மீது அவர் இரக்கம் காட்டவில்லை; தங்கள் பாவங்களால் அவர்கள் வேருடன் களைந்து எறியப்பட்டார்கள்.
10 தங்கள் பிடிவாதத்தால் திரண்ருந்த ஆறு இலட்சம் காலாட்படையினரையும் அவர் தண்டிக்காமல் விடவில்லை.
11 பிடிவாதம் கொண்ட ஒருவர் இருந்திருந்தால்கூட அவர் தண்டனை பெறாது விடப்பட்டிருந்தால் அது வியப்பாக இருந்திருக்கும்! இரக்கமும் சினமும் ஆண்டவரிடம் உள்ளன. அவர் மன்னிப்பதில் வல்லவர்; தம் சினத்தைக் காட்டுவதிலும் வல்லவர்.
12 அவரின் இரக்கம் பெரிது; அவரது தண்டனை கடுமையானது. அவரவர் செயல்களுக்கு ஏற்ப அவர் மனிதருக்குத் தீர்ப்பளிக்கிறார்.
13 பாவிகள் தங்கள் கொள்ளைப் பொருள்களுடன் தப்பமாட்டார்கள். இறைப்பற்றுள்ளோரின் பொறுமை வீண்போகாது.
14 தருமங்கள் அனைத்தையும் அவர் குறித்து வைக்கிறார்; மனிதர் எல்லாரும் அவரவர் தம் செயல்களுக்கு ஏற்பக் கைம்மாறு பெறுவர்.
15 (ஆண்டவரைப் பார்வோன் அறிந்து கொள்ளாதவாறும் அதனால் அவருடைய செயல்களை உலகம் தெரிந்து கொள்ளாதவாறும் அவனுக்குப் பிடிவாதமுள்ள உள்ளத்தைக் கொடுத்தார்.)
16 படைப்பு முழுவதற்கும் அவர்தம் இரக்கத்தை வெளிப்படுத்தினார்; ஒளியையும் இருளையும் தூக்குநூல் கொண்டு பிரித்துவைத்தார்.
17 "நான் ஆண்டவரிடமிருந்து ஒளிந்து கொள்வேன்; உயர் வானிலிருந்து யார் என்னை நினைப்பார்? இத்துணை பெரிய மக்கள் திரளில் என்னை யாருக்கும் தெரியாது; அளவற்ற படைப்பின் நடுவே நான் யார்?" என்று சொல்லிக் கொள்ளாதே.
18 இதோ! அவரது வருகையின்போது வானமும் வானகத்தின் மேல் உள்ள விண்ணகமும் கீழுலகும் மண்ணுலகும் நடுங்கும்.
19 அவரது பார்வைப் பட்டதும் மலைகளும் மண்ணுலகின் அடித்தளங்களும் அதிர்ந்து நடுங்குகின்றன.
20 இவைபற்றி மனிதர் யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. அவருடைய வழிகளை யாரே அறிவர்?
21 புயலை யாரும் காண்பதில்லை; அவருடைய செயல்களுள் பல மறைந்துள்ளன.
22 அவருடைய நீதியின் செயல்களை யாரால் அறிவிக்கமுடியும்? அவற்றுக்காக யார் காத்திருக்க முடியும்? அவரின் உடன்படிக்கை தொலைவில் உள்ளது.
23 மேற்கூறியவை அறிவில்லாதவர்களின் எண்ணங்கள்; மதிகெட்ட, நெறிபிறழ்ந்த மனிதர்கள் மூடத்தனமானவற்றை நினைக்கிறார்கள்.
24 குழந்தாய், நான் சொல்வதைக் கேள்; அதனால் அறிவு பெறு; என் சொற்கள்மீது உன் கருத்தைச் செலுத்து.
25 நற்பயிற்சியை உனக்கு நுட்பமாகக் கற்பிப்பேன்; அறிவை உனக்குச் செம்மையாய் புகட்டுவேன்.
26 தொடக்கத்தில் ஆண்டவர் தம் படைப்புகளை உண்டாக்கியபோது, பின்னர் அவற்றின் எல்லைகளை வரையறுத்தபோது,
27 தம் படைப்புகளை என்றென்றைக்கும் ஒழுங்கோடு அமைத்தார்; அவற்றின் செயற்களங்களை எல்லாத் தலைமுறைகளுக்கும் வகுத்தார். அவற்றுக்குப் பசியுமில்லை, சோர்வுமில்லை; தங்கள் பணியிலிருந்து அவை தவறுவதுமில்லை.
28 அவற்றுள் ஒன்று மற்றொன்றை நெருங்குவதில்லை; அவரது சொல்லுக்கு அவை என்றுமே கீழ்ப்படியாமலில்லை.
29 அதன்பின் ஆண்டவர் மண்ணுலகை நோக்கினார்; அதைத் தம் நலன்களால் நிரப்பினார்.
30 நிலப்பரப்பை எல்லாவகை உயிரினங்களாலும் நிறைத்தார். அவை மண்ணுக்கே திரும்ப வேண்டும்.
அதிகாரம் 17
1 ஆண்டவர் மனிதரை மண்ணால் படைத்தார்; மீண்டும் அந்த மண்ணுக்கே திரும்புமாறு செய்கிறார்.
2 அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலவரையை வகுத்தார்; மண்ணுலகில் உள்ளவற்றின்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
3 தமக்கு உள்ளதைப்போன்ற வலிமையை அவர்களுக்கு வழங்கினார்; தமது சாயலாகவே அவர்களை உருவாக்கினார்.
4 எல்லா உயிரினங்களும் மனிதருக்கு அஞ்சும்படி செய்தார்; விலங்குகள், பறவைகள்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
5 (தம் ஐந்தறிவைப் பயன்படுத்தும் உரிமையை ஆண்டவர் அவர்களுக்கு அளித்தார்; ஆறாவதாகத் தம் அறிவுத்திறனில் பங்கு கொடுத்தார்; அந்த ஆறறிவையும் விளக்கும் பகுத்தறிவை ஏழாவது கொடையாக வழங்கினார்.)
6 விருப்புரிமை, நாக்கு, கண், காது ஆகியவற்றையும் சிந்திப்பதற்கு ஓர் உள்ளத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்.
7 அவர்களை அறிவாலும் கூர்மதியாலும் நிரப்பினார்; நன்மை தீமையையும் அவர்களுக்குக் காட்டினார்.
8 அவர்களின் உள்ளத்தைப்பற்றி விழிப்பாய் இருந்தார்; தம் செயல்களின் மேன்மையைக் காட்டினார்.
9 (தம் வியத்தகு செயல்கள் பற்றி என்றும் பெருமைப்படும் உரிமையை அவர்களுக்கு அளித்தார்.)
10 அவர்கள் அவரது திருப்பெயரைப் புகழ்வார்கள்; இவ்வாறு அவருடைய செயல்களின் மேன்மையைப் பறைசாற்றுவார்கள்.
11 அறிவை அவர்களுக்கு வழங்கினார்; வாழ்வு அளிக்கும் திருச்சட்டத்தை அவர்களுக்கு உரிமையாக்கினார்.
12 அவர்களுடன் முடிவில்லா உடன்படிக்கை செய்துகொண்டார்; தம் தீர்ப்புகளை அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.
13 அவர்களின் கண்கள் அவருடைய மாட்சியைக் கண்டன; அவர்களின் செவிகள் அவரது மாட்சியின் குரலைக் கேட்டன.
14 "எல்லாவகைத் தீமைகள் குறித்தும் கவனமாய் இருங்கள்" என்று அவர் எச்சரித்தார்; அடுத்திருப்பவர்களைப் பற்றிய கட்டளைகளை அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்.
15 மனிதரின் வழிகளை ஆண்டவர் எப்போதும் அறிவார்; அவரின் பார்வையிலிருந்து அவை மறைந்திருப்பதில்லை.
16 (இளமை தொட்டே அவர்களின் வழிகள் தீமையை நாடுகின்றன. தங்களின் கல்லான இதயத்தை உணர்ச்சியுள்ள இதயமாக மாற்ற அவர்களால் முடியாது.)
17 நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தலைவரை ஏற்படுத்தினார்; இஸ்ரயேல் நாடோ ஆண்டவரின் பங்காகும்.
18 (இஸ்ரயேல் அவருடைய தலைப்பேறு. அதை நற்பயிற்சியில் வளர்க்கிறார்; அதன்மீது தம் அன்பின் ஒளியை வீசுகிறார்; அதைக் கவனியாது விட்டுவிடுவதில்லை.)
19 மனிதரின் செயல்கள் அனைத்தும் கதிரவனின் ஒளிபோல் அவர் திருமுன் தெளிவாய்த் துலங்குகின்றன; அவருடைய கண்கள் எப்போதும் அவர்களுடைய வழிகள் மீது இருக்கும்.
20 அவர்களுடைய அநீதியான செயல்கள் அவருக்கு மறைவாய் இருப்பதில்லை; அவர்களின் பாவங்கள் அனைத்தையும் ஆண்டவர் அறிவார்.
21 (ஆண்டவர் நல்லவர்; அவர் தம் படைப்புகளை அறிவார். அவற்றை அவர் விட்டுவிடவில்லை, கைவிடவுமில்லை; மாறாகப் பாதுகாத்தார்.)
22 மனிதர் செய்யும் தருமங்கள் அவருக்குக் கணையாழிபோல் திகழ்கின்றன; அவர்கள் புரியும் அன்புச் செயல்கள் அவருக்குக் கண்மணிபோல் விளங்குகின்றன.
23 பின்னர் அவர் எழுந்து அவர்களுக்குக் கைம்மாறு செய்வார்; அவர்களுக்குச் சேரவேண்டிய வெகுமதியை அவர்களின் தலைமேல் பொழிவார்.
24 இருப்பினும் மனம் வருந்துவோரைத் தம்பால் ஈர்த்துக்கொள்கிறார் நம்பிக்கை இழந்தோரை ஊக்குவிக்கிறார்.
25 ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்; பாவங்களை விட்டு விலகுங்கள்; அவர் திருமுன் வேண்டுங்கள்; குற்றங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
26 உன்னத இறைவனிடம் திரும்பி வாருங்கள்; அநீதியை விட்டு விலகிச் செல்லுங்கள்; அவர் அருவருப்பதை அடியோடு வெறுத்திடுங்கள்.
27 வாழ்வோர் உன்னத இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்; ஆனால் கீழுலகில் அவரது புகழை யாரே பாடுவர்?
28 உயிர் வாழ்ந்திராதவர் போன்றே இறந்தவர்களும் அவருக்கு நன்றி செலுத்துவதில்லை; உடல் நலத்துடன் உயிர் வாழ்வோரோ அவரைப் போற்றுகின்றனர்.
29 ஆண்டவரின் இரக்கம் எத்துணைப் பெரிது! அவரிடம் மனந்திரும்புவோருக்கு அவர் அளிக்கும் மன்னிப்பு எத்துணை மேலானது!
30 எல்லாமே மனிதரின் ஆற்றலுக்கு உட்பட்டதில்லை; மனிதர் இறவாமை பெற்றவர் அல்லர்.
31 கதிரவனைவிட ஒளி மிக்கது எது? ஆயினும் சூரிய கிரகணமும் உண்டு. ஊனும் உதிரமும் கொண்ட மனிதர் தீமைகளைப் பற்றியே சிந்திக்கின்றனர்.
32 அவர் உயர் வானத்தின் படைகளை வகைப்படுத்துகிறார். மனிதர் அனைவரும் புழுதியும் சாம்பலுமே.
அதிகாரம் 18
1 என்றும் வாழும் ஆண்டவரே அண்டம் முழுவதையும் படைத்தார்.
2 ஆண்டவர் ஒருவரே நீதியுள்ளவர். (அவரைத்தவிர வேறு எவரும் இலர்.
3 அவர் தம் கையின் அசைவினால் உலகை நெறிப்படுத்துகிறார். எல்லாம் அவருடைய திருவுளத்திற்கு அடிபணிகின்றன. அவர் எல்லாவற்றிற்கும் மன்னர்; தம் ஆற்றலால் தூயவற்றைத் தூய்மை அல்லாதவற்றினின்று பிரித்துவைக்கிறார்.)
4 அவர் தம் செயல்களை அறிவிக்க யாருக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை; அவருடைய அரும்பெரும் செயல்களைக் கண்டுபிடிப்பவர் யார்?
5 அவரது பேராற்றலை எவரால் அளவிட்டுக் கூற முடியும்? அவரது இரக்கத்தை எவரால் முழுவதும் விரித்துரைக்க இயலும்?
6 ஆண்டவரின் வியத்தகு செயல்களைக் குறைக்கவோ கூட்டவோ எவராலும் முடியாது; அவற்றை ஆழ்ந்தறிய எவராலும் இயலாது.
7 மனிதர் அவற்றைக் கண்டுணர்ந்து விட்டதாக எண்ணும்போதுதான் கண்டுணரவே தொடங்குகின்றனர்; அவற்றைக் கண்டுணர்ந்து முடிக்கும்போது மேலும் குழப்பம் அடைகின்றனர்.
8 மனிதர் என்போர் யார்? அவர்களால் ஏற்படும் நன்மைகள் என்ன? அவர்களிடம் இருக்கும் நன்மைகள் யாவை? தீமைகள் யாவை?
9 மனிதருடைய வாழ்நாள்களின் எண்ணிக்கை கூடிப்போனால் நூறு ஆண்டுகள்.
10 நித்தியத்தோடு ஒப்பிடும்போது அந்தச் சில ஆண்டுகள் கடல்நீரில் ஒருதுளி போன்றவை. கடல் மணலில் ஒரு துகள் போன்றவை.
11 இதனால்தான் ஆண்டவர் அவர்கள்மீது பொறுமையுடன் இருக்கிறார்; தம் இரக்கத்தை அவர்கள்மீது பொழிக்கிறார்.
12 அவர்களின் அழிவு இரங்கத்தக்கது என அவர் கண்டறிகிறார்; அளவுக்கு மிகுதியாகவே அவர்களை மன்னிக்கிறார்.
13 மனிதர் அடுத்திருப்பவருக்கே இரக்கம் காட்டுகின்றனர்; ஆண்டவர் எல்லா உயிருக்கும் இரக்கம் காட்டுகிறார்; அவற்றைக் கண்டிக்கிறார்; பயிற்றுவிக்கிறார்; அவற்றுக்குக் கற்றுக் கொடுக்கிறார்; இடையர்கள் தங்கள் மந்தையைத் தங்களிடம் மீண்டும் அழைத்துக்கொள்வதுபோல் அவரும் செய்கிறார்.
14 தாம் அளிக்கும் நற்பயிற்சியை ஏற்றுக்கொள்வோர்மீதும் தம் தீர்ப்புகளை ஆர்வத்துடன் தேடுவோர்மீதும் இரக்கம் காட்டுகிறார்.
15 குழந்தாய், நீ நன்மை செய்யும்போது கடிந்துகொள்ளாதே; கொடைகள் வழங்கும்போது புண்படுத்தும் சொற்களைக் கூறாதே.
16 கடும் வெப்பத்தைப் பனி தணிக்கும் அன்றோ? உனது சொல் கொடையைவிடச் சிறந்தது.
17 ஒரு சொல் நல்ல கொடையைவிட மேலானது அன்றோ? கனிவுள்ள மனிதரிடம் இவ்விரண்டுமே காணப்படும்.
18 அறிவிலிகள் கடுஞ்சொல் கூறுவார்கள். மனம் ஒப்பாது கொடுக்கும் ஈகை அதனைப் பெறுவோருக்கு எரிச்சலையே கொடுக்கும்.
19 கற்றபின் பேசு; நோய் வருமுன் உடல்நலம் பேணு.
20 ஆண்டவரின் தீர்ப்பு வருமுன் உன்னையே ஆராய்ந்து பார்; கடவுள் சந்திக்க வரும் நாளில் நீ மன்னிப்பு பெறுவாய்.
21 நோய்வாய்ப்படுமுன் உன்னையே தாழ்த்திடு; பாவம் செய்தபின் மனந்திரும்பு.
22 நேர்ச்சையைத் தகுந்த நேரத்தில் செலுத்த எதுவும் தடையாய் இருக்க வேண்டாம்; அதை நிறைவேற்ற இறக்கும்வரையில் நீ காத்திருக்கவேண்டாம்.
23 நேர்ச்சை செய்யுமுன் அதைக் கடைப்பிடிக்க ஆயத்தம் செய்துகொள்; இதில் ஆண்டவரைச் சோதிப்பவனாய் இருந்துவிடாதே.
24 இறுதி நாளில் வரவிருக்கும் அவரது சீற்றத்தை நினைவில் கொள்; அவர் தம் முகத்தைத் திருப்பிக்கொண்டு பழிவாங்கும் நேரத்தையும் எண்ணிப்பார்.
25 நீ உண்டு நிறைவுற்றிருக்கும்போது, பட்டினி கிடந்த காலத்தை நினைவில் கொள்; உனது செல்வச் செழிப்பின் காலத்தில், உன் வறுமை, தேவையின் காலத்தை எண்ணிப்பார்.
26 காலை தொடங்கி மாலைக்குள் காலங்கள் மாறுகின்றன; ஆண்டவர் திருமுன் அனைத்தும் விரைகின்றன.
27 ஞானிகள் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாய் இருக்கின்றார்கள்; பாவம் பெருகும்பொழுது தீச்செயல்களினின்று தம்மைக் காத்துக் கொள்கின்றார்கள்.
28 அறிவுக்கூர்மை படைத்தோர் அனைவரும் ஞானத்தை அறிவர்; அதை அடைந்தோரைப் போற்றுவர்.
29 நாவன்மை படைத்தோர் ஞானியர் ஆகின்றனர்; பொருத்தமான நீதிமொழிகளைப் பொழிகின்றனர்.
30 கீழான உணர்வுகளின்படி நடவாதே; சிற்றின்ப உணர்வுகளைக் கட்டுப்படுத்து.
31 கீழான உணர்வுகளில் இன்பம் காண உன் உள்ளத்தை அனுமதிக்கும்போது உன் பகைவரின் நகைப்புக்கு அவை உன்னை உள்ளாக்கும்.
32 அளவு மீறி உண்டு குடிப்பதில் களிகூராதே; அதனால் ஏற்படும் செலவு உன்னை ஏழையாக மாற்றிவிடும்.
33 உன் பணப்பையில் ஒன்றும் இல்லாதபோது கடன் வாங்கி விருந்துண்டு ஏழையாகாதே.
அதிகாரம் 19
1 குடிகாரரான தொழிலாளர்கள் செல்வர்களாக முடியாது; சிறியவற்றை புறக்கணிப்போர் சிறிது சிறிதாய் வீழ்ச்சி அடைவர்.
2 மதுவும் மாதும் ஞானிகளை நெறிபிறழச் செய்யும்; விலைமாதரோடு உறவு கொள்வோர் அசட்டுத் துணிவு கொள்வர்.
3 அவர்களது உடல் அழிவுற, புழு தின்னும்; அசட்டுத் துணிவு கொண்டோர் விரைவில் எடுத்துக்கொள்ளப் பெறுவர்.
4 பிறரை எளிதில் நம்புவோர் கருத்து ஆழமற்றோர்; பாவம் செய்வோர் தங்களுக்கே தீங்கு இழைத்துக் கொள்கின்றனர்.
5 தீச்செயல்களில் மகிழ்ச்சி காண்போர் கண்டனத்திற்கு உள்ளாவர்.
6 புறங்கூறுதலை வெறுப்போரிடம் தீமைகள் குறையும்.
7 உன்னிடம் கூறப்பட்டதை மற்றவர்களிடம் சொல்லாதே; சொல்லாவிடில், உனக்கு ஒன்றும் குறைந்துவிடாது.
8 நண்பராயினும் பகைவராயினும் அதைத் தெரிவிக்காதே; மறைப்பது உனக்குப் பாவமானாலொழிய அதை வெளிப்படுத்தாதே.
9 நீ கூறியதைக் கேட்டு உன்னைக் கவனித்தோர் காலம் வரும்போது உன்னை வெறுப்பர்.
10 எதையாவது நீ கேள்வியுற்றாயா? அது உன்னோடு மடியட்டும். துணிவுகொள்; எதுவும் உன்னை அசைக்கமுடியாது.
11 அறிவிலிகள் தாங்கள் கேட்டவற்றை வெளியிடாமல் இருப்பது அவர்களுக்குப் பேறுகாலத் துன்பம் போல் இருக்கும்.
12 தொடையில் அம்பு ஆழமாகப் பாயும்; அதுபோலப் புரளி அறிவிலிகளின் உள்ளத்தில் உறுத்தும்.
13 உன் நண்பர்கனைக் கேட்டுப்பார்; ஒருவேளை அவர்கள் ஒன்றும் செய்யாதிருக்கலாம். ஒருகால் அதைச் செய்திருந்தாலும் இனிமேலாவது செய்யாதிருப்பார்கள்.
14 அடுத்திருப்பவர்களைக் கேட்டுப்பார்; ஒருவேளை அவர்கள் ஒன்றும் சொல்லாதிருந்திருக்கலாம். ஒருகால் அவற்றைச் சொல்லியிருந்தாலும் மறுமுறை சொல்லாது விட்டுவிடுவார்கள்.
15 உன் நண்பர்களைக் கேட்டுப்பார்; நீ கேள்விப்பட்டது பொதுவாக அவதூறாக இருக்கும். எனவே கேட்பதையெல்லாம் நம்பிவிடாதே.
16 அறியாது சிலர் தவறலாம்; தம் நாவால் பாவம் செய்யாதோர் யார்?
17 உனக்கு அடுத்திருப்பவரை அச்சுறுத்துமுன் எச்சரிக்கை செய்; உன்னத இறைவனின் திருச்சட்டத்திற்கு உரிய இடம் கொடு.
18 (ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே அவரால் ஏற்றுக்கொள்ளப் படுவதன் தொடக்கம். ஞானம் அவருடைய அன்பைப் பெற்றுத் தருகிறது.)
19 (ஆண்டவருடைய சட்டங்கள் பற்றிய அறிவு வாழ்வு அளிக்கும் நற்பயிற்சியாகும்; அவருக்கு விருப்பமானதைச் செய்வோர் வாழ்வு அளிக்கும் மரத்தின் கனியைப் பெறுவர்.)
20 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே முழு ஞானம்; முழு ஞானம் என்பது திருச்சட்டத்தின் நிறைவே.(அவரது எல்லாம் வல்ல தன்மை பற்றிய அறிவே.
21 "நீர் விரும்புவதைச் செய்யமாட்டேன்" எனத் தன் தலைவரிடம் கூறும் அடிமை பின்பு அதைச் செய்தாலும் தனக்கு உணவு அளித்து வளர்க்கின்றவரின் சினத்தைத் தூண்டி விடுகிறான்.)
22 தீமைப்பற்றிய அறிவாற்றல் உண்மையான ஞானமன்று; பாவிகளின் அறிவுரையில் அறிவுத்திறனில்லை.
23 அருவருக்கத்தக்க அறிவுடைமையும் உண்டு. ஞானம் இல்லாதோர் மூடராவர்.
24 அறிவுத்திறன் இருந்தும் திருச்சட்டத்தை மீறுவோரைவிட அறிவுக்கூர்மை இல்லாது போயினும் இறையச்சம் கொண்டோர் மேலானோர்.
25 தெளிந்த அறிவுடைமை இருந்தும் அது அநீதியானதாய் இருக்கலாம்; தீர்ப்பில் வெற்றி பெற நன்மைகளைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வர்.
26 துயரில் முகவாட்டமுடன் திரியும் தீயவர்கள் உண்டு; அவர்கள் உள்ளத்தில் நிறைந்திருப்பதெல்லாம் வஞ்சகமே.
27 அவர்கள் கண்டும் காணாதவர்களாய் ஒன்றும் கேளாதவர்கள்போல் இருப்பார்கள்; அவர்களை யாரும் கவனிக்காத வேளையில் உன்னைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
28 வலிமைக் குறைவு பாவம் செய்வதினின்று அவர்களைத் தடுத்தாலும், வாய்ப்புக் கிடைக்கும்போது அவர்கள் தீங்கு செய்வார்கள்.
29 தோற்றத்தைக் கொண்டு மனிதரைக் கண்டு கொள்ளலாம். முதல் சந்திப்பிலேயே அறிவாளியைக் கண்டுகொள்ளலாம்.
30 ஒருவருடைய உடையும் மனமுவந்த சிரிப்பும் நடையும் அவர் எத்தகையவர் என்பதைக் காட்டிவிடும்.
அதிகாரம் 20
1 தவறான நேரத்தில் கண்டிப்போரும் உண்டு; அமைதி காத்து ஞானி ஆனோரும் உண்டு.
2 உள்ளே புகைந்து கொண்டிருப்பதைவிடக் கண்டிப்பது மேல்.
3 தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொள்வோர் தோல்வியிலிருந்து விடுவிக்கப்பெறுவர்.
4 கட்டாயத்தின்பேரில் ஒருவர் நீதியானதைச் செய்வது ஓர் அண்ணகன் ஒரு சிறுமியை கற்பழிக்க விரும்புவதற்கு இணையாகும்.
5 அமைதி காப்போர் ஞானியராக எண்ணப்படுகின்றனர்; வாயாடிகள் வெறுப்புக்கு ஆளாகின்றனர்.
6 எதைப்பேசுவது எனத் தெரியாமல் அமைதியாய் இருப்போரும் உண்டு; எப்போது பேசுவது எனத் தெரிந்தவராய் அமைதி காப்போரும் உண்டு.
7 ஞானியர் தக்க நேரம் வரும் வரை அமைதி காப்பர்; வீண் பெருமை பேசும் மூடர் சரியான நேரத்தைத் தவறவிடுவர்.
8 மட்டு மீறிப் பேசுவோர் அருவருப்புக்கு ஆளாவார்; அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவோர் வெறுக்கப்படுவர்.
9 தீமை நன்மையாக மாறுவதும் உண்டு; நல்வாய்ப்பு இழப்புக்கு இட்டுச் செல்வதும் உண்டு.
10 உனக்குப் பயன் அளிக்காத கொடையும் உண்டு; இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கொடைகளும் உண்டு.
11 பெருமை நாடி வீழ்ச்சி அடைந்தோர் உண்டு; தாழ்நிலையிலிருந்து உயர்நிலை அடைந்தோரும் உண்டு.
12 நிறைந்த பொருளைக் குறைந்த விலைக்கு வாங்கக் கருதி ஏழு மடங்கு மிகுதியாகக் கொடுத்து வாங்குவோரும் உண்டு.
13 ஞானிகள் தங்கள் சொற்களால் தங்களை அன்புக்குரியோர் ஆக்கிக்கொள்ளுகின்றார்கள்; மூடரின் இச்சகம் வீணாகின்றது.
14 அறிவிலிகளின் கொடை உனக்கு ஒன்றுக்கும் உதவாது; அது அவர்களுக்கே பன்மடங்கு பெரிதாய்த் தெரிகிறது.
15 அவர்கள் குறைவாகக் கொடுப்பார்கள்; நிறைய திட்டுவார்கள். முரசறைவோர் போன்று அதுபற்றிப் பேசுவார்கள். இன்று கடன் கொடுப்பர்; நாளையே அதைத் திருப்பிக்கேட்பர். இத்தகையோர் வெறுப்புக்கு உரியோர்.
16 "எனக்கு நண்பர்கள் இல்லை; நான் செய்த நற்செயல்களுக்கு எவரும் நன்றி காட்டுவதில்லை" என அறிவிலிகள் சொல்லிக் கொள்வார்கள்.
17 அவர்கள் அளிக்கும் உணவை அருந்தியவாறே அவர்களைப்பற்றி இழிவாய்ப் பேசுவார்கள்; பல நேரங்களில் அவர்களை எள்ளி நகையாடுவார்கள்.
18 நாவினில் தடுமாறுவதைவிட நடைபாதையில் தடுமாறி விழுவதுமேல்; தீயவர்களின் வீழ்ச்சி திடீரென்று ஏற்படும்.
19 பண்பற்றோர் பொருத்தமற்ற கதையைப் போன்றோர்; அறிவற்றோரின் வாயில் அது தொடர்ந்து இருக்கும்.
20 மூடர்களின் வாயினின்று வரும் பழமொழிகள் ஏற்றுக்கொள்ளப்படா; காலம் அறிந்து அவர்கள் அவற்றைச் சொல்வதில்லை.
21 வறுமையினால் பாவம் செய்வதினின்று தடுக்கப்படுவோர் உண்டு; அவர்கள் மனவுறுத்தலின்றி ஓய்வு கொள்வார்கள்.
22 தன்மானம் இழக்கும் நேரத்தில் உயிர் நீப்போர் உளர்; மூடர்பொருட்டு அழிவோரும் உண்டு.
23 வெட்கம் தாங்காமல் சிலர் தங்கள் நண்பர்களுக்கு உறுதிமொழி வழங்குகின்றனர்; காரணமின்றி அவர்களைப் பகைவர் ஆக்கிக்கொள்கின்றனர்.
24 பொய் பேசுதல் மனிதருக்கு அருவருக்கத்தக்க கறை ஆகும்; அறிவற்றோரின் வாயிலிருந்து அது ஓயாது வெளிப்படும்.
25 பொய் சொல்லும் பழக்கம் கொண்டவரை விடத் திருடன் மேலானவன்; இருவருமே அழிவை உரிமையாக்கிக்கொள்வர்.
26 பொய்யரின் நடத்தை இகழ்ச்சிக்கு இட்டுச்செல்லும்; அவர்களின் வெட்கக்கேடு அவர்களோடு எப்போதும் இருக்கும்.
27 ஞானியர் தங்கள் சொற்களால் முன்னேற்றம் அடைவர்; முன்மதி கொண்டோர் பெரியார்களை மகிழ்விக்கின்றனர்.
28 நிலத்தில் பாடுபடுவோர் நிறைந்த விளைச்சல் பெறுவர்; பெரியார்களுக்கு வேண்டியோர் அநீதி புரிந்திருந்தாலும் தப்பிவிடுவர்.
29 சலுகைகளும் அன்பளிப்புகளும் ஞானிகளின் கண்களைக் குருடாக்கும்; கடிவாளமிட்ட வாய்போல் அவை கண்டனங்களைத் தவிர்த்துவிடும்.
30 மறைந்து கிடக்கும் ஞானம், கண்ணுக்குத் தெரியாத புதையல் ஆகியவற்றால் கிடைக்கும் பயன் என்ன?
31 தங்கள் ஞானத்தை மறைத்து வைக்கம் மனிதரைவிடத் தங்களது மடமையை மூடி மறைக்கும் மானிடர் மேலானோர்.
அதிகாரம் 21
1 குழந்தாய், பாவம் செய்துவிட்டாயா? இனிமேல் செய்யாதே; உன் பழைய பாவங்களுக்காக மன்னிப்புக் கேள்.
2 பாம்பைக் கண்டு ஓடுவதைப்போலப் பாவத்தைவிட்டு ஓடிவிடு; நீ பாவத்தின் அருகில் சென்றால் அது உன்னைக் கடிக்கும்; அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள் போன்றவை; அவை மனிதரின் உயிரைப் போக்கி விடும்.
3 நெறிகேடுகள் எல்லாமே இருமுனைக் கூர்வாள் போன்றவை; அதன் காயங்கள் ஆறமாட்டா.
4 திகிலும் இறுமாப்பும் செல்வங்களைப் பாழாக்கும்; செருக்குற்றோரின் வீடு பாழாகும்.
5 ஏழைகளின் வாயினின்று எழும் விண்ணப்பம் கடவுளின் செவிகளை எட்டும்; அவரது நீதித் தீர்ப்பு விரைவில் வரும்.
6 கடிந்துரையை வெறுப்போர் பாவிகளின் வழியில் நடக்கின்றனர்; ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் மனம் வருந்துவர்.
7 நாவன்மை படைத்தோர்பற்றிய பேச்சு தொலைவிலும் பரவும்; ஆனால் அவர்கள் நாத்தவறும்போது அறிவுள்ளோர் அதைக் கண்டுகொள்வர்.
8 மற்றவர்களின் பணத்தைக் கொண்டு தங்கள் வீட்டைக் கட்டுவோர் தங்கள் கல்லறைக்கு வேண்டிய கற்களைத் தாங்களே சேர்த்து வைப்போர் போன்றவர்கள்.
9 நெறிகெட்டோரின் கூட்டம் சணல் குப்பை போன்றது; கொழுந்துவிட்டு எரியும் நெருப்பே அவர்களின் முடிவு.
10 பாவிகளின் பாதை வழவழுப்பான கற்களால் பாவப்பட்டுள்ளது; அதன் முடிவில் கீழுலகின் வாயில் உள்ளது.
11 திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்போர் தங்கள் எண்ணங்களைக் கட்டுப்படுத்துகின்றனர்; ஆண்டவரிடம் கொள்ளும் அச்சத்தின் நிறைவே ஞானம்.
12 திறமை இல்லாதோருக்குக் கல்வியறிவு புகட்ட முடியாது; கசப்பை விளைவிக்கும் ஒருவகைத் திறமையும் உண்டு.
13 ஞானிகளின் அறிவு வெள்ளம் போலப் பெருக்கெடுத்து ஓடும்; அவர்களின் அறிவுரை வாழ்வளிக்கும் நீரூயஅp;ற்றுக்கு நிகராகும்.
14 மூடரின் உள்ளம் ஓட்டைக் கலன் போன்றது; அதில் எவ்வகை அறிவும் தங்கி நிற்காது.
15 அறிவாற்றல் பெற்றோர் ஞானம் நிறைந்த பேச்சைக் கேட்டுப் புகழ்வர்; அது வளம் பெறச் செய்வர். அப்பேச்சை ஒழுக்கம் கெட்டோர் கேட்க நேரிட்டால் அதை விரும்புவதில்லை; அதை உள்ளத்திலிருந்தும் விரட்டிவிடுவர்.
16 மூடரின் உரை பயணத்தின் போது எடுத்துச் செல்லும் பெருஞ்சுமை போன்றது; அறிவுக்கூர்மை கொண்டோரின் பேச்சு இன்பம் தருகின்றது.
17 அறிவுத்திறன் வாய்ந்தோரின் வாய்மொழிகளைச் சபை விரும்பித் தேடும்; அவர்களின் கருத்துகளை உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துப் பார்க்கும்.
18 மூடர்களுக்கு ஞானம் பாழடைந்த வீடு போன்றது; மதியீனர்களுக்கு அறிவு பொருளற்ற உரை போன்றது.
19 அறிவிலிகளுக்கு அளிக்கும் நற்பயிற்சி கால்விலங்கு போன்றது; வலக்கையில் மாட்டப்பட்ட தளை போன்றது.
20 மூடர்கள் சிரிக்கும்போது உரத்த குரல் எழுப்புவர்; அறிவில் சிறந்தோர் அமைதியாகப் புன்னகைப்பர்.
21 அறிவுத்திறன் கொண்டோருக்கு நற்பயிற்சி பொன் நகையாகும்; வலக்கையில் அணிந்த கைவளையாகும்.
22 மூடர்களின் கால்கள் மற்றவர்களின் வீட்டுக்குள் விரைகின்றன; பட்டறிவு பெற்றவர்களின் கால்களோ நுழையத் தயங்குகின்றன.
23 அறிவிலிகள் கதவு வழியாக வீட்டுக்குள் எட்டிப் பார்ப்பார்கள்; நற்பயிற்சி பெற்றோர் வெளியே காத்திருப்பர்.
24 நற்பயிற்சி பெறாதோர் கதவு அருகே நின்று ஒற்றுக் கேட்பர்; அறிவுத்திறன் வாய்ந்தோர் அதை இகழ்ச்சியாகக் கொள்வர்.
25 அறிவற்றோர் எளிதாகப் பிதற்றுவர்; நுண்ணறிவு கொண்டோர் சொற்களை அளந்து பேசுவர்.
26 அறிவிலார் சிந்திக்குமுன் பேசுவர்; அறிஞர் பேசுமுன் சிந்திப்பர்.
27 இறைப்பற்றில்லாதோர் தங்கள் எதிரியைச் சபிக்கும்போது தங்களையே சபித்துக்கொள்வர்.
28 புறங்கூறுவோர் தங்களையே மாசுபடுத்திக்கொள்வர்; சுற்றுப்புறத்தார் அவர்களை வெறுப்பர்.
அதிகாரம் 22
1 சோம்பேறிகள் மாசுபடிந்த கல் போன்றவர்கள்; அவர்களது இழிவு கண்டு எல்லோரும் எள்ளி நகையாடுவர்.
2 சோம்பேறிகள் குப்பைமேட்டுக்கு ஒப்பானவர்கள்; அதைத் தொடுவோர் அனைவரும் கையை உதறித் தட்டிவிடுவர்.
3 நற்பயிற்சி பெறாத மகனைப் பெற்ற தந்தை இகழ்ச்சி அடைவார்; அத்தகைய மகளோ அவருக்கு இழிவைக் கொணர்வாள்.
4 அறிவுத்திறன் கொண்ட மகள் கணவரை அடைவாள்; இழிவாக நடப்பவள் தன் தந்தைக்கு வருத்தம் ஏற்படுத்துவாள்.
5 நாணமற்ற மகள் தன் தந்தைக்கும் கணவருக்கும் இகழ்ச்சியைக் கொணர்வாள்; அவ்விருவரும் அவளை இகழ்வர்.
6 நேரத்திற்குப் பொருந்தாத பேச்சு புலம்பவேண்டிய நேரத்தில் இன்னிசை எழுப்புவதைப் போன்றது; கண்டிப்பும் நற்பயிற்சியும் எக்காலத்திலும் ஞானத்தைக் கொடுக்கும்.
7 (நல்வாழ்க்கை வாழப் பயிற்றவிக்கப் பெற்ற மக்கள் தங்கள் பெற்றோரின் இழிபிறப்பை மறைத்துவிடுகிறார்கள்.
8 ஒழுக்கத்தில் வளர்க்கப்படாமல் இறுமாப்பும் பிடிவாதமும் கொண்ட மக்கள் தங்களின் குலப்பெருமைக்கு அவமானம் கொணர்வார்கள்.)
9 மூடருக்குக் கல்வியறிவு புகட்டுவோர் உடைந்துவிட்ட பானை ஓடுகளை ஒட்டுவோருக்கு ஒப்பாவர்; ஆழ்ந்த தூக்கத்தில் இருப்போரைத் தட்டி எழுப்புவோர் போலாவர்.
10 மூடரோடு பேசுவோர் தூக்கக்கலக்கத்தில் உள்ளவரோடு பேசுவோருக்கு ஒப்பாவர்; பேச்சின் முடிவை, "அது என்ன?" என மூடர் கேட்பர்.
11 இறந்தோருக்காக அழு; ஒளி அவர்களைவிட்டு மறைந்து விட்டது. மூடருக்காக அழு; அறிவுக்கூர்மை அவர்களை விட்டு அகன்றுவிட்டது. இறந்தோருக்காக அமைதியாக அழு; அவர்கள் அமைதியில் துயில் கொள்கிறார்கள். மூடரின் வாழ்வு சாவைவிடக் கொடிது.
12 இறந்தோருக்காக ஏழு நாள் துயரம் கொண்டாடப்படும்; மூடருக்காகவும் இறைப்பற்றில்லாதோருக்காகவும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் துயரம் கொண்டாடப்படும்.
13 அறிவிலிகளோடு மிகுதியாய்ப் பேசாதே; மதியீனரிடம் செல்லாதே. உனக்குத் தொல்லை ஏற்படாதவாறு எச்சரிக்கையாய் இரு; அவர்களோடு தொடர்பு கொண்டால் நீயும் பாழாவாய். அவர்களை விட்டு விலகிப்போ; அப்போது ஓய்வு காண்பாய்; அவர்களின் அறிவின்மையால் சோர்வுறமாட்டாய்.
14 ஈயத்தைவிட கனமானது எது? மூடர் என்பதை விட அவர்களுக்கு வேற என்ன பெயர் பொருந்தும்?
15 மதி கெட்டோரைப் பொறுத்துக் கொள்வதைவிட மணல், உப்பு, இரும்புத் துண்டு ஆகியவற்றைச் சுமப்பது எளிது.
16 கட்டடத்தில் இணைக்கப்பட்ட மர உத்திரங்களை நிலநடுக்கத்தால்கூட அசைக்க முடியாது. ஆழ்ந்த சிந்தனையில் முதிர்ச்சிபெற்ற உள்ளம் கொண்டவர்கள் எந்தக் குழப்பத்திலும் தளர்ச்சியுற மாட்டார்கள்.
17 அறிவுக்கூர்மை கொண்ட சிந்தனையில் அமைந்த உள்ளம் சுவரை அழகு செய்யும் பூச்சுப் போன்றது.
18 உயர்ந்த இடத்தில் அமைக்கப்பட்ட வேலி காற்றை எதிர்த்து நிற்காது; மூடத்தனமான எண்ணங்கள் கொண்ட கோழை உள்ளம் எவ்வகை அச்சுறத்தல்களையும் எதிர்த்து நிற்காது.
19 கண்ணைக் குத்திக்கொள்வோர் கண்ணீரை வரவழைக்கின்றனர்; உள்ளத்தைக் குத்திக்கொள்வோர் உணர்ச்சிகளை வெளிக்காட்டுகின்றனர்.
20 பறவைகள் மீது கல்லெறிவோர் அவற்றை அச்சுறுத்தி ஓட வைக்கின்றனர்; நண்பர்களைப் பழிப்போர் நட்பை முறித்துவிடுகின்றனர்.
21 உன் நண்பருக்கு எதிராக வாளை நீ உருவியிருந்தபோதிலும் நம்பிக்கை இழந்துவிடாதே. மீண்டும் நட்பு ஏற்பட வழி உண்டு.
22 உன் நண்பருக்கு எதிராகப் பேசியிருந்தாலும் அஞ்சாதே. நல்லிணக்கத்துக்கு வழி உண்டு. இகழ்ச்சி, இறுமாப்பு, இரகசியங்களை வெளியிடல், வஞ்சகத்தாக்குதல் ஆகியவற்றினின்று எந்த நண்பருமே ஓடிவிடுவர்.
23 அடுத்திருப்பவர்களது வறுமையில் அவர்களது நம்பிக்கையைப் பெறு; அவர்களது வளமையை முழுமையாய்ப் பகிர்ந்து கொள்வாய். துன்பவேளையிலும் அவர்களைச் சார்ந்திரு; அதனால் அவர்களின் உரிமைச்சொத்தில் நீயும் பங்கு கொள்வாய்.
24 சூளையிலிருந்து நெருப்புக்குமுன் ஆவியும் புகையும் வெளிவருகின்றன. கொலைக்கு முன்னே இழிசொல் இடம் பெறும்.
25 நண்பருக்குப் பாதுகாப்பு அளிக்க நான் வெட்கப்படமாட்டேன்; அவரது பார்வையினின்று என்னை மறைத்துக் கொள்ளவும் மாட்டேன்.
26 அவர்களால் எனக்குத் தீங்கு நேர்ந்தால், அதைக் கேள்வியுறுவோர் அனைவரும் அவர்களிடம் எச்சரிக்கையாய் இருப்பர்.
27 நான் வீழ்ச்சியுறாதிருக்கவும் என் நாவே என்னை அழிக்காதிருக்கவும் என் வாயைக் காவல் செய்பவர் யார்? என் உதடுகளை நுண்ணறிவு எனும் முத்திரையிட்டு மூடுபவர் யார்?
அதிகாரம் 23
1 தந்தையாகிய ஆண்டவரே, என் வாழ்வின் தலைவரே, என் வாய் கூறுவதையெல்லாம் பொருட்படுத்தாதேயும்; அவற்றின் பொருட்டு நான் வீழ்ச்சியுறாதவாறு செய்யும்.
2 என் தவறுகளுக்காக என்னை விட்டுவைக்காமலும் என் பாவங்களைக் கவனித்துத் தவறாமலும் இருக்குமாறு, என் எண்ணங்களைக் கட்டுப்படுத்தத் தண்டனை கொடுப்பவர் யார்? என் உள்ளத்திற்கு ஞானத்தின் நற்பயிற்சியை அளிப்பவர் யார்,
3 இல்லையேல், என் தவறுகள் பெருகிவிடும்; என் பாவங்கள் மிகுந்துவிடும். என் எதிரிகள் முன் நான் வீழ்ச்சியுறுவேன்; என் பகைவர் என்னைக்குறித்து மகிழ்வர்.
4 தந்தையாகிய ஆண்டவரே, என் வாழ்வின் கடவுளே, இறுமாப்புள்ள பார்வைக்கு நான் இடம் கொடாதிருக்கச் செய்யும்.
5 தீய நாட்டங்களை என்னிடமிருந்து அகற்றும்.
6 பேருண்டி விருப்பமும் சிற்றின்ப ஆசையும் என்னை மேற்கொள்ள விடாதேயும்; தகாத எண்ணங்களுக்கு என்னை ஒப்புவிக்காதேயும்.
7 குழந்தைகளே, நாவடக்கம்பற்றிக் கேளுங்கள்; நாவைக் காப்போர் எதிலும் சிக்கிக்கொள்ளமாட்டார்கள்.
8 பாவிகள் தங்கள் நாவினாலேயே அகப்பட்டுக்கொள்வார்கள்; வசை கூறுவோரும் செருக்குக்கொண்டோரும் அதனால் இடறிவிழுகின்றனர்.
9 ஆணையிட உன் நாவைப் பழக்கப்படுத்தாதே; தூய கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டே இராதே.
10 விசாரணைக்கு உள்ளாகி அடிக்கடி அடிபடும் அடிமையிடம் அதன் வடுக்கள் காணப்படாமல் போகா; எப்போதும் ஆணையிடுவோரும் கடவுளின் பெயரைப் பயன்படுத்துவோரும் பாவங்களினின்று கழுவப்படமாட்டார்கள்.
11 அடிக்கடி ஆணையிடுபவர்கள் தீநெறியில் ஊறியவர்கள்; இறைத் தண்டனை அவர்களது வீட்டை விட்டு அகலாது. அவர்கள் தவறாக ஆணையிட்டால் பாவம் அவர்கள் மீதே இருக்கும்; தங்கள் ஆணையைப் புறக்கணித்தால் அவர்களது பாவம் இரு மடங்காகும். வீணாக ஆணையிடுவோர் பாவத்தினின்று விடுபடார்; அவர்களது வீடு பேரிடரால் நிரப்பப்படும்.
12 சாவுக்கு ஒப்பிடக்கூடிய தீய சொற்கள் உண்டு; யாக்கோபின் உரிமைச்சொத்தில் அவை காணாதிருக்கட்டும். இறைப்பற்றுள்ளோர் இவை அனைத்திலிருந்து விலகி நிற்பர்; அவர்கள் பாவச் சேற்றில் புரளமாட்டார்கள்.
13 பண்பற்ற பேச்சுக்கு உன் நாவைப் பழக்காதே; அது பாவத்துக்குரிய பேச்சு.
14 பெரியோர்கள் நடுவே நீ அமர்ந்திருக்கும்போது உன் தந்தை தாயை நினைவில்கொள். இல்லையேல், அவர்கள் முன்னிலையில் உன்னையே மறப்பாய்; உன் தீய பழக்கத்தால் அறிவிலிபோன்று நடந்து கொள்வாய்; நீ பிறவாமல் இருந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும் என விரும்புவாய்; உன் பிறந்த நாளையும் சபிப்பாய்.
15 வசைமொழி பேசிப் பழக்கப்பட்டோர் தங்கள் வாழ்நாள் முழுவதும் நற்பயிற்சி பெறப்போவதில்லை.
16 இரண்டு வகை மாந்தர் பாவங்களைப் பெருக்குகின்றனர்; மூன்றாவது வகையினர் சினத்தைத் தூண்டிவிடுகின்றனர்.
17 கொழுந்துவிட்டு எரியும் காமவெறி கொண்டோர்; அவர்களது காமவெறி எரிந்து அடங்கினாலன்றி அணையாது. தம் உறவினர்களோடு முறையற்ற உறவு கொள்வோர்; அந்த ஆசை அடங்கும்வரை தீநெறியை அவர்கள் விடமாட்டார்கள். தகாத உறவு கொள்வோருக்கு எல்லா உணவும் இனியதே; இறக்கும்வரை அவர்கள் தளர்ந்து போக மாட்டார்கள்.
18 பிறர்மனை நாடுவோர்; "என்னைப் பார்ப்பவர் யார்? இருள் என்னைச் சூழ்ந்துள்ளது. சுவர்கள் என்னை மறைத்துக் கொள்கின்றன. யாரும் என்னைக் காண்பதில்லை. நான் ஏன் கவலைப்படவேண்டும்? உன்னத இறைவன் என் பாவங்களை நினைத்துப்பாரார்" எனத் தங்களுக்குள் சொல்லிக்கொள்வர்.
19 மனிதரின் கண்கள் கண்டுவிடுமோ என அவர்கள் அஞ்சுகிறார்கள். ஆண்டவரின் கண்கள் கதிரவனைவிடப் பத்தாயிரம் மடங்கு ஒளி படைத்தவை; அவை மாந்தரின் வழிகளையெல்லாம் காண்கின்றன; மறைந்திருப்பவற்றை அறிகின்றன என்பதை அவர்கள் அறியார்கள்.
20 அனைத்தும் படைக்கப்படுமுன்பே ஆண்டவர் அவற்றை அறிந்திருந்தார்; அவற்றைப் படைத்து முடித்த பின்னும் அவற்றை அறிந்துள்ளார்.
21 காமுகர் நகர வீதிகளில் தண்டிக்கப்படுவர்; எதிர்பாராத இடத்தில் பிடிபடுவர்.
22 தன் கணவரை விட்டுவிலகி, வேறு ஆடவன்மூலம் அவருக்கு வழித்தோன்றலை உருவாக்கும் மனைவிக்கும் அவ்வாறே நேரும்.
23 முதலாவதாக, அவள் உன்னத இறைவனின் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிவதில்லை; இரண்டாவதாக, தன் கணவருக்கு எதிராகக் குற்றம் புரிகிறாள்; மூன்றாவதாக, தன் கெட்ட நடத்தையால் விபசாரம் செய்கிறாள்; அடுத்தவர்மூலம் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறாள்.
24 அவள் சபைமுன் அழைத்து வரப்படுவாள்; அவளுடைய பிள்ளைகளும் விசாரணைக்கு ஆளாவர்.
25 அவளிள் பிள்ளைகள் வேரூயஅp;ன்றமாட்டார்கள்; அவளின் கிளைகளும் கனிகள் கொடா.
26 அவள் சாபத்துக்குரிய நினைவை விட்டுச்செல்வாள்; அவள் அடைந்த இழிவு ஒரு நாளும் அழியாது.
27 ஆண்டவருக்கு அஞ்சுவதைவிட மேலானது எதுவுமில்லை என்றும், ஆண்டவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைவிட இனிமையானது எதுவுமில்லை என்றும் அவளுக்குப்பின் வாழ்வோர் உணர்ந்துகொள்வர்.
அதிகாரம் 24
1 ஞானம் தன்னையே புகழ்ந்து கொள்கிறது; தன் மக்கள் நடுவே தனது மாட்சியை எடுத்துரைக்கிறது.
2 உன்னத இறைவனின் மன்றத்தில் திருவாய் மலர்ந்து பேசுகிறது; அவரது படைத்திரள்முன்பாக தமது மாட்சியை எடுத்துரைக்கிறது.
3 உன்னதரின் வாயினின்று நான் வெளிவந்தேன்; மூடுபனிபோன்று மண்ணுலகை மூடிக்கொண்டேன்.
4 உயர் வானங்களில் நான் வாழ்ந்து வந்தேன்; முகில்தூணில் அரியணை கொண்டிருந்தேன்;
5 வானத்தையெல்லாம் நானே தனியாகச் சுற்றிவந்தேன்; கீழுலகின் ஆழத்தை ஊடுருவிச் சென்றேன்.
6 கடலின் அலைகள்மேலும் மண்ணுலகெங்கும் மக்கள் அனைவர் மீதும் நாடுகள் மீதும் ஆட்சி செலுத்தினேன்.
7 இவை அனைத்தின் நடுவே ஓய்வு கொள்ள ஓர் இடத்தை நான் விரும்பினேன்; யாருடைய உரிமைச் சொத்தில் நான் தங்குவேன்?
8 பின், அனைத்தையும் படைத்தவர் எனக்குக் கட்டளையிட்டார்; என்னைப் படைத்தவர் என் கூடாரம் இருக்கவேண்டிய இடத்தை முடிவு செய்தார். "யாக்கோபில் தங்கி வாழ்; இஸ்ரயேலில் உன் உரிமைச்சொத்தைக் காண்பாய்" என்று உரைத்தார்.
9 காலத்திற்கு முன்பே தொடக்கத்தில் அவர் என்னைப் படைத்தார். எக்காலமும் நான் வாழ்ந்திடுவேன்.
10 தூய கூடாரத்தில் அவர் திருமுன் பணிசெய்தேன்; இதனால் சீயோனில் உறுதிப்படுத்தப்பெற்றேன்.
11 இவ்வாறு அந்த அன்புக்குரிய நகரில் அவர் எனக்கு ஓய்விடம் அளித்தார்; எருசலேமில் எனக்கு அதிகாரம் இருந்தது.
12 ஆண்டவரின் உரிமைச்சொத்தாகிய பங்கில் மாட்சிமைப்படுத்தப் பெற்ற மக்கள் நடுவே நான் வேரூயஅp;ன்றினேன்.
13 லெபனோனின் கேதுருமரம் போலவும் எர்மோன் மலையின் சைப்பிரசுமரம் போலவும் நான் ஓங்கி வளர்ந்தேன்.
14 எங்கேதி ஊரின் பேரீச்சமரம் போலவும். எரிகோவின் ரோசாச்செடி போலவும் சமவெளியின் அழகான ஒலிவமரம் போலவும், பிளாத்தான்மரம் போலவும் நான் ஓங்கி வளர்ந்தேன்.
15 இலவங்கப் பட்டைபோலும், பரிமளத்தைலம் போலும் மணம் கமழ்ந்தேன்; சிறந்த வெள்ளைப்போளம்போல நறுமணம் தந்தேன்; கல்பானும், ஓனிக்சா எனும் நறுமணப் பொடிகள்போலும், உடன்படிக்கைக் கூடாரத்தில் எழுப்பப்படும் புகைபோலும் நறுமணம் வீசினேன்.
16 தேவதாருமரத்தைப்போல் என் கிளைகளைப் பரப்பினேன்; என் கிளைகள் மாட்சியும் அருளும் நிறைந்தவை.
17 நான் அழகு அளித்திடும் திராட்சைக் கொடி, மாட்சி, செல்வத்தினுடைய கனிகள், என் மலர்கள்.
18 (நானே தூய அன்பு, அச்சம், அறிவு, தூய நம்பிக்கை ஆகியவற்றின் அன்னை. கடவுளால் குறிக்கப்பட்ட என் பிள்ளைமேல் நான் பொழியப்படுவேன்.)
19 என்னை விரும்புகிற அனைவரும் என்னிடம் வாருங்கள்; என் கனிகளை வயிறார உண்ணுங்கள்.
20 என்னைப்பற்றிய நினைவு தேனினும் இனியது; என் உரிமைச்சொத்து தேனடையினும் மேலானது.
21 என்னை உண்பவர்கள் மேலும் பசி கொள்வார்கள்; என்னைக் குடிப்பவர்கள் மேலும் தாகம் கொள்வார்கள்.
22 எனக்குக் கீழ்ப்படிவோர் இகழ்ச்சி அடையார்; என்னோடு சேர்ந்து உழைப்போர் பாவம் செய்யார்.
23 இவ்வாறு ஞானம் கூறிய அனைத்தும் உன்னத இறைவனின் உடன்படிக்கை நூலாகும். மோசே நமக்குக் கட்டளையிட்ட, யாக்கோபின் சபைகளுக்கு உரிமைச் சொத்தாக வழங்கப்பெற்ற திருச்சட்டமாகும்.
24 (ஆண்டவரில் வலிமை கொள்வதை விட்டுவிடாதே. அவர் உனக்கு வலுவூட்டும் பொருட்டு அவரைப் பற்றிக்கொள். எல்லாம் வல்ல ஆண்டவர் ஒருவரே கடவுள்; அவரைத்தவிர வேறு மீட்பர் இல்லை.)
25 பீசோன் ஆறுபோன்றும் அறுவடைக்காலத்தில் திக்ரீசு ஆறு போன்றும் திருச்சட்டம் ஞானத்தால் நிறைந்து வழிகிறது.
26 யூப்பிரத்தீசு ஆறுபோல, அறுவடைக்காலத்தில் பெருக்கெடுத்தோடும் யோர்தான் ஆறுபோல, அது அறிவுக்கூர்மையால் நிரம்பி வழிகிறது.
27 திராட்சை அறுவடைக் காலத்தில் நைல் ஆறு வழிந்தோடுவதைப் போல் அது நற்பயிற்சியைப் பெருக்கெடுத்து ஓடச்செய்யும்.
28 முதல் மனிதன் ஞானத்தை முழுமையாக அறியவில்லை; இறுதி மனிதனும் அதன் ஆழத்தைக் கண்டானில்லை.
29 ஞானத்தின் எண்ணங்கள் கடலினும் பரந்தவை; அதன் அறிவுரைகள் படுகுழியை விட ஆழமானவை.
30 நான் ஆற்றிலிருந்து பிரியும் கால்வாய் போன்றவன்; தோட்டத்தில் ஓடிப் பாயும் வாய்க்கால் போன்றவன்.
31 "எனது தோட்டத்துக்கு நான் நீர் பாய்ச்சுவேன்; எனது பூங்காவை நீரால் நிரப்புவேன்" என்று சொல்லிக் கொண்டேன். உடனே என் கால்வாய் ஆறாக மாறிற்று; என் ஆறு கடலாக மாறிற்று.
32 நான் நற்பயிற்சியை விடியல் போன்று ஒளிரச் செய்வேன்; அது தொலைவிலும் தெரியும்படி செய்வேன்.
33 போதனைகள் இறைவாக்குப் போன்று பொழிவேன்; அதைக் காலங்களுக்கெல்லாம் விட்டுச் செல்வேன்.
34 எனக்காக மட்டும் உழைக்கவில்லை; ஞானத்தைத் தேடுவோர் அனைவருக்காகவும் உழைத்தேன் என அறிந்து கொள்ளுங்கள்.
அதிகாரம் 25
1 என் மனத்திற்குப் பிடித்தவை மூன்று; அவை ஆண்டவர் முன்னும் மனிதர்முன்னும் அழுகுள்ளவை. அவை; உடன்பிறப்புகளிடையே காணப்படும் ஒற்றுமை, அடுத்திருப்பாரோடு ஏற்படும் நட்பு, தங்களுக்குள் ஒன்றி வாழும் கணவன் மனைவியர்,
2 மூன்று வகை மனிதரை நான் வெறுக்கிறேன். அவர்களின் வாழ்வை நான் பெரிதும் அருவருக்கிறேன். அவர்கள்; இறுமாப்புக் கொண்ட ஏழைகள், பொய் சொல்லும் செல்வர், கூடா ஒழுக்கத்தில் ஈடுபடும் அறிவற்ற முதியவர்.
3 உன் இளமையில் நீ எதையும் சேமித்து வைக்காவிடில் முதுமையில் எதைக் காண்பாய்?
4 தீர்ப்பு வழங்குவது நரை திரை விழுந்தோருக்கு ஏற்றது; அறிவுரை கூறுவது பெரியவர்களுக்குத் தக்கது.
5 முதியோருக்கு ஞானமும், மாண்புடையோருக்குச் சிந்தனையும் அறிவுரையும் எத்துணைச் சிறந்தவை.
6 பரந்த பட்டறிவே முதியோருக்கு மணிமுடி; ஆண்டவருக்கு அஞ்சுவதே அவர்களுக்கு மாட்சி.
7 பேறுபெற்றோர் என நான் கருதுவோர் ஒன்பது வகைப்படுவர்; பத்தாம் வகையினரைப்பற்றியும் என் நாவால் எடுத்துரைப்பேன். அவர்கள்; தங்கள் பிள்ளைகளில் மகிழ்ச்சியுறும் பெற்றோர், தங்கள் பகைவரின் வீழ்ச்சியைக் காண வாழ்வோர்,
8 அறிவுக்கூர்மை கொண்ட மனைவியருடன் வாழும் கணவர்கள், நாவால் தவறாதோர், தங்களைவிடத் தாழ்ந்தோருக்குப் பணிவிடை செய்யாதோர்,
9 அறிவுத்திறனைக் கண்டடைந்தோர், செவிசாய்ப்போரிடம் பேசுவோர்,
10 ஞானத்தைக் கண்டுகொண்டோர் எத்துணை மேலானவர்கள்! ஆயினும் ஆண்டவருக்கு அஞ்சுவோரை விடச் சிறந்தவர்கள் எவருமில்லை.
11 ஆண்டவருக்கு அஞ்சுதல் எல்லாவற்றையும்விட மேலானது. அதனைப் பெற்றவருக்கு ஈடு இணை ஏது?
12 (ஆண்டவருக்கு அஞ்சுதலே அவரை அன்புசெய்வதன் தொடக்கம்; பற்றுறுதியே அவரைப் பற்றிக் கொள்வதன் தொடக்கம்.)
13 வருத்தங்களிலெல்லாம் கொடிது மனவருத்தமே; தீமைகளிலெல்லாம் கொடிது பெண்ணிடமிருந்து வரும் தீமையே.
14 துன்பங்களிலெல்லாம் கொடிது நம்மை வெறுப்பவரிடமிருந்து வரும் துன்பமே; பழிகளிலெல்லாம் கொடிது நம் பகைவரிடமிருந்து வரும் பழியே.
15 தலைகளிலெல்லாம் கொடிது பாம்பின் தலையே; சீற்றத்திலெல்லாம் கொடிது பகைவரின் சீற்றமே.
16 கெட்ட மனைவியுடன் வாழ்வதைவிடச் சிங்கத்துடனும் அரக்கப் பாம்புடனும் வாழ்வது மேல்.
17 பெண்ணின் கெட்ட நடத்தை அவளது தோற்றத்தை மாற்றுகிறது; கரடியின் முகத்தைப்போன்று அவளது முகத்தை வேறுபடுத்துகிறது.
18 அவளுடைய கணவர் அடுத்தவர்களுடன் அமரும்போது அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கடுமையாகப் பெருமூச்சுவிடுவார்.
19 பெண்ணின் தீச்செயலுக்குமுன் மற்ற எல்லாமே சிறிது. பாவிகளுடைய கேட்டுக்கு அவள் ஆளாகட்டும்.
20 மணல்மேட்டில் முதியவரால் ஏறமுடியாது; வாயாடி மனைவியுடன் அமைதியான கணவர் வாழ முடியாது.
21 மங்கையரின் அழகினில் மயங்கி விடாதே; பெண்கள்மீது இச்சை கொள்ளாதே.
22 தன் மனைவியின் ஆதரவில் வாழ்க்கை நடத்தும் கணவர் அவளுடைய சினத்துக்கும் செருக்குக்கும் ஆளாகிப் பெரும் இகழ்ச்சி அடைவார்.
23 சோர்வுற்ற மனம், வாட்டமான முகம், உடைந்த உள்ளம் ஆகியவை கெட்ட மனைவியினால் வருகின்றன. தன் கணவரை மகிழ்விக்காத மனைவி நலிவுற்ற கைகளையும் வலிமையற்ற முழங்கால்களையும் போன்றவள்.
24 பெண்ணாலேயே பாவம் தோன்றியது. அவளை முன்னிட்டே நாம் அனைவரும் இறக்கிறோம்.
25 தொட்டியிலிருந்து தண்ணீர் ஒழுகியோடவிடாதே; கெட்ட பெண்ணை அவளுடைய விருப்பம்போலப் பேசவிடாதே.
26 உன் விருப்பப்படி உன் மனைவி நடக்கவில்லையெனில் உன்னிடமிருந்து அவளை விலக்கிவை.
அதிகாரம் 26
1 துணிவுள்ள மனைவியை அடைந்த கணவன் பேறுபெற்றவன். அவனுடைய வாழ்நாளின் எண்ணிக்கை இரு மடங்காகும்.
2 பற்றுள்ள மனைவி தன் கணவரை மகிழ்விக்கிறாள்; அவன் தன் வாழ்நாள் முழுவதும் அமைதியாகக் கழிப்பான்.
3 நல்ல மனைவியை ஒருவனுக்குக் கிடைக்கும் நல்ல சொத்து. ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பெறும் செல்வங்களுள் ஒன்றாக அவளும் அருளப்படுவாள்.
4 செல்வனாகவோ ஏழையாகவோ இருந்தாலும் அத்தகையவன் உள்ளம் மகிழ்ந்திருக்கும்; எக்காலத்திலும் அவனது முகம் மலர்ந்திருக்கும்.
5 மூன்றைப்பற்றி என் உள்ளம் அஞ்சுகிறது; நான்காவது என்னை அச்சுறுத்துகிறது. அவை; நகரத்தின் அவதூறு, மக்கள் கும்பல், தவறான குற்றச்சாட்டு - இவை மூன்றும் சாவினும் கொடியவை.
6 ஒரு பெண் மற்றொரு பெண்மேல் பொறாமைப்படுவது உள்ளத்துக்குத் துன்பமும் துயரமும் தருகிறது. வெடுக்கென்று பேசும் நாவைக் கொண்டவளை எல்லோரும் உணர்ந்து கொள்வர்.
7 கெட்ட மனைவி எருதுகள் பூட்டிய பொருந்தா நுகத்தடி போன்றவள்; அவளை அடக்குகிறவன் தேளைப் பிடித்தவன் போன்றவன்.
8 குடிவெறியில் உள்ள மனைவி கடுஞ்சினத்தைத் தூண்டிவிடுவாள்; அவள் தன் வெட்கத்தை மறைக்க மாட்டாள்.
9 கற்பு இழந்த பெண்ணை அவளுடைய கண்வெட்டுகளாலும் கண் இமைகளாலும் அறிந்துகொள்ளலாம்.
10 அடக்கமற்ற மகளைக் கண்டிப்புக்குள் வைத்திரு; இல்லையேல் அவள் கண்டிப்புத் தளர்ந்த நிலையை உணர்ந்து அதைத் தனக்கெனப் பயன்படுத்திக்கொள்வாள்.
11 நாணமற்ற அவளுடைய கண்களைப்பற்றி எச்சரிக்கையாய் இரு; இல்லையேல், அவள் உன்னை இழிவுபடுத்தும்போது வியப்படையாதே.
12 தாகம் கொண்ட வழிப்போக்கனைப்போன்று அவள் தன் வாயைத் திறப்பாள்; தனக்கு அருகில் இருக்கும் எந்தத் தண்ணீரையும் பருகுவாள்; ஒவ்வொரு கூடாரத்தின் முளைக்குச்சிக்கு முன்னும் அமர்வாள்; எல்லா அம்புகளுக்கும் தன் தூணியைத் திறப்பாள்.
13 ஒரு மனைவியிடம் விளங்கும் நன்னயம் அவள் கணவனை மகிழ்விக்கும்; அவளிடம் காணப்படும் அறிவாற்றல் அவன் எலும்புகளுக்கு வலுவூட்டும்.
14 அமைதியான மனைவி ஆண்டவர் அளித்த கொடை; நற்பயிற்சி பெற்றவளுக்கு ஈடானது ஏதுமில்லை.
15 அடக்கமுள்ள மனைவியின் அழகே அழகு! கற்புள்ளவளுக்கு ஈடு இணை எதுவுமில்லை.
16 ஒழுங்கமைதி உடைய இல்லத்தில் விளங்கும் நல்ல மனைவியின் அழகு ஆண்டவர் உறையும் உயர்வானில் எழும் கதிரவனைப் போன்றது.
17 தக்க பருவத்தில் மிளிரும் அவளது அழகிய முகம் தூய விளக்குத் தண்டின்மேல் ஒளிரும் விளக்குப் போன்றது.
18 உறுதியான அடிகளின்மேல் அமைந்த அவளுடைய அழகான கால்கள் வெள்ளித் தளத்தின்மேல் நிற்கும் பொன் தூண்களைப் போன்றவை.
19 (குழந்தாய், உன் இளமைப் பொலிவைத் தீங்கின்றிக் காப்பாற்று; உன் வலிமையை அன்னியரிடம் வீணாக்காதே.
20 சமவெளியெங்கும் வளமான வயலைத் தேடு; உன் நல்ல வழிமரபில் நம்பிக்கை வைத்து, உன் விதையை அங்கே விதை.
21 இவ்வாறு உன் வழிமரபினர் வலிமையுறுவர்; நல்ல வழிமரபில் நம்பிக்கை கொண்டவர்களாய் உயர்வு பெறுவர்.
22 விலைமாது எச்சில் போன்று கருதப்படுவாள்; மணமுடித்த பெண் தன் கள்ளக்காதலர்களுக்குச் சாவுக்கூடமாய் அமைவாள்.
23 இறைப்பற்றில்லா மனைவி, சட்டத்தைக் கடைப்பிடிக்காதவனுக்குக் கொடுக்கப்படும் உடைமை; இறைப்பற்றுள்ள மனைவி ஆண்டவர்பால் அச்சம் கொள்வோனுக்குக் கொடுக்கப்படும் கொடை.
24 நாணமற்ற மனைவி தன் இகழ்ச்சியில் மகிழ்ச்சி அடைகிறாள்; நாணமுள்ள பெண் தன் கணவன் முன்கூட அடக்கமாய் இருப்பாள்.
25 அடக்கமற்ற மனைவி நாய் எனக் கருதப்படுவாள்; நாணமுள்ளவள் ஆண்டவருக்கு அஞ்சுவாள்.
26 தன் கணவனை மதிக்கும் மனைவியை ஞானி என அனைவரும் கண்டுகொள்வர்; தன் கணவனை மதிக்காத, செருக்குற்ற மனைவியை இறைப்பற்றில்லாதவள் என அனைவரும் அறிந்து கொள்வர். நல்ல மனைவியை அடைந்த கணவன் பேறுபெற்றவன்; அவனுடைய வாழ்நாளின் எண்ணிக்கை இருமடங்காகும்.
27 கூச்சலிட்டு வம்பளக்கும் மனைவி போருக்கு அழைக்கும் எக்காளம் போன்றவள்; இத்தகைய மனைவியை அடைந்தவன் போர்க் குழப்பத்தின் நடுவே தன் வாழ்நாளைக் கழிப்பான்.)
28 இரண்டு வகையினரைப் பற்றி என் உள்ளம் வருந்தியது; மூன்றாம் வகையினர் என் சீற்றத்தைக் கிளறினர். அவர்கள்; வறுமையில் வாடும் போர்வீரர், இகழப்படும் அறிவாளிகள், நன்னெறியை விட்டுப் பாவத்துக்குத் திரும்புவோர். மேற்கூரியோரை வீழ்த்தும்படி ஆண்டவர் வாளை ஏற்பாடு செய்வார்.
29 தவறுகளைத் தவிர்ப்பது வணிகருக்கு அரிது; விற்பனையாளருக்கும் பாவங்களை விலக்குவது அரிது.
அதிகாரம் 27
1 வருவாயைப் பெருக்குவதற்காகப் பலர் பாவம் புரிகின்றனர்; செல்வத்திற்காக அலைவோர் தங்கள் கண்களைத் திருப்பிக் கொள்கின்றனர்.
2 கற்களுக்கு இடையே உள்ள துளையில் முளை அடிக்கப்படுகிறது; விற்றல் வாங்கலுக்கு இடையே பாவம் நுழைந்துகொள்கிறது.
3 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சத்தில் ஒருவன் உறுதியாய் நிலைத்திராவிட்டால் அவனது வீடு விரைவில் நிலைகுலைந்துவிடும்.
4 சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது; அவ்வாறே, மனிதரின் பேச்சில் மாசுபடிந்துவிடுகின்றது.
5 குயவரின் கலன்களை, சூளை பரிசோதிக்கின்றது; மனிதரை, உரையாடல் பரிசோதிக்கப்படுகின்றது.
6 கனி, மரத்தின் கண்காணிப்பைக் காட்டுகின்றது; சொல், மனிதரின் உள்ளப் பண்பாட்டைக் காட்டுகின்றது.
7 ஒருவர் பேசுவதற்குமுன்பே அவரைப் புகழாதே; பேச்சைக் கொண்டே அவரை அறிந்து கொள்ளலாம்.
8 நீதிநெறியைப் பின்பற்றி நடந்தால் அதனை அடைந்து கொள்வாய்; மாட்சிமிகு நீண்ட ஆடையாக அதனை அணிந்துகொள்வாய்.
9 பறவைகள் தம்முடைய இனத்தோடு தங்குகின்றன; உண்மை அதனைக் கடைப்பிடிப்போரிடம் குடிகொள்ளும்.
10 இரைக்காகப் பதுங்கிச் சிங்கம் காத்திருக்கின்றது; தீமை செய்;கிறவர்களுக்காகப் பாவம் காத்திருக்கின்றது.
11 இறைப்பற்றுள்ளோரின் பேச்சு எப்போதும் ஞானமுள்ளது; அறிவிலிகள் நிலவுபோல மாறுபடுவர்.
12 அறிவிலிகள் நடுவில் காலத்தை வீணாக்காதே; அறிவாளிகள் நடுவில் நிலைத்து நில்.
13 மூடரின் உரை வெறுக்கத்தக்கது; அவர்களின் சிரிப்பு பாவத்தைத் தூண்டவல்லது.
14 அடிக்கடி ஆணையிடுவோரின் பேச்சு மெய்சிலிர்க்கச் செய்கின்றது; அவர்களின் வாய்ச் சண்டை நம் காதுகளை மூடச் செய்கின்றது.
15 செருக்குற்றோரின் வாய்ச் சண்டை கொலைக்கு இட்டுச் செல்லும்; அவர்களின் வசைமொழி கேட்பது வருத்தத்திற்கு உரியது.
16 இரகசியங்களை வெளிப்படுத்துவோர் பிறருடைய நம்பிக்கையை இழக்கின்றனர்; ஆருயிர் நண்பர்களை அவர்கள் அடையமாட்டார்கள்.
17 நண்பருக்கு அன்புகாட்டு; அவர்கள்மீது நம்பிக்கை வை; அவர்களுடைய இரகசியங்களை நீ வெளிப்படுத்திவிட்டால் அவர்கள் பின் செல்லாதே.
18 ஏனெனில் ஒருவர் இன்னொருவரைக் கொலை செய்வதைப்போன்று நீ அடுத்திருப்பவரின் நட்பைக் கொன்றுவிட்டாய்.
19 உன் கையில் இருந்த பறவையை நழுவவிட்டதுபோல் அடுத்திருப்பவரைப் போகவிட்டு விட்டாய்; இனி நீ அவரைப் பிடிக்கமாட்டாய்.
20 அவரைத் தொடர்ந்து செல்லாதே; ஏனெனில் அவர் தொலைவில் சென்றுவிட்டார்; கண்ணியினின்று தப்பியோடும் மான்போல் ஓடிவிட்டார்.
21 காயத்துக்குக் கட்டுப்போடலாம்; வசைமொழியை மன்னிக்கலாம்; ஆனால் இரகசியங்களை வெளிப்படுத்துவோர் பிறருடைய நம்பிக்கையை இழக்கின்றனர்.
22 கண்ணால் சாடை காட்டுபவர்கள் தீச்செயலுக்குச் சூழ்ச்சி செய்கின்றார்கள். அதிலிருந்து யாரும் அவர்களைத் தடுக்கமுடியாது.
23 உன் கண்முன் அவர்கள் தேன் ஒழுகப் பேசுவார்கள்; உன் பேச்சைக் கேட்டு வியப்படைவார்கள்; பின்னால் அவர்களது பேச்சு மாறிவிடும்; உன் சொல்லைக் கொண்டே உன்னை இடறிவிழச் செய்வார்கள்.
24 பலவற்றை நான் வெறுத்திருக்கிறேன்; ஆனால் இவர்களை வெறுத்ததுபோல் வேறு எதனையும் வெறுத்ததில்லை. ஆண்டவரும் இவர்களை வெறுக்கின்றார்.
25 கல்லை மேலே எறிவோர் அதைத் தம் தலைமேலேயே எறிந்து கொள்கின்றனர்; நம்பிக்கைக் கேடு எனும் அடி காயங்களைப் புதுப்பிக்கும்.
26 குழி தோண்டுவோர் அதிலேயே விழுவர்; கண்ணி வைப்போர் அதிலேயே பிடிபடுவர்.
27 தீமை செய்வோரைத் தீமை திருப்பித் தாக்கும்; அது எங்கிருந்து வருகிறது என அவர்களுக்கே தெரியாது.
28 ஏளனமும் பழிச்சொல்லும் செருக்குற்றோருக்கு உரியவை; பழிக்குப்பழி அவர்களுக்காகச் சிங்கத்தைப்போல் பதுங்கிக் காத்திருக்கிறது.
29 இறைப்பற்றுள்ளோரின் வீழ்ச்சியில் மகிழ்வோர் கண்ணியின் பிடியில் சிக்குவர்; அவர்கள் இறக்குமுன் துயரமே. அவர்களைக் கொன்றுவிடும்.
30 வெகுளி, சினம் ஆகிய இரண்டும் வெறுப்புக்குரியவை; பாவிகள் இவற்றைப் பற்றிக் கொள்கின்றார்கள்.
அதிகாரம் 28
1 பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப்பழியே பெறுவர். ஆண்டவர் அவர்களுடைய பாவங்களைத் திண்ணமாய் நினைவில் வைத்திருப்பார்.
2 உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும் போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்.
3 மனிதர் மனிதர்மீது சினங்கொள்கின்றனர்; அவ்வாறிருக்க, ஆண்டவர் தங்களுக்கு நலம் அளிப்பார் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
4 மனிதர் தம்போன்ற மனிதருக்கு இரக்கங்காட்டுவதில்லை; அப்போது அவர்கள் தம் பாவமன்னிப்புக்காக எப்படி மன்றாடமுடியும்?
5 அழியும் தன்மை கொண்ட மனிதர் வெகுளியை வளர்க்கின்றனர். அவ்வாறாயின், யார் அவர்களுடைய பாவங்களுக்குக் கழுவாய் தேட முடியும்?
6 உன் முடிவை நினைத்துப்பார்; பகைமையை அகற்று; அழிவையும் சாவையையும் நினைத்துப்பார்; கட்டளைகளில் நிலைத்திரு.
7 கட்டளைகளை நினைவில் கொள்; அடுத்தவர்மீது சினங்கொள்ளாதே; உன்னத இறைவனின் உடன்படிக்கையைக் கருத்தில் வை; குற்றங்களைப் பொருட்படுத்தாதே.
8 பூசலைத் தவிர்த்திடு; உன் பாவங்கள் குறையும். சீற்றங்கொள்வோர் சண்டையை மூட்டிவிடுகின்றனர்.
9 பாவிகள் நட்பைக் கலைக்கிறார்கள்; அமைதியாய் இருப்போரிடையே பிணக்கை விதைக்கிறார்கள்.
10 விறகின் தன்மைக்கு ஏற்ப நெருப்பு பற்றியெரியும்; பூசலின் கடுமைக்கு ஏற்ப அது பற்றியெரியும். மனிதரின் வலிமையைப் பொறுத்து அவர்களின் சீற்றம் அமையும்; அவர்களின் செல்வத்தைப் பொறுத்து அவர்களது சினம் பெருகும்.
11 திடீர் வாக்குவாதம் நெருப்பை மூட்டுகிறது; திடீர்ப் பூசல் கொலைக்கு இட்டுச் செல்கிறது.
12 ஊதும்போது தீப்பொறி கொழுந்துவிட்டு எரிகிறது; அதன்மீது துப்பும்போது அது அணைந்துபோகிறது; இந்த இரு விளைவுகளும் உன் வாயினின்றே புறப்படுகின்றன.
13 புறங்கூறுவோரையும் இரட்டை நாக்குக் கொண்டோரையும் சபி. அமைதியில் வாழ்ந்த பலரை அவர்கள் அழித்துவிட்டார்கள்.
14 மூன்றாவது நாக்கு பலரை நிலைகுலையச் செய்தது; அவர்களை நாடுவிட்டு நாடு துரத்தியடித்தது; அரண் கொண்ட நகர்களைத் தகர்த்தெறிந்தது; பெரியோர்களின் வீடுகளைத் தரைமட்டமாக்கியது.
15 மூன்றாவது நாக்கு பற்றுள்ள மனைவியரையும் வெளியில் துரத்தியது; அவர்களுடைய உழைப்பின் பயனை இழக்கச் செய்தது.
16 அதற்குச் செவிசாய்ப்பவர்கள் ஓய்வு கொள்ளமாட்டார்கள்; அமைதியிலும் வாழமாட்டார்கள்.
17 சவுக்கடி தழும்பை உண்டாக்கும்; வாயடியோ எலும்பை முறிக்கும்.
18 பலர் வாள்முனையில் மடிந்திருக்கின்றனர்; நாவால் மடிந்தோரே அவர்களை விட மிகுதியானோர்.
19 மூன்றாவது நாக்கினின்று பாதுகாக்கப்பட்டோர் பேறுபெற்றோர்; அதன் சீற்றத்துக்கு ஆளாகாதோறும் அதன் நுகத்தைச் சுமக்காதோறும் அதன் சங்கிலிகளால் கட்டப்படாதோரும் பேறுபெற்றோர்.
20 அதன் நுகம் இரும்பு நுகம்; அதன் சங்கிலிகள் வெண்கலச் சங்கிலிகள்.
21 அதனால் விளையும் சாவு இழிந்த சாவு; அதனைவிடப் பாதாளம் மேலானது.
22 இறைப்பற்றுள்ளோர்மீது அதற்கு ஆற்றலில்லை; அதன் தீப்பிழம்புகள் அவர்களை எரிப்பதில்லை.
23 ஆண்டவரைவிட்டு விலகுவோர் அதற்குள் விழுகின்றனர்; அவர்களுக்குள் அது கொழுந்துவிட்டு எரியும்; அதை அணைக்க முடியாது. அது சிங்கத்தைப்போன்று அவர்கள் மீது கட்டவீழ்த்துவிடப்படும்; வேங்கையைப்போன்று அவர்களைப் பிறிட்டுக் கிழிக்கும்.
24 உன் உடைமைகளைச்சுற்றி முள் வேலியிடு; உன் வெள்ளியையும் பொன்னையையும் பூட்டிவை.
25 உன் சொற்களை நிறுத்துப் பார்க்கத் துலாக் கோலையும் எடைக்கற்களையும் செய்துகொள்; உன் வாய்க்குக் கதவு ஒன்று செய்து அதைத் தாழிடு.
26 நாவால் தவறாதபடி எச்சரிக்கையாய் இரு; இல்லையேல், உனக்காய்ப் பதுங்கியிருப்போர்முன் நீ வீழ்ச்சியுறுவாய்.
அதிகாரம் 29
1 இரக்கம் காட்டுவோர் தமக்கு அடுத்திருப்பவருக்குக் கடன் கொடுக்கின்றனர்; பிறருக்கு உதவி வெய்வோர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.
2 அடுத்திருப்பவருக்கு அவருடைய தேவைகளில் கடன் கொடு; உரிய காலத்தில் பிறருடைய கடனைத் திருப்பிக்கொடு.
3 சொல் தவறாதே; அடுத்தவர் மீது நம்பிக்கை வை; உனக்குத் தேவையானதை எப்போதும் நீ கண்டடைவாய்.
4 வாங்கின கடனைக் கண்டெடுத்த பொருள்போலப் பலர் கருதுகின்றனர்; தங்களுக்கு உதவியோருக்குத் தொல்லை கொடுக்கின்றனர்.
5 கடன் வாங்கும்வரை கடன் கொடுப்பவரின் கையை முத்தமிடுவர்; அடுத்திருப்பவரின் செல்வத்தைப் பற்றித் தாழ்ந்த குரலில் பேசுவர்; திருப்பிக் கொடுக்கவேண்டிய போது காலம் தாழ்த்துவர்; பொறுப்பற்ற சொற்களைக் கூறுவர்; காலத்தின்மேல் குறை காண்பர்.
6 அவர்கள் கடனைத் திருப்பிக் கொடுக்க முடிந்தாலும் பாதியைக் கொடுப்பதே அரிது. அதையும் கண்டெடுத்த பொருள் என்றே எண்ணிக்கொள்வர்; இல்லையேல், கடனைத் திருப்பித் தராமல் எமாற்றிவிடுவர்; இவ்வாறு தாமாகவே எதிரியை உண்டாக்கிக் கொள்வர்; சாபத்தையும் வசைமொழியையும் திருப்பிக் கொடுப்பர்; மாண்புக்குப் பதிலாக இகழ்ச்சியைத் தருவர்.
7 பலர் கடன் கொடாமலிருந்தது தீய எண்ணத்தினால் அன்று; காரணமின்றி ஏமாற்றப்படலாமோ என்னும் அச்சத்தினால்தான்.
8 தாழ்நிலையில் இருப்போர் குறித்துப் பொறுமையாய் இரு; நீ இடும் பிச்சைக்காக அவர்கள் காத்திருக்கும்படி செய்யாதே.
9 கட்டளையைமுன்னிட்டு ஏழைகளுக்கு உதவிசெய்; தேவையின்போது அவர்களை வெறுங்கையராய்த் திருப்பி அனுப்பாதே.
10 பணத்தை உன் சகோதரர்களுக்காகவோ நண்பர்களுக்காகவோ செலவிடு; அழிந்து போகும்படி அதைக் கல்லுக்கு அடியில் மறைத்துவைக்காதே.
11 உன்னத இறைவனின் கட்டளைப்படி உன் செல்வத்தைப் பயன்படுத்து; அது பொன்னிலும் மேலாக உனக்குப் பயனளிக்கும்.
12 உன் களஞ்சியத்தில் தருமங்களைச் சேர்த்துவை; அவை எல்லாத் தீமையினின்றும் உன்னை விடுவிக்கும்.
13 வலிமையான கேடயத்தையும் உறுதியான ஈட்டியையும்விட அவை உன் பகைவரை எதிர்த்து உனக்காகப் போராடும்.
14 நல்ல மனிதர் தமக்கு அடுத்திருப்பவருக்குப் பிணையாய் நிற்பர்; வெட்கம் கெட்டோர் அவர்களைக் கைவிட்டுவிடுவர்.
15 பிணையாளர் செய்த நன்மைகளை மறவாதே; அவர்கள் தங்கள் வாழ்வையே உனக்காகத் தந்துள்ளார்கள்.
16 பாவிகள் பிணையாளர் செய்த நன்மைகளை அழிக்கிறார்கள்; நன்றி கெட்டவர்கள் தங்களை விடுவித்தவர்களையே கைவிட்டு விடுவார்கள்.
17 பிணையாய் நின்றதால் செல்வர் பலர் சீரழிந்தனர்; திரை கடல் போல் அலைக்கழிக்கப்பட்டனர்.
18 அது வலிய மனிதரை வெளியே துரத்தியது; அயல்நாடுகளில் அலையச் செய்தது.
19 பயன் கருதித் தங்களையே பிணையாளர் ஆக்கிக் கொண்ட பாவிகள் தங்களையே தீர்ப்புக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள்.
20 உன்னால் முடிந்தவரை அடுத்தவருக்கு உதவு; நீயே விழுந்துவிடாமல் எச்சரிக்கையாய் இரு.
21 வாழ்வின் அடிப்படைத் தேவைகளாவன; தண்ணீர், உணவு, உடை, மானம் காக்க வீடு.
22 அடுத்தவர் வீட்டில் உண்ணும் அறுசுவை உணவைவிடத் தன் கூரைக்கு அடியில் வாழும் ஏழையின் வாழ்வே மேல்.
23 குறைவோ நிறைவோ எதுவாயினும், இருப்பதைக் கொண்டு மனநிறைவு கொள்; அப்போது உன் வீட்டாரின் பழிச்சொற்களை நீ கேட்கமாட்டாய்.
24 வீடு வீடாய்ச் செல்வது இரங்கத்தக்க வாழ்க்கை; இத்தகையோர் போய்த் தங்கும் இடத்தில் பேசவும் துணியமாட்டார்கள்.
25 நீ விருந்தோம்பிப் பருகக் கொடுத்தாலும் செய்நன்றி பெறமாட்டாய்; மேலும், பின்வரும் கடுஞ் சொற்களையே கேட்பாய்;
26 "அன்னியனே, வா இங்கே; உணவுக்கு ஏற்பாடு செய்; ஏதாவது உன் கையில் இருந்தால் எனக்கு உண்ணக் கொடு.
27 அன்னியனே, மாண்புடையோர் முன்னிலையிலிருந்து வெளியே போ; என் சகோதரன் என்னுடன் தங்குகிறான்; எனக்கு வீடு தேவை. "
28 வீட்டாரின் கடுஞ்சொல்லும் கடன் கொடுத்தோரின் பழிச்சொல்லும் அறிவுள்ள மனிதரால் தாங்க முடியாதவை.
அதிகாரம் 30
1 தம் மகனிடம் அன்பு கொண்டிருக்கும் தந்தை அவனை இடைவிடாது கண்டிப்பார்; அப்போது அவர் தம் இறுதி நாள்களில் மகிழ்வோடு இருப்பார்.
2 தம் மகனை நன்னெறியில் பயிற்றுவிப்பவர் அவனால் நம்மை அடைவார்; தமக்கு அறிமுகமானவர்களிடையே அவனைப் பற்றிப் பெருமைப்படுவார்.
3 தம் மகனுக்குக் கல்வி புகட்டும் தந்தை எதிரியைப் பொறாமை அடையச் செய்கிறார்; தம் நண்பர்கள்முன் அவன்பொருட்டுப் பெரும் மகிழ்ச்சி அடைவார்.
4 அவனுடைய தந்தை இறந்தும் இறவாதவோர்போல் ஆவார்; ஏனெனில் தம் போன்றவனைத் தமக்குப்பின் விட்டுச்சென்றுள்ளார்.
5 தாம் வாழ்ந்தபோது தந்தை மகனைப் பார்த்தார், மகிழ்ந்தார்; தம் இறப்பிலும் அவர் வருத்தப்படவில்லை.
6 தம் எதிரிகளைப் பழிவாங்குபவனை, தம் நண்பர்களுக்குக் கைம்மாறு செய்பவனை அவர் விட்டுச்சென்றுள்ளார்.
7 தம் மகனுக்கு மிகுதியாகச் செல்வம் கொடுப்பவர். அவன் சிணுங்குவதற்கெல்லாம் உள்ளம் உளைவார்; அவன் சிறு கூச்சலிடும் போதெல்லாம் அவர் கலக்கம் அடைவார்.
8 பயிற்றுவிக்கப்படாத குதிரை முரட்டுத்தனம் காட்டுகிறது; கட்டுப்பாடில்லாத மகன் அடக்கமற்றவன் ஆகிறான்.
9 உன் குழந்தைக்குச் செல்லம் கொடு; அது உன்னை அச்சுறுத்தும். அதனுடன் விளையாடு; அது உன்னை வருத்தும்.
10 அதனுடன் சேர்ந்து சிரிக்காதே; இல்லையேல் நீயும் சேர்ந்து துன்புறுவாய்; இறுதியில் அல்லற்படுவாய்.
11 இளைஞனாய் இருக்கும்போதே அவனுக்கு அதிகாரம் கொடுக்காதே; (அவனுடைய தவறுகளைக் கண்டு கொள்ளாமல் இராதே.
12 இளைஞனாய் இருக்கும்போதே அவனை அடக்கி வளர்.) சிறுவனாய் இருக்கும்போதே அவனை அடித்து வளர்; இல்லையேல் அவன் அடங்காதவனும் கீழ்ப்படியாதவனுமாக மாறுவான். (அவனால் உனக்கு மனவருத்தமே உண்டாகும்.)
13 உன் மகனுக்கு நற்பயிற்சி அளி; அவனைப் பயன்படுத்த முயற்சி செய். அப்போது அவனது வெட்கங்கெட்ட நடத்தையால் நீ வருந்தமாட்டாய்.
14 உடல்நலமும் வலிமையும் கொண்ட ஏழையர் நோயுற்ற செல்வரினும் மேலானோர்
15 உடல்நலமும் உறுதியும் பொன்னைவிடச் சிறந்தவை; கட்டமைந்த உடல் அளவற்ற செல்வத்தினும் சிறந்தது.
16 உடல்நலத்தைவிட உயர்ந்த செல்வமில்லை; உள்ள மகிழ்ச்சியைவிட மேலான இன்பமில்லை.
17 கசப்பான வாழ்க்கையைவிடச் சாவே சிறந்தது; தீராத நோயைவிட நிலைத்த ஓய்வே உயர்ந்தது.
18 மூடிய வாய்மீது பொழிந்த நல்ல பொருள்கள் கல்லறையில் வைத்த உணவுப்படையல் போன்றவை.
19 காணிக்கையால் சிலைக்கு வரும் பயன் என்ன? அது உண்பதுமில்லை, நுகர்வதுமில்லை. ஆண்டவரால் தண்டிக்கப்படுவோரும் இதைப் போன்றோரே.
20 கன்னிப்பெண்ணை அண்ணகன் அணைத்துப் பெருமூச்சு விடுதல்போல் அவர்கள் கண்ணால் காண்கிறார்கள்; பெருமூச்சு விடுகிறார்கள்.
21 உன் உள்ளத்திற்கு வருத்தம் விளைவிக்காதே; உன் திட்டங்களால் உன்னையே துன்பத்துக்கு உட்படுத்தாதே.
22 உள்ள மகிழ்ச்சியே மனிதரை வாழ வைக்கிறது; அகமகிழ்வே மானிடரின் வாழ்நாளை வளரச் செய்கிறது.
23 உன் உள்ளத்திற்கு உவகையூட்டு; உன்னையே தேற்றிக்கொள்; வருத்தத்தை உன்னிடமிருந்து தொலைவில் விரட்டி விடு. வருத்தம் பலரை அழித்திருக்கிறது; அதனால் எவ்வகைப் பயனுமில்லை.
24 பொறாமையும் சீற்றமும் உன் வாழ்நாளைக் குறைக்கும்; கவலை, உரிய காலத்திற்கு முன்பே முதுமையை வருவிக்கும்.
25 மகிழ்ச்சியான நல்ல உள்ளம் உணவுப் பொருள்களைச் சுவைத்து இன்புறுகிறது.
அதிகாரம் 31
1 செல்வத்தின் மீதுள்ள விழிப்பு உடலை நலியச் செய்கிறது; அதைப்பற்றிய கவலை உறக்கத்தைத் துரத்தியடிக்கின்றது.
2 கவலை நிறைந்த விழிப்பு ஆழ்துயிலைக் கெடுக்கிறது; கொடிய நோய் உறக்கத்தைக் கலைக்கிறது.
3 செல்வம் திரட்டச் செல்வர் கடுமையாய் உழைக்கின்றனர்; தம் ஓய்வின்போது இன்பத்தில் திளைக்கின்றனர்.
4 ஏழைகள் கடுமையாய் உழைத்தும் வறுமையில் வாழ்கிறார்கள்; ஓய்வின்போது தேவையில் உழல்கிறார்கள்.
5 பொன்னை விரும்புவோர் நீதியைக் கடைப்பிடியார் மேன்மையை நாடுவோர் அதனாலேயே நெறி பிறழ்வர்.
6 பொன்னை முன்னிட்டப் பலர் அழிவுக்கு ஆளாயினர்; அவர்கள் அழிவை நேரில் எதிர்க்கொண்டனர்.
7 அதன்மீது பேராவல் கொள்வோருக்கு அது ஒரு தடைக்கல்; அறிவிலிகள் அனைவரும் அதனால் பிடிபடுவர்.
8 குற்றமில்லாது காணப்படும் செல்வர் பேறுபெற்றோர்; அவர்கள் பொன்னை நாடிப் போவதில்லை.
9 இத்தகையோர் யார்? அவர்களைப் பேறுபெற்றோர் எனலாம்; ஏனெனில் அவர்கள் தங்கள் மக்களிடையே வியக்கத் தக்கன செய்திருக்கிறார்கள்.
10 பொன்னால் சோதிக்கப்பட்டு நிறைவுள்ளவராய்க் காணப்பட்டோர் யார்? அவர்கள் அதிலே பெருமை கொள்ளட்டும். தவறு செய்யக்கூடிய சூழ்நிலை இருந்திருந்தும் தவறு செய்யாமல் விட்டவர் யார்? தீமை புரியக்கூடிய சூழ்நிலை இருந்திருந்தும் தீமை புரியாமல் விட்டவர் யார்?
11 இத்தகையோருடைய சொத்து நிலையாய் இருக்கும்; இஸ்ரயேலர் கூட்டம் அவர்களுடைய தருமங்களை எடுத்துரைக்கும்.
12 அறுசுவை விருந்து உன்னை அமர்ந்திருக்கிறாயா? அதன்மீது பேராசை கொள்ளாதே. "நிறைய பண்டங்கள் உள்ளன" என வியக்காதே.
13 பேராசை படைத்த கண் தீயது என நினைத்துக்கொள். படைக்கப்பட்டவற்றுள் கண்ணைவிடக் கெட்டது எது? அதனால்தான் எல்லாக் கண்களினின்றும் நீர் வடிகிறது.
14 காண்பவைமீதெல்லாம் கையை நீட்டாதே; பொது ஏனத்திலிருந்து உணவை எடுக்கும்போது அடுத்தவரை நெருக்காதே.
15 உனக்கு அடுத்திருப்பவரின் தேவைகளை உன்னுடையவற்றைக் கொண்டே அறிந்துகொள்; எல்லாவற்றிலும் அடுத்திருப்பவர்களைப்பற்றிக் கருத்தாய் இரு.
16 உனக்குமுன் வைக்கப்பட்டவற்றைப் பண்புள்ள மனிதர்போன்று சாப்பிடு; பேராசையோடு விழுங்காதே; இல்லையேல் நீ வெறுக்கப்படுவாய்.
17 நற்பயிற்சியை முன்னிட்டு உண்டு முடிப்பதில் முதல்வனாய் இரு; அளவு மீறி உண்ணாதே; இல்லையேல் அடுத்தவரைப் புண்படுத்துவாய்.
18 பலர் நடுவே நீ பந்தியில் அமர்ந்திருக்கும்போது மற்றவருக்குமுன் நீ உண்ணத்தொடங்காதே.
19 நற்பயிற்சி பெற்றோருக்கு சிறிது உணவே போதுமானது; படுத்திருக்கும்போது அவர்கள் அரும்பாடுபட்டு மூச்சுவிடமாட்டார்கள்.
20 அளவோடு உண்பதால் ஆழ்ந்த உறக்கம் வருகிறது; அவர்கள் வைகறையில் துயில் எழுகிறார்கள்; உயிரோட்டம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். தூக்கமின்மை, குமட்டல், கடும் வயிற்றுவலி ஆகியவை அளவின்றி உண்பவருக்கு உண்டாகும்.
21 மிகுதியாக உண்ணுமாறு நீ கட்டாயப்படுத்தப்பட்டால், இடையில் எழுந்துபோய் வாந்தியெடு; அது உனக்கு நலம் பயக்கும்.
22 குழந்தாய், நான் சொல்வதைக் கேள்; என்னைப் புறக்கணியாதே. கடைசியில் நான் சொல்வதன் பொருளைக் கண்டுணர்வாய். உன் செயல்கள் எல்லாவற்றிலும் சுறுசுறுப்பாய் இரு; அப்பொழுது எந்த நோயும் உன்னை அணுகாது.
23 தாராளமாக விருந்தோம்புவோரை மனிதர் புகழ்வர்; அவர்களுடைய ஈகைக்கு மானிடர் பகரும் சான்று நம்பத்தக்கது.
24 கஞ்சத்தனமாக உணவு படைப்போரைப்பற்றி நகரே குறைகூறும்; அவர்களுடைய கஞ்சத்தனத்திற்கு மனிதர் பகரும் சான்று முறையானது.
25 திராட்சை இரசம் அருந்துவதால் உன் ஆற்றலைக் காட்டமுயலாதே; திராட்சை இரசம் பலரை அழித்திருக்கிறது.
26 இரும்பின் உறுதியைச் சூளை பரிசோதிக்கின்றது; செருக்குற்றோரின் பூசல்களில் அவர்களின் உள்ளத்தைத் திராட்சை இரசம் பரிசோதிக்கின்றது.
27 திராட்சை இரசத்தை அளவோடு குடிக்கின்றபோது அது மனிதருக்கு வாழ்வை அளிக்கின்றது. திராட்சை இரசம் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை! மானிடரின் மகிழ்வுக்காக அது படைக்கப்பட்டது.
28 உரிய நேரத்தில் அளவோடு அருந்தப்படும் திராட்சை இரசம் உள்ளத்திற்கு இன்பத்தையும் மனத்திற்கு மகிழ்வையும் அளிக்கிறது.
29 அளவுக்குமீறி அருந்தப்படும் திராட்சை இரசம் சினத்தையும் பூசலையும் தூண்டிவிடுகிறது; மனக் கசப்பையும் விளைவிக்கிறது.
30 அறிவிலிகள் தங்களுக்கே கேடுவிளைக்கும்படி குடிவெறி அவர்களின் சீற்றத்தைத் தூண்டிவிடுகிறது; அவர்களின் வலிமையைக் குறைக்கிறது; அவர்கள் காயம்பட நேரிடுகிறது.
31 திராட்சை இரசம் பரிமாறப்படும் விருந்தில் உனக்கு அடுத்திருப்பவரைக் கடிந்துக்கொள்ளாதே; அவர்கள் மகிழ்ந்திருக்கும்போது அவர்களை இகழாதே; அவர்களைப் பழித்துப் பேசாதே; கடனைத் திருப்பிக்கேட்டு அவர்களைத் தொல்லைப்படுத்தாதே.
அதிகாரம் 32
1 நீ விருந்துக்குத் தலைவனாக ஏற்படுத்தப்பட்டுள்ளாயா? இறுமாப்புக் கொள்ளாதே; விருந்தினர்களுள் நீயும் ஒருவனாக நடந்துகொள்; முதலில் மற்றவர்களைக் கவனி; பிறகு நீ பந்தியில் அமர்ந்துகொள்.
2 உன் கடமைகளையெல்லாம் நீ செய்தபின் பந்தியில் அமர்ந்துகொள்; அப்போது அவர்கள்மூலம் நீ மகிழ்வாய்; விருந்தை நன்முறையில் நடத்தித்தந்தமைக்காக நீ மணிமுடி பெறுவாய்.
3 மூப்பரே, பேசும்; அது உமக்குத் தகும். ஆனால் நுண்ணிய அறிவாற்றலோடு பேசும்; இன்னிசையைத் தடை செய்யாதிரும்.
4 இசை ஒலிக்கும் இடத்தில் மிகுதியாகப் பேசாதீர்; பொருந்தா வேளையில் உம் ஞானத்தை வெளிப்படுத்தாதீர்.
5 திராட்சை இரசம் பரிமாறப்படும் விருந்தில் அமையும் இன்னிசை நிகழ்ச்சி பொன் அணிகளில் இருக்கும் மாணிக்க முத்திரை போன்றது.
6 சிறப்புமிகு திராட்சை இரசம் பரிமாறப்படும் விருந்தில் அமையும் பண்ணொழுகும் இன்னிசை பொன் அணிகலன்களில் இருக்கும் இரத்தின முத்திரை போன்றது.
7 இளைஞனே, தேவைப்பட்டால் பேசு; அரிதாக, அதுவும் இரு முறை வினவப்பெற்றால் மட்டும் பேசு.
8 சுருக்கமாய்ப் பேசு; குறைவான சொற்களில் நிறைய சொல்; அறிந்திருந்தும் அமைதியாக இரு.
9 பெரியார்கள் நடுவின் உன்னை அவர்களுக்கு இணையாக்கிக் கொள்ளாதே; அடுத்தவர் பேசும்போது உளறிக்கொண்டிராதே.
10 இடி முழக்கத்திற்குமுன் மின்னல் வெட்டுகிறது; அடக்கமான மனிதருக்குமுன் அவர்களது நற்பெயர் செல்கிறது.
11 விருந்தைவிட்டு நேரத்தோடு எழுந்திரு; கடைசி ஆளாய் இராதே; அலைந்து திரியாது வீட்டுக்கு விரைந்து செல்.
12 அங்குக் களித்திரு; உன் விருப்பப்படி செய்; செருக்கான பேச்சுகளால் பாவம் செய்யாதே.
13 மேலும் உன்னைப் படைத்தவரைப் போற்று; அவரே தம் நலன்களால் உன்னை நிரப்பியவர்.
14 ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் நற்பயிற்சியை ஏற்றுக்கொள்வர்; வைகறையில் அவரைத் தேடுவோர் அவரது பரிவைப் பெற்றுக் கொள்வர்.
15 திருச்சட்டத்தை ஆய்ந்தறிவோர் அதனால் நிறைவுபெறுவர்; வெளிவேடக்காரர் அதனால் தடக்கி விழுவர்.
16 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் நீதித் தீர்ப்பைக் காண்பர்; தங்களின் நேர்மையான செயல்களை ஒளிபோலத் தூண்டிவிடுவர்.
17 பாவியர் கண்டனத்தைத் தட்டிக் கழிப்பர்; தங்கள் விருப்பத்திற்கு ஏற்பச் சாக்குப் போக்குகளைக் கண்டுபிடிப்பர்.
18 அறிவுள்ளோர் பிறருடைய கருத்துகளைப் புறக்கணியார்; பெருமையும் இறுமாப்பும் கொண்டோர் அச்சத்தால் பின்னடையார்.
19 எண்ணிப் பாராது எதையும் செய்யாதே; செய்தபின் மனம் வருந்தாதே.
20 சிக்கலான வழிதனியே போகாதே; ஒரே கல்மீது இரு முறை தடுக்கி விழாதே.
21 தடங்கலற்ற வழியை நம்பாதே.
22 உன் பிள்ளைகளிடமிருந்தும் உன்னைக் காப்பாற்றிக்கொள்.
23 உன் செயல்கள் அனைத்திலும் உன்னையே நம்பு; இவ்வாறு கட்டளைகளைக் கடைப்பிடிப்பாய்.
24 திருச்சட்டத்தை நம்புவோர் கட்டளைகளுக்குப் பணிந்து நடப்பர்; ஆண்டவரை நம்புவோர்க்கு இழப்பு என்பதே இல்லை.
அதிகாரம் 33
1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர்க்குத் தீங்கு எதுவும் நேராது; அவர்களை அவர் சோதனையினின்று மீண்டும் மீண்டும் விடுவிப்பார்.
2 ஞானிகள் திருச்சட்டத்தை வெறுக்கமாட்டார்கள்; அதைக் கடைப்பிடிப்பதாக நடிப்போர் புயலில் சிக்குண்ட படகுபோல் ஆவர்.
3 அறிவுக்கூர்மை கொண்டோர் திருச்சட்டத்தை நம்புகின்றனர்; அது அவர்களுக்கு இறைமொழி போன்று நம்பிக்கைக்குரியது.
4 உன் பேச்சை ஆயத்தம் செய்து கொள்; அப்போது மக்கள் அதைக் கேட்பார்கள். நீ பெற்ற நற்பயிற்சியிலிருந்து கருத்துகளை ஒழுங்குபடுத்து; பிறகு மறுமொழி கூறு.
5 மூடரின் உணர்வுகள் சக்கரம் போன்றவை; அவர்களின் எண்ணங்கள் சுழலும் அச்சுப் போன்றவை;
6 பொலி குதிரை மீது யார் ஏறிச் சென்றாலும் அது கனைக்கிறது; எள்ளி நகையாடும் நண்பர்கள் அதைப் போன்றவர்கள்.
7 ஒவ்வொரு நாளும் ஒரே கதிரவனிடமிருந்து ஒளி பெற்றாலும் ஆண்டின் ஒரு நாள் இன்னொரு நாளைவிடச் சிறப்பாக இருப்பது ஏன்?
8 ஆண்டவருடைய ஞானத்தால் நாள்கள் வேறுபடுத்தப்படுகின்றன; அவரே காலங்களையும் விழாக்களையும் வெவ்வேறாக அமைத்தார்.
9 சில நாள்களை அவர் உயர்த்தித் தூய்மைப்படுத்தினார்; சிலவற்றைப் பொதுவான நாள்களாக வைத்தார்.
10 மனிதர் எல்லாரும் நிலத்திலிருந்து வந்தவர்கள்; மானிடர் மண்ணிலிருந்து படைக்கப்பட்டனர்.
11 நிறைவான அறிவாற்றலால் ஆண்டவர் அவர்களை வேறுபடுத்தினார்; அவரே அவர்களின் வழிகளை வெவ்வேறாக அமைத்தார்.
12 ஆசி வழங்கிச் சிலரை அவர் உயர்த்தினார்; சிலரைத் தூயவராக்கித் தம் அருகில் வைத்துக்கொண்டார். ஆனால் வேறு சிலரைச் சபித்துத் தாழ்த்தினார்; அவர்கள் இடத்திலிருந்தே அவர்களை விரட்டியடித்தார்.
13 குயவர் கையில் களிமண்போல் - அவர்களின் எல்லா வழிகளும் அவர்களது விருப்பப்படியே அமைகின்றன. - மனிதர் தங்களை உண்டாக்கியவரின் கையில் உள்ளனர்; அவர் தமது தீர்ப்புக்கு ஏற்ப அவர்களுக்குக் கைம்மாறு கொடுக்கிறார்.
14 நன்மைக்கு முரணானது தீமை; வாழ்வுக்கு முரணானது சாவு; இறைப்பற்றுள்ளோருக்கு முரணானோர் பாவிகள்.
15 உன்னத இறைவனின் எல்லா வேலைப்பாடுகளையும் உற்று நோக்கு. அவை இணை இணையாக உள்ளன; ஒன்று மற்றொன்றுக்கு எதிராய் இருக்கிறது.
16 இறுதியாக விழித்தெழுந்தவன் நான்; திராட்சைப் பழம் பறிப்போர் விட்டுப்போனவற்றைத் திரட்டியவனைப் போன்றவன் நான்.
17 ஆண்டவரின் ஆசியால் நான் முதன்மை நிலை பெற்றேன்; திராட்சைப்பழம் பறிப்போர் போலத் திராட்சை பிழியும் தொட்டியை நிரப்பினேன்.
18 எண்ணிப்பார்; எனக்காக மட்டும்நான் உழைக்கவில்லை; நற்பயிற்சியைத் தேடும் அனைவருக்காகவுமே உழைத்தேன்.
19 மக்களுள் பெரியோர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்; சபைத்தலைவர்களே, கூர்ந்து கேளுங்கள்.
20 உன் மகனையோ மனைவியையோ, சகோதரரையோ நண்பரையோ உன் வாழ்நாளில் உன்மேல் அதிகாரம் செலுத்த விடாதே; உன் செல்வங்களை மற்றவர்களுக்குக் கொடாதே. இல்லையேல் நீ மனவருத்தப்பட்டு அவற்றைத் திருப்பிக் கேட்கக்கூடும்.
21 உன்னிடம் உயிர் உள்ளவரை, மூச்சு இருக்கும்வரை, மற்றவர்கள் உன்மீது அதிகாரம் செலுத்த விடாதே.
22 நீ உன் பிள்ளைகள் கையை எதிர்பார்த்திருப்பதைவிட உன் பிள்ளைகள் உன்னிடம் கேட்பதே மேல்.
23 உன்னுடைய எல்லாச் செயல்களிலும் சிறந்தோங்கு; உன் புகழுக்கு இழுக்கு வருவிக்காதே.
24 உன் வாழ்நாளை நீ முடிக்கும் அந்நாளில், அந்த இறுதி நேரத்தில், உன் உரிமைச்சொத்தைப் பகிர்ந்துகொடு.
25 தீவனம், தடி, சுமை கழுதைக்கு; உணவு, கண்டிப்பு, வேலை அடிமைக்கு.
26 அடிமையிடம் வேலை வாங்கு, நீ ஓய்வு காண்பாய்; அவனைச் சோம்பியிருக்க விடு, அவன் தன்னுரிமையைத் தேடுவான்.
27 நுகமும் கடிவாளமும் காளையின் கழுத்தை வளைக்கின்றன; வாட்டுதலும் வதைத்தலும் தீய அடிமையை அடக்குகின்றன.
28 அவனை வேலைக்கு அனுப்பு. இல்லையேல், அவன் சோம்பித் திரிவான். சோம்பல் பலவகைத் தீங்கையும் கற்றுக் கொடுக்கிறது.
29 அவனுக்கு ஏற்ற வேலையைச் செய்ய அவனை ஏவு; அவன் பணிந்து நடக்கவில்லையேல், கடுமையான விலங்குகளை அவனுக்கு மாட்டு.
30 ஆனால் எவரோடும் எல்லை மீறி நடந்துகொள்ளாதே; நீதிக்கு மாறாக எதையும் செய்யாதே.
31 உனக்கு ஓர் அடிமை மட்டும் இருந்தால், அவனை உன்னைப்போல நடத்து; ஏனெனில் அவனை உன் குடும்பத்தானாக வாங்கியுள்ளாய்.
32 உனக்கு ஓர் அடிமை மட்டும் இருந்தால், அவனை உன் சகோதரன் போல நடத்து; ஏனெனில் உன் உயிரைப்போல் உனக்கு அவன் தேவைப்படுவான்.
33 நீ அவனைக் கொடுமைப்படுத்த, அவன் உன்னை விட்டு ஓடிப்போனால் எந்த வழியில் அவனைத் தேடிப் போவாய்?
அதிகாரம் 34
1 மதியீனர் வெறுமையான பொய்யான நம்பிக்கை கொண்டுள்ளனர். கனவுகள் அறிவிலிகளுக்குப் பறக்க இறக்கைகள் தருகின்றன.
2 கனவுகளைப் பொருட்படுத்துவோர் நிழலைப் பிடிக்க முயல்வோர்போலும், காற்றைத் துரத்துவோர்போலும் ஆவர்.
3 கண்ணாடியில் தெரியும் முகம் வெறும் தோற்றமே; கனவுகளில் தோன்றுவதும் அவ்வாறே.
4 தூய்மையின்மையிலிருந்து தூய்மை வரக்கூடுமோ? பொய்மையிலிருந்து உண்மை வரக்கூடுமோ?
5 குறி கூறல், சகுனம் பார்த்தல், கனவுகள் பொருளற்றவை; பேறுகாலப் பெண்போன்று உள்ளம் கற்பனை செய்கிறது.
6 அவை உன்னத இறைவனின் குறுக்கீட்டால் அனுப்பப்பட்டாலன்றி உன் மனத்தை அவற்றில் செலுத்தாதே.
7 கனவுகள் பலரை நெறிபிறழச் செய்துள்ளன; அவற்றில் நம்பிக்கை வைத்தோர் வீழ்ச்சியுற்றனர்.
8 இத்தகைய பொய்மையின்றியே திருச்சட்டம் நிறைவேறும். நம்பிக்கைக்குரியோரின் பேச்சில் ஞானம் நிறைவு பெறும்.
9 பல நாடுகளுக்கும் சென்று வந்தோர் பலவற்றை அறிவர்; பட்டறிவு மிகுந்தோர் அறிவுக் கூர்மையுடன் பேசுவர்;
10 செயலறிவு இல்லாதோர் சிலவற்றையே அறிவர்; பல நாடுகளுக்கும் சென்று வந்தோர் தங்களது அறிவுடைமையைப் பெருக்கிக்கொள்வர்.
11 என்னுடைய பயணங்களில் பலவற்றைக் கண்டிருக்கிறேன்; நான் எடுத்துரைப்பதைவிட மிகுதியாகப் புரிந்துகொண்டேன்.
12 பல வேளைகளில் நான் சாவுக்குரிய பேரிடருக்கு உட்பட்டிருக்கிறேன்; பட்டறிவால் காப்பாற்றப்பட்டிருக்கிறேன்.
13 ஆண்டவருக்கு அஞ்சுவோர் உயிர்வாழ்வர்; அவர்களது நம்பிக்கை தங்களைக் காப்பாற்றுகிறவர்மேல் இருக்கிறது.
14 ஆண்டவருக்கு அஞ்சுபவர்கள் எதற்கும் நடுங்கவோ தயங்கவோ மாட்டார்கள்; ஏனெனில் அவரே அவர்களது நம்பிக்கை.
15 ஆண்டவருக்கு அஞ்சுவோர் பேறுபெற்றோர்; அவர்கள் யாரை நம்புவார்கள்? அவர்களுடைய துணையாளர் யார்?
16 ஆண்டவருடைய கண்கள் அவர்மேல் அன்புகூர்வோர்மீது உள்ளன; அவரே அவர்களுக்கு உறுதியான பாதுகாப்பு, வலிமைமிக்க துணை, வெப்பத்தில் மறைவிடம், நண்பகல் வெயிலில் நிழல்; தடுமாற்றத்தில் ஊன்றுகோல், வீழ்ச்சியில் "அரண்.
17 அவர் உள்ளத்தை உயர்த்துகிறார்; கண்களை ஒளிர்விக்கிறார்; நலமும் வாழ்வும் ஆசியும் அருள்கிறார்.
18 அநியாயமாய் ஈட்டியவற்றின்று பலியிடுவோரின் காணிக்கை மாசுள்ளது; நெறிகெட்டோரின் நன்கொடைகள் ஏற்புடையவை அல்ல.
19 இறைப்பற்றில்லாதோரின் காணிக்கைகளை உன்னத இறைவன் விரும்புவதில்லை; ஏராளமான பலி செலுத்தியதற்காக அவர் ஒருவருடைய பாவங்களை மன்னிப்பதில்லை.
20 ஏழைகளின் உடைமையிலிருந்து பலி செலுத்துவது தந்தையின் கண்முன்னே மகனைக் கொலை செய்வதற்கு இணையாகும்.
21 எளிய உணவே ஏழைகளுக்கு உயிர்; அதை அவர்களிடமிருந்து பறிப்பவர்கள் இரத்த வெறியர்கள்.
22 அடுத்தவர் பிழைப்பைக் கெடுப்பது அவர்களைக் கொல்வதாகும்; கூலியாளின் கூலியைப் பறிப்போர் அவர்களது குருதியையே சிந்துகின்றனர்.
23 ஒருவர் கட்ட, மற்றொருவர் இடித்தால், கடின உழைப்பைத் தவிர வேறு என்ன பயன் கிட்டும்?
24 ஒருவர் மன்றாடுகளில் மற்றொருவர் சபித்தால் யாருடைய குரலை ஆண்டவர் கேட்பார்?
25 பிணத்தைத் தொட்டவர் குளித்தபின் மீண்டும் அதைத் தொடுவாராயின், அவர் குளித்ததால் பயன் என்ன?
26 தங்கள் பாவங்களுக்காக நோன்பிருப்போர் வெளியில் சென்று, மீண்டும் அதே பாவங்களைச் செய்தால், யார் அவர்களது வேண்டுதலைக் கேட்பர்? அவர்கள் தங்களைத் தாழ்த்திக் கொள்வதால் பயன் என்ன?
அதிகாரம் 35
1 திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பது பல காணிக்கைகளைக் கொடுப்பதற்கு ஈடாகும். கட்டளைகளைக் கருத்தில் கொள்வது நல்லுறவுப் பலி செலுத்துவதற்கு ஒப்பாகும்.
2 அன்புக்குக் கைம்மாறு செய்வது மாவுப் படையல் அளிப்பதற்கு இணையாகும். தருமம் செய்வது நன்றிப்பலி செலுத்துவதாகும்.
3 தீச்செயலை விட்டுவிடுதல் ஆண்டவருக்கு விருப்பமானது; அநீதியைக் கைவிடுதல் பாவக் கழுவாய்ப் பலியாகும்.
4 ஆண்டவர் திருமுன் வெறுங்கையோடு வராதே; கட்டளையை நிறைவேற்றவே பலிகளையெல்லாம் செலுத்து.
5 நீதிமான்கள் காணிக்கைகளைச் செலுத்தும்போது பலிபீடத்தில் கொழுப்பு வழிந்தோட, உன்னத இறைவன் திருமுன் நறுமணம் எழுகிறது.
6 நீதிமான்களின் பலி ஏற்றுக்கொள்ளத்தக்கது; அதன் நினைவு என்றும் நீங்காது.
7 ஆண்டவரைத் தாராளமாய் மாட்சிமைப்படுத்து; உன் உழைப்பின் முதற்கனிகளைக் கொடுப்பதில் கணக்குப் பார்க்காதே.
8 கொடை வழங்கும்போதெல்லாம் முகமலர்ச்சியோடு கொடு; பத்திலொரு பங்கை மகிழ்ச்சியோடு கடவுளுக்கு உரித்தாக்கு.
9 உன்னத இறைவன் உனக்குக் கொடுத்திருப்பதற்கு ஏற்ப நீயும் அவருக்குக் கொடு; உன்னால் முடிந்த அளவுக்குத் தாராளமாய்க் கொடு.
10 ஆண்டவரே கைம்மாறு செய்பவர்; ஏழு மடங்கு உனக்குத் திருப்பித் தருபவர்.
11 ஆண்டவருக்குக் கையூட்டுக் கொடுக்க எண்ணாதே; அவர் அதை ஏற்கமாட்டார். அநீத பலியில் நம்பிக்கை வைக்காதே.
12 ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்; அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது.
13 அவர் ஏழைகளுக்கு எதிராய் எவரையும் ஒருதலைச் சார்பாய் ஏற்கமாட்டார்; தீங்கிழைக்கப்பட்டோரின் மன்றாட்டைக் கேட்பார்.
14 கைவிடப்பட்டோரின் வேண்டுதலைப் புறக்கணியார். தம்மிடம் முறையிடும் கைம்பெண்களைக் கைவிடார்.
15 கைம்பெண்களின் கண்ணீர் அவர்களுடைய கன்னங்களில் வழிந்தோடுவதில்லையா? அவர்களைக் கண்ணீர் சிந்த வைத்தவர்களுக்கு எதிராக அவர்களது அழுகுரல் எழுவதில்லையா?
16 ஆண்டவரின் விருப்பதிற்கு ஏற்றவாறு பணி செய்வோர் ஏற்றுக்கொள்ளப்படுவர். அவர்களுடைய மன்றாட்டு முகில்களை எட்டும்.
17 தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்; அது ஆண்டவரை அடையும்வரை அவர்கள் ஆறுதல் அடைவதில்லை.
18 உன்னத இறைவன் சந்திக்க வரும்வரை அவர்கள் நற்பயிற்சியில் தளர்ச்சியடைவதில்லை; அவர் நீதிமான்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறார்; தம் தீர்ப்பைச் செயல்படுத்துகிறார்.
19 ஆண்டவர் காலம் தாழ்த்தமாட்டார்.
20 இரக்கமற்றோரின் இடுப்பை அவர் முறித்துப் பிற இனத்தார்மீது பழி தீர்க்கும்வரை,
21 இறுமாப்புக் கொண்டோரின் கூட்டத்தை அழித்து அநீதர்களின் செங்கோல்களை முறிக்கும்வரை,
22 மனிதருக்கு அவரவர் செயல்பாட்டுக்கு ஏற்பக் கைம்மாறு செய்யும்வரை, அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப அவர்களின் செயல்களுக்கு ஈடு செய்யும்வரை,
23 தம் மக்களின் வழக்கில் அவர் நீதித் தீர்ப்பிட்டு அவர்களைத் தம் இரக்கத்தினால் மகிழ்விக்கும்வரை, அவர்களிடம் பொறுமை காட்டமாட்டார்.
24 வறட்சிக் காலத்தில் தோன்றும் கார் முகில்போலத் துன்பக் காலத்தில் அவரின் இரக்கம் வரவேற்கத்தக்கது.
அதிகாரம் 36
1 எல்லாவற்றிற்றும் கடவுளாகிய ஆண்டவரே, எங்கள்மீது இரக்கமாயிரும்; எங்களைக் கண்ணோக்கும்; உம்மைப்பற்றிய அச்சம் எல்லா நாடுகள் மீதும் நிலவச் செய்யும்.
2 அயல் நாடுகளுக்கு எதிராக உம் கையை உயர்த்தும். அவர்கள் உம் வலிமையைக் காணட்டும்.
3 அவர்கள் முன்னிலையில் எங்கள் வழியாக உமது தூய்மையைக் காட்டியது போல், எங்கள் முன்னிலையில் அவர்கள் வழியாக உமது மாட்சியைக் காட்டும்.
4 ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை என நாங்கள் அறிந்துள்ளதுபோல் அவர்களும் உம்மை அறிந்து கொள்ளட்டும்.
5 புதிய அடையாளங்களை வழங்கும்; வியத்தகு செயல்களை நிகழ்த்தும்; உம் கையினை, வலக்கையினை மாட்சிமைப்படுத்தும்.
6 சினத்தைத் தூண்டிச் சீற்றத்தைப் பொழியும்; எதிரியை ஒழித்துப் பகைவரைப் பாழாக்கும்.
7 காலத்தை விரைவுபடுத்தி ஆணையை நினைவுக்கூரும்; அவர்கள் உம் அரும் பெரும் செயல்களை எடுத்துரைக்கட்டும்.
8 தப்பிப் பிழைத்தோரைச் சினம் என்னும் நெருப்பு விழுங்கட்டும்; உம் மக்களுக்குத் தீங்கிழைப்போர் அழிவைக் காணட்டும்.
9 "எங்களைத்தவிர வேறு யாரும் இல்லை" எனக் கூறும் பகை வேந்தர்களின் தலைகளை நசுக்கும்.
10 யாக்கோபின் குலங்களை ஒன்று கூட்டும்; தொடக்கத்தில்போன்று அவர்களை உமது உரிமைச்சொத்தாக்கும்.
11 ஆண்டவரே, உம் பெயரால் அழைக்கப்பெற்ற மக்களுக்கு இரக்கங் காட்டும்; உம் தலைப்பேறாகப் பெயரிட்டழைத்த இஸ்ரயேலுக்குப் பரிவுகாட்டும்.
12 உமது திருவிடம் இருக்கும் நகரின்மீது, நீர் ஓய்வுகொள்ளும் இடமாகிய எருசலேம்மீது கனிவு காட்டும்.
13 உமது புகிழ்ச்சியால் சீயோனை நிரப்பும்; உமது மாட்சியால் உம் மக்களை நிரப்பும்.
14 தொடக்கத்தில் நீர் படைத்தவற்றுக்குச் சான்று பகரும்; உம் பெயரால் உரைக்கப்பட்ட இறைவாக்குகளை நிறைவேற்றும்.
15 உமக்காகப் பொறுமையுடன் காத்திருப்போருக்குப் பரிசு அளியும்; உம் இறைவாக்கினர்கள் நம்பத்தகுந்தவர்கள் என மெய்ப்பித்துக் காட்டும்.
16 ஆண்டவரே, உம் மக்களுக்கு ஆரோன் வழங்கிய ஆசிக்கு ஏற்ப உம்மிடம் மன்றாடுவோர்pன் வேண்டுதலுக்குச் செவிசாயும்.
17 அப்போது, நீரே ஆண்டவர், என்றுமுள கடவுள் என்பதை மண்ணுலகில் உள்ள எல்லோரும் அறிந்துகொள்வர்.
18 வயிறு எல்லா வகை உணவுகளையும் உட்கொள்கிறது; எனினும் ஒரு வகை உணவு மற்றொன்றைவிட மேலானது.
19 வேட்டையாடிய உணவினை நாக்கு சுவைத்து அறிகிறது; அறிவுக்கூர்மை கொண்ட உள்ளம் பொய்யைப் பிரித்தறிகிறது.
20 மனக்கோட்டம் கொண்டோர் வருத்தத்தைக் கொடுப்பர்; பட்டறிவு கொண்டோர் அவர்களுக்கு எதிரடி கொடுப்பர்.
21 ஒரு பெண் எந்த ஆணையும் கணவனாக ஏற்றுக்கொள்வாள்; ஆனால், ஆணுக்கு ஒரு பெண்ணைவிட மற்றொருத்தி மேம்பட்டவளாகத் தோன்றுவான்.
22 பெண்ணின் அழகு அவளுடைய கணவனை மகிழ்விக்கும்; அவன் வேறு எதையும் அவ்வளவு விரும்புவதில்லை.
23 அவளது பேச்சில் இரக்கமும் கனிவும் இருக்குமானால் அவளுடைய கணவன் மற்ற மனிதர்களைவிட நற்பேறு உடையவன்.
24 மனைவியை அடைகிறவன் உடைமையைப் பெறுகிறான்; தனக்கு ஏற்ற துணையையும் ஆதரவு தரும் தூணையும் அடைகிறான்.
25 வேலி இல்லையேல் உடைமை கொள்ளையடிக்கப்படும்; மனைவி இல்லையேல் மனிதன் பெருமூச்சு விட்டு அலைவான்.
26 நகர்விட்டு நகருக்குத் தப்பியோடும் திறமையான திருடனை யாரே நம்புவர்?
27 அவ்வாறே, தங்குவதற்கு இடம் இல்லாமல், இரவு வந்ததும் கண்ட இடத்திலும் தங்கும் மனிதனை எவர் நம்புவர்?
அதிகாரம் 37
1 எல்லா நண்பர்களும், "நாங்களும் உம் நண்பர்கள்" என்பார்கள்; சிலர் பெயரளவில் மட்டுமே நண்பர்கள்.
2 தோழரோ நண்பரோ பகைவராய் மாறுவது சாவை வருவிக்கும் வருத்தத்திற்கு உரியதன்றொ?
3 ஓ! தீய நாட்டமே, நிலத்தை வஞ்சனையால் நிரப்ப எங்கிருந்து நீ உருவானாய்?
4 தோழர்கள் சிலர் தங்கள் நண்பர்களின் உவகையில் மகிழ்வார்கள்; துன்பக் காலத்தில் அவர்களை எதிர்ப்பார்கள்.
5 வேறு சில தோழர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக நண்பர்களுக்கு உதவுவார்கள்; இருப்பினும் போர்க் காலத்தில் எதிரியிடமிருந்து அவர்களைக் காப்பார்கள்.
6 உன் உள்ளத்தில் உன் நண்பர்களை மறவாதே; உன்செல்வத்தில் அவர்களை நினையாமலிராதே.
7 எல்லா அறிவுரையாளரும் தங்கள் அறிவுரையைப் பாராட்டுவர்; சிலர் தன்னலத்துக்காகவே அறிவுரை கூறுவர்.
8 அறிவுரையாளரைப்பற்றி எச்சரிக்கையாய் இரு; முதலில் அவர்களது தேவை என்ன எனக் கண்டுபிடி. ஏனெனில் அவர்கள் தன்னலத்துக்காகவே அறிவுரை கூறுவார்கள். இல்லையேல், உனக்கு எதிராகத் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தலாம்.
9 அவர்கள் உன்னிடம், "உன் வழி நல்லது" எனச் சொல்வார்கள். பின்பு, உனக்கு என்ன நடக்கிறது எனப் பார்க்க உனக்கு எதிரே நிற்பார்கள்.
10 உன்னைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறவரிடம் அறிவுரை கேளாதே; உன்மேல் பொறாமை கொள்வோரிடமிருந்து உன் எண்ணங்களை மறைத்துக்கொள்.
11 பெண்ணிடம் அவளுடைய எதிரியைப்பற்றியோ, கோழையிடம் போரைப்பற்றியோ, வணிகரிடம் விலைகளைப் பற்றியோ, வாங்குபவரிடம் விற்பனையைப்பற்றியோ, பொறாமை கொள்பவரிடம் நன்றியறிதலைப்பற்றியோ, கொடியவரிடம் இரக்கத்தைப் பற்றியோ, சோம்பேறியிடம் வேலையைப்பற்றியோ, நாள் கூலியாளிடம் வேலையை முடித்தலைப்பற்றியோ, சோம்பேறி அடிமையிடம் பல வேலைகளைப்பற்றியோ, அவர்கள் கொடுக்கும் எந்த அறிவுரையையும் பொருட்படுத்தாதே.
12 இறைப்பற்றுள்ளவர்களோடு, உனக்குத் தெரிந்தவரை கட்டளைகளைக் கடைப்பிடித்தவர்களோடு, ஒத்த கருத்து உடைவர்களோடு, நீ தவறினால் உன்னுடன் சேர்ந்து வருந்துபவர்களோடு, எவ்பொழுதும் இணைந்திரு.
13 உன் உள்ளத்தின் அறிவுரையில் உறுதியாய் நில்; அதைவிட நம்பத்தக்கது உனக்கு வேறெதுவுமில்லை.
14 காவல்மாடத்தின்மேலே அமர்ந்திருக்கும் ஏழு காவலர்களைவிட மனித உள்ளம் சில வேளைகளில் நன்கு அறிவுறுத்துகிறது.
15 இவை எல்லாவற்றுக்கும்மேலாக, உன்னத இறைவனிடம் மன்றாடு. அப்பொழுது அவர் உன்னை உண்மையின் வழியில் நடத்துவார்.
16 எண்ணமே செயலின் தொடக்கம்; திட்டமிடல் எல்லாச் செயலாக்கத்திற்கும் முன்செல்கிறது.
17 மனமாற்றத்தின் அடையாளம் நான்கு வகைகளில் வெளிப்படும்;
18 அவை நன்மை தீமை, வாழ்வு சாவு; இவற்றை இடைவிடாது ஆண்டு நடத்துவது நாவே.
19 பலருக்கு நற்பயிற்சி அளிப்பதில் சிலர் திறமையுள்ளோராய் இருக்கின்றனர்; தமக்கோ பயனற்றவராய் இருக்கின்றனர்;
20 நாவன்மை படைத்த சிலர் வெறுக்கப்படுகின்றனர்; அவர்களுக்கு எவ்வகை உணவும் இல்லாமற் போகும்.
21 ஏனெனில் பேசும் வரம் அவர்களுக்கு ஆண்டவரால் கொடுக்கப்படவில்லை; அவர்களிடம் எவ்வகை ஞானமும் இல்லை.
22 சிலர் தங்களுக்கே ஞானியராய் இருக்கின்றனர்; அவர்களுடைய அறிவுக்கூர்மையின் பயன்கள் அவர்களது பேச்சில் வெளிப்படும்.
23 ஞானி தம் மக்களுக்கு நற்பயிற்சி அளிக்கிறார்; அவருடைய அறிவுக்கூர்மையின் பயன்கள் நம்பத்தக்கவை.
24 ஞானி புகழால் நிரப்பப்படுவார்; அவரைக் காண்போர் அனைவரும் அவரைப் பேறுபெற்றவர் என அழைப்பர்.
25 மனித வாழ்க்கை, நாள்களின் எண்ணிக்கையில் அடங்கும்; இஸ்ரயேலின் நாள்களோ எண்ணிக்கையில் அடங்கா.
26 ஞானி தம் மக்கள் நடுவே நன்மதிப்பை உரிமையாக்கிக் கொள்வார்; அவரது பெயர் நீடூழி வாழும்.
27 குழந்தாய், உன் வாழ்நாளில் உன்னையே சோதித்துப்பார்; உனக்கு எது தீயது எனக் கவனி; அதற்கு இடம் கொடாதே.
28 எல்லாமே எல்லாருக்கும் நன்மை பயப்பதில்லை; எல்லாரும் எல்லாவற்றிலும் இன்பம் காண்பதில்லை;
29 எவ்வகை இன்பத்திலும் எல்லை மீறிச் செல்லாதே; நீ உண்பவற்றின் மீது மிகுந்த ஆவல் கொள்ளாதே.
30 மிகுதியாக உண்பதால் நோய் உண்டாகிறது; பேருண்டி குமட்டலைக் கொடுக்கிறது.
31 பேருண்டியால் பலர் மாண்டனர்; அளவோடு உண்போர் நெடுநாள் வாழ்வர்.
அதிகாரம் 38
1 உன் தேவைக்கு ஏற்ப மருத்துவர்களுக்கு உரிய மதிப்பு வழங்கு; ஆண்டவரே அவர்களைப் படைத்தார்;
2 உன்னத இறைவனே நலம் அருள்கிறார்; மன்னர் அவர்களுக்குப் பரிசு வழங்குகிறார்.
3 மருத்துவரின் அறிவாற்றல் அவர்களைத் தலை நிமிர்ந்து நடக்கச் செய்கிறது; பெரியோர்கள் முன்னிலையில் அவர்கள் வியந்து பாராட்டப் பெறுவார்கள்.
4 ஆண்டவர் நிலத்திலிருந்து மருந்துவகைகளைப் படைத்தார்; அறிவுத்திறன் கொண்டோர் அவற்றைப் புறக்கணிப்பதில்லை.
5 மரத்துண்டினால் தண்ணீர் இனிமை பெறவில்லையா? இவ்வாறு ஆண்டவருடைய ஆற்றல் வெளிப்படவில்லையா?
6 அவரே மனிதருக்கு அறிவாற்றலைக் கொடுத்தார். இதனால் தம் வியத்தகு செயல்களில் மாட்சி பெற்றார்.
7 இவற்றைக் கொண்டு மருத்துவர் நலம் அளிக்கிறார்; வலியை நீக்குகிறார். மருந்து செய்வோர் இவற்றால் கலவை செய்கின்றனர்.
8 இவ்வாறு ஆண்டவரின் வேலை முடிவு பெறாது; அவரிடமிருந்தே உடல்நலம் உலகெல்லாம் நிலவுகிறது.
9 குழந்தாய், நீ நோயுற்றிருக்கும்போது கவலையின்றி இராதே; ஆண்டவரிடம் மன்றாடு. அவர் உனக்கு நலம் அருள்வார்.
10 குற்றங்களை அகற்று; நேர்மையானவற்றைச் செய்; எல்லாப் பாவங்களினின்றும் உன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்து.
11 நறுமணப் பலியையும், நினைவாகச் செலுத்தப்படும் மாவுப் படையலையும் ஒப்புக்கொடு; உன்னால் முடியும் அளவுக்குப் பலியின்மீது எண்ணெய் ஊற்று.
12 மருத்துவருக்கும் அவருக்குரிய இடத்தைக் கொடு; ஏனெனில், ஆண்டவரே அவரைப் படைத்தார். அவர் உன்னைவிட்டு விலகாதிருக்கட்டும்; ஏனெனில், அவர் உனக்குத் தேவை.
13 நலம் பெறுதல் சில வேளைகளில் மருத்துவர்கள் கையில் உள்ளது எனக் கூறக்கூடிய நேரமும் உண்டு.
14 ஏனெனில், வலி நீக்கி, நலமாக்கி, உயிரைக் காப்பாற்றும் அருளைத் தரவேண்டும் என அவர்களும் ஆண்டவரை மன்றாடுவார்கள்.
15 தம்மைப் படைத்தவர் முன்னிலையில் பாவம் செய்வோர் மருத்துவரின் கைகளில் விழட்டும்.
16 குழந்தாய், இறந்தவர்களுக்காகக் கண்ணீர் சிந்து; பெருந் துன்பங்களில் உழல்வோர் போலப் புலம்பத் தொடங்கு. இறந்தோருடைய உடலைத் தகுந்த முறையில் மூடிவை; அவர்களுடைய அடக்கத்திற்குச் செல்லத் தவறாதே.
17 மனம் வெதும்பி அழு; உணர்வு பொங்கப் புலம்பு; இழிவுப் பேச்சைத் தவிர்க்கும்பொருட்டு இறந்தவருடைய தகுதிக்கு ஏற்ப ஒரு நாளோ இரு நாளோ துயரம் கொண்டாடு. பின்பு துன்பத்தில் ஆறுதல் பெறு.
18 துன்பம் சாவை வருவிக்கிறது; துயர்மிக்க உள்ளம் வலிமையைக் குலைக்கிறது.
19 பேரிடர் நிகழும் போது துன்பம் நீடிக்கிறது; ஏழையின் வாழ்க்கை உள்ளத்தை வருத்துகிறது.
20 உன் உள்ளத்தைத் துன்பத்திற்கு ஒப்புவித்து விடாதே; அதைத் துரத்திவிடு; முடிவை நினைத்துக்கொள்.
21 மறந்துவிடாதே; இறந்தோர் திரும்பி வருவதில்லை. அவர்களுக்கு நீ நன்மை செய்ய முடியாது. உனக்கு நீயே தீங்கிழைத்துக்கொள்வாய்.
22 "என்னுடைய நிலையை நினைவில் கொள்; உன்னுடையதும் இதைப் போன்றதே. நேற்று எனக்கு, இன்று உனக்கு. "
23 இறந்தோரின் அடக்கத்தோடு அவர்களுடைய நினைவும் அடக்கம் பெறட்டும்; அவர்களுடைய ஆவி பிரிந்தபின் அவர்களுக்காக ஆறுதல் பெறு.
24 ஓய்வு நேரம் மறைநூல் அறிஞரின் ஞானத்தை வளர்க்க வாய்ப்பு அளிக்கிறது. குறைவான செயல்பாடு உள்ளோரே ஞானத்தில் வளர்வர்.
25 கலப்பையைப் பிடிக்கிறவர், தாற்றுக்கோலின் பிடியில் பெருமை கொள்கிறவர், எருதுகளை ஓட்டி அவற்றின் வேலைகளில் மூழ்கியிருக்கிறவர், இளங்காளைகளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறவர் எவ்வாறு ஞானத்தில் வளர்வர்?
26 அவர்கள் உழுசால் ஓட்டுவதில் தங்கள் உள்ளத்தைச் செலுத்துகிறார்கள்; இளம் பசுக்களுக்குத் தீனி வைப்பதில் விழிப்பாய் இருக்கிறார்கள்.
27 இவர்களைப்போலவே, எல்லாத் தொழிலாளரும் கைவினைஞரும் இரவு பகலாக வேலை செய்கின்றனர்; செதுக்கிய முத்திரைகளை உருவாக்குவோர் வகை வகையான மாதிரிகளை உருவாக்குவதில் ஊக்கம் கொண்டிருக்கின்றனர்; உயிரோட்டமுள்ள உருவங்களைப் படைப்பதில் மனத்தைச் செலுத்துவோர் தங்கள் வேலையை முடிப்பதில் விழிப்பாய் இருக்கின்றனர்.
28 இவர்களைப்போலவே, பட்டறை அருகில் அமர்ந்திருக்கும் கொல்லர்கள் இரும்பு வேலையில் குறியாய் இருக்கிறார்கள். நெருப்பின் வெப்பம் அவர்களது சதையைச் சுடுகின்றது. உலையின் வெப்பத்தில் அவர்கள் போராடுகிறார்கள். சம்மட்டியின் ஒலி அவர்கள் காதைச் செவிடாக்குகிறது. செய்யும் கலத்தின் மாதிரிமீது அவர்களின் கண்கள் பதிந்திருக்கின்றன. வேலைகளை முடிப்பதில் அவர்கள் மனத்தைச் செலுத்துகிறார்கள்; அவற்றை அழகு செய்வதில் விழிப்பாய் இருக்கிறார்கள்.
29 இவர்களைப்போலவே, வேலையில் அமர்ந்திருக்கும் குயவர்கள் தங்கள் கால்களால் சக்கரத்தைச் சுழற்றுகிறார்கள்; எப்போதும் தங்கள் வேலையின் மீது ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முழு வேலையும் அவர்கள் செய்த கலன்களின் எண்ணிக்கையைப் பொறுத்துள்ளது.
30 அவர்கள் தங்கள் கையால் களிமண்ணைப் பிசைகிறார்கள்; தங்கள் கால்களால் அதனைப் பதப்படுத்துகிறார்கள்; கலன்களை மெருகிட்டு முடிப்பதில் தங்கள் உள்ளத்தைச் செலுத்துகிறார்கள்; சூளையைத் தூய்மைப்படுத்துவதில் விழிப்பாய் இருக்கிறார்கள்.
31 இவர்கள் எல்லாரும் தங்கள் கைகளையே நம்பியுள்ளனர்; ஒவ்வொருவரும் தம் தொழிலில் திறமை கொண்டுள்ளனர்.
32 இவர்களின்றி நகர்கள் குடியிருப்பாரற்றுக் கிடக்கும்; அவற்றில் எவரும் தங்கி வாழ்வதில்லை; உலாவுவதுமில்லை.
33 ஆயினும் இவர்கள் மக்கள் மன்றத்தில் தேடப்படுவதில்லை; மக்கள் சபையில் முதலிடம் பெறுவதில்லை. நடுவரின் இருக்கையில் அமரமாட்டார்கள்; நீதி மன்றத்தின் தீர்ப்புகளைப் புரிந்துகொள்ளமாட்டார்கள்.
34 நற்பயிற்சியையோ தீர்ப்பையோ அவர்களால் விளக்கிக்கூற இயலாது; உவமைகளைக்கொண்டு பேசுவதைக் காண முடியாது. ஆனால், படைப்பின் அமைப்பைப் பேணிக் காப்பாற்றுகிறார்கள்; அவர்களது வேண்டுதல் அவர்களது தொழிலைப்பற்றியே இருக்கும்.
அதிகாரம் 39
1 ஆனால் உன்னத இறைவனின் திருச்சட்டத்தைப் படிப்பதில் மனத்தைச் செலுத்துவோர் தங்கள் முன்னோர் எல்லாருடைய ஞானத்தையும் தேடுவர்; இறைவாக்குகளைப் படிப்பதில் ஈடுபட்டிருப்பர்.
2 பேர்பெற்றவர்களின் உரைகளைக் காப்பாற்றுவர்; உவமைகளின் நுட்பங்களை ஊடுருவிக் காண்பர்.
3 பழமொழிகளின் உட்பொருளைத் தேடுவர்; உவமைகளில் பொதிந்துள்ள புதிர்களை எளிதில் புரிந்துகொள்வர்.
4 பெரியோர்கள் நடுவே பணியில் அமர்வர்; ஆள்வோர் முன்னிலையில் தோன்றுவர்; அயல்நாடுகளில் பயணம் செய்வர்; மனிதரிடம் உள்ள நன்மை தீமைகளை ஆய்ந்தறிவர்.
5 வைகறையில் துயிலெழுவர்; தங்களைப் படைத்த ஆண்டவரிடம் தங்கள் உள்ளத்தைக் கையளிப்பர்; உன்னத இறைவன் திருமுன் மன்றாடுவர்; வாய் திறந்து வேண்டுவர்; தங்கள் பாவங்களுக்காகக் கெஞ்சி மன்றாடுவர்.
6 மாண்புமிகு ஆண்டவர் விரும்பினால், அவர்கள் அறிவுக்கூர்மையால் நிரப்பப்படுவார்கள்; தங்கள் ஞானத்தின் மொழிகளைப் பொழிவார்கள்; தங்கள் வேண்டுதலில் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவார்கள்.
7 தங்கள் அறிவுரையையும் அறிவாற்றலையும் நேரிய வழியில் செலுத்துவார்கள்; ஆண்டவருடைய மறைபொருள்களைச் சிந்தித்துப் பார்ப்பார்கள்.
8 தாங்கள் கற்றறிந்த நற்பயிற்சியை விளக்கிக் காட்டுவார்கள்; ஆண்டவருடைய உடன்படிக்கையின் திருச்சட்டத்தில் பெருமை கொள்வார்கள்.
9 பலர் அவர்களுடைய அறிவுக் கூர்மையைப் பாராட்டுவர்; அவர்களது புகழ் ஒரு நாளும் நினைவிலிருந்து அகலாது; அவர்களுடைய நினைவு மறையாது; தலைமுறை தலைமுறைக்கும் அவர்களது பெயர் வாழும்.
10 நாடுகள் அவர்களது ஞானத்தை எடுத்துரைக்கும். மக்கள் சபையும் அவர்களது புகழ்ச்சியை அறிவிக்கும்.
11 அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தால், ஓராயிரம் பெயர்களைவிடப் புகழ்மிக்க பெயரை விட்டுச்செல்வார்கள்; இறந்தாலும் அப்பெயரே அவர்களுக்குப் போதுமானது.
12 நான் சிந்தித்தவற்றை இன்னும் எடுத்துரைப்பேன்; முழு மதி போன்று அவற்றால் நிறைந்துள்ளேன்.
13 பற்றுறுதியுள்ள மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்; நீரோடை அருகில் வளரும் ரோசாவைப்போன்று மலர்ந்து விரியுங்கள்.
14 சாம்பிராணி போன்று நறுமணம் பரப்புங்கள்; லீலிபோன்று மலருங்கள்; நறுமணம் வீசுங்கள்; புகழ்ப்பாடல் பாடுங்கள்; ஆண்டவருடைய எல்லாச் செயல்களுக்காகவும் அவரைப் போற்றுங்கள்.
15 அவருடைய பெயரை மாட்சிமைப்படுத்துங்கள்; உதடுகளில் எழும் இன்னிசையாலும் யாழ்களாலும் அவருடைய புகழை அறிவியுங்கள்; அறிவிக்கும்போது இவ்வாறு சொல்லுங்கள்;
16 "ஆண்டவருடைய செயல்களெல்லாமே மிக நல்லவை; அவருடைய கட்டளையெல்லாம் குறித்த நேரத்தில் நிறைவேறும். ";இது என்ன?; அது எதற்கு? என யாரும் கூறக் கூடாது; எல்லாவற்றுக்கும் குறித்த நேரத்தில் விளக்கம் கொடுக்கப்படும்.
17 அவருடைய சொல்லால் தண்ணீர் திரண்டு நின்றது; அவருடைய வாய்மொழியால் நீர்த்தேக்கம் உருவாயிற்று.
18 அவருடைய ஆணையால் அவர் விரும்பியதெல்லாம் நிறைவேறிற்று. மீட்பளிக்கும் அவரது ஆற்றலைக் கட்டுப்படுத்துகிறவர் எவருமில்லை.
19 எல்லா மனிதர்களின் செயல்களும் அவர் திருமுன் இருக்கின்றன; அவருடைய கண்களுக்கு மறைவானது ஏதுமில்லை.
20 என்றென்றும் அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்; அவருக்கு அரியது ஒன்றுமில்லை.
21 "இது என்ன? அது எதற்கு?" என யாரும் கூறக்கூடாது; ஒவ்வொன்றும் ஒரு நோக்கத்தோடு படைக்கப்பட்டுள்ளது.
22 ஆண்டவருடைய ஆசி ஆறுபோலப் பெருக்கெடுக்கிறது; காய்ந்த நிலத்தை வெள்ளப் பெருக்குப்போல நனைக்கிறது.
23 நன்னீரை அவர் உப்புநீராக மாற்றியதுபோல நாடுகள் அவருடைய சினத்தை உரிமையாக்கிக்கொள்ளும்.
24 அவருடைய வழிகள் தூயவர்களுக்கு நேரியனவாய் இருக்கின்றன; நெறிகெட்டவர்களுக்கு இடறலாய் இருக்கின்றன.
25 தொடக்கத்திலிருந்தே நல்லவை நல்லவர்களுக்காகப் படைக்கப்பட்டுள்ளன; தீயவை பாவிகளுக்காகப் படைக்கப்பட்டுள்ளன.
26 நீர், தீ, இரும்பு, உப்பு, கோதுமை மாவு, பால், தேன், திராட்சை இரசம், எண்ணெய், உடை ஆகியவை மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளாகும்.
27 இவையெல்லாம் இறைப்பற்றுள்ளோருக்கு நல்லவையாகும்; பாவிகளுக்குத் தீயவையாக மாற்றப்படும்.
28 தண்டனைக்காக அவர் சில காற்றுகளைப் படைத்தார்; அவருடைய சீற்றத்தால் அவை கொடிய வாதைகளாக மாறின. முடிவு காலத்தில் அவை தம் வலிமையைக் கொட்டி, தம்மைப் படைத்தவருடைய சீற்றத்தைத் தணிக்கும்.
29 தீ, கல்மழை, பஞ்சம், சாவு ஆகியவையெல்லாம் தண்டனைக்காகப் படைக்கப்பட்டவை.
30 காட்டு விலங்குகளின் பற்கள், தேள்கள், நச்சுப்பாம்புகள், இறைப்பற்றில்லாதோரை அழித்துத் தண்டிக்கும் வாள்
31 ஆகியவை ஆண்டவருடைய கட்டளைகளில் மகிழ்ச்சி கொள்ளும்; அவருடைய பணிக்காக மண்மீது ஆயத்தமாய் இருக்கும்; தமக்குரிய காலம் வரும்போது அவருடைய சொல்லை மீறா.
32 இதன் பொருட்டே நான் தொடக்கமுதல் உறுதியாய் இருந்துள்ளேன்; இதைப்பற்றிச் சிந்தித்தேன்; எழுத்தில் விட்டுச்செல்கிறேன்.
33 ஆண்டவருடைய செயல்களெல்லாம் நல்லவை. ஒவ்வொரு தேவையையும் குறித்த காலத்தில் அவர் நிறைவு செய்வார்.
34 "இது அதைவிடக் கெட்டது" என யாரும் சொல்ல முடியாது. எல்லாம் அதனதன் காலத்தில் நல்லவை என விளங்கும்.
35 இப்போது முழு உள்ளத்தோடும் ஆண்டவருக்கு வாயாரப் புகழ் பாடுங்கள்; அவருடைய பெயரைப் போற்றுங்கள்.
அதிகாரம் 40
1 எல்லா மனிதரும் கடும் உழைப்புக்கே படைக்கப்பட்டிருக்கின்றனர்; தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த நாள்முதல் நிலம் என்னும் தாயிடம் எல்லாரும் அடக்கமாகும் நாள்வரை ஆதாமின் மக்கள்மீது வலிய நுகம் சுமத்தப்பட்டிருக்கிறது.
2 எதிர்காலத்தையும் இறுதி நாளையையும் பற்றிய எண்ணங்கள் மனிதருடைய சிந்தனையைக் குழப்பி, உள்ளத்தை அச்சுறுத்துகின்றன.
3 மேன்மைமிகு அரியணையில் அமர்ந்திருப்போர்முதல் புழுதியிலும் சாம்பலிலும் உழலத் தாழ்த்தப்பட்டோர்வரை,
4 கருஞ்சிவப்பு உடையும் பொன்முடியும் அணிந்தோர்முதல் முரட்டுத் துணி உடுத்தியோர்வரை எல்லாருக்கும் சீற்றம், பொறாமை, கலக்கம், குழப்பம், சாவுபற்றிய அச்சம், வெகுளி, சண்டை ஆகியவை உண்டு.
5 கட்டிலின்மீது ஓய்வு கொள்ளும் நேரத்தில், இரவு நேரத் தூக்கம் மனிதரின் அறிவைக் குழப்புகிறது.
6 சிறிது நேர ஓய்வும் ஓய்வாகத் தோன்றுவதில்லை; பகலில் நேரிடுவதுபோன்று உறக்கத்திலும் அவர்கள் கலக்கம் அடைகிறார்கள். போர்க்களத்திலிருந்து தப்பிவந்தவர்போலத் தீயக் கனவுகளால் உள்ளத்தில் குழப்பம் அடைகிறார்கள்.
7 தாங்கள் பாதுகாப்பு அடையும் காலத்தில் விழித்துக் கொள்கிறார்கள்; தாங்கள் அஞ்சியிருந்ததற்குத் தகுந்த காரணமில்லையே என வியப்படைகிறார்கள்.
8 மனிதர் முதல் விலங்குகள் வரை எல்லா உயிரினங்களுக்கும் சாவு, படுகொலை, சண்டை, வாள், பேரிடர், பஞ்சம்,
9 அழிவு, நோவு ஆகியவை உண்டு. பாவிகளுக்கோ இவை ஏழு மடங்கு மிகுதியாகும்.
10 இவையெல்லாம் நெறிகெட்டவர்களுக்கெனப் படைக்கப்பட்டவை; அவர்களை முன்னிட்டே வெள்ளப் பெருக்கும் உண்டாயிற்று.
11 மண்ணிலிருந்து வந்த யாவும் மண்ணுக்கே திரும்பும்; தண்ணீரிலிருந்து வந்த யாவும் கடலுக்கே திரும்பும்.
12 எல்லாக் கையூட்டும் அநீதியம் அழித்தொழிக்கப்படும்; பற்றுறுதி என்றென்றும் நிலைத்திடும்.
13 அநீதருடைய செல்வம் ஆற்றைப்போல வற்றிப்போகும்; மழையின்போது விழும் பேரிடியைப்போல மறைந்து போகும்.
14 வள்ளன்மை கொண்டோர் மகிழ்ச்சி அடைவர்; கட்டளைகளை மீறுவோர் முடிவில் அழிவர்.
15 இறைப்பற்றில்லாதோரின் வழிமரபினர் மிகுதியாகக் கிளைவிடார்; இவர்கள் பாறையின் உச்சியில் உள்ள தூய்மையற்ற வேர்கள்.
16 எல்லா நீர்நிலைகளிலும் ஆற்றங்கரைகளிலும் வளரும் நாணல், புல் வகைகளுக்கு முன்னரே பிடுங்கி எறியப்படும்.
17 இரக்கம் என்பது நலமிகு பூங்காபோன்றது; தருமம் என்றும் நிலைக்கும்.
18 தன்னிறைவு கொண்டோர், தொழில் புரிவோர் ஆகியோருடைய வாழ்க்கை இனிமையானது; புதையலைக் கண்டுபிடிப்போருடைய வாழ்க்கை அவர்கள் இருவரின் வாழ்க்கையினும் இனிமையானது.
19 பிள்ளைகளைப் பெற்றெடுப்பதும் நகர்களைக் கட்டியெழுப்புவதும் ஒருவருடைய பெயரை நிலைக்கச் செய்கின்றன. மாசற்ற மனைவி இந்த இரண்டினும் மேலாக மதிக்கப்படுவாள்.
20 திராட்சை இரசமும் இன்னிசையும் இதயத்தை மகிழ்விக்கின்றன. ஞானத்தின்மேல் கொண்ட அன்பு இவ்விரண்டினும் மேலானது.
21 குழலும் யாழும் இன்னிசை எழுப்பிகின்றன; இனிய சொல் இவ்விரண்டினும் சிறந்தது.
22 வனப்பையும் அழகையும் கண் நாடுகிறது; விளைநிலத்தின் பசுமை இவ்விரண்டினும் உயர்ந்தது.
23 நண்பரும் தோழரும் எப்போதும் சந்திக்கத் தக்கவர்கள்; தன் கணவருடன் வாழும் மனைவி இவ்விருவரினும் மேலானவள்.
24 உடன்பிறந்தோரும் உதவி செய்வோரும் துன்பத்திலிருந்து விடுவிப்பர்; தருமம் செய்தல் இவ்விருவரினும் சிறந்தது.
25 பொன்னும் வெள்ளியும் கால்களுக்கு உறுதி தரும்; அறிவுரை இவ்விரண்டினும் மேலாக மதிக்கப்பெறும்.
26 செல்வமும் வலிமையும் உள்ளத்தை உயர்த்துகின்றன; ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் இவ்விரண்டினும் மேலானது. ஆண்டவரிடம் கொள்ளும் அச்சத்தில் எக்குறையுமில்லை; அதைக் கொண்டிருக்கும்போது உதவி தேடத் தேவையில்லை.
27 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் நலமிகு பூங்காபோன்றது; அது எல்லா மாட்சியையும்விடப் பாதுகாப்பு அளிக்கிறது.
28 குழந்தாய், பிச்சையெடுத்து வாழாதே; பிச்சையெடுப்பதினும் சாவதே மேல்.
29 பிறரிடமிருந்து உணவை எதிர்பார்க்கிற மனிதரின் வாழ்க்கையை வாழ்க்கை எனச் சொல்லமுடியாது; பிறருடைய உணவால் ஒருவர் தம் வாழ்வை மாசுபடுத்துகிறார்; அறிவாற்றல் படைத்தோரும் நற்பயிற்சி பெற்றோரும் இதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வர்.
30 பிச்சையெடுத்தல் வெட்கம் இல்லாதவரின் வாயில் இனிக்கும்; ஆனால், அது வயிற்றில் நெருப்பாய்ப் பற்றியெரியும்.
அதிகாரம் 41
1 ஓ, சாவே! தம் உடைமைகளோடு அமைதியாய் வாழ்வோருக்கும் எவ்வகைக் கவலையுமின்றி எல்லாவற்றிலும் வளமை அடைவோருக்கும் நல்ல உணவைச் சுவைத்து மகிழ இன்னும் வலிமையுள்ளோருக்கும் உன் நினைவு எத்துணைக் கசப்பாய் உள்ளது!
2 ஆனால், ஓ, சாவே! வறுமையுற்யோருக்கும் வலிமை குன்றியோருக்கும் முதியோருக்கும் பொறுமை இழந்தோருக்கும் உன் முடிவு வரவேற்கத்தக்கது!
3 இறப்பின் தீர்ப்புக்கு அஞ்சாதே! உனக்குமுன் இருந்தவர்களையும் உனக்குப்பின் வரப்போகிறவர்களையும் எண்ணிப்பார்.
4 இந்தத் தீர்ப்பை எல்லா மனிதருக்கும் ஆண்டவர் விதித்துள்ளார். பின்பு ஏன் உன்னத இறைவனின் விருப்பத்தை ஏற்க மறக்கிறாய்? நீ வாழ்ந்தது பத்து ஆண்டா, நூறு ஆண்டா, ஆயிரம் ஆண்டா என்பதுபற்றிப் பாதாளத்தில் கேள்வி எழாது.
5 பாவிகளின் மக்கள் அருவருப்புக்குரிய மக்களாவர்; இறைப்பற்றிலாதோரின் பதுங்கிடத்தில் அவர்கள் கூடுவர்.
6 பாவிகளுடைய மக்களின் உரிமைச்சொத்து அழிந்துபோகும்; அவர்களுடைய வழிமரபில் இகழ்ச்சியே நிலைக்கும்.
7 இறைப்பற்றில்லாத தந்தையைப் பற்றி மக்கள் முறையிடுவார்கள்; அவர்கள் அவரால் இகழ்ச்சி அடைவார்கள்.
8 இறைப்பற்றில்லாதவர்களே, ஐயோ, உங்களுக்குக் கேடு வரும்! உன்னத இறைவனின் திருச்சட்டத்தைக் கைவிட்டவர்களே, ஐயோ, உங்களுக்குக் கேடு வரும்!
9 நீங்கள் பிறந்தபோது சாபத்திற்குப் பிறந்தீர்கள்; நீங்கள் சாகும்போது சாபமே உங்கள் பங்காகும்.
10 மண்ணிலிருந்து வந்ததெல்லாம் மண்ணுக்கே திரும்பும்; இறைப்பற்றில்லாதோறும் சாபத்திலிருந்து அழிவுக்குச் செல்வர்.
11 மனிதர் தங்களது உடலைப் பற்றியே புலம்புவர். பாவிகளுடைய கெட்ட பெயர் துடைக்கப்படும்.
12 உன் பெயரைப்பற்றி அக்கறை கொள்; ஆயிரம் பெரிய பொற் புதையல்களை விட உனக்கு அது நிலைத்து நிற்கும்.
13 நல்வாழ்க்கை சில நாள்களே நீடிக்கும்; நற்பெயர் என்றென்றும் நிலைக்கும்.
14 குழந்தைகளே, நற்பயிற்சியை அமைதியாய்க் கடைப்பிடியுங்கள். மறைக்கப்பட்ட ஞானம், காணப்படாத புதையல் இவை இரண்டாலும் என்ன பயன்?
15 தம் ஞானத்தை மறைக்கும் மனிதரைவிடத் தம் மடமையை மறைக்கும் மானிடர் சிறந்தோர்.
16 ஆகவே எந்தெந்தச் சூழலில் நாணம் காக்கவேண்டும் என உங்களுக்குக் கூறுவேன்; சில வேளைகளில் நாணம் காப்பது நல்லதல்ல; எல்லாவகை நாணத்தையும் ஏற்றுக்கொள்ளலாகாது.
17 உங்கள் தாய் தந்தையர் முன்னிலையில் கெட்ட நடத்தைபற்றி நாணம் கொள்ளுங்கள்; ஆட்சியாளர்முன்னும் வலியோர் முன்னும் பொய்யைப் பற்றி வெட்கப்படுங்கள்.
18 நடுவர்முன்னும் ஆளுநர் முன்னும் குற்றத்தைப் பற்றியும், தொழுகைக் கூடத்திலும் மக்கள் முன்னும் சட்ட மீறல்பற்றியும்,
19 தோழர் முன்னும் நண்பர்முன்னும் அநீதிபற்றியும், நீங்கள் வாழ்கின்ற இடத்தில் திருட்டைப்பற்றியும்,
20 ஆணையையும் உடன்படிக்கையையும் முறித்தல்பற்றியும், உணவு மேசை மீது உன் முழங்கைகளை வைப்பதுபற்றியும்,
21 கொடுக்கும்போதும் வாங்கும்போதும் மதியாமை பற்றியும், வணக்கம் செலுத்துவோர்முன் அமைதி காத்தல் பற்றியும்,
22 விலைமாதரை நோக்குவதுபற்றியும், உறவினரின் விண்ணப்பத்தை புறக்கணிப்பது பற்றியும்,
23 அடுத்தவரின் பங்கையும் பரிசையும் பறித்துக்கொள்வதுபற்றியும், மணமான பெண்ணை உற்றுநோக்குவதுபற்றியும்
24 ஒருவருடைய பணிப் பெண்ணோடு தகாத பழக்கம் வைத்துக்கொள்வது பற்றியும், - அவளுடைய படுக்கையை நெருங்காதே -
25 நண்பர்களைத் திட்டுவதுபற்றியும், - அவர்களுக்கு அன்பளிப்பு வழங்கியபின் அவர்களை இகழாதே -
26 நீங்கள் கேள்வியுற்றதைத் திருப்பிச் சொல்வதுபற்றியும் இரகசியங்களை வெளிப்படுத்துவது பற்றியும் வெட்கப்படுங்கள்.
27 அப்போது நீங்கள் உண்மையான நாணம் கொள்வீர்கள்; எல்லா மனிதரின் பரிவும் உங்களுக்குக் கிடைக்கும்.
அதிகாரம் 42
1 பின்வருபவைபற்றி நாணம் கொள்ளாதே; மனிதருக்கு மட்டுமீறிய மதிப்பு அளிப்பதால் பாவம் செய்யாதே.
2 உன்னத இறைவனின் திருச்சட்டம் பற்றியும், உடன்படிக்கை பற்றியும், இறைப்பற்றில்லாதோரை விடுவிக்கும் தீர்ப்புப் பற்றியும்,
3 நண்பர்களோடும் வழிப்போக்கரோடும் உரையாடுவது பற்றியும், தோழர்களின் உரிமைச் சொத்திலிருந்து கொடுப்பது பற்றியும்,
4 சரியான துலாக்கோலையும் எடைகளையும் பயன்படுத்துவது பற்றியும், மிகுதியாகவோ குறைவாகவோ பொருள் ஈட்டுவதுவற்றியும்
5 வாணிபத்தில் வரும் ஆதாயம் பற்றியும், பிள்ளைகளை நன்கு பயிற்றுவது பற்றியும், கெட்ட அடிமையைக் குருதி சிந்த அடிப்பது பற்றியும் நாணம் கொள்ளாதே.
6 கெட்ட மனைவியைக் காவலில் வைத்திருப்பது நல்லது; பலர் இருக்கும் இடத்தில் பொருள்களைப் ப+ட்டிவை.
7 எதைக் கொடுத்தாலும் கணக்கிட்டு நிறுத்துக்கொடு; கொடுக்கல் வாங்கல் எல்லாவற்றையும் குறித்துவை.
8 அறிவிலிகளையும் மூடர்களையும் கூடா ஒழுக்கத்தில் ஈடுபட்டு குற்றம் புரியும் முதியோரையும் கண்டித்துத் திருத்துவதுபற்றி நாணம்கொள்ளாதே; அப்போது நீ உண்மையிலேயே நற்பயிற்சி பெற்றவனாய் இருப்பாய்; வாழ்வேர் அனைவருக்கும் ஏற்புடையவன் ஆவாய்.
9 தந்தை தம் மகளுக்கும் தெரியாமல் அவளைப்பற்றி விழிப்பாய் இருக்கிறார்; அவளைப்பற்றிய கவலை அவரது உறக்கத்தை விரட்டியடிக்கிறது. இளமையிலே அவளுக்குத் திருமணம் ஆகாமல் போய்விடுமோ எனவும் திருமணமானபின் அவள் வெறுக்கப்படுவாளோ எனவும் அவர் கவலைப்படுகிறார்.
10 கன்னிப்பருவத்திலேயே அவள் கெட்டுப்போகாதபடியும் தம் வீட்டிலேயே கருவுற்றவள் ஆகாதபடியும் கணவருடன் இருக்கும்போது நெறி தவறாதபடியும் திருமணமானபின் மலடி ஆகாதபடியும் அவர் கவலையாய் இருக்கிறார்.
11 அடக்கமற்ற மகள்மேல் கண்ணும் கருத்துமாய் இரு; இல்லையேல், பகைவரின் நகைப்புக்கும் நகரின் ஏச்சுக்கும் மக்களின் பேச்சுக்கும் அவள் உன்னை ஆளாக்குவாள்; நகர் மன்றத்தில் உன்னை வெட்கத்திற்கு உட்படுத்துவாள்.
12 அழகுக்காக எந்த மனிதரையும் நோக்காதே; பெண்களின் நடுவில் அமராதே.
13 ஆடையிலிருந்து அந்துப்பூச்சி தோன்றுகிறது; பெண்ணிடமிருந்தே பெண்ணின் ஒழுக்கக்கேடு வருகிறது.
14 பெண்ணே வெட்கத்தையும் இழிவையும் கொணர்கிறாள். இத்தகைய பெண் செய்யும் நன்மையை விட ஆண் செய்யும் தீமை பரவாயில்லை.
15 இப்போது ஆண்டவருடைய செயல்களை நினைவுபடுத்துவேன்; நான் கண்டவற்றை எடுத்துரைப்பேன். ஆண்டவருடைய சொல்லால் அவருடைய செயல்கள் உண்டாகின்றன.
16 ஒளிரும் கதிரவன் அனைத்தையும் காண்கின்றான். ஆண்டவருடைய செயல் அவருடைய மாட்சியால் நிறைந்துள்ளது.
17 அனைத்தையும் தமது மாட்சியில் நிலைநிறுத்திய எல்லாம் வல்ல ஆண்டவர், தம் வியத்தகு செயல்கள் எல்லாவற்றையும் எடுத்துரைக்கும்படி தம் தூயவர்களுக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை.
18 படுகுழியையும் மனித உள்ளத்தையும் அவர் ஊடுருவி நோக்குகிறார்; மனிதர்களுடைய சூழ்ச்சி நிறை எண்ணங்களை ஆராய்கிறார். அறியக்கூடியவற்றையெல்லாம் உன்னத இறைவன் அறிவார்; காலத்தின் குறிகளை உற்றுநோக்குகிறார்.
19 நிகழ்ந்தவற்றையும் இனி நிகழவிருப்பவற்றையும் அவர் தெரியப்படுத்துகிறார்; மறைந்திருப்பவற்றின் தடயத்தை வெளிப்படுத்துகிறார்.
20 எவ்வகை எண்ணமும் அவருக்குத் தெரியாமல் இருப்பதில்லை; ஒரு சொல்கூட அவருக்கு மறைந்திருப்பதில்லை.
21 அவர் தமது ஞானத்தின் அரும்பெரும் செயல்களை ஒழுங்குபடுத்தியுள்ளார்; அவரே என்றென்றும் இருக்கின்றவர். யாதொன்றும் கூட்டப்படுவதில்லை, குறைக்கப்படுவதுமில்லை; எவருடைய அறிவுரையும் அவருக்குத் தேவையில்லை.
22 அவருடைய செயல்கள் அனைத்தும் எத்துணை விரும்பத்தக்கவை! பார்ப்பதற்கு எத்துணைப் பளபளப்பானவை!
23 இவையெல்லாம் உயிரோடு இருக்கின்றன; எல்லாத் தேவைகளுக்காகவும் என்றும் நிலைத்திருக்கின்றன; எல்லாம் அடிபணிகின்றன.
24 எல்லாம் இரட்டையாய் உள்ளன; ஒன்று மற்றொன்றுக்கு எதிராய் இருக்கிறது. யாதொன்றையும் அவர் குறைபடச் செய்யவில்லை.
25 ஒன்று மற்றொன்றின் நன்மையை நிறைவுசெய்கிறது. அவருடைய மாட்சியை நிறைவாகக் காண்பவர் எவர்?
அதிகாரம் 43
1 உயர் வானத்தின் சிறப்பு தெளிந்த வான்வெளியே; வானகத்தின் தோற்றம் அதன் மாட்சியின் காட்சியே.
2 கதிரவன் தோன்றி எழும்போதே அறிவிக்கிறது. உன்னத இறைவனின் கைவேலையாகிய அது எத்துணை வியப்புக்கு உரியது!
3 அது நண்பகலில் நிலத்தைச் சுட்டெரிக்கிறது; அதனுடைய கடும் வெப்பத்தைத் தாங்கக் கூடியவர் எவர்?
4 சூளையைக் கவனிப்போர் கடும் வெப்பத்தில் வேலை செய்கின்றனர். கதிரவன் அதைவிட மும்மடங்காய் மலையை எரிக்கிறது; நெருப்புக் கதிர்களை வீசுகிறது; தன்னுடைய ஒளிக் கதிர்களால் கண்களைக் குருடாக்குகிறது.
5 அதனைப் படைத்தவர் மாபெரும் ஆண்டவர்! அவருடைய கட்டளையால் அது தன் வழியே விரைந்து செல்கிறது.
6 நிலவு எப்போதும் குறித்த காலத்தில் நேரத்தையும் காலத்தின் குறியையும் காட்டுகிறது.
7 நிலவைக்கொண்டே திருநாள்கள் குறிக்கப்படுகின்றன. அது வளர்ந்து முழுமை அடைந்தபின் தேய்கிறது.
8 அதனைக்கொண்டே மாதங்கள் பெயரிடப்படுகின்றன. அது வளர்மதியாக மாறும் வகை எத்துணை வியப்புக்கு உரியது! வான்படைகளுக்கு அடையாள ஒளியாக நின்று வான்வெளியில் அது மிளிர்கின்றது.
9 விண்மீன்களின் மாட்சியே வானத்துக்கு அழகு; உயர் வானத்தில் இருக்கும் ஆண்டவருடைய ஒளி மிகுந்த அணிகலன்.
10 தூய இறைவனின் கட்டளைப்படி அவை ஒழுங்காக இயங்குகின்றன; தங்களது விழிப்பில் அவை அயர்வதில்லை.
11 வானவில்லைப் பார்; அதை உண்டாக்கினவரைப் போற்று; அது ஒளிரும்போது எழில் மிகந்ததாய் இருக்கின்றது.
12 தனது மாட்சி மிகுந்த வில்லால் வானத்தை அது சுற்றி வளைக்கிறது; உன்னத இறைவனின் கைகளே அதை விரித்துவைத்தன.
13 ஆண்டவருடைய கட்டளைப்படி பனிபெய்கிறது; அவர்தம் முடிவுகளைச் செயல்படுத்த மின்னல்கள் விரைகின்றன.
14 ஆகையால் கருவூலங்கள் திறக்கப்படுகின்றன; பறவைகளைப்போல முகில்கள் பறக்கின்றன.
15 அவர் தமது வலிமையால் முகில்களுக்கு வலிமையூட்டுகிறார்; ஆலங்கட்டிகள் உடைந்து சிதறுகின்றன.
16 அவர் தோன்றும்போது மலைகள் நடுங்கின்றன; அவருடைய திருவுளத்தால் தென்றல் வீசுகிறது.
17 அவரது இடியின் ஓசை நிலத்தைத் துன்பத்தால் நௌpயச் செய்கிறது; வடக்கிலிருந்து வரும் புயற்காற்றும் சூறாவளியும் இவ்வாறே செய்கின்றன.
18 கீழே இறங்கும் பறவையைப்போல பனியை அவர் தூவிவிடுகிறார். உட்கார வரும் வெட்டுக்கிளியைப் போல் அது இறங்குகிறது; அதன் வெண்மையின் அழகைக் கண்டு கண் வியப்படைகிறது; அது பொழிவதைக் கண்டு உள்ளம் திகைக்கிறது.
19 அவர் உப்பைப்போல உறைபனியை நிலத்தின்மீது தெளிக்கிறார்; அது உறைகின்றபோது கூர்மையான முட்களைப்போல் ஆகின்றது.
20 வடக்கிலிருந்து வாடைக் காற்று வீசுகின்றது; தண்ணீர்மேல் பனி உறைகின்றது; அது ஒவ்வொரு நீர்நிலைமீதும் தங்குகின்றது; தண்ணீரும் அதை மார்புக்கவசமாய் அணிந்துகொள்கின்றது.
21 காற்று மலைகளை விழுங்குகிறது; பாலைநிலத்தைச் சுட்டெரிக்கிறது; தீயைப்போலப் பசுந்தளிர்களை எரிக்கிறது.
22 ஆனால் கார்முகில் விரைவில் எல்லாவற்றையும் நலமுறச் செய்கிறது; பனித் திவலைகள் விழும்போது வெப்பம் தணிகின்றது.
23 தமது திட்டத்தால் அவர் ஆழ்கடலை அமைதிப்படுத்தினார்; அதில் தீவுகளை அமைத்தார்.
24 கடலில் பயணம் செய்வோர் அதன் பேரிடர்களைக் கூறுகின்றனர்; நாம் காதால் கேட்டு வியப்படைகிறோம்.
25 அங்கே விந்தையான, வியப்புக்குரிய படைப்புகள் உள்ளன; எல்லாவகை உயிரினங்களும் கடலில் வாழும் மிகப் பெரிய விலங்குகளும் உள்ளன.
26 அவரால் அவருடைய தூதர் வெற்றி காண்பர்; அவருடைய சொல் அனைத்தையும் ஒருங்கிணைக்கும்.
27 நான் இன்னும் பல சொல்லலாம்; ஆயினும் முழுமையாய்ச் சொல்ல முடியாது; சுருங்கக் கூறின், அனைத்தும் அவரே!
28 ஆண்டவரை மாட்சிமைப்படுத்த எங்கிருந்து வலிமை பெறுவோம்? தம் படைப்புகள் எல்லாவற்றையும்விட அவர் பெரியவர்.
29 அவர் அஞ்சுவதற்கு உரியவர்; மிகப் பெரியவர்; அவருடைய வலிமை வியப்புக்குரியது.
30 ஆண்டவரை மாட்சிப்படுத்துங்கள்; உங்களால் முடியும் அளவிற்கு அவரை உயர்த்துங்கள். ஏனெனில் அவர் அதனினும் மேலானவர். உங்கள் வலிமையெல்லாம் கூட்டி அவரை உயர்த்துங்கள்; சோர்ந்துவிடாதீர்கள். ஏனெனில் போதிய அளவு அவரைப் புகழ முடியாது.
31 ஆண்டவரைக் கண்டவர் யார்? அவரைப்பற்றி எடுத்துரைப்பவர் யார்? அவர் உள்ளவாறே அவரைப் புகழ்ந்தேத்துபவர் யார்?
32 இவற்றினும் பெரியன பல மறைந்திருக்கின்றன; அவருடைய படைப்புகளில் சிலவற்றையே நாம் கண்டுள்ளோம்.
33 ஆண்டவரே அனைத்தையும் படைத்துள்ளார்; இறைப்பற்றுள்ளோருக்கு ஞானத்தை அருளியுள்ளார்.
அதிகாரம் 44
1 மேன்மை பொருந்திய மனிதரையும் நம் மூதாதையரையும் அவர்களது தலைமுறை வரிசைப்படி புகழ்வோம்.
2 தொடக்கத்திலிருந்தே ஆண்டவர் மிகுந்த மாட்சியையும் மேன்மையையும் படைத்துள்ளார்.
3 அவர்கள் தங்களுடைய நாடுகளில் ஆட்சி செலுத்தினார்கள்; தங்களது வலிமையால் நற்பெயர் பெற்றார்கள்; தங்களது அறிவுக்கூர்மையால் அறிவுரை வழங்கினார்கள்; இறைவாக்குகளை எடுத்துரைத்தார்கள்.
4 தங்கள் அறிவுரையாலும் சட்டம் பற்றிய அறிவுக் கூர்மையாலும் மக்களை வழிநடத்தினார்கள்; நற்பயிற்சியின் சொற்களில் ஞானிகளாய் இருந்தார்கள்.
5 இன்னிசை அமைத்தார்கள்; பாக்கள் புனைந்தார்கள்.
6 மிகுந்த செல்வமும் ஆற்றலும் கொண்டிருந்தார்கள்; தங்கள் இல்லங்களில் அமைதியுடன் வாழ்ந்தார்கள்.
7 அவர்கள் அனைவரும் தங்கள் வழிமரபில் மாட்சி பெற்றார்கள்; தங்கள் வாழ்நாளில் பெருமை அடைந்தார்கள்.
8 அவர்களுள் சிலர் புகழ் விளங்கும்படி தங்கள் பெயரை விட்டுச்சென்றார்கள்.
9 நினைவுகூரப்படாத சிலரும் உண்டு; வாழ்ந்திராதவர்கள்போன்று அவர்கள் அழிந்தார்கள்; பிறவாதவர்கள்போல் ஆனார்கள். அவர்களுக்குப்பின் அவர்கள் பிள்ளைகளும் அவ்வாறே ஆனார்கள்,
10 ஆனால் அவர்களும் இரக்கமுள்ள மனிதர்களே. அவர்களுடைய நேர்மையான செயல்கள் மறக்கப்படுவதில்லை.
11 தங்களது வழிமரபில் அவர்கள் நிலைத்;திருக்கிறார்கள். அவர்களுடைய உரிமைச்சொத்து அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் கிடைக்கும்.
12 அவர்களின் வழிமரபினர் உடன்படிக்கையின்படி நடக்கின்றனர்; அவர்கள் பொருட்டு அவர்களின் பிள்ளைகளும் அவ்வாறே நடப்பார்கள்.
13 அவர்களின் வழிமரபு என்றும் நிலைத்தோங்கும்; அவர்களின் மாட்சி அழிக்கப்படாது.
14 அவர்களுடைய உடல்கள் அமைதியாய் அடக்கம் செய்யப்பட்டன; அவர்களுடைய பெயர் முறை தலைமுறை தலைமுறைக்கும் வாழ்ந்தோங்கும்.
15 மக்கள் அவர்களுடைய ஞானத்தை எடுத்துரைப்பார்கள். அவர்களது புகழைச் சபையார் பறைசாற்றுவர்.
16 ஏனோக்கு ஆண்டவருக்கு உகந்தவரானார்; அவரால் எடுத்துக் கொள்ளப்பட்டார்; எல்லாத் தலைமுறைகளுக்கும் மனமாற்றத்தின் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
17 நோவா நிறைவுற்றவராகவும் நீதிமானாகவும் திகழ்ந்தார்; சினத்தின் காலத்தில் பரிகாரம் செய்தார்; வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, அவர் பொருட்டுச் சிலர் உலகில் விடப்பட்டார்கள்.
18 எவ்வுயிரும் வெள்ளப்பெருக்கால் இனி அழியக்கூடாது என்பதற்கு என்றுமுள உடன்படிக்கைகள் அவருடன் செய்யப்பட்டன.
19 ஆபிரகாம் பல மக்களினங்களுக்குக் குலமுதல்வராய்த் திகழ்ந்தார்; மாட்சியில் அவருக்கு இணையானவர் எவரையும் கண்டதில்லை.
20 உன்னத இறைவனின் திருச்சட்டத்தை அவர் கடைப்பிடித்தார்; அவரோடு உடன்படிக்கை செய்துகொண்டார்; அவ்வுடன்படிக்கையைத் தம் உடலில் நிலைக்கச் செய்தார்; சோதிக்கப்பட்டபோது பற்றுறுதி கொண்டவராக விளங்கினார்.
21 ஆதலால் அவருடைய வழிமரபு வழியாக மக்களினங்களுக்கு ஆசி வழங்குவதாகவும், நிலத்தின் புழுதியைப்போல் அவருடைய வழிமரபைப் பெருக்குவதாகவும், விண்மீன்களைப் போல் அவர்களை உயர்த்துவதாகவும், ஒரு கடலிலிருந்து மற்றொரு கடல்வரைக்கும், யூப்பிரத்தீசு ஆற்றிலிருந்து நிலத்தின் கடையெல்லைவரைக்கும் உள்ள நிலப்பரப்பை அவர்களுக்கு உரிமைச்சொத்தாக அளிப்பதாகவும் கடவுள் அவருக்கு ஆணையிட்டு உறுதி கூறினார்.
22 ஈசாக்கிடமும் அவருடைய தந்தை ஆபிரகாமை முன்னிட்டு அந்த உறுதிமொழியைக் கடவுள் புதுப்பித்தார்.
23 எல்லா மனிதருடைய ஆசியும் உடன்படிக்கையும் யாக்கோபின் தலைமீது தங்கச் செய்தார்; தம் ஆசிகளால் அவரை உறுதிப்படுத்தினார்; நாட்டை அவருக்கு உரிமைச் சொத்தாக வழங்கினார்; அவருடைய பங்குகளைப் பிரித்தார்; பன்னிரு குலங்களுக்கிடையே அவற்றைப் பகிர்ந்து கொடுத்தார்.
அதிகாரம் 45
1 யாக்கோபின் வழிமரபிலிருந்து இறைப்பற்றுள்ள ஒரு மனிதரைக் கடவுள் தோற்றுவித்தார்; அம்மனிதர் எல்லா உயிரினங்களின் பார்வையிலும் தயவு பெற்றார்; கடவுளுக்கும் மனிதருக்கும் அன்புக்குரியவரானார். அவரது நினைவு போற்றுதற்குரியது. அவரே மோசே!
2 கடவுள் தூய தூதர்களுக்கு இணையான மாட்சியை அவருக்கு வழங்கினார்; பகைவர்கள் அஞ்சும்படி அவரை மேன்மைப்படுத்தினார்;
3 அவருடைய சொற்களால் பிறர் செய்த வியத்தகு செயல்களை முடிவுக்குக் கொணர்ந்தார்; மன்னர்களின் முன்னிலையில் அவரை மாட்சிமைப்படுத்தினார்; தம் மக்களுக்காக அவரிடம் கட்டளைகளைக் கொடுத்தார்; தம் மாட்சியை அவருக்குக் காட்டினார்.
4 அவருடைய பற்றுறுதியையும் கனிவையும் முன்னிட்டு அவரைத் திருநிலைப்படுத்தினார்; மனிதர் அனைவரிடமிருந்தும் அவரைத் தெரிந்தெடுத்தார்.
5 ஆண்டவர் தம் குரலை மோசே கேட்கச் செய்தார்; கார்முகில் நடுவே அவரை நடத்திச் சென்றார்; நேரடியாக அவரிடம் கட்டளைகளைக் கொடுத்தார்; வாழ்வும் அறிவாற்றலும் தரும் திருச்சட்டத்தை அளித்தார்; இதனால் யாக்கோபுக்கு உடன்படிக்கை பற்றியும் இஸ்ரயேலுக்குக் கடவுளின் தீர்ப்புகள் பற்றியும் மோசே கற்றுக்கொடுக்கும்படி செய்தார்.
6 அடுத்து, ஆரோனைக் கடவுள் உயர்த்தினார்; அவர் மோசேயைப் போலவே தூயவர்; அவருடைய சகோதரர்; லேவியின் குலத்தைச் சேர்ந்தவர்.
7 அவருடன் என்றுமுள உடன்படிக்கை செய்தார்; மக்களுக்குப் பணி செய்யக் குருத்துவத்தை அவருக்கு வழங்கினார்; எழில்மிகு அணிகலன்களால் அவரை அழகுபடுத்தினார்; மாட்சியின் ஆடையை அவருக்கு அணிவித்தார்.
8 மேன்மையின் நிறைவால் அவரை உடுத்தினார்; குறுங்கால், சட்டை, நீண்ட ஆடை, "ஏபோது" ஆகிய அதிகாரத்தின் அடையாளங்களால் அவருக்கு வலிமையூட்டினார்.
9 அவருடைய ஆடையின் விளிம்பைச்சுற்றி அணிகலன்களும் பொன்மணிகளும் பொருத்தப்பட்டிருந்தன. இதனால் அவர் நடந்து செல்கையில் அவை ஒலி எழுப்பும்; தம் மக்களின் பிள்ளைகளுக்கு நினைவூட்டும்படி கோவிலில் அவற்றின் ஒலி கேட்கும்.
10 பூத்தையல் வேலைப்பாடு உடைய, பொன், நீலம், கருஞ் சிவப்பு நிறங்கள் கொண்ட திருவுடையை அவருக்குக் கொடுத்தார். உண்மையை அறிவிக்கக்கூடிய மார்புப்பட்டை அதில் இருந்தது. கைவினைஞரின் வேலைப்பாடாகிய சிவப்பு ஆடையால் அவரைப் போர்த்தினார்.
11 அந்த ஆடையில் பொற்கொல்லரின் வேலைப்பாடாகிய பொன் தகட்டுப் பின்னணியில் விலையுயர்ந்த கற்கள் முத்திரை போலப் பதிக்கப்பட்டிருந்தன. இஸ்ரயேலின் குலங்களினுடைய எண்ணிக்கையின் நினைவாக எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன.
12 தலைப்பாகை மீது பொன்முடி இருந்தது; தூய்மையின் முத்திரை அதில் பொறிக்கப்பட்டிருந்தது; அது பெருமைக்குரிய மதிப்புடையது; சிறந்த வேலைப்பாடு கொண்டது; கண்களுக்கு இனிமையானது, பெரிதும் அணி செய்யப்பட்டது.
13 இவற்றைப்போன்று அழகானவை அவருக்குமுன் இருந்ததில்லை; இவற்றை அன்னியர் எவரும் என்றும் அணிந்ததில்லை; அவருடைய மைந்தரும் வழிமரபினரும் மட்டுமே என்றும் அணிந்திருந்தார்கள்.
14 அவர் செலுத்திய பலிப்பொருள்கள் ஒவ்வொரு நாளும் இருமுறை தொடர்ந்து முழுமையாய் எரிக்கப்பட்டன.
15 மோசே ஆரோனைத் திருநிலைப்படுத்தினார்; தூய எண்ணெயால்; அவரைத் திருப்பொழிவு செய்தார்; அவரோடும் அவருடைய வழிமரபினரோடும் வானம் நீடித்திருக்கும்வரை நிலைத்திருக்கும் உடன்படிக்கையாக அதை ஏற்படுத்தினார்; ஆண்டவருக்குப் பணி செய்யவும் குருவாய் ஊழியம் புரியவும், அவரது பெயரால் அவருடைய மக்களுக்கு ஆசி வழங்கவும் இவ்வாறு செய்தார்.
16 ஆண்டவருக்குப் பலி செலுத்தவும் தூபத்தையும் நறுமணப்பலியையும் நினைவுப் பலியாய் ஒப்புக்கொடுக்கவும் அவருடைய மக்களுக்காகப் பாவக்கழுவாய் செய்யவும் வாழ்வோர் அனைவரிடமிருந்தும் அவரைத் தெரிந்தெடுத்தார்.
17 யாக்கோபுக்குச் சட்டங்களைக் கற்றுக் கொடுக்கவும் இஸ்ரயேலுக்குத் திருச்சட்டம் பற்றித் தெளிவுபடுத்தவும் ஆண்டவருடைய கட்டளைகள் மீதும் உடன்படிக்கையின் தீர்ப்புகள் மீதும் அவருக்கு அதிகாரம் அளித்தார்.
18 அன்னியர்கள் அவருக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்தார்கள்; பாலைநிலத்தில் அவர்மேல் பொறாமைப்பட்டார்கள்; தாத்தானும் அபிரோனும் அவர்களோடு இருந்தவர்களும் கோராகுவின் கூட்டாளிகளும்; தங்கள் சினத்திலும் சீற்றத்திலும் இவ்வாறு செய்தார்கள்.
19 ஆண்டவர் அதைப் பார்த்தார்; அதை அவர் விரும்பவில்லை. அவருடைய கடுஞ்சீற்றத்தால் அவர்கள் அழிந்தார்கள். எரியும் நெருப்பில் சட்டெரிப்பதற்காக அவர்களுக்கு எதிராய் அரியன செய்தார்.
20 அவர் ஆரோனின் மாட்சியை மிகுதிப்படுத்தினார்; அவருக்கு உரிமைச்சொத்தை அளித்தார்; முதற்கனிகளில் முதலானவற்றை அவருக்கென ஒதுக்கிவைத்தார்; காணிக்கை அப்பங்களைக்கொண்டு அவர்களுக்கு நிறைவாய் உணவு அளித்தார்.
21 தமக்குக் கொடுக்கப்பட்ட பலிப் பொருள்களையே ஆரோனும் அவருடைய வழிமரபினரும் உண்ணக் கொடுத்தார்.
22 தம் மக்களது நாட்டில் அவருக்கு உரிமைச்சொத்து கொடுக்கப்படவில்லை; அம்மக்கள் நடுவே அவருக்குப் பங்கு அளிக்கப்படவில்லை; ஆண்டவரே அவருடைய பங்கும் உரிமைச் சொத்தும் ஆவார்.
23 எலயாசர் மகன் பினகாசு மாட்சியின் மூன்றாம் நிலையில் இருக்கிறார்; ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் பேரார்வமிக்கவராய் இருந்தார்; ஆண்டவரைவிட்டு மக்கள் விலகிச் சென்றபோது இவர் நன்மனத்தோடு அவரை உறுதியாய்ப் பற்றி நின்றார்; இஸ்ரயேலுக்காகப் பாவக் கழுவாய் செய்தார்.
24 ஆதலால் ஆண்டவர் அவருடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டார்; திருவிடத்துக்கும் தம் மக்களுக்கும் தலைவராக்கினார்; அவருக்கும் அவருடைய வழிமரபினருக்கும் குருத்துவத்தின் மேன்மை என்றும் நிலைக்கும்படி செய்தார்.
25 மகனிலிருந்து மகனுக்கு மட்டுமே அரசுரிமை செல்ல, யூதாவின் குலத்தில் தோன்றிய ஈசாவின் மகன் தாவீதோடு ஆண்டவர் உடன்படிக்கை செய்துகொண்டார். அதுபோல் ஆரோனின் குருத்துவ உரிமை அவருடைய வழிமரபினரையே சேரும்.
26 ஆண்டவர் தம் மக்களை நீதியோடு தீர்ப்பிடுவதற்காக ஞானத்தை உங்கள் உள்ளங்களில் பொழிவாராக! இவ்வாறு அவர்களுடைய நலன்கள் அழியாதிருப்பனவாக; அவர்களுடைய மாட்சி எல்லாத் தலைமுறைகளுக்கும் நீடிப்பதாக.
அதிகாரம் 46
1 நூனின் மகன் யோசுவா போரில் வல்லவராய் இருந்தார்; இறைவாக்கு உரைப்பதில் மோசேயின் வழித்தோன்றல் ஆனார்; தமது பெயருக்கு ஏற்பப் பெரியவர் ஆனார்; ஆண்டவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை எதிர்த்துவந்த பகைவர்களைப் பழிக்குப் பழி வாங்கி மீட்பு வழங்கினார்; இவ்வாறு இஸ்ரயேலுக்கு உரிமைச்சொத்தை அளித்தார்.
2 தம் கைகளை உயர்த்திப் பகைவரின் நகரங்களுக்கு எதிராய் வாளை வீசிய போது எத்துணை மாட்சி அடைந்தார்!
3 அவருக்கு முன்னர் எவர் இவ்வாறு உறுதியாய் நின்றார்? ஆண்டவருடைய போர்களை அவரே முன்னின்று நடத்தினார்.
4 அவருடைய கையால் கதிரவன் நின்றுவிடவில்லையா? ஒரு நாள் இரு நாள் போல் ஆகவில்லையா?
5 பகைவர்கள் அவரைச் சூழ்ந்து நெருக்கியபோது வலியவரான உன்னத இறைவனை அவர் துணைக்கு அழைத்தார். கொடிய வலிமை கொண்ட ஆலங்கட்டிகளை மாபெரும் ஆண்டவர் அனுப்பி அவருக்குச் செவிசாய்த்தார்.
6 அவர் எதிரி நாட்டின்மீது போர்தொடுத்து அடக்கினார்; மலைச் சரிவில் தம்மை எதிர்த்தவர்களை அழித்தார். இவ்வாறு அந்த நாடு அவருடைய படைவலிமையை அறிந்து கொண்டது; அவர் ஆண்டவர் சார்பாகப் போரிட்டார் என்பதையும் தெரிந்துகொண்டது.
7 யோசுவா வலிமை பொருந்திய கடவுளைப் பின்தொடர்ந்தார்; மோசே காலத்தில் அவரைச் சார்ந்து நின்றார். அவரும் எபுன்னேயின் மகன் காலேபும் இஸ்ரயேல் சபையை எதிர்த்து நின்றார்; பாவத்திலிருந்து மக்களைத் தடுத்தனர்; நன்றி கொன்ற மக்களின் முறுமுறுப்பை அடக்கினர்.
8 ஆறு இலட்சம் காலாட்படையினருள் இவர்கள் இருவர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர்; பாலும் தேனும் பொழிவும் நாட்டை உரிமையாக்கிக் கொள்ள மக்களை அழைத்துவந்தனர்.
9 ஆண்டவர் வலிமையைக் காலேபுக்கு அளித்தார். முதுமைவரை அது அவரோடு இருந்தது. இதனால் அவர் மலைப்பாங்கான நிலத்திற்கு ஏறிச் சென்றார்; அதையே அவருடைய வழிமரபினர் உரிமையாக்கிக்கொண்டனர்.
10 ஆண்டவரைப் பின்தொடர்வது நல்லது என்பதை இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் இதனால் அறிவர்.
11 நீதித் தலைவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் தம் வழியில் பெயர் பெற்றிருந்தார்கள். அவர்களது உள்ளம் பிற தெய்வங்களை நாடவில்லை; அவர்கள் ஆண்டவரிடமிருந்து அகன்று போகவில்லை. அவர்களது புகழ் ஓங்குக!
12 அவர்களுடைய எலும்புகள் அவை கிடக்கும் இடத்திலிருந்து புத்துயிர் பெற்றெழுக! மாட்சி பெற்ற இம்மனிதரின் பெயர்கள் அவர்களுடைய மக்களிடையே நிலைத்தோங்குக!
13 சாமுவேல் தம் ஆண்டவரின் அன்புக்கு உரியவரானார்; ஆண்டவரின் இறைவாக்கினரான அவர் அரசை நிறுவினார்; தம் மக்களுக்கு ஆளுநர்களைத் திருப்பொழிவு செய்தார்;
14 ஆண்டவருடைய திருச்சட்டப்படி மக்களுக்குத் தீர்ப்பு வழங்கினார்; இவ்வாறு ஆண்டவர் யாக்கோபைக் கண்காணித்தார்.
15 தம் பற்றுறுதியால் அவர் இறைவாக்கினராக மெய்ப்பிக்கப்பெற்றார்; தம் சொற்களால் நம்பிக்கைக்குரிய காட்சியாளர் என்று பெயர் பெற்றார்.
16 பகைவர்கள் அவரைச் சூழ்ந்து நெருக்கியபோது வலியவரான ஆண்டவரை அவர் துணைக்கு அழைத்தார்; பால்குடி மறவா ஆட்டுக்குட்டியைப் பலி செலுத்தினார்;
17 ஆண்டவர் வானத்திலிருந்து இடி முழங்கச் செய்தார்; பேரொலியிடையே தம் குரல் கேட்கச் செய்தார்.
18 தீர் நாட்டாருடைய தலைவர்களையும் பெலிஸ்தியருடைய எல்லா ஆளுநர்களையும் அழித்தார்.
19 அவர் மீளாத் துயில் கொள்ளுமுன், "நான் சொத்துகளை, ஏன், காலணியைக்கூட எவரிடமிருந்தும் கைப்பற்றியதில்லை" என்று ஆண்டவர் முன்னிலையிலும் அவரால் திருப்பொழிவு பெற்றவர் முன்னிலையிலும் சான்று பகர்ந்தார். எவரும் அவரைக் குறை கூறவில்லை.
20 அவர் துயில் கொண்டபின்னும் இறைவாக்கு உரைத்தார்; மன்னருக்கு அவருடைய முடிவை வெளிப்படுத்தினார்; மக்களுடைய தீநெறியைத் துடைத்துவிட இறைவாக்காக மண்ணிலிருந்து தம் குரலை எழுப்பினார்.
அதிகாரம் 47
1 அவருக்குப் பின் நாத்தான் தோன்றினார்; தாவீதின் காலத்தில் இறைவாக்கு உரைத்தார்.
2 நல்லுறவுப் பலியிலிருந்து கொழுப்பு பிரிக்கப்படுவதுபோல், இஸ்ரயேல் மக்களிடமிருந்து தாவீது தெரிந்துகொள்ளப்பெற்றார்.
3 வெள்ளாடுகளுடன் விளையாடுவதுபோலச் சிங்கங்களுடன் விளையாடினார்; செம்மறியாடுகளுடன் விளையாடுவதுபோலக் கரடிகளுடன் விளையாடினார்.
4 பெருமை பாராட்டிய கோலியாத்தை நோக்கி இளைஞர் தாவீது தம் கைகளை ஓங்கிக் கவண்கல்லை வீசியபோது ஓர் அரக்கனைக் கொல்லவில்லையா? அதனால் மக்களது இழிநிலையை அகற்றவில்லையா?
5 வலிமைமிக்க மனிதனைப் போரில் கொன்று தம் மக்களின் வலிமையை உயர்த்த உன்னத இறைவனாகிய ஆண்டவரை அவர் துணைக்கு அழைத்தார்; ஆண்டவரும் அவருடைய வலக்கைக்கு வலிமையூட்டினார்.
6 இவ்வாறு அவர் முறியடித்த பத்தாயிரம் பேருக்காக மக்கள் அவரை மாட்சிமைப்படுத்தினர்; ஆண்டவருடைய ஆசிகளுக்காக அவரைப் புகழ்ந்தனர்; மாட்சியின் மணிமுடியை அவருக்குச் சூட்டினர்.
7 எப்புறமும் அவர் பகைவர்களைத் துடைத்தழித்தார்; எதிரிகளான பெலிஸ்தியரை அடக்கி ஒழித்தார்; அவர்களுடைய வலிமையை அறவே நசுக்கினார்.
8 தம் எல்லாச் செயல்களிலும் மாட்சியைச் சாற்றும் சொற்களால் உன்னத இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்; தம் முழு உள்ளத்தோடும் புகழ்ப்பா இசைத்தார்; தம்மைப் படைத்தவர்மீது அன்பு செலுத்தினார்.
9 தங்களுடைய குரலால் இன்னிசை எழுப்பப் பாடகர்களைப் பலிபீடத்திற்குமுன் நிற்கச் செய்தார்.
10 திருவிழாக்களைச் சீரோடும் சிறப்போடும் கொண்டாடச் செய்தார்; ஆண்டவருடைய திருப்பெயரை அவர்கள் புகழ்ந்து பாடுவதால் திருவிடம் வைகறையிலிருந்து எதிரொலிக்கும்படி ஆண்டு முழுவதும் காலங்களைக் குறித்தார்.
11 ஆண்டவர் அவருடைய பாவங்களை நீக்கினார்; அவருடைய வலிமையை என்றென்றைக்கும் உயர்த்தினார்; மன்னர்களின் உடன்படிக்கையையும் இஸ்ரயேலில் மாட்சியின் அரியணையையும் அவருக்குக் கொடுத்தார்.
12 தாவீதுக்குப்பின் அறிவாற்றல் கொண்ட அவருடைய மகன் சாலமோன் தோன்றினார்; தாவீதின் பொருட்டு அவர் பாதுகாப்புடன் வாழ்ந்தார்.
13 சாலமோன் அமைதியான காலத்தில் அரசாண்டார்; கடவுள் பெயருக்கு ஓர் இல்லம் எழுப்பவும் ஒரு திரு இடத்தை என்றென்றைக்கும் ஏற்பாடு செய்யவும் எல்லைகளெங்கும் அவருக்கு அமைதி அளித்தார்.
14 நீர் உம் இளமையில் எவ்வளவோ ஞானியாய் இருந்தீர்! ஆற்றைப்போல் அறிவுக்கூர்மையால் நிரம்பி வழிந்தீர்!
15 உமது செல்வாக்கு மண்ணுலகெங்கும் பரவியது. உவமைகளாலும் விடுகதைகளாலும் அதை நிரப்பினீர்.
16 உமது பெயர் தொலைவில் இருந்த தீவுகளையும் எட்டியது; உம் அமைதியின் பொருட்டு நீர் அன்பு பாராட்டப்பட்டீர்.
17 உம் பாடல்கள், நீதிமொழிகள், உவமைகள், விளக்கங்கள் ஆகியவற்றைக் கேட்டு நாடுகள் வியப்படைந்தன.
18 இஸ்ரயேலின் கடவுள் என அழைக்கப்பெறும் கடவுளாம் ஆண்டவர் பெயரால் பொன்னை வெள்ளீயத்தைப் போலவும் வெள்ளியை ஈயத்தைப் போலவும் குவித்தீர்.
19 ஆனால் பெண்களோடு புணர்ச்சியால் ஈடுபட்டீர் உம் உடல்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தீர்;.
20 உமது மாட்சிக்கு மாசு வருவித்தீர்; உமது வழிமரபைக் கறைப்படுத்தினீர்; உம் பிள்ளைகள்மீது சினத்தை வருவித்தீர்; உம் அறிவின்மைக்காக அவர்கள் வருந்தினார்கள்.
21 இதனால் அரசு இரண்டாக உடைந்தது; அடங்காத அரசு ஒன்று எப்ராயிமிலிருந்து தோன்றியது.
22 ஆண்டவர் இரக்கங் காட்ட மறுக்கமாட்டார்; சொன்ன சொல் தவறமாட்டார். தாம் தெரிந்து கொண்டோரின் வழிமரபினரைத் துடைத்தழிக்கமாட்டார்; தம்மிடம் அன்பு பாராட்டுவோரின் வழித் தோன்றல்களை அழித்தொழிக்க மாட்டார்; எஞ்சியோரை யாக்கோபுக்குக் கொடுத்தார்; தாவீதின் குடும்பத்திலும் ஒரு வேரை விட்டுவைத்தார்.
23 சாலமோன் தம் முன்னோரோடு துயில்கொண்டார்; மக்களுக்குள்ளேயே அறிவிலியும் மதி குறைந்தவனுமான ரெகபெயாமைத் தமக்குப்பின் தம் வழிமரபில் விட்டுச் சென்றார். அந்த ரெகபெயாம் தன் அறிவுரையால் மக்கள் கிளர்ச்சி செய்யத் தூண்டிவிட்டான்.
24 அப்போது நெபாத்து மகன் எரொபவாம் தோன்றினான்; இஸ்ரயேலைப் பாவம் செய்யத் தூண்டினான்; எபிராயிமுக்குப் பாவ வழியைக் காட்டினான். அவர்களுடைய பாவங்கள் மேன்மேலும் பெருகின. அவர்கள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
25 ஆண்டவர் அவர்களைப் பழிவாங்கும்வரை அவர்கள் எல்லா வகைத் தீமைகளையும் தேடி அலைந்தார்கள்.
அதிகாரம் 48
1 இறைவாக்கினர் எலியா நெருப்புபோல எழுந்தார்; தீவட்டிபோல் அவருடைய சொல் பற்றியெரிந்தது.
2 மக்கள் மீது பஞ்சம் வரச் செய்தார்; தம் பற்றார்வத்தால் அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார்.
3 ஆண்டவருடைய சொல்லால் வானம் பொழிவதை நிறுத்தினார்; மும்முறை நெருப்பு விழச் செய்தார்.
4 எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை மாட்சிக்குரியவர்! உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்?
5 இறந்தவரை உன்னத இறைவனின் சொல்லால் இறப்பினின்றும் பாதாளத்தினின்றும் எழச்செய்தீர்.
6 மன்னர்களை அழிவுக்கு உட்படுத்தினீர்; மேன்மைமிக்கவர்களைப் படுத்த படுக்கையாக்கி வீழ்த்தினீர்.
7 கடுஞ் சொல்லைச் சீனாய் மலைமீதும் பழி வாங்கும் தீர்ப்பை ஓரேபு மலைமீதும் கேட்டீர்.
8 பழிதீர்க்கும்படி மன்னர்களைத் திருப்பொழிவு செய்தீர்; உம் வழித்தோன்றல்களாக இறைவாக்கினர்களை ஏற்படுத்தினீர்.
9 தீச்சூறாவளியில் நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் நீர் எடுத்துக்கொள்ளப்பட்டீர்.
10 ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும் தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும் யாக்கோபின் குலங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் குறித்த காலங்களில் நீர் கடிந்து கொள்வீர் என்று எழுதப்பட்டுள்ளது.
11 உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில் துயில் கொண்டவர்களும் பேறுபெற்றோர். நாமும் வாழ்வது உறுதி.
12 எலியா சூறாவளி சூழ மறைந்தார்; எலிசா அவருடைய ஆவியால் நிறைவுபெற்றார்; எலிசா தம் வாழ்நாளில் எந்தத் தலைவருக்கும் அஞ்சவில்லை; அவரை அடிபணிய வைக்க எவராலும் முடியவில்லை.
13 அவரால் முடியாதது ஒன்றுமில்லை; இறந்த பிறகும் அவரது உடல் இறைவாக்கு உரைத்தது.
14 அவர் தம் வாழ்நாளில் அரியன செய்தார்; இறப்பில் அவருடைய செயல்கள் வியப்புக்குரியனவாய் இருந்தன.
15 இவை யாவும் கண்டும் மக்கள் மனம் மாறவில்லை. அவர்கள் கைதிகளாக நாடு கடத்தப்பட்டு, மண்ணுலகெங்கும் சிதறடிக்கப்பட்டவரையிலும் தங்கள் பாவங்களை விட்டு விலகவில்லை.
16 மக்களுள் சிலரும் தாவீதின் வீட்டைச் சேர்ந்த தலைவர்களும் காப்பாற்றப்பட்டனர்; அவர்களுள் சிலர் கடவுளுக்கு விருப்பமானதைச் செய்தனர்; வேறு சிலர் மேன்மேலும் பாவம் செய்தனர்.
17 எசேக்கியா தம் நகரை அரண் செய்து வலிமைப்படுத்தினார்; அதன் நடுவே தண்ணீர் கொண்டுவந்தார்; இரும்புக் கருவிகளைக் கொண்டு பாறையில் சுரங்க வழி அமைத்தார்; தண்ணீர்த் தொட்டிகளை அமைத்தார்.
18 அவருடைய ஆட்சிக் காலத்தில் சனகெரிபு படையெடுத்து வந்தான்; இரபிசாகேயை அனுப்பிவிட்டுப் பிரிந்து சென்றான். சீயோனை ஒரு கை பார்த்துவிடுவதாக அவன் சவால்விட்டான்; இறுமாப்பினால் பெருமை பாராட்டலானான்.
19 இஸ்ரயேலருடைய உள்ளங்களும் கைகளும் நடுங்கின. பேறுகாலப் பெண்களைப்போல் அவர்கள் துன்பம் அடைந்தார்கள்.
20 அவர்கள் இரக்கமுள்ள ஆண்டவரை நோக்கித் தங்கள் கைகளை விரித்து அவரைத் துணைக்கு அழைத்தார்கள். தூய இறைவன் விண்ணகத்திலிருந்து அவர்களுக்கு உடனே செவிசாய்த்தார்; எசாயா வழியாய் அவர்களை விடுவித்தார்.
21 அசீரியர்களுடைய பாசறையைத் தாக்கினார்; வானதூதர் அவர்களைத் துடைத்தழித்தார்.
22 ஆண்டவருக்கு விருப்பமானதை எசேக்கியா செய்தார்; பெரியவரும் காட்சிகளைக் கண்டவருமான நம்பிக்கைக்குரிய இறைவாக்கினர் எசாயா கட்டளையிட்டபடி எசேக்கியா தம் மூதாதையாகிய தாவீதின் நெறிகளில் உறுதியாக நின்றார்.
23 எசாயா காலத்தில் கதிரவன் பின் நோக்கிச் சென்றான். அவர் மன்னருடைய வாழ்வை நீடிக்கச் செய்தார்.
24 ஆவியின் ஏவதலால் இறுதியில் நிகழவிருப்பதைக் கண்டார்; சீயோனில் புலம்பியழுதவர்களைத் தேற்றினார்.
25 இறுதிக் காலம் வரை நிகழவிருப்பனவற்றையும் மறைந்திருப்பனவற்றையும் அவை நடப்பதற்குமுன்னரே வெளிப்படுத்தினார்.
அதிகாரம் 49
1 யோசியாவின் நினைவு, நறுமணப் பொருள் தயாரிப்பவரால் செய்யப்பட்ட தூபக் கலவைபோன்றது; எல்லாருடைய வாயிலும் தேனைப்போலும், திராட்சை இரசம் பரிமாறப்படும் விருந்தின் இன்னிசைபோலும் இனியது.
2 மக்களைச் சீர்படுத்துவதில் நேர்மையாக நடந்துகொண்டார்; தீநெறியின் அருவருப்பை நீக்கினார்.
3 ஆண்டவரிடம் தம் உள்ளத்தைச் செலுத்தினார்; தீநெறியாளர்களின் காலத்தில் வாழ்ந்த இறைப்பற்றுள்ளோரை உறுதிப்படுத்தினார்.
4 தாவீது, எசேக்கியா, யோசியா, ஆகியோரைத்தவிர மற்ற அனைவரும் பாவத்திற்குமேல் பாவம் செய்தனர். ஏனெனில் உன்னத இறைவனின் திருச்சட்டத்தைக் கைவிட்டனர்; யூதாவின் மன்னர்களும் மறைந்துபோயினர்.
5 அவர்கள் தங்களுடைய வலிமையைப் பிறருக்கு விட்டுக்கொடுத்தார்கள்; தங்களுடைய மாட்சியை அயல் நாட்டாருக்குக் கையளித்தார்கள்.
6 திருவிடம் அமைந்திருந்த தெரிந்தெடுக்கப்பட்ட நகரை அவர்கள் தீக்கிரையாக்கினார்கள்; எரேமியா கூறியபடி அதன் தெருக்களைப் பாழாக்கினார்கள்.
7 தாயின் வயிற்றிலேயே இறைவாக்கினராகத் திருநிலைப்படுத்தப்பெற்று, பிடுங்கவும் துன்புறுத்தவும் இடிக்கவுமின்றி, கட்டியெழுப்பவும் நட்டுவைக்கவும் ஏற்படுத்தப்பெற்ற எரேமியாவை அவர்கள் கொடுமையாய் நடத்தினார்கள்.
8 எசேக்கியால் கடவுளுடைய மாட்சியின் காட்சியைக் கண்டார்; கெருபுகள் தாங்கின தேரின்மேல் மிளிர்ந்த அம்மாட்சியை ஆண்டவர் அவருக்குக் காட்டினார்.
9 பகைவர்களை நினைவுகூர்ந்து புயலை அனுப்பினார்; நேரிய வழியில் நடந்தோருக்கு நலன்கள் புரிந்தார்.
10 பன்னிரண்டு இறைவாக்கினர்களின் எலும்புகள் அவர்களது கல்லறையிலிருந்து புத்துயிர் பெற்றெழுக. அவர்கள் யாக்கோபின் குலத்தாரைத் தேற்றினார்கள்; பற்றுறுதி கொண்ட நம்பிக்கையால் அவர்களை விடுவித்தார்கள்.
11 செருபாபேலை எவ்வாறு நாம் மேன்மைப்படுத்துவோம்? வலக்கையின் கணையாழிபோல் அவர் திகழ்ந்தார்.
12 அவரைப்போலவே யோசதாக்கின் மகன் யோசுவாவும் விளங்கினார். அவர்கள் தங்கள் காலத்தில் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டினார்கள்; என்றுமுள மாட்சிக்கென நிறுவப்பட்ட திருக்கோவிலை ஆண்டவருக்கு எழுப்பினார்கள்.
13 நெகேமியாவின் நினைவும் பெருமைக்குரியது. இடிந்து விழுந்த மதில்களை அவர் நமக்காக எழுப்பினார்; கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் பொருத்தினார்; நம் இல்லங்களை மீண்டும் கட்டினார்.
14 ஏனோக்குபோன்ற எவரும் மண்ணுலகின்மீது படைக்கப்படவில்லை. அவர் நிலத்திலிருந்து மேலே எடுத்துக் கொள்ளப்பெற்றார்.
15 யோசேப்பைப் போன்றவர் எவரும் பிறந்ததில்லை; அவர் சகோதரர்களின் தலைவராகவும் மக்களின் ஊன்றுகோலாகவும் திகழ்ந்தார். அவருடைய எலும்புகளும் காக்கப்பட்டன.
16 சேம், சேத்து ஆகியோர் மனிதருக்குள் மாட்சிமைப்படுத்தப்பெற்றனர். படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுள்ளும் ஆதாம் சிறந்து விளங்குகிறார்.
அதிகாரம் 50
1 ஓனியாவின் மகன் சீமோன் தலைமைக் குருவாய்த் திகழ்ந்தார்; அவர் தம் வாழ்நாளில் ஆண்டவருடைய இல்லத்தைப் பழுதுபார்த்தார்; தமது காலத்தில் கோவிலை வலிமைப்படுத்தினார்.
2 அவர் உயரமான இரட்டைச் சுவருக்கு அடிக்கல் நாட்டினார்; கோவிலைச்சுற்றி உயர்ந்த சுவர் அணைகளை அமைத்தார்.
3 அவருடைய காலத்தில் நீர்த் துறை ஒன்று தோண்டப்பட்டது. அந்நீர்த்தேக்கம் கடலைப்போன்று பரந்தது.
4 தம் மக்களை அழிவினின்று காப்பாற்றக் கருத்தாயிருந்தார்; முற்றுகையை எதிர்த்து நிற்க நகரத்தை வலிமைப்படுத்தினார்.
5 திரையிட்டியிருந்த தூயகத்திலிருந்து அவர் வெளியே வந்த வேளையில் மக்கள் அவரைச் சூழ்ந்து நின்றபோது எத்துணை மாட்சிமிக்கவராய்த் திகழ்ந்தார்!
6 முகில்களின் நடுவே தோன்றும் விடிவெள்ளி போன்று விளங்கினார்; விழாக் காலத்தில் தெரியும் முழு நிலவுபோல் ஒளி வீசினார்.
7 உன்னத இறைவனின் கோவிலுக்குமேல் ஒளிரும் கதிரவன் போலவும் மாட்சிமிகு முகில்களில் பளிச்சிடும் வானவில் போலவும் காணப்பட்டார்.
8 முதற்கனிகளின் காலத்தில் மலரும் ரோசாபோன்றும், நீரூயஅp;ற்றின் ஓரத்தில் அலரும் லீலி மலர்போன்றும் கோடைக்காலத்தில் தோன்றும் லெபனோனின் பசுந்தளிர்போன்றும் திகழ்ந்தார்.
9 தூபக் கிண்ணத்தில் இருக்கும் தீயும் சாம்பிராணியும் போலவும் எல்லாவகை விலையுயர்ந்த கற்களாலும் அணி செய்த பொற்கலத்தைப்போலவும் விளங்கினார்.
10 கனி செறிந்த ஒலிவ மரம்போலவும் முகிலை முட்டும் சைப்பிரசுமரம்போலவும் இருந்தார்.
11 அவர் மாட்சியின் ஆடை அணிந்து பெருமைக்குரிய அணிகலன்கள் புனைந்து தூய பலிபீடத்தில் ஏறியபோது திருஇடம் முழுவதையும் மாட்சிப்படுத்தினார்.
12 எரிபலி பீடத்தின் அருகே அவர் நிற்க, மற்றக் குருக்கள் மாலைபோல் அவரைச் சூழ்ந்து கொள்ள, அவர் அவர்களின் கைகளிலிருந்து பலியின் பாகத்தைப் பெற்றுக் கொண்டபோது, லெபனோனின் இளங் கேதுரு மரம்போல விளங்கினார். அவர்கள் பேரீச்சைமரம்போல் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள்.
13 ஆரோனின் மைந்தர்கள் எல்லாரும் தங்களது மாட்சியில் ஆண்டவருக்குரிய காணிக்கைகளைத் தங்கள் கைகளில் ஏந்தி இஸ்ரயேலின் சபை முழுவதற்கும் முன்பாக நின்றார்கள்.
14 சீமோன் பலிபீடப் பணிகளை முடித்துக்கொண்டு, எல்லாம் வல்ல உன்னத இறைவனுக்குச் செலுத்தவேண்டிய காணிக்கையை ஒழுங்குபடுத்தினார்.
15 பின் தமது கையை நீட்டிக் கிண்ணத்தை எடுத்தார்; திராட்சை இரசத்தை அதில் வார்த்தார்; பீடத்தின் அடியில் அதை ஊற்றினார். அது அனைத்திற்கும் மன்னரான உன்னதருக்கு உகந்த நறுமணப் பலியாய் அமைந்தது.
16 அதன்பின் ஆரோனின் மைந்தர்கள் ஆர்ப்பரித்தார்கள்; வெள்ளியாலான எக்காளங்களை முழங்கினார்கள்; உன்னத இறைவனை நினைவுபடுத்தப் பேரொலி எழச் செய்தார்கள்.
17 எல்லா மக்களும் ஒன்றுசேர்ந்து விரைந்தார்கள்; தரையில் குப்புற விழுந்தார்கள்; எல்லாம் வல்ல உன்னத ஆண்டவரை வணங்கினார்கள்.
18 பாடகர்கள் தங்கள் குரல்களால் அவரைப் புகழ்ந்தார்கள்; அதன் பேரொலி இன்னிசையாய் எதிரொலித்தது.
19 ஆண்டவருக்குரிய வழிபாட்டுமுறை முடியும்வரை இரக்கமுள்ளவர் திருமுன் மக்கள் வேண்டினார்கள்; உன்னத ஆண்டவரை மன்றாடினார்கள். அதனோடு அவருடைய திருப்பணி நிறைவு பெற்றது.
20 ஆண்டவருடைய பெயரில் பெருமை கொள்ளவும் அவருடைய ஆசியைத் தம் வாயால் மொழியவும் சீமோன் இறங்கி வந்து இஸ்ரயேல் மக்களின் முழுச் சபைமீதும் தம் கைகளை உயர்த்தினார்.
21 உன்னத கடவுளிடமிருந்து ஆசி பெற்றுக்கொள்ள அவர்கள் மீண்டும் தலை தாழ்த்தி வணங்கினார்கள்.
22 இப்பொழுது அண்டத்தின் கடவுளைப் போற்றுங்கள்; எல்லா இடங்களிலும் அரியன பெரியன செய்பவரை, பிறப்பிலிருந்து நம் வாழ்வை மேன்மைப்படுத்துபவரை, தம் இரக்கத்திற்கு ஏற்ப நம்மை நடத்துகிறவரைப் புகழுங்கள்.
23 அவர் நமக்கு மனமகிழ்ச்சியை அளிப்பாராக; இஸ்ரயேலில் முந்திய நாள்களில் இருந்ததுபோல நம் நாள்களிலும் அமைதி நிலவுவதாக.
24 அவருடைய இரக்கம் நம்முடன் என்றும் இருப்பதாக; நம் நாள்களில் அவர் நம்மை விடுவிப்பாராக.
25 இரண்டு வகை மக்களினத்தாரை என் உள்ளம் வெறுக்கிறது; மூன்றாம் வகையினர் மக்களினத்தாரே அல்ல.
26 அவர்கள்; சமாரியா மலைமீது வாழ்வோர், பெலிஸ்தியர், செக்கேமில் குடியிருக்கும் அறிவற்ற மக்கள்.
27 எருசலேம்வாழ் எலயாசரின் மகனான சீராக்கின் மைந்தர் ஏசுவாகிய நான் ஞானத்தை என் உள்ளத்திலிருந்து பொழிந்தேன்; கூர்மதியையும் அறிவாற்றலையும் தரும் நற்பயிற்சி அடங்கியுள்ள இந்நூலை எழுதியுள்ளேன்.
28 இவற்றில் ஈடுபாடு காட்டுவோர் பேறுபெற்றோர்; தம் உள்ளத்தில் இவற்றை இருத்துவோர் ஞானியர் ஆவர்.
29 இவற்றைக் கடைப்பிடிப்போர் அனைத்திலும் ஆற்றல் பெறுவர். ஆண்டவருடைய ஒளியே அவர்களுக்கு வழி.
அதிகாரம் 51
1 மன்னராகிய ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துவேன்; என் மீட்பராகிய கடவுளே, உம்மைப் புகழ்வேன்; உமது பெயருக்கு நன்றி சொல்வேன்.
2 நீரே என் பாதுகாவலரும் துணைவரும் ஆனீர்; அழிவிலிருந்து என் உடலைக் காப்பாற்றினீர்; பழிகூறும் நாவின் கண்ணியிலிருந்தும் பொய்யை உருவாக்கும் உதடுகளிலிருந்தும் விடுவித்தீர்; என்னை எதிர்த்து நின்றவர்முன் நீரே என் துணையானீர்; என்னை விடுவித்தீர்.
3 உம் இரக்கப் பெருக்கத்திற்கும் பெயருக்கும் ஏற்ப, என்னைக் கடிந்து விழுங்கத் துடித்தவர்களின் பற்களிலிருந்தும் என் உயிரைப் பறிக்கத் தேடியவர்களின் கைகளிலிருந்தும் நான் பட்ட பல துன்பங்களிலிருந்தும் என்னை விடுவித்தீர்.
4 என்னைச் சூழ்ந்துகொண்டு திணறடித்த தீயினின்றும் நான் மூட்டிவிடாத நெருப்பின் நடுவினின்றும் என்னைக் காப்பாற்றினீர்.
5 பாதாளத்தின் ஆழத்தினின்றும் மாசு படிந்த நாவினின்றும் பொய்ச் சொற்களினின்றும் என்னைக் காத்தீர்.
6 மன்னரிடம் பழி சாற்றும் அநீதியான நாவினின்றும் என்னை விடுவித்தீர். என் உயிர் சாவை நெருங்கி வந்தது; என் வாழ்க்கை ஆழ்ந்த பாதாளத்தின் அண்மையில் இருந்தது.
7 என்னை எப்புறத்திலும் அவர்கள் வளைத்துக்கொண்டோர்கள். எனக்கு உதவி செய்வோர் யாருமில்லை. மனிதரின் உதவியைத் தேடினேன்; உதவ யாருமில்லை.
8 அப்போது ஆண்டவரே, உம் இரக்கத்தையும், என்றென்றும் நீர் ஆற்றிவரும் செயல்களையும் நினைவுகூர்ந்தேன்; உமக்காகக் காத்திருப்போரை எவ்வாறு விடுவிக்கிறீர் என்பதையும் பகைவரின் கையிலிருந்து அவர்களை எவ்வாறு மீட்கீறிர் என்பதையும் எண்ணிப்பார்த்தேன்.
9 என் மன்றாட்டுகளை மண்ணுலகிலிருந்து எழுப்பினேன்; சாவிலிருந்து விடுவிக்க வேண்டினேன்.
10 "என் ஆண்டவரின் தந்தாய், என் துன்ப நாள்களிலும் செருக்குற்றோருக்கு எதிராய் எனக்கு உதவியே இல்லாத காலத்திலும் என்னைப் புறக்கணியாதீர். இடைவிடாமல் உம் பெயரைப் புகழ்வேன்; நன்றிப் பாடல் பாடுவேன்" என்று சொல்லி ஆண்டவரை வேண்டினேன்.
11 என் மன்றாட்டு கேட்கப்பட்டது. அழிவிலிருந்து நீர் என்னை மீட்டீர்; தீங்கு விளையும் நேரத்திலிருந்து என்னை விடுவித்தீர்.
12 இதன்பொருட்டு உமக்கு நன்றி கூறுவேன்; உம்மைப் புகழ்வேன்; ஆண்டவருடைய பெயரைப் போற்றுவேன்.
13 நான் இளைஞனாய் இருந்தபோது, பயணம் மேற்கொள்ளுமுன் என்னுடைய வேண்டுதலில் வெளிப்படையாய் ஞானத்தைத் தேடினேன்.
14 கோவில்முன் அதற்காக மன்றாடினேன்; இறுதிவரை அதைத் தேடிக்கொண்டேயிருப்பேன்.
15 திராட்சை மலரும் காலத்திலிருந்து கனியும் காலம்வரை என் உள்ளம் ஞானத்தில் இன்புற்றிருந்தது; என் காலடிகள் நேரிய வழியில் சென்றன. என் இளமையிலிருந்தே ஞானத்தைப் பின்தொடர்ந்தேன்.
16 சிறிது நேரமே செவி சாய்த்து அதைப் பெற்றுக் கொண்டேன்; மிகுந்த நற்பயிற்சியை எனக்கெனக் கண்டடைந்தேன்.
17 ஞானத்தில் நான் வளர்ச்சி அடைந்தேன்; எனக்கு ஞானம் புகட்டுகிறவர்களுக்கு நான் மாட்சி அளிப்பேன்.
18 ஞானத்தைக் கடைப்பிடிக்க முடிவு செய்தேன்; நன்மைமீது பேரார்வம் கொண்டேன்; நான் ஒருபோதும் வெட்கமுறேன்.
19 நான் ஞானத்தை அடையப் போராடினேன்; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் கண்டிப்புடன் இருந்தேன்; உயர் வானத்தை நோக்கி என் கைகளை உயர்த்தினேன்; ஞானத்தை நான் இதுவரை அறியாதிருந்தது பற்றிப் புலம்பினேன்.
20 அதன்பால் என் உள்ளத்தைச் செலுத்தினேன்; தூய்மையில் அதைக் கண்டுகொண்டேன்; தொடக்கத்திலிருந்தே என் உள்ளத்தை அதன்மேல் பதித்தேன்; இதன்பொருட்டு நான் என்றுமே கைவிடப்படேன்.
21 என் உள்மனம் அதைத் தேடி அலைந்தது. இதனால் நான் நல்லதொரு சொத்தினைப் பெற்றுக்கொண்டேன்.
22 ஆண்டவர் எனக்கு நாவைப் பரிசாகக் கொடுத்தார். அதைக்கொண்டு நான் அவரைப் புகழ்வேன்.
23 நற்பயிற்சி பெறாதோரே, என் அருகே வாருங்கள்; நற்பயிற்சியின் இல்லத்தில் தங்குங்கள்.
24 "இவற்றில் நாங்கள் குறையுள்ளவர்களாய் இருக்கிறோம்" என ஏன் சொல்கிறீர்கள்? உங்கள் உள்ளம் பெரிதும் தவிப்பது ஏன்?
25 நான் வாய் திறந்து சொன்னேன்; "பணம் இல்லாமலேயே உங்களுக்கென ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்;
26 ஞானத்தின் நுகத்தைத் தலை தாழ்த்தி ஏற்றுக்கொள்ளுங்கள்; உங்கள் கழுத்துகளை வளைந்து கொடுங்கள். உங்கள் உள்ளம் நற்பயிற்சிபெறுவதாக. அருகிலேயே அதைக் கண்டுகொள்ளலாம்.
27 உங்கள் கண்களால் பாருங்கள்; நான் சிறிதே முயன்றேன்; மிகுந்த ஓய்வை எனக்கெனக் கண்டுகொண்டேன்.
28 மிகுந்த பொருள் கொடுத்து நற்பயிற்சியைப் பெற்றுக்கொள்ளுங்கள்; அதனால் பெருஞ்செல்வத்தை அடைந்து கொள்வீர்கள்.
29 ஆண்டவரின் இரக்கத்தில் உங்கள் உள்ளம் மகிழ்ச்சி கொள்வதாக; அவரைப் புகழ்வதில் என்றும் நாணம் கொள்ளாதிருப்பீர்களாக.
30 குறித்த காலத்திற்குமுன்பே உங்கள் பணிகளைச் செய்துமுடியுங்கள். அவ்வாறாயின் குறித்த காலத்தில் கடவுள் உங்களுக்குப் பரிசு வழங்குவார்.
திருவிவிலியம், திருவிவிலியம் bible in tamil, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு, திருவிவிலியம் கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, திருவிவிலியம் வரலாறு, கத்தோலிக்க திருவிவிலியம், பைபிள், பைபிள் வசனம் தேடல், பைபிள் வசனங்கள், பைபிள் வார்த்தை தேடல், தமிழ் பைபிள் வசனம், தமிழ் பைபிள், தமிழ் பைபிள் வார்த்தைகள், பைபிள் கேள்வியும் பதிலும், பைபிள் ஆராய்ச்சி, தமிழ் பைபிள் வினா விடை, பைபிள் வசனங்கள் தமிழில், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், பைபிள் வார்த்தைகள், பைபிள் தூய தமிழ் பெயர், பிறந்தநாள் பைபிள் வசனம், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் அதிகாரங்கள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், அன்பு பைபிள் வசனம், பைபிள் வெர்சஸ் இன் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், பைபிள் வினா விடை, பைபிள் கேள்வி பதில்கள், பைபிள் தமிழில், தமிழ் பைபிள் ஆடியோ, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனம், பைபிள் இன் தமிழ், பைபிள் ஆறுதல் வசனங்கள், பைபிள் பெண்கள் பெயர்கள், பைபிள் அர்த்தம், கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், பைபிள் வசனம் படம், கல்லறை பைபிள் வசனங்கள், பைபிள் பெயர்கள், தமிழ் பைபிள் விளக்கவுரை, பைபிள் வரலாறு, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் ஆடியோ பைபிள், பைபிளை எழுதியது யார், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் போதனைகள், பைபிள் அட்டவணை, தமிழ் பைபிள் ஆடியோ டவுன்லோடு, பைபிள் விடுகதைகள், பைபிள் வினாடி வினா, திருமண பைபிள் வசனம், வசனம் பைபிள், தமிழ் பைபிள் தேடுதல், பைபிள் பத்துக் கட்டளைகள், பைபிள் வசனங்கள் வேண்டும், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, பைபிள் தூய தமிழ், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், தமிழ் பைபிள் டவுன்லோட், பரிசுத்த வேதாகமம் தமிழ் பைபிள், ஆடியோ பைபிள், பைபிள் உருவான வரலாறு, பைபிள் வாக்குத்தத்தங்கள், பைபிள் பழைய ஏற்பாடு, பைபிள் பிரசங்க குறிப்பு, பைபிள் தமிழ் பெயர், தமிழ் பைபிள் வெர்சஸ் சர்ச், பைபிள் வேத ஆராய்ச்சி, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், கேள்வி பதில் தரப்பட்ட பைபிள், பைபிள் பத்து கட்டளைகள், பைபிள் எப்பொழுது எழுதப்பட்டது, கத்தோலிக்க பைபிள், பைபிள் நீதிமொழிகள், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தமிழ் பைபிள் வெர்சஸ், கொள்ளை நோய்கள் பைபிள், தமிழ் பைபிள் சர்ச், தமிழ் பைபிள் அகராதி, காதல் பற்றி பைபிள், விருத்தசேதனம் பைபிள், கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் விளக்கவுரை, பைபிள் கதை, bible வசனம், பத்து கட்டளைகள் bible, வேத வசனம் பைபிள், பைபிள் ஸ்டோரி தமிழ், பாவம் பைபிள், கிறிஸ்தவ பைபிள், எபிரேய பைபிள், பைபிள் வாசிப்பது எப்படி, பைபிள் வேர்ட்ஸ், பைபிள் சங்கீதம், விசுவாசம் பைபிள் செய்தி, பைபிள் ஸ்டடி, பைபிள் புத்தகங்கள், திருவிவிலியம், திருவிவிலியம் bible in tamil, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு, திருவிவிலியம் கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, திருவிவிலியம் வரலாறு, கத்தோலிக்க திருவிவிலியம், பைபிள், பைபிள் வசனம் தேடல், பைபிள் வசனங்கள், பைபிள் வார்த்தை தேடல், தமிழ் பைபிள் வசனம், தமிழ் பைபிள், தமிழ் பைபிள் வார்த்தைகள், பைபிள் கேள்வியும் பதிலும், பைபிள் ஆராய்ச்சி, தமிழ் பைபிள் வினா விடை, பைபிள் வசனங்கள் தமிழில், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், பைபிள் வார்த்தைகள், பைபிள் தூய தமிழ் பெயர், பிறந்தநாள் பைபிள் வசனம், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் அதிகாரங்கள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், அன்பு பைபிள் வசனம், பைபிள் வெர்சஸ் இன் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், பைபிள் வினா விடை, பைபிள் கேள்வி பதில்கள், பைபிள் தமிழில், தமிழ் பைபிள் ஆடியோ, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனம், பைபிள் இன் தமிழ், பைபிள் ஆறுதல் வசனங்கள், பைபிள் பெண்கள் பெயர்கள், பைபிள் அர்த்தம், கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், பைபிள் வசனம் படம், கல்லறை பைபிள் வசனங்கள், பைபிள் பெயர்கள், தமிழ் பைபிள் விளக்கவுரை, பைபிள் வரலாறு, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் ஆடியோ பைபிள், பைபிளை எழுதியது யார், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் போதனைகள், பைபிள் அட்டவணை, தமிழ் பைபிள் ஆடியோ டவுன்லோடு, பைபிள் விடுகதைகள், பைபிள் வினாடி வினா, திருமண பைபிள் வசனம், வசனம் பைபிள், தமிழ் பைபிள் தேடுதல், பைபிள் பத்துக் கட்டளைகள், பைபிள் வசனங்கள் வேண்டும், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, பைபிள் தூய தமிழ், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், தமிழ் பைபிள் டவுன்லோட், பரிசுத்த வேதாகமம் தமிழ் பைபிள், ஆடியோ பைபிள், பைபிள் உருவான வரலாறு, பைபிள் வாக்குத்தத்தங்கள், பைபிள் பழைய ஏற்பாடு, பைபிள் பிரசங்க குறிப்பு, பைபிள் தமிழ் பெயர், தமிழ் பைபிள் வெர்சஸ் சர்ச், பைபிள் வேத ஆராய்ச்சி, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், கேள்வி பதில் தரப்பட்ட பைபிள், பைபிள் பத்து கட்டளைகள், பைபிள் எப்பொழுது எழுதப்பட்டது, கத்தோலிக்க பைபிள், பைபிள் நீதிமொழிகள், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தமிழ் பைபிள் வெர்சஸ், கொள்ளை நோய்கள் பைபிள், தமிழ் பைபிள் சர்ச், தமிழ் பைபிள் அகராதி, காதல் பற்றி பைபிள், விருத்தசேதனம் பைபிள், கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் விளக்கவுரை, பைபிள் கதை, bible வசனம், பத்து கட்டளைகள் bible, வேத வசனம் பைபிள், பைபிள் ஸ்டோரி தமிழ், பாவம் பைபிள், கிறிஸ்தவ பைபிள், எபிரேய பைபிள், பைபிள் வாசிப்பது எப்படி, பைபிள் வேர்ட்ஸ், பைபிள் சங்கீதம், விசுவாசம் பைபிள் செய்தி, பைபிள் ஸ்டடி, பைபிள் புத்தகங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக